என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காயாரோகணேஸ்வரர் கோவில்"

    • குருபகவான் கைகளை கூப்பிய நிலையில் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
    • தல தீர்த்தமாக ‘தாயார் குளம்’ உள்ளது.

    கும்பகோணம் பகுதியில் அமைந்துள்ளதைப் போலவே காஞ்சிபுரத்திலும் பழமையான நவகிரக தலங்கள் அமைந்துள்ளன. அத்தகைய தலங்களில் குரு பரிகார தலமாக விளங்குவது, காஞ்சி மாநகரின் தென்திசையில் வேகவதியாற்றின் வடகரையில் பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு கமலாம்பிகை உடனுறை ஸ்ரீ காயாரோகணேஸ்வரர் திருக்கோவில் ஆகும்.


    தல வரலாறு

    கோவில்களின் நகரமான காஞ்சியில் அமைந்துள்ள எண்ணற்ற சிவத்தலங்களுள் மிக்க சிறப்புடைய தலங்கள் மூன்று. அவை திருவேகம்பம், கச்சபேசம் மற்றும் காயாரோகணம் ஆகும். இத்தலங்கள் முப்பெருந்தேவியராகிய காமாட்சி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் தவம் செய்து வழிபட்ட பெருமை உடையவை.

    இவற்றுள் காஞ்சிக்கு உயிரென சிறந்த உத்தம கோவிலாக தவத்திரு மாதவச் சிவஞான சுவாமிகள் உரைப்பது காயாரோகணம். காயம் என்றால் 'உடம்பு'. ஆரோகணம் என்றால் 'ஏற்றிக் கொள்ளுதல்'.

    ஈசன் ஒரு சமயம் பிரம்மன் மற்றும் திருமால் ஆகியோரின் இறுதிக்காலத்தில் அவர்களை ஒடுக்கி, அவர்களின் திருஉடலைத் தம் தோள்மீது தாங்கி நடனம் செய்ததால், இத்தலம் காயாரோகணம் என்ற பெயரைப் பெற்றது என்கிறது இத்தல வரலாறு.

    லட்சுமி தேவி, காயாரோகணேஸ்வரரை வில்வத்தால் அர்ச்சனை செய்து திருமாலைத் தன் கணவனாகப் பெற்றாள். குரு பகவான் வேகவதி ஆற்றின் தென்கரையில் உள்ள 'தாயார்குளம்' என வழங்கப்படும் காயாரோகணத் தீர்த்தத்தில் நீராடி காயாரோகணேசுவரரை வழிபட்டு, தேவர்களுக்குக் குருவாகும் வரம் பெற்றார்.

    இதனால் இக்கோவிலில் லட்சுமி மற்றும் குரு பகவான் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் அமைந்துள்ளன. எமன், காயாரோகணேசுவரரை பூஜை செய்து தென்திசைக்குத் தலைவனாகும் பேறு பெற்றான். இத்தலத்திற்கு வந்து வழிபடுவோர் செல்வம், அறிவு மற்றும் வீடுபேறும் பெறுவர் என்பது ஐதீகம்.


    கோவில் அமைப்பு

    இத்தலம், நுழைவு வாசலுடன் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. நுழைவு வாசலில் குரு பகவான், பிரம்மா, சிவபெருமான், விஷ்ணு, பார்வதி தேவி சிற்பங்கள் அமைந்துள்ளன.

    நுழைவுவாசலைக் கடந்து உள்ளே நுழைந்தால் மூன்று நிலை ராஜகோபுரத்தைக் காணலாம். உள்ளே பலிபீடமும், நந்தியும் தரிசனம் தருகின்றன.

    கருவறையில் மூலவர் காயாரோகணேஸ்வரர் கிழக்கு திசை நோக்கி அமைந்து, லிங்க சொரூபத்தில் காட்சி தருகிறார். கருவறையின் பின்புறச் சுவற்றில் சோமாஸ்கந்தர் சிற்பம் காட்சி தருகிறது.

    கோட்டங்களில் விநாயகப்பெருமான், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா மற்றும் துர்க்கை ஆகிய தெய்வங்கள் காட்சி தருகின்றனர். துர்க்கைக்கு எதிரில் சண்டிகேஸ்வரர் சன்னிதி அமைந்துள்ளது.

    கருவறை கஜப்பிருஷ்ட வடிவத்தில் அமைந்துள்ளது. இத்தகைய வடிவமைப்பு, தொண்டை மண்டலத்திற்கே உரிய சிறப்பாகும். தெற்கு திசை நோக்கி அமைந்த தனிச் சன்னிதியில் கமலாம்பிகை என்ற திருநாமத்துடன் அம்பாள் காட்சி தந்து அருள்கிறார்.

