search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coimbatore news கோவை செய்திகள்"

    கடந்த 6 மாதங்களாக மாணவர்களுக்கு பாடம் எடுப்பது இல்லை என்று குற்றச்சாட்டு
    கோவை, மே.24-
    கோவை அரசு கலைக்கல்லூரியில் புவியியல் துறை செயல்பட்டு வருகிறது. இந்த துறையில் பேராசிரியை ஒருவர் கடந்த 6 மாதங்களாக மாணவர்களுக்கு பாடம் எடுப்பது இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதனிடையே இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று கோவை  கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்கள் பேராசிரியை முறையாகப் பாடம் எடுப்பது இல்லை என்று கூறி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா கூறியதாவது:-
    கடந்த 6 மாதமாக பேராசிரியர் பாடம் எடுக்காமல் உள்ளார்.  விரைவில் செமஸ்டர் தேர்வுகள் தொடங்க உள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

    ஆனாலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் வகுப்புக்கு வருவதில்லை.அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். 
    மேலும் கோவை அரசு கலைக் கல்லூரிக்கு வரும் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

    2021-22 ன் கீழ் ரூ.227 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் தொடக்க விழா
    காளப்பட்டி, மே.24-
    தமிழக அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் 2021-22 ன் கீழ் ரூ.227 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் வேளாண் வளர்ச்சி பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கொண்டையம் பாளையத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். நடராஜன் எம்.பி, எஸ்.எஸ்.குளம் தி.மு.க.ஒன்றிய செயலாளரும், அட்மா தலைவருமான சுரேஷ்குமார், கொண்டையம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார். தோட்டக்கலை துணை இயக்குனர் புவனேஸ்வரி வரவேற்றார். இதில் தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை, வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, பால்வ ளத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 210 பயனாளிகளுக்கு வீட்டுத் தோட்டத்திற்கு தேவையான 8 வகை விதைகள் மற்றும் 2 கிலோ மண்புழு உரம் 75 சதவீத மானியத்திலும், பயிர் ஊக்கத்தொகை 100 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டது. மேலும் ரூ.53 ஆயிரத்து 625 மதிப்பில் பயனாளிகளுக்கு வேளாண் பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சர்க்கார் சாமகுளம் பேரூராட்சி தலைவர் கோமளவல்லி கந்தசாமி, சர்க்கார் சாமகுளம் பேரூராட்சி துணைத்தலைவர் மணி என்ற விஜயகுமார் மற்றும் அரசு அதிகாரிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்
    கோவை, 
    கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கார்த்திக் நகரை சேர்ந்தவர் ரகுநாதன். இவரது மகள் இந்திரா பிரியதர்ஷினி (வயது 19). 
     
    இவர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தில் நுைழவு தேர்வுக்காக படித்து வந்தார். சம்பவத்தன்று ரகுநாதன் தனது மகளை பயிற்சி மையத்துக்கு அழைத்து சென்று விட்டார். பின்னர் மாலையில் அழைத்து வருவதற்காக சென்றார். அப்போது இந்திரா பிரியதர்ஷினி மாயமாகி இருந்தார். இது குறித்து ரகுநாதன் ஆர்.எஸ். புரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள். 
     
    கே.கே. புதூர் என்.ஜி.ஆர். வீதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் அபர்ணா (19). இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
    சம்பவத்தன்று இவர் தனது தந்தையிடம் கல்லூரியில் கட்டணம் கட்டுவதற்காக ரூ.15 ஆயிரம் பணத்தை வாங்கி கொண்டு கல்லூரிக்கு சென்றார். ஆனால் கல்லூரி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.  இது குறித்து மாணவியின் தந்தை சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.15 ஆயிரம் பணத்துடன் மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள். 

    10 வயதில் திருட தொடங்கி 52 வயதிலும் தொடர்கிறது
     கோவை 
    மாநகரில், மக்கள் அதிகம் கூடும் கடைவீதிகள் மற்றும் டவுன் பஸ்களில் அடிக்கடி ஜேப்படி நடந்துவருவதாக புகார் எழுந்தது. 
     
