search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎம்எஸ்"

    • மறைந்த பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் உருவச்சிலை மதுரையில் நிறுவப்பட்டுள்ளது.
    • இந்தச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    மதுரை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளையும், நாளை மறுநாளும் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் இன்று மாலை சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தடைந்தார்.

    இந்நிலையில், மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள டி.எம்.சவுந்தரராஜன் உருவச்சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இந்த விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எ.வ.வேலு உள்பட பலர் பங்கேற்றனர்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரையில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார்.

    மதுரை:

    தமிழ் சினிமா வரலாற்றில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசீகர குரலால் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்த பழம் பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 11 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

    1922-ம் ஆண்டு மார்ச் 24-ந்தேதி மதுரையில் பிறந்த அவர் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் இசை பயிற்சி பெற்று மேடைக்கச்சேரிகளில் பாடி வந்தார். 1950-ம் ஆண்டு சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.

    எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் தொடங்கி 1970-ம் ஆண்டுகளில் டி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான ஒருதலை ராகம் திரைப்படத்தின் நாயகன் வரை, பல்வேறு தலைமுறையைச் சேர்ந்த நடிகர்களுக்கும் பாடல்கள் பாடியிருக்கிறார். சுமார் 65 ஆண்டுகள் அவர் திரையுலகில் தன்னுடைய இசை பயணத்தை தொடர்ந்து வந்தார்.

    தன்னுடைய தனித்துவமான இசைப் பயணத்தில், இவர் செய்த சாதனைக்காக பேரவைச் செம்மல், கலைமாமணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டன. இதுதவிர கலா ரத்னம், கான ரத்னம், அருள் இசை சித்தர், நவரச பவ நளின கான வர்ஷினி, ஞானாமிர்த வர்ஷினி, சாதனை சக்கரவர்த்தி, பாரதிய இசை மேகம், கான குரலோன் போன்ற பட்டங்களும் ரசிகர்களால் சூட்டப்பட்டது.

    2013-ம் ஆண்டு, தனது 91-வது வயதில் டி.எம். சவுந்தரராஜன் சென்னையில் காலமானார். அவரது நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் மந்தவெளி வெளிவட்ட சாலை பகுதிக்கு டி.எம்.சவுந்தரராஜன் சாலை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார். மேலும் அவரது புகழுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மதுரையில் முழு திருவுருவச்சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    மதுரை தெற்கு வட்டம் முனிச்சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலம் (பழைய) அலுவலகக் கட்டிட வளாகத்தில் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் முழு திருவுருவச் சிலை அமைத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.50 லட்சம் செலவில் சிலை நிறுவப்பட்டுள்ளது.

    இந்த சிலை திறப்பு விழா இன்று மாலை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கவும், நாளை முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார்.

    விமான நிலையத்தில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மாவட்டச் செயலாளர் மணிமாறன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்கள்.

    பின்னர் அங்கிருந்து காரில் புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முனிச்சாலையில் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் முழு உருவச் சிலையை திறந்து வைக்கிறார்.

    இதையடுத்து இரவில் தனியார் ஓட்டலில் தங்கும் அவர் நாளை காலை ராமநாதபுரம் புறப்பட்டு செல்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரையில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • “அர்த்தம் தெரியாவிட்டால் ஆயிரக்கணக்கில் அள்ளி அள்ளிக் கொடுத்தாலும் பாட மாட்டான் இந்த சௌந்தரராஜன்...”
    • இப்படி சொல்லிவிட்டு ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து புறப்பட்டும் விட்டார் டிஎம்எஸ்.

    "முத்தைத்தரு பத்தித் திருநகை..." என்று படித்துவிட்டு, இதன் பொருள் என்ன? என்று கேட்டு உடல் குலுங்க குலுங்க சிரித்தார் டி.எம்.எஸ்.

    ஒருவரும் பதில் சொல்லவில்லை.

    "என்னய்யா சொல்கிறீர்கள்? இந்த பாடல் வரிகளுக்கு என்ன அர்த்தம் என்று இங்கே இருக்கும் ஒருவருக்குமே தெரியாதா ?"

    ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்த அத்தனை பேரும் டிஎம்எஸ்ஸின் அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மௌனமாக இருந்தார்கள்.

    அருணகிரிநாதர் பட பாடல் பதிவு நேரம் அது. (1964)

    சிரிப்பதை நிறுத்திய டிஎம்எஸ்ஸின் குரல் கொஞ்சம் கோபத்தோடு உயர்ந்தது.

    "சொல்லுங்கள் ஐயா, அர்த்தம் தெரியாவிட்டால் இதை நான் எப்படி உணர்வுகளோடு பாட முடியும் ? அந்தப் பாடலை கேட்பவர்கள்தான் எப்படி அதை முழுமையாக ரசிக்க முடியும் ?"

    சுற்றி இருந்தவர்களின் மௌனம் தொடர்ந்தது.

    ஏனெனில் அவர்களுக்கு தெரியும், எந்த ஒரு பாடலையும் அதன் அர்த்தம் தெரியாமல், உணர்வுகள் புரியாமல் ஒருபோதும் பாடமாட்டார் டிஎம்எஸ்.

    மீண்டும் ஒரு முறை தன் கையிலிருந்த அந்த பாடல் வரிகளை வாசித்துப் பார்த்தார் டிஎம்எஸ்.

    "முத்தைத்தரு பத்தித் திருநகை

    அத்திக்கிறை சத்திச் சரவண

    முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்..."

    திரும்ப திரும்ப வாசித்துப் பார்க்கிறார் டி.எம்.எஸ். அதன் பொருள் விளங்கவில்லை.

    தலைநிமிர்ந்து தன்னை சுற்றி இருந்தவர்களை பார்த்த பின், அழுத்தமாக உதட்டை பிதுக்கி விட்டு, பாடல் எழுதி இருந்த காகிதத்தை கீழே வைத்தார் டி.எம்.எஸ்.

    "அர்த்தம் தெரியாவிட்டால் ஆயிரக்கணக்கில் அள்ளி அள்ளிக் கொடுத்தாலும் பாட மாட்டான் இந்த சௌந்தரராஜன்..."

    இப்படி சொல்லிவிட்டு ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து புறப்பட்டும் விட்டார் டிஎம்எஸ்.

    அவரது பிடிவாதம் அறிந்த படக் குழுவினர் செய்வது அறியாமல் திகைத்து நின்றார்கள்.

    அப்போது அருகில் இருந்த யாரோ ஒருவர் அசரீரி போல குரல் கொடுத்தார் : "வாரியார் சுவாமிகளை கேட்டால் இதன் பொருள் புரியும்..."

    "அப்படியா ?" என்று திரும்பி அவரைப் பார்த்து கேட்ட டி.எம்.எஸ்., அடுத்த நிமிடமே வாரியார் வீட்டை நோக்கி விரைந்து புறப்பட்டார்.

    வரவேற்றார் வாரியார்.

    பணிவோடு தன் அருகில் வந்து அமர்ந்த டிஎம்எஸ்-க்கு புன்னகையோடும் பொறுமையோடும் பொருள் விளக்கினார் வாரியார்.

    "முத்தைத்தரு பத்தித் திருநகை ...

    வெண்முத்தை நிகர்த்த, அழகான

    பல்வரிசையும் இளநகையும் அமைந்த....

    அத்திக்கு இறை ...

    தெய்வயானை அம்மைக்குத் தலைவரே...

    சத்திச் சரவண...

    சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே...

    முத்திக்கொரு வித்துக் குருபர...

    மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு

    விதையாக விளங்கும் ஞான குருவே..."

    இப்படியாக ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருளை வாரியார் விளக்கமாக எடுத்துச் சொல்ல சொல்ல,

    அதை கவனமாக கேட்டுக் கொண்டு, அதன் பிறகே 'அருணகிரிநாதர்' படத்தின் அந்தப் பாடலைப் பாடினாராம் டி.எம்.எஸ்.

    -துலாக்கோல் சோம நடராஜன்

    ×