    சுற்றுப்பிரகாரத்தில் ஸ்ரீகற்பக விநாயகர், வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகன், ஸ்ரீமகாலட்சுமி, நவகிரகங்கள், ஸ்ரீபைரவர், சூரிய பகவான் ஆகியோரின் சன்னிதிகள் அமைந்துள்ளன. கோவிலுக்குள் நுழைந்ததும் இடதுபுறத்தில் காணப்படும் மண்டபத்தில் நால்வர் சன்னிதி, நாகர்கள் சன்னிதி உள்ளன.


    மேலும் 'மாவிரத லிங்கங்கள்' என அழைக்கப்படும் ஆறு சிவலிங்கத் திருமேனிகள் உள்ளன. அதில் இரண்டு ஆவுடையாருடனும், நான்கு ஆவுடையார் இன்றியும் காணப்படுகின்றன.

    இந்த சிவலிங்கங்களை 'மாவிரத முனிவர்கள்' என்று அழைக்கப்படும் ஆறு முனிவர்கள் வழிபட்டதாகக் கூறப்படுகிறது. மாவிரத லிங்கங்களுக்கு அருகில் ஸ்ரீபாலமுருகன் நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார்.

    'குரு பார்க்க கோடி நன்மை' என்று சொல்வார்கள். நவகிரகங்களில் குருபகவான் அதிக நன்மைகளை தருபவர். ஆங்கிரஸ மகரிஷியின் மகனாக பிறந்தவர் குருபகவான். சிறந்த அறிவாற்றலால் 'பிரகஸ்பதி' என்ற பட்டத்தை பெறக்கூடிய அளவிற்கு உயர்ந்தவர்.


    கோவிலுக்குள் மேற்கு திசை நோக்கி அமைந்த ஒரு தனி சன்னிதியில் தேவகுரு, பிரகஸ்பதி, நவகிரகங்களில் ஒருவரான குருபகவான் கைகளைக் கூப்பிய நிலையில் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளி உள்ளார்.

    குரு பகவானின் அருள் இருந்தால் ஒருவருக்கு திருமண யோகம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வியாழக்கிழமைகளில் குரு பகவானை வழிபடுவது சிறப்பானதாகும். இத்திருக்கோவில், பக்தர்களால் 'குரு கோவில்' என்று அழைக்கப்படுகிறது.

    குரு பகவான் வருடந்தோறும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறார். இது 'குரு பெயர்ச்சி' எனப்படுகிறது. இந்ந நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.

    இந்த கோவிலின் தல விருட்சமாக 'வில்வ மரம்' உள்ளது. வில்வத்தின் இலை, காய், பழம் முதலானவை நோய்களை நீக்கும் சக்தி வாய்ந்த ஒரு மருந்தாகும். இக்கோவிலின் தல தீர்த்தமாக 'தாயார் குளம்' உள்ளது.

    மகாலட்சுமித் தாயார் அமைத்த தீர்த்தம் என்பதால் 'தாயார் குளம்' என்று அழைக்கப்படுகிறது. இது லட்சுமிகுண்டம், குருவார தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

    பொதுவாக குளங்கள் நான்கு மூலை அமைப்புடையதாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இத்தலத்தின் தீர்த்தம் முற்றிலும் வித்தியாசமாக ஐந்து மூலைகளுடன் ஐங்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடுபவர்களுக்கு செல்வமும் ஞானமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    தாயார் குளத்தின் மேற்குக் கரையில் எமதர்மராஜன் நிறுவி வழிபட்ட தருமலிங்கேசர் கோவில் அமைந்துள்ளது. நெய்தீபம் ஏற்றி தருமலிங்கேசரை வழிபட மரண பயம் நீங்கும் என்பது ஐதீகம்.

    திருப்பணிகள்

    சோழர்களின் காலம் தொடங்கி தற்போது வரை அவ்வப்போது இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கச்சிப்பலதனியும் ஏகம்பத்தும், கயிலாய நாதனையே காணலாகும் என்ற அப்பர் பெருமானின் பதிகத்தாலும், புராண வரலாறுகளாலும் இத்தலம் மிகப்பழமையான தலம் என்பது தெரிகிறது.இங்கு சோழர்கள் காலத்திய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்த கல்வெட்டுகள் சிதைந்த நிலையில் உள்ளன.

