search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TOXIC WASTE"

    • பசுமையுடன் காட்சியளிக்கும் தென்காசி மாவட்டம் குப்பைகளின் புகலிடமாய் மாறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.
    • போலீசாருக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    தென்காசி:

    தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தலங்களை உள்ளடக்கிய மாவட்டங்களில் தென்காசி மாவட்டமும் ஒன்று. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பசுமையுடன் ரம்மியமாக காட்சியளித்து வரும் இந்த மாவட்டத்தில் புளியரை பகுதியில் கேரள மாநிலத்தின் எல்லையானது ஆரம்பமாகிறது.

    இதனால் கேரளாவில் இருக்கும் சீதோஷண நிலையை ஒன்றியதாக தென்காசி மாவட்டம் விளங்கி வருகிறது. அதுமட்டும் அல்லாமல் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து பாயும் முக்கிய அருவிகளை கொண்டதும், பிரசித்தி பெற்ற கோவில்களை கொண்ட நகரமாகவும் தென்காசி விளங்கி வருகிறது.

    தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் பலரும் குற்றால அருவிகளில் குளித்து மகிழ்வார்கள். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்த தென்காசியை கடந்த 2019-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் 33-வது மாவட்டமாக அறிவித்தார்.

    தென்காசியில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு காய்கறிகள், சிமெண்ட் மற்றும் ஏராளமான அத்தியாவசிய பொருட்கள் புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லும் வாகனங்கள் திரும்பி வரும்போது சாதாரணமாக திரும்புவது இல்லை.

    கேரளாவில் இருந்து தென்காசி மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்கள் எண்ணற்ற இறைச்சி கழிவு, மருத்துவ கழிவுகளை ஏற்றி வருவதும், அதனை தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம், புளியங்குடி, ஆலங்குளம், சங்கரன்கோவில், குருவன்கோட்டை உள்ளிட்ட இடங்களில் கொட்டிவிட்டு செல்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. பணத்திற்கு ஆசைப்பட்டு சில டிரைவர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது தமிழகத்திற்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதும் வாடிக்கையாகிவிட்டது.

    தென்காசி மாவட்டத்தின் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, எல்லையில் உள்ள சோதனை சாவடியில் அதிகாரிகள் தீவிர சோதனைகள் நடத்தினாலும், அதனையும் மீறி ஒரு சில அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் ஏற்றி வரும் வாகனங்களை அனுமதித்து விடுகின்றனர்.

    இதனால் பசுமையுடன் காட்சியளிக்கும் தென்காசி மாவட்டம் குப்பைகளின் புகலிடமாய் மாறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. பழைய இரும்பு பொருட்களை அனுப்புகிறோம் என்ற பெயரில் மர்ம கும்பல் அதனுடன் சேர்த்து நச்சுத்தன்மையுடன் விளங்கும் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை லாரிகளில் ஏற்றி அனுப்புகின்றனர்.

    அவர்கள் அனுப்பும் பொருட்களை தென்காசி மாவட்டத்தில் காட்டுப்பகுதிகளில் தனி தனி செட்டுகளை அமைத்து தரம் பிரித்து பொருட்களை தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். இதனால் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும் தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வரும் சூழ்நிலையில் அங்கிருந்து மீண்டும் கனிம வளங்களை ஏற்றுவதற்கு தென்காசி மாவட்டத்திற்கு நுழையும் கனரக வாகனங்களும் கழிவுகளை கொண்டு வந்து இரவு நேரங்களில் காட்டு பகுதியில் கொட்டி செல்வதாக புகார்கள் கூறப்படுகிறது.

    சமீபத்தில் கூட ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் இருந்து பனையங்குறிச்சி செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்ததை கண்டு கிராமவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மேலும் கரும்பனூர் அருகே காட்டுப்பகுதியில் கழிவு பொருட்களை இரவு நேரங்களில் தீ இட்டு எரித்ததால் சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் கரும்பனூர் கிராமத்தை சேர்ந்த 4 பேர் கடையம் போலீசாரால் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றிக்கொண்டு தென்காசி மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களை முழுமையாக சோதனை செய்து முறைகேட்டில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தென்காசி மாவட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பல ஆண்டு கோரிக்கையாக உள்ளது. தென்காசி மாவட்ட மக்களின் மனங்களை பூர்த்தி செய்யும் வண்ணம் மாவட்ட நிர்வாகம் அதிரடியாக செயல்பட்டு கேரளா கழிவுகள் தமிழக எல்லைக்குள் நுழைவதை தடுத்து நிறுத்தி இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

    • விராலிமலையில்பாசன குளத்தில் நச்சுக்கழிவு கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • நச்சுக்கழிவுகளால் இக்குளத்தில் உள்ள மீன், தவளை, நத்தை போன்ற நீர்வாழ் உயிரினங்கள் செத்து மிதக்கின்றன.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் அம்மன் குளக்கரையில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பட்டமரத்தான் கோவில். இக்குளக்கரையில் தான் புகழ் பெற்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    பாசனக்குளமான இந்த குளத்தில் தண்ணீரை தேக்கி வைத்தே விராலிமலை, கலிங்கிப்பட்டி, சின்னபழனிப்பட்டி, மாதிரிப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பல ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இப்பகுதி விவசாயிகளுக்கு இக்குளமே முக்கிய வாழ்வாதாரமாகவும் திகழ்ந்து வருகிறது.

    மேலும் இந்த குளத்தை சுற்றி அருண் கார்டன், கிருஷ்ணா நகர், சண்முகா நகர், ரத்னா கோல்டன் சிட்டி, சீனிவாச நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளுக்கும் இக்குளமே முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.

    இந்தநிலையில் விராலிமலை பகுதியில் இயங்கி வரும் ஒரு சில தொழிற் சாலைகளிலிருந்து உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக் கழிவுகள் மற்றும் எண்ணைக் கழிவுகள் அனைத்தும் இந்த குளத்தில் கொண்டுவந்து கொட்டப்பட்டு வருகிறது. அந்த கழிவுகள் நீரில் கலந்து மிகவும் கடுமையாக குளம் மாசுபட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    இதனை கிராம சபை கூட்டம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் தற்போது மிகக்கடுமையாக நீர், நிலம், காற்று மாசு ஏற்பட்டு சுகாதார சீர்கேடு உருவாகியுள்ளது.

    மேலும் நச்சுக்கழிவுகளால் இக்குளத்தில் உள்ள மீன், தவளை, நத்தை போன்ற நீர்வாழ் உயிரினங்கள் செத்து மிதக்கின்றன. இந்த பாதிப்பின் தொடர்ச்சியால் இந்த குளம் மற்றும் இதனைச்சுற்றி உள்ள நிலங்களின் தன்மை மாறி புல், மரம், செடி கொடிகள் ஏதும் வளர தகுதியற்று மண்ணிற்கு மலட்டு தன்மை ஏற்படும் அபாய நிலை உருவாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் விவசாயிகள், பொதுமக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×