    இதுபற்றி, கண்காணித்து, கொள்ளையர்களை மடக்கிபிடிக்க, மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. 
    இதில் ஆர்.எஸ்.புரம் உதவி கமிஷனர் மணிகண்டன் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, நாகராஜ், ஏட்டுகள் கார்த்திக், பூபதி, உமா, சுரேஷ் ஆகியோர் இடம்பெற்றனர்.
     இவர்கள், ஆர்.எஸ்.புரம் திருவேங்கடசாமி வீதியில் ரோந்து வந்தனர்.
    அப்போது, ரோட்டோரம் நிறுத்தியிருந்த ஜனகரத்தினம் என்பவரது காரின் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த 2 லேப்-டாப்களை ஒருவர் திருடியதை கண்டுபிடித்தனர். உடனடியாக அவரை சுற்றிவளைத்து பிடித்தனர். 
     
    விசாரணையில் அவரது குணா என்கிற குணசேகரன் (வயது 52) என்பதும், கோவை சுக்கரவார் பேட்டை மில் ரோட்டை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரிடமிருந்து 2 லேப்-டாப் மற்றும் ரூ.1,500 பிக்பாக்கெட் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
     பின்னர், குணசேகரன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் கூறியதாவது:-
    எங்கள் குடும்பத்தில் சரியான முறையில் வழிகாட்ட எனக்கு யாரும் இல்லை. சிறு வயதில் இருந்தே படிப்பு  வரவில்லை. அதனால் எனக்கு 10 வயது இருக்கும்போதே திருட்டு வேலையில் இறங்கிவிட்டேன்.  
    என்னால் முடிந்த அளவுக்கு சிறு சிறு பொருட்களை திருடி, விற்று அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கை நடத்தி வந்தேன். வளர, வளர திருட்டுத்தொழிலில் நல்ல அனுபவம் கிடைத்தது.
     
    இதனால், பெரிய அளவில் திருட ஆரம்பித்தேன். கடைவீதிகளில் கூட்ட நெரிசலில் மக்கள் செல்லும்போது பணம், செல்போன், தங்கநகை என கண்ணில் படுவதை எளிதாக திருடிவிடுவேன். பூட்டிக்கிடக்கும் வீட்டை உடைத்தும் நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து வந்தேன். 
    இதுவரை 50 முறை சிறை சென்றுள்ளேன் ஜாமீன் எடுக்கவும்வேண்டும் என்பதால், மீண்டும் திருட்டு வேலையில் ஈடுபடுவேன்.
     
    தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததால், போலீசார் என்னை 4 முறை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்தனர். அதில் இருந்தும் வெளியே வந்துவிட்டேன். கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து விடுதலையானேன்,  தற்போது குடிபோதையில்  சாலையோரம் கிடப்பவர்களிடம் பணம், செல்போன் திருடுவது,  சிறிய சிறிய திருட்டிலும் ஈடுபட்டு வந்தேன்.  
       மீண்டும் போலீசில் சிக்கிக் கொண்டேன். 
    இவ்வாறு வாக்குமூலம் அளித்தார்.இதையடுத்து போலீசார் குணசேகரனை கைது செய்து  கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார்.
    கோவை, 
    கோவை கெம்பட்டி காலனி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 21). பெயிண்டர்.
     
     சம்பவத்தன்று இவர் கருவலூர் மாரியம்மன் கோவில் வீதி வழியாக தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த வாலிபர்கள் தினேஷ்குமார் பாக்கெட்டில் வைத்து இருந்த செல்போனை திருடி தப்பிச் சென்றனர்.
     இது குறித்து அவர் பெரியக்கடை வீதி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்து சென்ற கெம்பட்டி காலனி பாளையம் ேதாட்டத்ைத சேர்ந்த அங்குராஜ் (24), மணிகண்டன் (32) ஆகியோரை கைது செய்தனர்.
     பின்னர் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 
     
    அசாம் மாநிலத்தை சேர்தவர் பிரதீப் (25). மெக்கானிக்.
     இவர் வேலாண்டி பாளையத்தில் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள ஒர்க்‌ஷாப்பில் ெதாழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். 
    சம்பவத்தன்று இவர் ஒர்க்‌ஷாப் முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த வாலிபர் ஒருவர் பேசுவதற்கு செல்போன் வேண்டும் என கேட்டார். இதனையடுத்து பிரதீப் தனது செல்போனை கொடுத்தார். 
    ஆனால் அந்த வாலிபர் செல்போனை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார். 
     
