search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்கம் விலை உயர்வு"

    • சோமாஸ்கந்தர் சன்னதி முன்பு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பஞ்சாங்கத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு அன்று பஞ்சாங்கம் வாசிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று பிற்பகலில் ராமேசுவரம் கோவிலின் சுவாமி சன்னதி பிரகாரத்தில் அமைந்து உள்ள சோமாஸ்கந்தர் சன்னதி முன்பு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆற்காடு நவாப் பஞ்சாங்கம், சமஸ்தான அரண்மனை பஞ்சாங்கம் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டு பஞ்சாங்கத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை 1-ந்தேதியில் இருந்து 2025-ம் ஆண்டு பங்குனி 31-ந்தேதி வரை நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் பஞ்சாங்கமாக வாசிக்கப்பட்டது. இந்த பஞ்சாங்கத்தை கோவிலின் உதயகுமார் குருக்கள் வாசித்தார். பஞ்சாங்கத்தில் வாசிக்கப்பட்ட முக்கிய தகவல்கள் வருமாறு:-

    தங்கம் விலை ஏற்றம்

    மத்திய அரசு பல நல்ல திட்டங்களை வாரி வழங்க நேரும். உலக அளவில் இந்தியா முதலிடத்தில் பதவி வகிக்கும். புற்று நோய்க்கு இந்தியா மருந்து கண்டுபிடித்து சாதனை படைக்கும். இந்த ஆண்டு அரசியலில் பல மாற்றங்கள் நிகழும். குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும். சொத்து பிரச்சினை அதிகம் ஏற்படும். தனியார் முதலீட்டு நிறுவனங்கள் பிரச்சினைகளை சந்திக்க நேரும்.

    பணத்தேவைகள் அதிகரிப்பதுடன் ஆன்லைன் வியாபாரமும் பெருகும். விலைவாசி ஏற்றம், இறங்குமுகமாக இருக்கும். தங்கம், வெள்ளி, மஞ்சள் விலை ஏற்றம், இறக்கமாக இருக்கும்.

    விளையாட்டுத்துறையில் இந்திய வீரர்கள் பல சாதனைகளை படைக்க நேரும். போதைப்பொருட்கள் அளவுக்கு அதிகமாக புழக்கத்தில் இருக்கும். தவறு செய்பவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைக்கும். கல்வி கட்டணங்கள் உயரக்கூடும். மாணவ-மாணவிகளுக்கு புதிய கல்விக் கொள்கை மூலம் சுமைகள் குறைய வாய்ப்புகள் உள்ளது.

    எல்லைகள் எப்போதும் போர் பதற்றமாக இருக்கும். புலிகளின் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு வவ்வால் தொல்லை அதிகமாக இருக்கும். பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும். குற்றம் செய்து தலைமறைவாக வாழ்ந்தவர்கள் இச்சமயம் மாட்டிக் கொள்ள நேரும்.

    அரசியல் மாற்றம்

    அரசியலில் மாற்றங்கள் ஏற்படும். கட்சி கூட்டணிகள் மாறுபடும். அரசியல்வாதிகள் வழக்குகளில் சிக்கும் நிலை உருவாகலாம். இந்த ஆண்டு புதிதாக இருமல், கண் நோய் அதிகமாக பரவும். இந்த ஆண்டு விவசாயம் வளமாக இருக்கும். காட்டில் உள்ள புலி, சிங்கம் உள்ளிட்டவைகளுக்கு உணவு பஞ்சம் இருக்காது. எல்லா உயிரினங்களுக்கும் உண்ண உணவும், இடமும் கிடைக்கும்.

    இந்த ஆண்டு இந்தியா கடுமையாக வெள்ளத்தில் பாதிக்க நேரும். பல புதிய வரிகள் விதிக்க நேரும். விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகளின் தொல்லை அதிகமாகவே இருக்கும். மஞ்சள் விலை உச்சத்தை தொடும். கல்வி கட்டணம், கம்ப்யூட்டர், தொலை தொடர்பு சாதனங்கள், மின்சார கட்டணம் ஆகியவை விலை உயரும். நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்படலாம்.

    புதிய வரிகளால் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். இந்த ஆண்டு வெப்பமும், மழையும், குளிர்ச்சியும் அதிகமாக இருக்கும். வெளி மாநிலத்தவர்களால் திருட்டு பயம் அதிகரிக்கும். இந்த தகவல்கள் பஞ்சாங்கத்தில் இடம் பெற்றுள்ளன.

    ×