    முக்கிய விழாக்கள்

    இத்தலத்தில் நாள்தோறும் ஐந்து கால பூஜைகள் நடைபெறுகின்றன. வியாழக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. குரு பெயர்ச்சி காலத்தில் லட்சார்ச்சனையும், அர்ச்சனையும், குருப் பெயர்ச்சி விழாவும் நடைபெறுகின்றன. நவராத்திரி, சிவராத்திரி மற்றும் தனுர்மாத அபிஷேகங்களும் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன.

    பிரதோஷம் மற்றும் மகாசிவராத்திரி முதலான விழாக்களும் வழக்கமாக நடைபெறுகின்றன. இக்கோவில் தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 07.30 மணி வரையும் பக்தர்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    பெரிய காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பிள்ளையார்பாளையம். இந்த பகுதியில் முடங்கு வீதியில் இக்கோவில் அமைந்துள்ளது.

    காசியைப் போல காயாரோகணேஸ்வரர் கோவிலில் முக்தி மண்டபம் உள்ளது. இத்தல ஈசனையும், அம்பாளையும் வழிபடுவதால் இறப்பிற்கு பின் முக்தி நிச்சயம்.
    அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் அவதாரம் செய்த திருத்தலம் ‘கடல்நாகை’ எனும் நாகப்பட்டினம் ஆகும். மீனவரான அதிபத்த நாயனார், தான் வலைவீசி நடுக்கடலில் தினமும் பிடிக்கும் மீன்களில், முதல் மீனை ஈசனுக்கு அர்ப்பணித்து வந்தார். அதாவது, தினமும் முதல் மீனை அப்படியே கடலில் மீண்டும் ஈசனுக்கு என அர்ப்பணித்து விட்டுவிடுவார். கடும் வறுமையிலும் அவர் இந்த திருத்தொண்டை தவறாது செய்து வந்தார்.

    ஒரு நாள் ஒரே ஒரு மீன் தான் அதிபத்த நாயனாருக்கு கிடைத்தது. மனமகிழ்வுடன் அதையும் இறைவனுக்கே அர்ப்பணித்தார். வறுமையில் தவித்த அந்தக் குடும்பம் அன்று பசியால் வாடியது. இருப்பினும் சிவனுக்கு செய்த பணியை நினைத்து அதிபத்தர் திருப்தியடைந்தார்.

    மறுநாள் அதிபத்தரின் வலையில் தங்க மீன் கிடைத்தது. அந்த மீனையும் ஈசனுக்கே அர்ப்பணம் செய்தார். வறுமையிலும் கூட விலைஉயர்ந்த தங்க மீனை இறைவனுக்கு தியாகம் செய்த தொண்டை எண்ணி மகிழ்ந்த ஈசன், அதிபத்தருக்கு காட்சி கொடுத்து அவரை ஆட்கொண்டார்.

    இந்த நிகழ்வு நடந்தது ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திர நாளில் ஆகும். நாகப்பட்டினம் நீலாயதாட்சி சமேத காயாரோகணேஸ்வரர் ஆலயத்தில் அதிபத்தருக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது. அதிபத்தருக்கு ஈசன் அருள் செய்த நிகழ்வை, ஆவணி ஆயில்ய நாளில் திருக்கோவில் அருகில் உள்ள கடலில், படகு மற்றும் மீன் வலையுடன் சென்று நடத்திக் காண்பிக்கிறார்கள்.

    ஆவணி ஆயில்ய நாளின் மாலை நேரத்தில், ஆலயத்தில் இருந்து நீலாயதாட்சி அம்மனுடன் காயாரோகணேஸ்வர சுவாமி புறப்படுகிறார். அவரோடு நாகை புதிய கடற்கரைக்கு ஆயிரக்கணக்கான அடியவர்களும் வருவார்கள். அப்போது அதிபத்தரின் உற்சவர் சிலையை படகில் வைத்து கடலுக்குள் எடுத்துச் சென்று, அதிபத்தர் தங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வினை நடத்திக் காண்பிக்கிறார்கள்.

    பொதுவாக கோவிலுக்கு அருகில் யாராவது இறந்து விட்டால் கோவில் நடையை அடைத்து விடுவார்கள். பரிகார பூஜைகள் செய்தபின்னர் தான் நடையை திறப்பார்கள். ஆனால் இந்த தலத்தில் மட்டும் நடை திறந்தே இருக்கும். சிவனருள் பெற்ற அதிபத்த நாயனாருக்கு மரியாதை தரும் விதமாக, இவ்வூரில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களுக்கு இத்தல சிவபெருமான் சார்பில் மரியாதை செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது.