    இது குறித்து பிரதீப் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்து சென்ற கோவில்மேட்டை சேர்ந்த தினேஷ்(21) என்பவரை கைது செய்தனர். 
    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.  

    காரமடையில் தொழிலாளி கைது
    காரமடை,
    ஈரோடு பவானிசாகர் பகுதியில் உள்ள இலங்கைகள் முகாமை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது  30). பெயிண்டிங் காண்டிராக்டர்.
     
    இவர் கடந்த 2 வாரமாக காரமடை பகுதியில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் காரமடை  கார் ஸ்டாண்ட் அருகே உள்ள நிழற்குடையில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் குடிபோதையில் வந்தார்.
    அந்த வாலிபர் பிரகாஷ் அருகே வந்து தகாத வார்த்தைகளால் பேசிக் கொண்டிருந்ததார்.இதனால் பிரகாஷ் அவரை சத்தம்போட்டு அங்கிருந்து செல்லுமாறு கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், அவரை என்னை திட்டுகிறாயா என கேட்டு அங்கிருந்த   கல்லாலை எடுத்து பிரகாசின் மண்டையை உடைத்தார். 
    பின்னர் கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.இதில் மண்டை உடைந்ததில் அவருக்கு ரத்தம் கொட்டியது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பிரகாஷ் காரமடை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவை கணபதியை சேர்ந்த கூலி தொழிலாளி சிவராமன் (வயது 24) என்பவர் பிரகாசை தாக்கியது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் சிவராமனை கைது செய்து  கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பாகுபலி யானை இரவு நேரங்களில் ஊருக்குள் சுற்றி திரிந்து வருகிறது.
    காரமடை, 
    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் ஓராண்டுக்கு பின்னர் மீண்டும் பாகுபலி யானையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. 
     
    தற்போது சமயபுரம், கல்லார், குரும்பனூர், ஓடந்துறை உள்ளிட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிகிறது.
    யானையின் நடமா–ட்டத்தை கண்காணிக்க வனத்து–றையினர் தொடர்ந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும், யானை குடியிருப்பு பகுதி–களிலேயே சுற்றி திரிகிறது.
     
    சம்பவத்தன்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய பாகுபலி யானை சமயபுரம் பகுதியில் சாலையை கடந்து ஊருக்குள் நுழைந்தது. அப்போது அங்கு சுற்றி திரிந்த குட்டி நாய், யானையை பார்த்து குரைத்தது. மேலும் விடாமல் குரைத்து கொண்டே யானையை பின்னால்  ஓடியது. நாய் குரைப்பதை கேட்டு அப்பகுதி மக்கள் விழித்து, வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக பார்த்தனர்.
    அப்போது யானை சுற்றி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் விரைந்து வந்தனர்.அந்த சமயம் நாய் குரைத்து கொண்டே, யானையின் பின்னால் ஓடியது. இதனால் ஆத்திரம் அடைந்த பாகுபலி யானை தனது பின்னால் ஓடி வந்த குட்டி நாயை பார்த்து பிளிறி விரட்ட முயன்றது. 
     
    ஆனால் நாயோ எந்தவித பயமும் இல்லாமல் மிகப்பெரிய யானை எதிர்த்து நின்றதுடன், அதனை வனத்திற்குள் விரட்டுவதிலேேய குறியாக இருந்தது.
    இது அங்கு யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வந்த வனத்துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி திரியும் பாகுபலி யானையால் இப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    வால்பாறையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வேகமாக உயர்ந்து வருகிறது
    கோவை, 
     கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக, கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. 
     
    இதனால் தேயிலை செடிகள் மீண்டும் துளிர் விட்டு, உற்பத்தி அதிகரித்துள்ளது. இடைவிடாது பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர் மழை காரணமாக சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம்  55 அடியாக உயர்ந்துள்ளது. மேலும், பி.ஏ.பி. திட்டத்திலுள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதோடு, அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
     
    160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம், ஒரே நாளில் 10 அடி உயர்ந்து. நேற்று காலை நிலவரப்படி 65.35 அடியாக இருந்தது. இதேபோல, 120அடி உயரமுள்ள ஆழியாறு அணை யின் நீர்மட்டம் 92.40 அடியாகவும், 73 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 45 அடியாகவும் உயர்ந்துள்ளது.
     
