search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பி.ஏ.பி., பிரதான கால்வாய் புதுப்பிக்கும் பணி தீவிரம்
    X

    கோப்புப்படம்

    பி.ஏ.பி., பிரதான கால்வாய் புதுப்பிக்கும் பணி தீவிரம்

    • பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் நீர் சேகரிக்கப்படுகிறது.
    • பாசன நிலங்கள் 4 மண்டலமாக பிரித்து இரு ஆண்டுக்கு ஒரு முறை நீர் வழங்கப்படுகிறது.

    உடுமலை:

    பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பாசன நிலங்கள் 4 மண்டலமாக பிரித்து இரு ஆண்டுக்கு ஒரு முறை நீர் வழங்கப்படுகிறது.

    பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் நீர் சேகரிக்கப்படுகிறது. அங்கிருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு கொண்டு வந்து 165 கி.மீ., நீளம் உள்ள பிரதான கால்வாய் வழியாக பாசன நிலங்களுக்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.

    பாசன நிலங்களுக்கு நீர் வழங்கும் ஆதாரமாக உள்ள, பிரதான கால்வாய் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாத நிலையில் தளம் மற்றும் பக்கவாட்டு கான்கிரீட் சுவர்கள் இடிந்தும், மண் கால்வாயாக பல இடங்களில் மாறியுள்ளது.நீர்க்கசிவு காரணமாக பாசன நிலங்களுக்கு நீர்ப்பற்றாக்குறை மற்றும் மண்டல பாசன காலங்களில் கால்வாய் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு பாதித்து வருகிறது.

    திருமூர்த்தி அணை துவங்கி வெள்ளகோவில் வரை, முழுமையாக பிரதான கால்வாயை சீரமைக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 5 இடங்களில் 29.60 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டது.

    திருமூர்த்தி அணை அருகே ரூ.3 கோடி ரூபாய் மதிப்பில் பிரதான கால்வாய் கி.மீ., 1.20 முதல் 2.00 கி.மீ., வரை, உடுமலை கால்வாய் பிரியும் பகுதியில், மண் கால்வாயாக மாறியுள்ள பகுதியில் புதிதாக கான்கிரீட் கரை மற்றும் தளம் அமைக்கப்படுகிறது.

    மேலும் பிரதான கால்வாயின் கீழ் அமைத்துள்ள, தளி கால்வாய் சுரங்க வழித்தடம் சிதிலமடைந்த நிலையில் தற்போது சுரங்க கால்வாய் பகுதியில் முழுவதும் கான்கிரீட் கால்வாயாக மாற்றப்பட்டு, தற்போது மேல் அமையவுள்ள பிரதான கால்வாய் தளம் மற்றும் கரைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இங்கு 60 சதவீதம் பணிகள் நடந்துள்ளது. அதே போல் பிரதான கால்வாய் கி.மீ., 3 முதல் 3.30 வரை, மொடக்குபட்டி செல்லும் ரோடு பாலம் பகுதியில் ரூ.6 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணியும், தீபாலபட்டி பகுதியில் கரிசல் மண் பூமி காரணமாக ஒட்டுமொத்தமாக சிதைந்துள்ள 4.50 கி.மீ., முதல் 4.80 கி.மீ., வரை உள்ள பகுதியில் ரூ. 8.60 கோடி நிதியில் மறு சீரமைப்பு பணி நடந்து வருகிறது.இப்பகுதிகளில் கரையின் இரு பகுதியிலும் உள்ள மண் முழுவதும் அகற்றப்பட்டு, கம்பி கட்டி கான்கிரீட் அமைக்கும் பணி நடக்கிறது.

    மேலும் கெடிமேடு பகுதியில் கி.மீ., 20.60 முதல் 20.90 வரை உள்ள கால்வாய் சுரங்கபாதை ரூ.1.50 கோடி செலவிலும், ஆலம்பட்டி பகுதியில் உடைந்துள்ள கி.மீ., 32 முதல் 36 வரை மொத்தம் 4 கி.மீ., தூரம் கால்வாய் புதுப்பிக்கும் பணி ரூ.6 கோடி ரூபாய் மதிப்பிலும் நடந்து வருகிறது.

    அதிகாரிகள் கூறுகையில், பிரதான கால்வாயில், திருமூர்த்தி கோட்டத்தில் 3 இடங்களில் கால்வாய் மறு சீரமைப்பு பணி நடந்து வருகிறது. ஆகஸ்டு 15ந்தேதிக்குள் பணியை நிறைவு செய்து 4ம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் என்றனர்.

    Next Story
    ×