என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய தடகள போட்டி"

    • தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது.
    • ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனை படைத்த விஷாலுக்கு சிறப்பு பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 64-வது மாநிலங்கள் இடையேயான தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேருஸ்டேடியத்தில் கடந்த 5 தினங்களாக நடைபெற்றது.

    போட்டி முடிவில் தமிழக அணி 11 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 31 பதக்கங்களை குவித்தது. இதன் மூலம் ஆண்கள் ( 101 புள்ளிகள்) மற்றும் பெண்கள் ( 90 புள்ளிகள்) அணிகள் பிரி வில் சாம்பியன் பட்டத்தை வென்றது. 195 புள்ளிகளுடன் தமிழக அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அரியானா 121 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தது.

    தனிநபர் சாம்பியன் ஷிப் பட்டத்துக்கு ஆண்கள் பிரிவில் தமிழகத்தின் விஷால் (400 மீட்டர் ஓட்டம்), பெண்கள் பிரிவில் உத்தரகாண்டின் அங்கிதா (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாதரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். தமிழ்நாடு தடகள சங்க சேர்மன் தேவாரம், தலைவர் ராஜேந்திரன், செயலாளர் லதா, ஆக்கி இந்தியா பொருளாளர் சேகர் மனோகரன், மார்ட்டின் குரூப் நிர்வாக இயக்குனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், இயக்குனர் லீமா ரோஸ் மார்ட்டின் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

    தேசிய சீனியர் தடகள போட்டியில் பதக்கங்களை வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு தடகளம் சார்பில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதோடு வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு தொகையும் வழங்கப்பட்டது.

    தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.25 ஆயிரமும், வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியவர்களுக்கு ரூ.15 ஆயிரமும், வெண்கல பதக்கத்துக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது. ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனை படைத்த விஷாலுக்கு சிறப்பு பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.

    64-வது தேசிய தடகள போட்டியில் பதக்கத்தை வென்று சாதித்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.10 லட்சம் பரிசு தொகை அளிக்கப்பட்டது.தமிழ்நாடு தடகள சங்க சேர்மன் டபிள்யு. ஐ.தேவாரம், தலைவர் டி.கே.ராஜேந்திரன், பொதுச் செயலாளர் சி.லதா ஆகி யோர் விழாவில் பங்கேற்று வீரர், வீராங்கனைகளை பாராட்டி பரிசு தொகைகளை வழங்கினார்கள். 

    • இரவில் மழை பெய்ததால் போட்டிகள் தாமதமாக நடந்தது.
    • பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழகத்துக்கு வெள்ளிப்பதக்கமே கிடைத்தது.

    சென்னை:

    மாநிலங்களுக்கு இடையிலான 64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. போட்டியின் 3-வது நாளான நேற்று ஆண்களுக்கான 110 மீட்டர் தடை ஓட்டத்தில் மராட்டியத்தின் தேஜஸ் ஷிர்ஸ் தங்கப்பதக்கமும் (13.60 வினாடி), தமிழகத்தின் மனவ் வெள்ளிப்பதக்கமும் (14.03 வினாடி) வென்றனர்.

    பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்திலும் தமிழகத்துக்கு வெள்ளிப்பதக்கமே கிடைத்தது. சென்னையை சேர்ந்த நந்தினி 13.45 வினாடிகளில் இலக்கை கடந்து 2-வது இடத்தை பிடித்தார். மேற்கு வங்காளத்தின் மவுமிதா மோண்டல் தங்க மங்கையாக (13.22 வினாடி) ஜொலித்தார்.

    இரவில் மழை பெய்ததால் போட்டிகள் தாமதமாக நடந்தது. பெண்களுக்கான 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பவித்ரா, ஏஞ்சல் சில்வியா, அபினயா, தனலட்சுமி ஆகியோர் அடங்கிய தமிழக அணியினர் 44.73 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டிப்பிடித்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டனர்.

    கர்நாடகா வெள்ளிப்பதக்கத்தை (45.34 வினாடி) வசப்படுத்தியது. இதன் ஆண்கள் பிரிவில் ஒடிசாவிடம் பின்தங்கிய அருண், ராகுல் குமார், வருண் மனோகர், தமிழரசு ஆகியோரை கொண்ட தமிழக அணியினர் 2-வது இடம் (39.80 வினாடி)பிடித்தனர். 4x400 மீட்டர் கலப்புதொடர் ஓட்டத்தில் தமிழகம் வெண்கலம் பெற்றது.