    இறந்தவரின் உடலை ஆலயத்திற்கு முன்பாக வைத்து விடுவார்கள். அப்போது சிவாச்சாரியார், கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்கு அணிவித்த மாலை, வஸ்திரம் ஆகியவற்றை இறந்தவர் உடலுக்கு அணிவித்து, தீர்த்தம் கொடுப்பார். அதன்பிறகே இறுதிச் சடங்கிற்காக தூக்கிச் செல்வார்கள். இவ்வாறு செய்வதால் இறந்தவரின் ஆன்மா, சிவபதம் அடைவதாக நம்பப்படுகிறது.

    காசியைப் போல இத்தலத்திலும் முக்தி மண்டபம் உள்ளது. இத்தல ஈசனையும், அம்பாளையும் வழிபடுவதால் இறப்பிற்கு பின் முக்தி நிச்சயம். வாழும்போது பக்தியுடன் வாழ்ந்தால், நம் வாழ்க்கைக்குப் பிறகு சிவபதம் நிச்சயம். இறந்தவர்களின் ஆன்மா முக்தி பெற, இத்தல ஈசனுக்கு ‘மோட்ச தீபம்’ ஏற்றியும் வழிபடலாம்.

    நாகப்பட்டினத்தின் புராண காலப்பெயர், ‘கடல் நாகைக் காரோணம்’ என்பதாகும். இத்தல ஈசனின் திருநாமம் ‘காயாரோகணேஸ்வரர்’. அன்னையின் திருநாமம் ‘நீலாயதாட்சி’ என்னும் ‘கருந்தடங்கண்ணி’. ‘காயம்’ என்றால் ‘உடம்பு’ என்று பொருள்படும். ‘ஆரோகணம்’ என்பதற்கு ‘உடம்போடு சேர்த்து அணைத்துக் கொள்ளல்’ என்று அர்த்தம். இங்குள்ள ஈசன், புண்டரீக மகரிஷியின் உடலை, தன் சிவலிங்கத் திருமேனியோடு சேர்த்துக் கொண்டதால், இத்தல இறைவனுக்கு ‘காயாரோகணர்’ என்றும், இத்தலத்திற்கு ‘காயாரோகணம்’ என்றும் பெயர் வந்தது.

    மனித உடலோடு சொர்க்கத்தில் இடம் கேட்டு தவம் செய்தார் புண்டரீக மகரிஷி. அவரது தவத்தை மெச்சி, அவரது உடலை தன்னுள் ஆரோகணம் செய்து முக்தி கொடுத்தார் ஈசன். இங்கு மூலவர் காயாரோகணேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். நெற்றிப் பட்டத்துடன் கூடிய பெரிய சிவலிங்கமாக கிழக்கு பார்த்த வண்ணம் காட்சி தருகிறார். மார்க்கண்டேயர், அகத்தியர், வசிஷ்டர், கவுதமர், காசிபர், புலத்தியர், ஆங்கிரசர் முதலிய சப்த ரிஷிகளுக்கும், சிவபெருமான் மூல சிவலிங்கத்தில் இருந்து தோன்றி சோமாஸ்கந்தராய்க் காட்சி கொடுத்த பெரும் புண்ணிய தலம் இதுவாகும். இங்கு மூலவருக்கு பின்புறம் தனி மாடத்தில் சிவன், அம்பாள் நடுவில் முருகப்பெருமானுடன் சோமாஸ்கந்த சிலையும் உள்ளது. இத்தலத்தில் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாக இவ்வாலயம் திகழ்கிறது. மூலவருக்கு அருகில் தியாகராஜர் சுந்தர விடங்கராய் உள்ள சன்னிதியும் இருக்கிறது. கருவறை கோஷ்டத்தில் லிங்கோத்பவர், பிச்சாடனர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகள் உள்ளன. அஷ்ட நாகங்களில் ஒன்றான ஆதிசேஷன் மகா சிவராத்திரி நாளில் இத்தல ஈசனை வழிபட்டு பேறு பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. நாக தோஷங்கள் அகல, இத்தல ஈசன் வழிபாடு நமக்குத் துணை நிற்கும்.

    சம்பந்தர், அப்பர், சுந்தரரின் பாடல் பெற்ற தலம் இதுவாகும். சுந்தரருக்கு இத்தல ஈசன் நவமணிகள், முத்துமாலை, பட்டு முதலியன வழங்கியுள்ளார்.

