என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டியில் மழை"

    • சாலையின் இருபுறங்களிலும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
    • கொட்டி தீர்த்த கனமழை காரணமாக குன்னூர் ரெய்லி காம்பவுண்ட் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக உறைபனி காணப்பட்டது. இதனால் கடுமையான குளிரும் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு 11 மணிக்கு பிறகு கனமழை கொட்டி தீர்த்தது.

    இரவு தொடங்கிய மழையானது இன்று காலை வரை விடிய, விடிய வெளுத்து வாங்கியது. இந்த மழை காரணமாக குன்னூர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

    இந்த கனமழைக்கு குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் குறும்பாடி என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டு மண் திட்டுகள் சாலையில் விழுந்தன.

    அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று மண்சரிவில் சிக்கி கொண்டது. இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சாலையின் இருபுறங்களிலும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மண் திட்டுகள் மற்றும் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    2 மணி நேரத்திற்கு பிறகு நள்ளிரவு 1 மணிக்கு அங்கு போக்குவரத்து சீரானது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மேலும் 3 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

    இதேபோன்று குன்னூர்-கொலக்கெம்பை, சேலாஸ் செல்லும் சாலையில் 7 இடங்கள், குன்னூர்-ஊட்டி சாலையில் 4 இடங்களில் சிறிய அளவிலான மண்சரிவுகள் ஏற்பட்டது. இதனை நெடுஞ்சாலைத்துறையினர், தீயணைப்பு துறையினர் உடனடியாக அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    கனமழைக்கு குன்னூர் வேளாங்கண்ணி நகர் பகுதியில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதேபோன்று குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கொட்டி தீர்த்த கனமழை காரணமாக குன்னூர் ரெய்லி காம்பவுண்ட் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலையோரம் நின்றிருந்த 3 கார்கள் மீது மண் குவியல் விழுந்து கார்கள் சேதம் அடைந்தன.

    மேலும் அப்பகுதியில் இருந்த 3 மின்கம்பங்கள் அடுத்தடுத்து முறிந்து விழுந்தன. அங்குள்ள டிரான்ஸ்பார்மரும் சேதமடைந்தது. இதனால் ரெய்லி காம்பவுண்ட் மற்றும் மாடல் அவுஸ் பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.

    மேலும் இரவு முதல் விடிய, விடிய பெய்த மழையால் குன்னூர் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இரவு முதல் இன்று காலை வரை மின்வினியோகம் தடைபட்டது.

    இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தொடர்ந்து இன்று காலையும் மழை பெய்தது.

    ஊட்டி, கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 21.5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:

    குன்னூர்-215, கோத்தகிரி-114, குன்னூர் புறநகர்-90, கீழ்கோத்தகிரி-73, கெத்தை-66, கிண்ணக்கொரை-63, பாலகொலா-60, கொடநாடு, குந்தா-51, பர்லியார்-46, ஊட்டி-37.4 அளவு மழை பெய்துள்ளது.

    • சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் தண்ணீரில் மாட்டிக்கொண்டன.
    • தொடர்ந்து மழை வெள்ளம் பல பகுதிகளில் வடியாததால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

    ஊட்டி:

    தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அவற்றை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதனால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    இதன்படி நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை மிதமான காலநிலை நிலவிய நிலையில் மதியத்திற்கு பிறகு கனமழை கொட்டி தீர்த்தது.

    மதியம் 12 மணிக்கு தொடங்கிய கனமழை 2 மணி வரை கொட்டியது. ஊட்டியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இந்த மழையால் மத்திய பஸ் நிலையம், அரசு தாவரவியல் பூங்கா, தலைகுந்தா, பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி சாலை முழுவதும் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது.

    அதேபோல் ரெயில் நிலைய பாலத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் சுற்றுலா பயணிகள் படகு இல்லம் செல்ல முடியாமல் மாற்றுப்பாதையில் சென்றனர்.

    ரெயில் நிலைய காவல் நிலையத்தை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அங்கு பணியில் இருந்த காவலர்கள் வெளியேறினர். ரெயில்வே பாலத்தில் பஸ்கள் மற்றும் ஒரு சில கார்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றன.

    ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள வாகன நிறுத்தத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் குளம் போல் காட்சியளித்தது. அந்த பகுதியில் இருந்து வெளியேறிய மழைநீர் சாலையே தெரியாத அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் தண்ணீரில் மாட்டிக்கொண்டன. இதனால் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து மழை வெள்ளம் பல பகுதிகளில் வடியாததால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்து வருகிறது. நேற்று கொட்டிய மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் குடைபிடித்த படி மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.

    ஊட்டியில் நேற்று இரவு விடிய, விடிய மழை பெய்தது. பலத்த சூறாவளி காற்று வீசியதில் மரம் விழுந்து மாணவர் ஒருவர் பலியானார்.
    வால்பாறை:

    ஊட்டியில் நேற்று இரவு விடிய, விடிய மழை பெய்தது. பலத்த சூறாவளி காற்றும் வீசியது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பங்கள் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்

    ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள அரசு பணிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மகன் இமான் அகஸ்டின் (18). கோத்தகிரியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பி.காம். (சி.ஏ.)முதலாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறை என்பதால் நேற்று வீட்டுக்கு வந்து இருந்தார்.

    மாணவர் இமான் அகஸ்டின் ஊட்டி பிங்கர் போஸ்ட் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது பலத்த சூறாவளி காற்று வீசியது. அந்த சமயத்தில் ரோடு ஓரம் இருந்த ராட்சத கற்பூரம் மரம் திடீரென மாணவர் இமான் அகஸ்டின் மீது விழுந்தது.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலே அவர் பரிதாபமாக இறந்தார்.

    நேற்று விடுமுறை நாள் என்பதால் பஸ் நிறுத்தத்தில் கூட்டம் குறைவாக இருந்தது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மஞ்சூர் சாலையில் ஜார்க்கண்ட் மாநில வாலிபர், பந்தலூரில் தாய்-மகள், நேற்று ஊட்டியில் கல்லூரி மாணவர் என 4 பேர் பலியான சம்பவம் நடைபெற்று உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான உத்தரவை கலெக்டர் இன்சென்ட் திவ்யா பிறப்பித்துள்ளார். பலத்த மழை காரணமாக கூடலூர் ஏழுமுறம் ஆற்றின் கரையோரம் தடுப்பு சுவர் இடிந்து மண் அரிப்பு ஏற்பட்டது. குன்னூர் அருகே உள்ள வெலிங்டன்- அருவங்காடு ரெயில் நிலையங்களுக்கு இடையே ராட்சத மரம் தண்டவாளத்தில் விழுந்தது.

    இதனால் மலை ரெயில் நடுவழியில் நின்றது. தண்டவாளத்தில் விழுந்த மரத்தை ரெயில்வே ஊழியர்கள் அகற்றினார்கள். இதனால் மலை ரெயில் 20 நிமிடம் தாமதமாக சென்றது.

    ஊட்டியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்து உள்ளது.

    ×