search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொன்று குவிப்பு"

    ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கும், ஆப்கான் வீரர்களுக்கும் இடையே நிகழ்ந்த தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் பலியாகினர்.
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த, தலீபான் பயங்கரவாதிகளின் பிரதிநிதிகளோடு அமெரிக்க அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறபோதும், தலீபான்களின் அட்டூழியம் குறைந்தபாடில்லை.

    தலீபான்களுக்கும், ஆப்கான் வீரர்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன. பயங்கரவாதிகளை ஒடுக்கும் வகையில் அவர்களின் நிலைகளை குறிவைத்து, ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சாபூல் மாகாணத்தில் சாய்வாரா என்ற நகரில் உள்ள போலீஸ் சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

    எனினும் உடனடியாக சுதாரித்துக்கொண்ட போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் தங்களது துப்பாக்கிகளால் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது.

    இதில், 10 பயங்கரவாதிகள் பலியாகினர். அதே சமயம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் உயிர் இழந்தனர். 3 போலீஸ் அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர்.

    இதற்கிடையில் பால்க் மாகாணத்தின், பால்க் மாவட்டத்தில் உள்ள தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து, ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் அந்த இயக்கத்தின் முக்கிய தளபதி ஒருவர் உள்பட 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 
    ஆப்கானிஸ்தானில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கையில் 24 மணி நேரத்தில் நாடு முழுவதிலும் 68 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். #Afghan #NationalDefense #SF #Afghanelectionrally
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை தவிர ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்பட பல்வேறு பயங்கரவாத இயக்கங்களும் அங்கு காலூன்றி தாக்குதல் நடத்தி வருகின்றன. இவர்களின் கொட்டத்தை ஒடுக்க ஆப்கான் ராணுவம் போராடி வருகிறது.

    இந்த நிலையில் ஆப்கான் தேசிய ராணுவப்படையினர் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கினர். அவர்கள் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதிகளை சுற்றிவளைத்து அதிரடி தாக்குதல்களை நடத்தினர்.



    அதே சமயம் 120 போர் விமானங்கள் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து வான்தாக்குதல்களை நடத்தின.

    ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரின் இந்த அதிரடி நடவடிக்கையில் 24 மணி நேரத்தில் நாடு முழுவதிலும் 68 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். இவர்களில் 42 பேர் தரைவழி தாக்குதலிலும், 26 பேர் வான்தாக்குதலிலும் கொல்லப்பட்டதாக ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் 21 பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்ததாகவும், 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாகவும் அந்த தகவல்கள் கூடுதலாக தெரிவிக்கின்றன.  #Afghan #NationalDefense #SF 
    இஸ்ரேல் எல்லையை ஒட்டியுள்ள காஸா பகுதியில் பாலஸ்தீனியர்கள் கொன்று குவிக்கப்படுவது தொடர்பாக விவாதிக்க வரும் 13-ம் தேதி ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது. #UNGeneralAssemblyemergencysession
    நியூயார்க்:

    1967-ம் ஆண்டுவரை ஜோர்டான் வசமிருந்த கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் அரசு கடந்த 1980-ம் ஆண்டில் இந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்து கொண்டது. ஜெருசலேம் நகரில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளதால் மூன்று மதத்தினரும் இந்நகரை தங்களுக்கே உரிமையாக்கி கொள்ள முயன்று வருகின்றனர்.

    கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்கள் சொந்தம் கொண்டாடிவரும் ஜெருசலேம் நகரின் கிழக்கு பகுதியில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இஸ்ரேல் அரசு அத்துமீறலாக அமைத்த வசிப்பிடங்களில் சுமார் 2 லட்சம் யூத இனத்தவர்கள் வாழ்கின்றனர்.

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான காஸா என்ற பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் போராளிகள், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2005-ம் ஆண்டுவரை காஸா முனையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இஸ்ரேல் அரசு பின்னர் அங்கிருந்து படைகளை விலக்கி கொண்டாலும், இங்குள்ள கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    இதற்கிடையில், இஸ்ரேல் நாட்டின்  தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை கிழக்கு ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக கிழக்கு ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.

    இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொற்றியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சகட்ட மோதல் வெடித்துள்ளது.

