என் மலர்
நீங்கள் தேடியது "கோடை உடல்நலம்"
- இளநீர் உலகின் சிறந்த உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
- இளநீரின் வழுக்கையானது புரதச்சத்து நிறைந்ததாகும்.
கோடையின் சூட்டை தணிக்க இயற்கை வழங்கியுள்ள பானம் இளநீர். இது உடலுக்கு உடனடி ஆற்றல் தரும் இயற்கை குளுக்கோஸ். வெயிலுக்கு இதமான, தாகத்தை தணிக்கும் இளநீர் பானம் நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பது முதல் புற்றுநோயை தடுப்பது வரை உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் தரும்.
இளநீர் உலகின் சிறந்த உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கோடையில் குளிர் பானங்களுக்கு செலவிடுவதை இளநீருக்கு செலவிடுங்கள், ஆரோக்கியமாக இருங்கள். சத்துக்கள் நிறைந்த இளநீர் குறைந்த கலோரியும், குறைந்த சர்க்கரையும் கொண்ட பானம். இதில் ஒரு கப்-ல் 45 கலோரி ஆற்றல், 11 மி.கி., சர்க்கரை சத்து மட்டுமே உள்ளது. கொழுப்பு இல்லை. சோடியம் (25 மி.கி.), பொட்டாசியம் (470 மி.கி.,) ஆகிய சத்துகள் அதிகளவிலும், கால்சியம் மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் ஓரளவுக்கு இளநீரில் உள்ளதால், உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்கும் சிறந்த பானமாக உள்ளது.
நீர்ச்சத்து இழப்பால் ஏற்படும் சோர்வை நீக்கி, உடனடியாக ஆற்றலை மீட்டுத்தரும் இளநீர் நோயாளிகளுக்கு ஏற்றது. நிறைய மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வோர், இளநீர் பருகினால் உடலில் மருந்து நன்கு கிரகிக்க உதவும். இளநீரின் வழுக்கையானது புரதச்சத்து நிறைந்ததாகும். இதில் நுண்சத்துகளும் அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளதால் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. கர்ப்ப காலத்தில் நீரிழப்பு, தலைவலி, பிடிப்புகள், வீக்கம், சுருக்கம் உட்பட பல்வேறு சிக்கல்கள் உண்டாகும். அதை சமாளிக்க இளநீர் உதவும்.
கோடைக்கால நோய்களான வயிற்றுக்கடுப்பு, நீர்க் கடுப்பு, மஞ்சள் காமாலை, அம்மை நோய், தோல் சம்பந்தமான நோய்கள் மற்றும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் இளநீருக்கு உண்டு.
அம்மை நோய், வயிற்றுப் போக்கு, காலரா போன்றவை ஏற்படும்போது குறையும் நீர்ச்சத்தை ஈடுகட்ட இளநீர் சிறந்தது. இளநீர் பருக சிறுநீர் நன்றாக வெளியேறும். வளரும் குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் இளநீர் சிறந்த டானிக்.
வியர்க்குரு, தீக்காயங்கள், அமிலத்தால் ஏற்பட்ட காயங்கள் போன்றவற்றின் மீது இளநீரை தடவினால் விரைவில் குணமடையும். இளநீரில் உள்ள லாரிக் அமிலம் படர்தாமரை, கிளமீடியா ஹெலிகோபேட்டர் உள்ளிட்ட நோய்க்கிருமிகளை அழிக்க உதவுகிறது. மேலும் இளநீர் குடல்புழுக்களை அழிக்கிறது.
இது உடலில் நல்ல கொழுப்பை (எச்.டி.எல்) அதிகரிக்கும். இதனால் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களுக்கு ஏற்றது. உடற்பயிற்சி செய்தபின் உற்சாக பானங்களுக்கு பதில் இளநீர் அருந்தினால், சிறந்த பலன்கள் கிடைக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இளநீர் அருந்துவதால், அதில் நிறைந்துள்ள பொட்டாசியம் சத்து ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து குறைகிறது.
குழந்தைகளை வீட்டிற்கு வெளியே விளையாட அனுப்புவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு சன்ஸ்கிரீன் பூசிவிடவும். அதன் பிறகு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அதனை பூசவேண்டியது அவசியம். சூரிய கதிர்கள்பட்டு சரும பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க இந்த சன்ஸ்கிரீன் உதவும். சூரிய கதிர்களின் கடுமையான தாக்கத்தால் குழந்தைகளின் சருமத்தில் `சன் பர்ன்' காயம் ஏற்பட்டால் அந்த இடங்களில் ஐஸ்கட்டிகளால் ஒத்தடம் கொடுக்கலாம். குளிர்ந்த தண்ணீரையும் அந்த இடத்தில் ஊற்றலாம்.
குழந்தைகள் கடுமையான உஷ்ணத் தாக்குதலுக்கு உள்ளானால் தலைச்சுற்றல், மயக்கநிலைகூட ஏற்படலாம். அப்போது அவர்களுக்கு உடல்வெப்ப நிலை அதிகரிக்காது. ஆனால் இதயத் துடிப்பு அதிகரிக்கும். கோடைகாலத்தில் பருகும் தண்ணீரின் அளவு குறைவதுதான் இதற்கான காரணம். இத்தகைய பாதிப்பு ஏற்பட்ட குழந்தையை உடனே காற்றோட்டமிக்க பகுதிக்கு கொண்டு சென்று, ரத்த ஓட்டம் அதிகரிக்கும் விதத்தில் தலையை சற்று தாழ்த்திவைக்கவேண்டும். குளிர்ந்த நீரில் முக்கிய டவலால் முகம் மற்றும் உடல்பகுதியை துடைத்துவிடுங்கள். சத்தமாக அழைத்தும் குழந்தை பதில் குரல் தராவிட்டாலும், சுவாசம் சரியாக நடந்துகொண்டிருக்கிறதா என்று பாருங்கள். சுவாசத்தில் தடை ஏற்பட்டிருந்தால் முதலுதவி அளித்துவிட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுங்கள்.
கோடையில் குழந்தைகளை போதுமான அளவு தண்ணீர் பருகவையுங்கள். அவர்களுக்காக சிப்பர் பாட்டில் வாங்கி, அதில் தண்ணீரை நிறைத்துக்கொடுங்கள். மதியத்திற்குள் குறிப்பிட்ட அளவில் பருகிவிட்டால் பரிசு தருவதாக கூறி, தினமும் தேவையான அளவில் நீரை பருகவைத்து விடுங்கள். எலுமிச்சை சாறில் உப்பும் தண்ணீரும் கலந்துகொடுங்கள். கஞ்சிதண்ணீர், மோர் போன்றவைகளையும் குடித்துக்கொண்டிருக்கச் செய்யலாம். பழச்சாறும் பருகக் கொடுக்கலாம்.