    நேற்று முன்தினம்   நிலவரப்படி சோலையாறு -20 மி.மீ., பரம்பிக்குளம் - 10, ஆழியாறு - 1.8, வால்பாறை - 19, மேல்நீராறு - 22, கீழ்நீராறு - 22, காடம்பாறை - 4, மணக்கடவு - 9.6, தூணக்கடவு - 4, பெருவாரிப்பள்ளம் - 7, மேல் ஆழியாறு - 4, பொள்ளாச்சி - 7.6 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

    கோவை மாவட்டத்தில் அந்தந்த தாலுகாஅலுவலகங்களில் நடக்கிறது
    கோவை, 
    கோவை மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜமாபந்தி, அந்தந்த தாலுகாஅலுவலகங்களில் வருகிற 26-ந் தேதி முதல்  தொடங்குகிறது. 
     
    இது குறித்து மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  கூறியிருப்பதாவது:--
    சூலுாரில் எனது  தலைமையில் 26-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை ஜமாபந்தி நடக்கிறது. இதே போல அன்னூரில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமையில் 26 -ந் தேதி முதல் 31-ந் தேதி வரையும், பொள்ளாச்சியில் சப்-கலெக்டர் தலைமையில் 26-ந் ேததி முதல் ஜூன் 2-ந் தேதி வரையும், வால்பாறையில் 26-ந் தேதி ஒரு நாளும் நடக்கிறது.
     
    கிணத்துக்கடவில் கலால் துணை கமிஷனர் தலைமையில் 26-ந் தேதி முதல் 31-ந் வரையும், மேட்டுப் பாளையத்தில் வடக்கு ஆர்.டி.ஓ., தலைமையில் 26-ந்   தேதி முதல் 1-ந் தேதி வரையிலும் ஜமாபந்தி நடக்கிறது.
    பேரூரில் தெற்கு ஆர்.டி.ஓ., தலைமையிலும், மதுக்கரையில் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தலைமையிலும், வடக்கு தாலுகாவில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் தலைமையிலும், கோவை தெற்கில் ஆதிதிராவிடர் நல அலுவலர் தலைமையிலும், ஆனைமலையில் தாட்கோ மேலாளர் தலைமையிலும் ஜமாபந்தி நடக்கிறது.
     
    ஜமாபந்தி நடக்கும் அலுவலகங்களில், பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல், நில எல்லை அளத்தல், முதியோர் உதவித்தொகை, இலவச பட்டா, குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக, அரசு வேலை நாளில் காலை 10 மணி முதல் பொதுமக்கள் மனு அளிக்கலாம்.
    இவ்வாறு கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி உள்ளார்.

    கைதான தம்பி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
    கோவை,
    தேனி மாவட்டம் சிறாப்பாறையை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 37). 
    இவர் கோவை அருகே உள்ள வேலந்தாவளம்  பாலாஜி நகரில் குடும்பத்துடன் தங்கி இருந்து அரிசி வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த 22-ந் தேதி அரிசி குேடானில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

     இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமநாதனை கொலை செய்த அவரது பெரியப்பா மகன்  மதுரையை சேர்ந்த முருகன் (36) என்பவரை கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-எனது சொந்த ஊர் தேனி மாவட்டம் சிறாப்பாறை. நான் மதுரையில்  குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகிறேன். 

    கடந்த  2 வாரத்திற்கு முன்பு எனது அண்ணன்  ராமநாதன்,  எங்களது சொந்த ஊரான சிறாப்பாறைக்கு வந்திருந்தார். 
    அப்போது அவர்  எனது மனைவியை அவரது  ஆசைக்கு இணங்கும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். இது குறித்து எனது மனைவி என்னிடம் கூறினார். இதனையடுத்து நானும் , எங்களது உறவினர்களும் சேர்ந்து ராமநாதனை எச்சரித்து அங்கு இருந்து அனுப்பி வைத்ேதாம். 

    அதன் பின்னர்  அங்கிருந்து வேலந்தாவளம் வந்த ராமநாதன், செல்போன் மூலம்  எனது மனைவியை அடிக்கடி தொடர்பு கொண்டு  உல்லாசமாக இருக்க வருமாறு  அழைப்பு விடுத்துள்ளார்.