    குறிப்பாக, காஸா எல்லைப்பகுதியில் இருந்து ஹமாஸ் போராளிகள் ராக்கெட்களை இஸ்ரேல் நாட்டுக்குள் வீசி தாக்குதல் நடத்துவதும் அதற்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் விமானப் படைகள் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள் முகாம்களின்மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள தங்களது தாய்மண்னில் உள்ள தங்களுக்கு சொந்தமான வீடுகளில் குடியேற வேண்டும் என்று வலியுறுத்தி காஸா முனையில் தங்கியுள்ள பாலஸ்தீனிய மக்கள் கடந்த மார்ச் மாதம் முதல் காஸா எல்லைப்பகுதியில் வெள்ளிக்கிழமை தோறும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இஸ்ரேல் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து 129 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக, கடந்த மே மாதத்தில் மட்டும் 61 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

    இந்நிலையில், காஸா எல்லையில் போராடும் பாலஸ்தீன மக்களின் உயிருக்கு பாதுகாப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையை அவசரமாக கூட்ட வேண்டும் என அரபு நாடுகள் மற்றும் இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பு கோரிக்கை விடுத்தது.

    இதனையேற்று, ஐக்கிய நாடுகள் சபையின் 72-வது கூட்டம் மற்றும் இந்த ஆண்டின் சிறப்பு அவசர கூட்டம் வரும் புதன்கிழமை மாலை 3.30 மணியளவில் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  #UNGeneralAssemblyemergencysession
    காசா எல்லையில் 59 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் படைகள் கொன்று குவித்தன. இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து உள்ளன. #Gaza #USEmbassyJerusalem
    காசா:

    இஸ்ரேல், பாலஸ்தீன் இடையே நீண்ட நெடுங்காலமாக மோதல்கள் நடந்து வருகின்றன. ஜெருசலேமை இஸ்ரேல் தனது தலைநகராக கருதி வந்தாலும், அதை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீன், கிழக்கு ஜெருசலேமை தனது எதிர்கால தலைநகர் என கருதி வந்தது.

    கிறிஸ்தவர்கள், யூதர்கள், இஸ்லாமியர்கள் என 3 மதத்தினருக்கும் புனித நகரமாக திகழக்கூடிய ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார். அத்துடன் அங்கு அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் எனவும் கூறினார். இது உலக அளவில் கண்டனங்களுக்கு வழிவகுத்தது.



    இந்த நிலையில், திட்டமிட்டபடி நேற்று முன்தினம் ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இந்த விழாவில், அறிவித்தபடி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்கவில்லை என்றாலும், அவரது மகள் இவான்கா டிரம்ப், இவான்காவின் கணவர் ஜாரெட் குஷ்னர் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    இதற்கிடையே இஸ்ரேல் உருவாக்கப்பட்டதின் 70-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, பாலஸ்தீனர்கள் காசா எல்லைப் பகுதியில் பெருமளவில் திரண்டு வந்து போராட்டங்களை நடத்தினர். அவர்கள், டயர்களை சாலைகளில் கொளுத்திப்போட்டனர்.

    அவர்களுக்கும், இஸ்ரேல் படைகளுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. இஸ்ரேல் படையினர் மீது பாலஸ்தீனர்கள் கல்வீச்சு நடத்தினர்.

    போராட்டக்காரர்களை ஒடுக்கும் விதத்தில் இஸ்ரேல் படையினர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 59 பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் ஆளில்லா விமானங்கள் மூலம் இஸ்ரேல் கண்ணீர்ப்புகை குண்டுகளையும் வீசியது.

    2014-ம் ஆண்டு இரு தரப்புக்கும் இடையே நடந்த போருக்குப் பின்னர் இந்த மோதல்தான் மிகப்பெரிய மோதலாக கருதப்படுகிறது.
    இந்த மோதலில் சுமார் 2 ஆயிரத்து 700 பாலஸ்தீனர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இதன் காரணமாக காசா பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

    பாலஸ்தீனர்கள், இஸ்ரேல் படைகளால் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டது இனப்படுகொலையாக பார்க்கப்படுகிறது. ஆனால், தற்காப்புக்காகத்தான் இஸ்ரேல் படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ கூறினார்.

    காசா கிழக்கு எல்லையில் 13 இடங்களில் பாலஸ்தீனர்கள் வன்முறை போராட்டங்களை கட்டவிழ்த்துவிட்டதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது.

    பாலஸ்தீன் அதிபர் மகமது அப்பாஸ் கருத்து தெரிவிக்கையில், “நம் மக்கள் மீதான இனப்படுகொலை தொடர்கிறது” என வேதனையுடன் கூறினார்.

    இஸ்ரேல் நடவடிக்கையை அதன் நட்பு நாடான அமெரிக்கா நியாயப்படுத்தியது. “இந்த துயர மரணங்களுக்கு பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் தான் பொறுப்பு, அவர்கள் வேண்டுமென்றே இந்த பதிலடி தருகிற நிலையை உருவாக்கினர்” என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ராஜ் ஷா குற்றம் சாட்டினார்.

    ஆனால், இஸ்ரேலின் நடவடிக்கைக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி, லெபனான் உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.  #Gaza #USEmbassyJerusalem 
    ×