search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் மத்திய சிறை"

    • கைதி பிரபு திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபு மீண்டும் நேற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    சேலம்:

    கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாங்கா பிரபு (41). கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையே சேலம் மாவட்டம் வீராணம் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கிலும் தொடர்புடைய இவர் உள்பட மூன்று பேரை நேற்று விசாரணைக்கு சேலம் நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர்.

    அப்போது கைதி பிரபு திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில் , சேலம் மத்திய சிறையில் பழங்களை வைத்து சாராய ஊறல் தயாரித்ததாக அதிகாரிகள் தன்னை 4 நாட்களுக்கு முன்பு தனி சிறையில் அடைத்தனர்.

    மேலும் பொய்யான தகவலை கூறி சிறைத்துறையினர் அடித்து துன்புறுத்துகிறார்கள். சேலம் மத்திய சிறையில் அதிகாரிகள் உதவியுடன் தான் கஞ்சா, கைபேசி உள்ளிட்டவை சிறைக்குள் கொண்டு செல்லப்பட்டு சிறைவாசிகளால் பயன்படுத்தப்படுகிறது என்று கூறினார். இதைத்தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபு மீண்டும் நேற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஆனால் நேற்று மாலை முதல் பிரபு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று காலையும் வழக்கம்போல அவருக்கு உணவு வழங்கியும் அவர் சாப்பிட மறுத்து விட்டார் . தொடர்ந்து அவரிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதுவரை அவர் சாப்பிடவில்லை.

    மேலும் தன்னை தனி சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாகவும், உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதால் வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் சிறையில் பரபரப்பு நிலவி வருகிறது. இதற்கு இடையே நேற்று சிறைத்துறை டிஐஜி மற்றும் குழுவினர் சேலம் மத்திய சிறையில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

    • பழங்களை வைத்து கைதிகள் சிலர் சாராய ஊறல் போட்டிருப்பதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மத்திய சிறையில் 200-க்கும் மேற்பட்ட குண்டர் சட்டம் பாய்ந்த கைதிகள் உள்பட 900-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு சிறையில் வழங்கும் உணவுகள் தவிர கேன்டீன் மூலமாகவும் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் ஆரஞ்சு, ஆப்பிள், சாத்துக்குடி போன்ற பழவகைகளும் கொடுக்கின்றனர். இதனை கைதிகள் வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள்.

    இப்படி வழங்கப்படும் பழங்களை வைத்து கைதிகள் சிலர் சாராய ஊறல் போட்டிருப்பதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜெயிலர் மதிவாணன் தலைமையிலான குழுவினர் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் மத்திய சிறையில் உள்ள 7-வது பிளாக் அருகில் மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த 2 லிட்டர் தண்ணீர் பாட்டிலை தோண்டி எடுத்தனர். அதில் ஆப்பிள், மாதுளை, வெல்லம் உள்பட பல்வேறு பழங்களை போட்டு ஊற வைத்திருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அதனை கைப்பற்றிய சிறை அதிகாரிகள் தரையில் கொட்டி அழித்தனர். மேலும் அந்த ஊறலை அங்கு போட்டு வைத்த கைதிகள் யார் ? என்பது குறித்து அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • சேலம் மத்திய சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
    • சோதனையால் சேலம் மத்திய சிறை முன்பு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் மத்திய சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 150-க்கும் மேற்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதானவர்களுடம் அடங்குவர். இந்த நிலையில் சிறையில் உள்ள கைதிகள் கஞ்சா மற்றும் செல்போன் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வன், சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் காலை 6.30 மணிக்கு சிறைக்கு அதிரடியாக சென்றனர்.

    பின்னர் அங்குள்ள ஒவ்வொரு அறையையும் அங்குலம், அஙகுலமாக சோதனை செய்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனையில் கைதிகள் மறைத்து வைத்திருந்த கஞ்சா பொட்டலங்கள், செல்போன் சார்ஜர், செல்போனை குழி பறித்து மறைத்து வைக்க பயன்படுத்தப்படும் இரும்பு ஆணிகள் உள்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

    அந்த பொருட்கள் எப்படி உள்ளே வந்தது. அதற்கு சிறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உடந்தையா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அங்கிருந்த கேமிரா பதிவுகள் குறித்தும் பார்வையிட்டும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த சோதனையால் சேலம் மத்திய சிறை முன்பு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • சேலம் மத்திய சிறையில் சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வுசெய்தனர்.
    • அப்போது கைதிகளிடம் அவர்கள் குறைகள் கேட்டனர்.

    சேலம்:

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது கணக்கு குழுவினர் தலைவர் செல்வப்பெ ருந்தகை தலைமையில் உறுப்பினர்கள் காந்திராஜன், மாரிமுத்து, வேல்முருகன், ராஜமுத்து, பூண்டி கலைவாணன் மற்றும் மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ, கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி சண்முக சுந்தரம் ஆகியோர் இன்று காலை சேலம் மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய சிறையில் அமைக்கப்பட்டு உள்ள ஜாமர் கருவி உள்ளிட்டவற்றை குழுவினர் பார்வையிட்டனர்.

    பின்னர் கைதிகளிடம் குறைகள் கேட்டனர். இதனைத் தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள லேப் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கும் சிகிச்சை குறித்து பார்வையிட்டனர். அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, கருப்பூர் ஆதிதிராவிடர் நல விடுதி, சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களிலும் ஆய்வு செய்தனர்.

    பின்னர் மாலை 3.00 மணிக்கு மேல் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கலெக்டர் கார்மேகம், ராஜேந்திரன் எம்.எல்.ஏ, சதாசிவம் எம்.எல்.ஏ, மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாராதேவி, கமிஷனர் கிறிஸ்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • கைதிக்கு இன்று காலை 6 மணியளவில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
    • கைதிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு குறித்து சிறை ஊழியர்கள், சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் வெங்கடேசன் (வயது 40).

    இவர் கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி உறவினர் ஒருவரை கத்தியால் குத்தி கொல்ல முயன்றார். இது தொடர்பாக விசாரணை நடத்திய அழகாபுரம் போலீசார் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    பின்னர் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். வெங்கடேசனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவரை இதுவரை யாரும் ஜாமீன் எடுக்க முன் வராததால் தொடர்ந்து சேலம் மத்திய சிறையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனை அறிந்த சிறை ஊழியர்கள், சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சிறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மத்திய சிறையில் இருந்த விசாரணை கைதி இறந்ததால் விரைவில் சிறைக்கு சென்று மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த உள்ளார்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு தருமபுரி டவுன் போலீசாரால் வழிப்பறி வழக்கில் தங்கராஜி கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    • கடந்த 3-ந் தேதி மாலை தங்கராஜிக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது.

    சேலம்:

    தருமபுரி டவுன் பகுதியை சேர்ந்தவர் சின்னகண்ணு. இவரது மகன் தங்கராஜி (வயது 41) .

    இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தருமபுரி டவுன் போலீசாரால் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 3-ந் தேதி மாலை தங்கராஜிக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது.

    இதனை கவனித்த சிறை ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற சிறை அதிகாரிகள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தங்கராஜி இன்று காலை 6.10 மணிக்கு பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் சிறை கைதி இறந்ததால் ஆஸ்பத்திரிக்கு சென்று மாஜிஸ்திரேட் விசாரணை நடத்துகிறார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    ×