search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sugavaneswarar temple"

    • படைப்பின் ரகசியம் குறித்து முனிவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
    • சிவபெருமானை வழிபட்டு வந்தால் இந்த சாபம் நீங்கும்.

    முன்பொரு சமயம் பிரம்மதேவன், தன் படைப்பின் ரகசியம் குறித்து முனிவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இதைக்கேட்டு கொண்டிருந்த சுகமுனிவர், அதை அப்படியே சரஸ்வதியிடம் சென்று கூறினார். இதனால் கோபம் கொண்ட பிரம்மன், சுக முனிவரை நோக்கி, "சொன்னதை திரும்பச் சொல்லும் கிளியின் தன்மை கொண்ட நீ, கிளியாக மாறுவாய்" என சாபமிட்டார். உடனே சுகமுனிவர்,

    பிரம்மனின் தாள் பணிந்து சாபம் நீங்க வழிகேட்டார். அதற்கு பிரம்மா, "வனப்பகுதியில் (இப்போதைய கோவில் பகுதி) சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கும் சிவபெருமானை வழிபட்டு வந்தால் இந்த சாபம் நீங்கும்" என்று விமோசனத்துக்கு வழி கூறினார்.

    இதையடுத்து எண்ணற்ற கிளிகளுடன், ராஜா கிளியாக மாறிய சுகமுனிவர், தினமும் இத்தல இறைவனை வழிபட்டு வந்தார்.

    அப்போது வேடனான வச்சிரகாந்தன் என்பவன் கவண் கல்லால் கிளிகளை விரட்டி வர, அவை அங்கிருந்த புற்றின் உள்ளே பதுங்கியது. இதனால் வேடன் ஆத்திரத்தில் மண்வெட்டியால் புற்றை வெட்டினான். இதில் கிளிகள் எல்லாம் மாண்டு போனது. ஆனால் ராஜா கிளி (சுகமுனிவர்) மட்டும் புற்றுக்குள் இருந்த சுயம்பு மூர்த்தியை காக்கும் பொருட்டு தன் இறக்கைகளை குடையாய் விரித்து மறைத்து நின்றது.

    உடனே வேடன் கிளியை வெட்ட, ரத்தம் பீறிட்டு ராஜா கிளி மாண்டுபோனது. அதேநேரத்தில் சுயம்பு மூர்த்தியின் தலையிலும் வெட்டுப்பட்டு ரத்தம் பீறிட்டது. இதைக்கண்ட வேடன் வெடவெடத்து போனான்.

    தான் வெட்டியது இறைவனைத்தான் என உணர்ந்த வேடன், தன்னைத்தானே வாளால் வெட்டி உயிரை மாய்த்து கயிலாயத்தை அடைந்தான். கிளி கூட்டமும் இறைவன் திருவடியை அடைந்தன.

    சிவனருளால் கிளி உருவம் நீங்கப்பெற்ற சுகமுனிவர் இறைவனை நோக்கி, "பெருமானே, நீங்கள் சுகவனேஸ்வரராக இந்த திருத்தலத்தில் எழுந்தருளி அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொள்ள, அதன்படியே இறைவனும் அருளியதாக தலவரலாறு கூறுகிறது.

    • திருமணிமுத்தாற்றின் கரையோரம் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில் உள்ளது.
    • மூலவரான சிவலிங்கம் ஒரு பக்கம் சாய்வாக இருக்கும்.

    கோவில் தோற்றம்

    சேலம் மாநகரின் மையப்பகுதியில் திருமணிமுத்தாற்றின் கரையோரம் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில் உள்ளது. கிளி கொஞ்சும் வனமாக முன்பு இருந்ததாலும், கிளி முகத்தைக் கொண்ட சுக முனிவர் தவமியற்றி வழிபட்டதாலும் இங்குள்ள இறைவன் 'சுக வனேஸ்வரர்' என அழைக்கப்படுகிறார். இங்குள்ள இறைவனுக்கு வனநாதர், கிளிவண்ணமுடையார் என்ற பெயர்களும், இறைவியான சொர்ணாம்பிகைக்கு, மரகதவல்லி, பச்சைவல்லி என்ற பெயர்களும் உண்டு.

    கருவறையில் உள்ள மூலவரான சிவலிங்கம் ஒரு பக்கம் சாய்வாக இருக்கும். அதன் மேல் பகுதியில் வெட்டு தழும்பு ஒன்றும் காணப்படுகிறது. சுகவனேஸ்வரர் அருளாட்சி புரியும் இந்த திருத்தலம் ஆதிசேஷன் வழிபட்ட தலம் ஆகும். கிருதயுகத்தில் `பாபநாசம்' எனவும், திரேதாயுகத்தில் 'பட்டீசுவரம்' எனவும், துவாபர யுகத்தில் 'நாகீஸ்வரம்' எனவும் வழங்கப்பட்டது.

     கலியுகமான இப்போது `சுகவனேஸ்வரம்' என அழைக்கப்படுகிறது. இந்தக் கோவில் 13-ம் நூற்றாண்டில் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது. மேலும் சேர, சோழ, பாண்டிய மன்னர்களாலும், நாயக்க மன்னர்களாலும் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. அருணகிரிநாதராலும், அவ்வையாராலும் பாடல் பெற்ற திருத்தலம் இது. கோவில் கிழக்கு முகமாகவும், வாசல் தெற்கு முகமாகவும் உள்ளது. மூன்று நிலை ராஜகோபுரம் கம்பீரமாக அமைந்துள்ளது. கோபுரத்தை தாண்டியதும் முதல் சன்னிதியாக, சொர்ணாம்பிகை அம்மனின் சன்னிதி தெற்கு நோக்கியபடி இருக்கிறது.