    இத்தல ஈசன் அகத்தியருக்கு தனது திருமணக் காட்சியை இங்கும் காட்டி அருளியுள்ளார். கோவிலின் உள்ளே சென்றதும் ஐந்து தலை நாகம் குடை பிடிக்க ‘நாகாபரணப் பிள்ளையார்’ உள்ளார். இவருக்கு பின்னால் சுதை வடிவில் பெரிய நந்தி இருக்கிறது. நந்திக்கு தென்புறம் முக்தி மண்டபம் உள்ளது. ஆலயப் பிரகாரத்தில் வல்லப கணபதி, அகோர வீரபத்திரர், பஞ்சமுக லிங்கம், ஆத்ம லிங்கம், மாவடிப் பிள்ளையார், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், பழனி ஆண்டவர், இடும்பன், சூரியன், கஜலட்சுமி, அறுபத்து மூவர், சனீஸ்வரர், நவக்கிரகங்கள், பைரவர் சன்னிதிகள் இருக்கின்றன.

    இத்தல அம்பாள் நீலாயதாட்சியின் கண்கள் கருநீலத்தில் அழகானது. நான்கு திருக்கரங்களுடன் நின்றத் திருக்கோலத்தில் அம்பாள் காட்சி தருகிறார். 64 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும். சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமளா சாஸ்திரிகள், முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோரின் கீர்த்தனைகளால் அலங்கரிக்கப்பட்ட வள் இந்த அன்னை. இங்குள்ள நீலாயதாட்சி அம்மன், கன்னியாகுமரி பகவதி அம்மனைப் போலவே கன்னியாக காட்சித் தருகிறாள்.

    இரட்டை நோக்கு நந்தி :

    அம்பாள் இங்கு கன்னியாக இருப்பதால், ஈசன் நந்தியை அவளுக்குப் பாதுகாப்பாக அனுப்பினார். ஆனால் நந்தி, ‘தான் அனுதினமும் ஈசனையும் தரிசிக்க வேண்டும்’ எனக் கேட்டார். உடனே ஈசன், அம்பாள் சன்னிதியில் இருந்து கொண்டே தம்மை வழிபடும்படி கூறினார். இதனால் அம்பாள் எதிரில் உள்ள நந்தி தன் கழுத்தை முழுமையாக திருப்பி, சிவன் சன்னிதியைப் பார்த்த படி உள்ளது. நந்தி தனது இடது கண்ணால் ஈசனையும், வலது கண்ணால் அம்பாளையும் பார்த்தபடி இருப்பது இவ்வாலயத்தின் சிறப்பம்சம். இதனை ‘இரட்டை நோக்கு நந்தி’ என்கிறார்கள். இந்த நந்திக்கு அருகம்புல் மாலை அணிவித்து, ஈசன், அம்பிகை, நந்தி என முறைப்படி தேன் அபிஷேகம் செய்து, 5 நெய் தீபங்கள், 5 சந்தனாதி தைல தீபங்கள் ஏற்றி வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது.

    வழிபாட்டு பலன் :

    இவ்வாலயத்தில் உள்ள அகோர வீரபத்திரரை, பவுர்ணமி நாளில் வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் வறுமை அகலும். இத்தல வெண்ணெய்பிரான், காசி விஸ்வநாதர், அருணாசலேஸ்வரர் சன்னிதிகள் இரட்டிப்பு பலன்களை அளிக்கவல்லவை. இங்குள்ள பைரவரை வெள்ளி மற்றும் அஷ்டமி நாட்களில் முந்திரி மாலை அணிவித்து வில்வ அர்ச்சனை செய்து, நறுமண மலர்மாலை சூட்டி 9 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் கிரக தோஷங்கள் அகலும். இங்குள்ள சனீஸ்வரர், தசரதரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்கிறார்கள். இவரை 9 நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டால் சகல விதமான சனி தோஷங்களும், சிவராத்திரி நாளில் இத்தல ஈசனை வழிபட்டால் நாக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

    பிரதோஷத்தில் பெருமாள் :

    சிவன் கோவில்களில் பிரதோஷத்தின் போது ஈசனும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் எழுந்தருள்வார்கள். ஆனால் இத்தலத்தில் மோகினி வடிவில் பெருமாளும் அவர்களுடன் புறப்படுகிறார். இவரை பிரதோஷத்தின் போது மட்டுமே தரிசிக்க இயலும். மற்ற நாட்களில் பெருமாள், காயாரோகணேஸ்வரர் சன்னிதியிலேயே இருக்கிறார். பிரதோஷத்தின்போது மோகினி வடிவில் பெருமாள் புறப்பாடாகும் சிவதலம் இது ஒன்றேயாகும்.

    நாகப்பட்டினம் பஸ் நிலையத்தில் இருந்து 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம். 
    ×