    இது குறித்து எனது மனைவி என்னிடம் கூறி கதறி அழுதார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது குறித்து கேட்பதற்காக நான்  நேற்று முன்தினம் காலை  கோவைக்கு வந்தேன்.   
    பின்னர் எனது அண்ணன் அரிசி குடோன் உள்ள தம்பா கவுண்ட ன்பாளையத்துக்கு சென்றேன். அப்போது ராமநாதன்  அங்கு வந்தார்.  அவரிடம் இது குறித்து  கேட்டேன்.  அப்போது எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து  அவரை வெட்டி கொலை செய்தேன். இதில் அவர் சம்பவஇடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் நான் அங்கு இருந்து தப்பிச் சென்றேன். போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.
    இவ்வாறு அவர் கூறினார். விசாரணை முடிந்ததும் போலீசார் முருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    மர்ம நபரை அவர் தொடர்பு கொண்டு பேசிய செல்போன் எண்ணை வைத்து தேடி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.
     
    நேற்று மாலை 5.20 மணி அளவில் கோவை மத்திய சிறையில் உள்ள தொலை பேசி எண்ணுக்கு ஒரு செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பை அப்போது பணியில் இருந்த போலீஸ்காரர் முத்துப்பாண்டி என்பவர் எடுத்து பேசினார். 

    அதில் பேசிய மர்மநபர் ஜெயிலில் பணியாற்றும் போலீஸ்காரர்கள் சீருடை அணிந்து வெளியே வந்தால் கொலை செய்து விடுவேன் என்றும், கோவை மத்திய சிறையில் வெடிகுண்டு வைக்கப் போவதாக கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். 
     
    இது குறித்து போலீஸ்காரர் சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.  சிறை அதிகாரிகள் இது குறித்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் போலீஸ் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டை கண்டுபிடிக்கும் நவீன கருவிகளுடன் கோவை மத்திய சிறைக்கு வந்தனர். 

    சிறை முழுவதும் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெடிகுண்டு ஏதும் உள்ளதா? என தேடினர். ஆனால் எந்த வெடி பொருட்களும் கிடைக்கவில்லை.

     இதனால் கோவை மத்திய சிறையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ெஜயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். 

    புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயில் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்து, மத்திய சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை அவர் தொடர்பு கொண்டு பேசிய செல்போன் எண்ணை வைத்து தேடி வருகிறார்கள். 

    டிரைவருக்கு ரூ. 2200 அபராதமும் விதித்தனர்.
    நெகமம்,  

    தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது.  மாட்டு வியாபாரிகள் குறைந்த விலையில் மாடுகளை வாங்கி தமிழகத்தின் அருகில் உள்ள அண்டை மாநிலமான கேரளாவுக்கு இறைச்சிக்காக மாடுகளை லாரி மற்றும் டாரஸ் லாரி மூலம் கொண்டு செல்கின்றனர்.

    இதை தடுக்கும் விதமாக சிவசேனா கட்சியினர் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் மிளகாய் அரைத்து வழிபாடு செய்தனர். இந்த நிலையில் திருப்பூர்-பொள்ளாச்சி சாலை நெகமம் நால் ரோடு பகுதியில்  வேலூரில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடி பகுதிக்கு டாரஸ் லாரியில் மாடுகள் கொண்டு செல்லப்படுவதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சிவசேனா கட்சியினர் விரைந்து சென்று அந்த லாரியை மறித்து தடுத்து நிறுத்தினர். அப்போது லாரியில் இறைச்சிக்காக 40  மாடுகளை லாரியில் ஏற்றி வந்தது தெரியவந்தது.பின்னர் சிவசேனா கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் திருமுருக தினேஷ் நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் விரைந்து வந்து மாடு ஏற்றி வந்த லாரியை சோதனை செய்தனர்.லாரியில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்தது, லாரியை அதிவேகமாக ஓட்டி வந்தது, டிரைவர் யூனிபார்ம் போடாதது, மாடுகளுக்கு உரிய தீவனம் மற்றும் தண்ணீர் வசதி ஏற்பாடு செய்யாமல் இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் டிரைவருக்கு ரூ. 2200 அபராதமும் விதித்தனர்.
    ×