    மகா மண்டபத்தில் உள்ள பெரிய நந்தியின் பின்புறம் கொடிமரம் உள்ளது. இரு துவார பாலகர்களை கடந்தால், உள்ளே ஆள் உயரத்தில் சதுர ஆவுடையாராக சுகவனேசுவரர் கம்பீரமாக காட்சி தருகிறார். தென்மேற்கில் இரட்டை விநாயகரும், வடமேற்கில் சுகவன சுப்பிரமணியரும் தனிச் சன்னிதி கொண்டுள்ளனர். தென்புறம் அறுபத்து மூவரும், வடகிழக்கில் பைரவர், சூரியன் சன்னிதிகளும் உள்ளன.

    பிரகாரத்தில் பஞ்சபூத லிங்கங்கள், கங்காடர், காசிவிஸ்வநாதர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, சண்டிகேசுவரர், சுவர்ண துர்க்கை சன்னிதிகளும், நவக்கிரகங்கள், சுகப்பிரம்ம ரிஷி, வியாசர், ஜேஷ்டாதேவி சன்னிதிகளும் உள்ளன. அண்ணாமலையார் உருவம் ஒரு மரப்பொந்தில் செதுக்கி இருப்பது சிற்பக்கலையின் உச்சமாகும்.

    கோவிலில் உள்ள திருக்குளம் `அமண்டூக தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது. இதில் தவளைகள் வசிப்பதில்லை என்பதால் இப்பெயர் பெற்றது. இதுதவிர பாபநாச தீர்த்தம், மனுசார்ன தீர்த்தம், மானது தீர்த்தம், மணிமுத்தாறு ஆகிய புனித தீர்த்தங்களும் உள்ளன.

    தலவிருட்சமான பாதிரி மரம் நந்தவனத்தில் உள்ளது. இந்தக் கோவிலில் வைகாசிப் பெருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடக்கும். தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்வது கண்கொள்ளாக்காட்சியாகும்.மேலும் கார்த்திகை தீபத் திருவிழா, சித்திரைத் திருவிழா ஆகியன கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    பல்லி விழுந்த உபாதைகள் நீங்க, இத்தலத்தில் வழிபடுவது விசேஷம். கோவிலில் உள்ள விகடசக்கர விநாயகருக்கு தேங்காய், பழம், கடலை, சர்க்கரை வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பாலாரிஷ்டம் நீங்கும் என்பது ஐதீகம். இந்தக் கோவிலுக்கு பக்தி சிரத்தையுடன் வந்து சுகவனேஸ்வரரையும், சொர்ணாம்பிகையையும் வழிபட்டால் சுகவாழ்வு கிடைக்கும் நிறைவாழ்வு வாழலாம்.

    திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், உத்தியோக பாக்கியம் உண்டாகும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. நவக்கிரகங்களில் ராகு, செவ்வாய் இருவரும் இத்தலத்தில் இடம் மாறியுள்ளனர். இந்த கிரகங்களை வழிபடுவதால் பெண்களுக்கு நல்ல வரனும், ஆண்களுக்கு உயர்ந்த உத்தியோகமும் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

    சேலம் சுகவனேசுவரர் கோவிலில் ரூ.53 லட்சத்து 55 ஆயிரம் செலவில் திருப்பணிகள் தொடங்கின. இதையொட்டி கோவிலில் பாலாலயம் நடந்தது.
    சேலம் மாநகரில் பிரசித்திபெற்ற சுகவனேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த 20 ஆண்டுகள் ஆகியும் சுகவனேசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.

    இந்தநிலையில் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தக்கோரி இந்து சமய அறநிலைய அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சுகவனேசுவரர் கோவிலில் ரூ.53 லட்சத்து 55 ஆயிரம் செலவில் திருப்பணிகள் செய்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இந்த திருப்பணிகள் தொடக்க விழா மற்றும் பாலாலய நிகழ்ச்சி நேற்று காலை சுகவனேசுவரர் கோவிலில் நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கோ பூஜை நடந்தது. பின்னர் சுகவனேசுவரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கு 108 மூலிகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு விசேஷ பூஜை நடந்தது. முன்னதாக யாகம் நடத்தப்பட்டது.

    சேலம் சுகவனேசுவரர் கோவிலில் கோ பூஜை நடந்த போது எடுத்த படம்.

    அதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள விநாயகர், முருகன், அய்யப்பன், சரஸ்வதி, லட்சுமி, காலபைரவர், நவக்கிரகம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இந்த சாமிகளின் உருவம் வரையப்பட்டு கோவில் மண்டபத்தில் வைக்கப்பட்டு பாலாலயம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து விநாயகர் உள்ளிட்ட சாமி சிலைகள் அனைத்தும் மண்டபத்தில் பாதுகாப்பான அறையில் நெல்லால் மூடப்பட்டு அதன் மீது துணிகள் போர்த்தப்பட்டுள்ளன. தொடர்ந்து கோவில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது

    இதுகுறித்து சுகவனேசுவரர் கோவில் உதவி ஆணையர் தமிழரசு கூறும் போது, ‘சுகவனேசுவரர் கோவிலில் வர்ணம் தீட்டுதல், மேற்கூரை பழுதுபார்த்தல் உள்ளிட்ட திருப்பணிகள் ரூ.53 லட்சத்து 55 ஆயிரம் செலவில் நன்கொடையாளர்கள் மூலம் நடைபெறுகிறது. இந்த பணிகள் 9 மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். அதைதொடர்ந்து கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்’ என்றார். 
    ×