    ஆண்களுக்கான டிரிபிள் ஜம்பில் டாப்-2 இடங்களை கேரளாவின் கார்த்திக், அப்துல்லா அபூபக்கர் பிடித்த நிலையில் தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல் 16.35 மீட்டர் நீளம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

    20 கிலோ மீட்டர் நடைபந்தயத்தில் ஆண்கள் பிரிவில் கேரளாவின் பிலின் ஜார்ஜ் ஆண்டோவும் (1 மணி 29 நிமிடம் 35.12 வினாடி). பெண்கள் பிரிவில் அரியானாவின் ரவினாவும் (1 மணி 35 நிமிடம் 13.49 வினாடி) மகுடம் சூடினர். தமிழகத்தின் மோகவி முத்துரதினா வெண்கலப்பதக்கத்தை (1 மணி 41 நிமிடம் 34.72 வினாடி) கைப்பற்றினார்.

    தமிழக அணிக்கு இதுவரை 8 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம் ஆக மொத்தம்19 பதக்கம் கிடைத்துள்ளது.

    • தடகள போட்டியை தமிழகம் நடத்துவது இது 12-வது முறையாகும்.
    • கடைசியாக 2022-ம் ஆண்டில் இங்கு சீனியர் தேசிய தடகள போட்டி நடந்தது.

    தமிழ்நாடு தடகளம் சங்கம் சார்பில் எஸ்.டி.ஏ.டி. ஆதரவுடன் மாநிலங்களுக்கு இடையிலான 64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை (புதன்கிழமை) தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. டோக்கியோவில் அடுத்த மாதம் நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணியில் இடத்தை எதிர்நோக்கி உள்ள குறிப்பிட்ட வீரர், வீராங்கனைகளுக்கு இது அணித் தேர்வுக்கான கடைசி போட்டியாகவும் அமைந்திருப்பதால் அந்த வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது போன்ற கவுரவமிக்க தடகள போட்டியை தமிழகம் நடத்துவது இது 12-வது முறையாகும். கடைசியாக 2022-ம் ஆண்டில் இங்கு சீனியர் தேசிய தடகள போட்டி நடந்தது.

    5 நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து சுமார் 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இவர்கள் 10 ஆயிரம் மீட்டர், 5 ஆயிரம் மீட்டர், 800 மீட்டர், 200 மீட்டர், 100 மீட்டர் ஓட்டம், தடை ஓட்டம், தொடர் ஓட்டம், வட்டு எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், போல் வால்ட், ஈட்டி எறிதல், 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் உள்ளிட்ட பந்தயங்களில் தங்களது திறமையை வெளிப்படுத்த காத்திருக்கிறார்கள். இதில் ஆசிய தடகளத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான டிரிபிள் ஜம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல், ஓட்டப்பந்தய வீராங்கனைகள் வித்யா ராம்ராஜ், 18 வயதான அபினயா, ஏஞ்சல் சில்வியா ஆகிய தமிழர்களும் அடங்குவர்.

    தமிழகத்தை தவிர்த்து, ஆசிய விளையாட்டில் இரட்டை சாம்பியனும், ஒலிம்பியனுமான குண்டு எறிதல் வீரர் தஜிந்தர்பால் சிங் (பஞ்சாப்), ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான டெல்லியை சேர்ந்த தேஜஸ்வின் சங்கர் (உயரம் தாண்டுதல்), முன்னாள் ஆசிய சாம்பியனான கேரளாவின் டிரிபிள் ஜம்ப் வீரர் அப்துல்லா அபூபக்கர், கார்த்திக் உன்னிகிருஷ்ணன், முரளி ஸ்ரீசங்கர் மற்றும் அம்லான் போர்கோஹைன் (அசாம்), பிரக்யான் சாகு (ஒடிசா), தேஜஸ் ஷிர்ஸ் (மகாராஷ்டிரா) உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த பிரபலங்களும் களம் இறங்குகிறார்கள்.

    போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டி.கே.ராஜேந்திரன், செயலாளர் சி.லதா மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • ஒழுக்கம் இருந்தால் இலக்கை அடையலாம்
    • நடிகர் ஜீவா பேச்சு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம் மற்றும் அருணை மருத்துவக் கல்லூரி சார்பில் நடத்தும் 21-வது தேசிய அளவிலான இளையோர் தடக ளப்போட்டி திருவண்ணா மலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.

    இதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று மாலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. மாநில தடகள சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் தலைமை தாங்கி பேசினார்.

    துரோணாச்சார்யார் விருது பெற்ற ரமேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன், அருணை மருத்து வக்கல்லூரி டீன் குணசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தடகள சங்க செயலாளர் லதா வரவேற்று பேசினார்.

    விழாவில் எம்.எல்.ஏ.க்கள் பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    நடிகர் ஜீவா

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் ஜீவா கலந்து கொண்டு போட்டிக்கான ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார். அவர் பேசியதாவது:-

    தமிழக விளையாட்டு வீரர்கள் ஆசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று வருகின்றனர்.

    இந்திய அணியில் தமிழக வீரர்கள் அதிகளவில் இடம் பெறுகின்றனர். தடகள சங்கம் சார்பில் மேலும் இது போன்ற பல்வேறு போட்டிகளை நடத்தி தடகள வீரர்களை உருவாக்க வேண்டும். இதற்கு திரை துறையின் சார்பில் எப்பொழுதும் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்.

    விளையாட்டு வீரர்களுக்கு அரசு தரப்பில் அனைத்து உதவிகளும் தற்போது கிடைத்து வருகின்றது. விளையாட்டு வீரர்கள் சத்தான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அதிகளவில் டி.வி.யையும், செல்போனையும் பார்க்கக் கூடாது.

    இலக்கு அடையலாம்

    உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும். அர்ப்பணிப்பு, ஒழுக்கம், உறுதி ஆகியவை இருந்தால் எந்த இலக்கையும் அடையலாம். இந்த நாள் திரும்பவும் வராது. இந்த நாட்களை அனுபவித்து வாழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த தேசிய அளவிலான இளையோர் தடகள போட்டியில் வெற்றி பெறுபவர்கள் ஜூன் மாதத்தில் கொரியாவில் நடைபெற உள்ள ஆசிய அளவிலான இளையோர் தடகள போட்டியில் இந்திய அணியின் சார்பில் பங்கேற்க புள்ளிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    • சீனியர் பிரிவு நீளம் தாண்டுதலில் 7.52 மீட்டர் தூரம் குதித்து தேசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
    • சீனியர் பிரிவு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 12.39 நொடிகளில் ஓடி தேசிய அளவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூரை சேர்ந்த சக்திவேல் மற்றும் பரமேஸ்வரி தம்பதியின் மகன் சன்மத் தர்ஷன். தடகள வீரர். இவர் குஜராத் மாநிலம் நாடியட்டில் நடைபெற்ற "20வது தேசிய பெடரேஷன் கப்" 20 வயதுக்குட்பட்டோருக்கான தடகள சேம்பியன்ஷிப் போட்டியில், சீனியர் பிரிவு நீளம் தாண்டுதலில் 7.52 மீட்டர் தூரம் குதித்து தேசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

    மேலும் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா-வில் நடைபெற்ற 4வது கேலோ இந்தியா யூத் கேம்ஸ்தடகளப்போட்டியில் நீளம் தாண்டுதலில் 7.34 மீட்டர் தூரம் குதித்து தேசிய அளவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

    அதேபோல திருப்பூரை சேர்ந்த மரிய முத்துராஜா மற்றும் ஸ்டெல்லா ஜோஸப் தம்பதியரின் மகள் ஏஞ்சல் சில்வியா. தடகள வீராங்கனை. இவர் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்ற "கிராண்ட் பிரிக்ஸ் 4" தடகள சேம்பியன்ஷிப் போட்டியில் சீனியர் பிரிவு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 12.39 நொடிகளில் ஓடி தேசிய அளவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

    திருப்பூரை சேர்ந்த தடகள வீரர்கள் இருவரையும் பாராட்டி கெளரவிக்கும் விதமாக திருப்பூர் தடகள சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு தடகள சங்கத்தின் துணைத்தலைவருமான சண்முகசுந்தரம் தலைமையில் ஐ.பி.எக்ஸ். எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநருமான நிரஞ்சன், காவல் ஆய்வாளர் முத்துக்குமார்உள்ளிட்ட திருப்பூர் தடகள சங்க நிர்வாகிகள் இருவருக்கும் பொன்னாடை அணிவித்து விளையாட்டு சீருடைகள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினர். 

    ×