search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சுகவாழ்வு அருளும் சுகவனேஸ்வரர்
    X

    சுகவாழ்வு அருளும் சுகவனேஸ்வரர்

    • திருமணிமுத்தாற்றின் கரையோரம் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில் உள்ளது.
    • மூலவரான சிவலிங்கம் ஒரு பக்கம் சாய்வாக இருக்கும்.

    கோவில் தோற்றம்

    சேலம் மாநகரின் மையப்பகுதியில் திருமணிமுத்தாற்றின் கரையோரம் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில் உள்ளது. கிளி கொஞ்சும் வனமாக முன்பு இருந்ததாலும், கிளி முகத்தைக் கொண்ட சுக முனிவர் தவமியற்றி வழிபட்டதாலும் இங்குள்ள இறைவன் 'சுக வனேஸ்வரர்' என அழைக்கப்படுகிறார். இங்குள்ள இறைவனுக்கு வனநாதர், கிளிவண்ணமுடையார் என்ற பெயர்களும், இறைவியான சொர்ணாம்பிகைக்கு, மரகதவல்லி, பச்சைவல்லி என்ற பெயர்களும் உண்டு.

    கருவறையில் உள்ள மூலவரான சிவலிங்கம் ஒரு பக்கம் சாய்வாக இருக்கும். அதன் மேல் பகுதியில் வெட்டு தழும்பு ஒன்றும் காணப்படுகிறது. சுகவனேஸ்வரர் அருளாட்சி புரியும் இந்த திருத்தலம் ஆதிசேஷன் வழிபட்ட தலம் ஆகும். கிருதயுகத்தில் `பாபநாசம்' எனவும், திரேதாயுகத்தில் 'பட்டீசுவரம்' எனவும், துவாபர யுகத்தில் 'நாகீஸ்வரம்' எனவும் வழங்கப்பட்டது.

    கலியுகமான இப்போது `சுகவனேஸ்வரம்' என அழைக்கப்படுகிறது. இந்தக் கோவில் 13-ம் நூற்றாண்டில் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது. மேலும் சேர, சோழ, பாண்டிய மன்னர்களாலும், நாயக்க மன்னர்களாலும் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. அருணகிரிநாதராலும், அவ்வையாராலும் பாடல் பெற்ற திருத்தலம் இது. கோவில் கிழக்கு முகமாகவும், வாசல் தெற்கு முகமாகவும் உள்ளது. மூன்று நிலை ராஜகோபுரம் கம்பீரமாக அமைந்துள்ளது. கோபுரத்தை தாண்டியதும் முதல் சன்னிதியாக, சொர்ணாம்பிகை அம்மனின் சன்னிதி தெற்கு நோக்கியபடி இருக்கிறது.

    மகா மண்டபத்தில் உள்ள பெரிய நந்தியின் பின்புறம் கொடிமரம் உள்ளது. இரு துவார பாலகர்களை கடந்தால், உள்ளே ஆள் உயரத்தில் சதுர ஆவுடையாராக சுகவனேசுவரர் கம்பீரமாக காட்சி தருகிறார். தென்மேற்கில் இரட்டை விநாயகரும், வடமேற்கில் சுகவன சுப்பிரமணியரும் தனிச் சன்னிதி கொண்டுள்ளனர். தென்புறம் அறுபத்து மூவரும், வடகிழக்கில் பைரவர், சூரியன் சன்னிதிகளும் உள்ளன.

    பிரகாரத்தில் பஞ்சபூத லிங்கங்கள், கங்காடர், காசிவிஸ்வநாதர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, சண்டிகேசுவரர், சுவர்ண துர்க்கை சன்னிதிகளும், நவக்கிரகங்கள், சுகப்பிரம்ம ரிஷி, வியாசர், ஜேஷ்டாதேவி சன்னிதிகளும் உள்ளன. அண்ணாமலையார் உருவம் ஒரு மரப்பொந்தில் செதுக்கி இருப்பது சிற்பக்கலையின் உச்சமாகும்.

    கோவிலில் உள்ள திருக்குளம் `அமண்டூக தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது. இதில் தவளைகள் வசிப்பதில்லை என்பதால் இப்பெயர் பெற்றது. இதுதவிர பாபநாச தீர்த்தம், மனுசார்ன தீர்த்தம், மானது தீர்த்தம், மணிமுத்தாறு ஆகிய புனித தீர்த்தங்களும் உள்ளன.

    தலவிருட்சமான பாதிரி மரம் நந்தவனத்தில் உள்ளது. இந்தக் கோவிலில் வைகாசிப் பெருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடக்கும். தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்வது கண்கொள்ளாக்காட்சியாகும்.மேலும் கார்த்திகை தீபத் திருவிழா, சித்திரைத் திருவிழா ஆகியன கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    பல்லி விழுந்த உபாதைகள் நீங்க, இத்தலத்தில் வழிபடுவது விசேஷம். கோவிலில் உள்ள விகடசக்கர விநாயகருக்கு தேங்காய், பழம், கடலை, சர்க்கரை வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பாலாரிஷ்டம் நீங்கும் என்பது ஐதீகம். இந்தக் கோவிலுக்கு பக்தி சிரத்தையுடன் வந்து சுகவனேஸ்வரரையும், சொர்ணாம்பிகையையும் வழிபட்டால் சுகவாழ்வு கிடைக்கும் நிறைவாழ்வு வாழலாம்.

    திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், உத்தியோக பாக்கியம் உண்டாகும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. நவக்கிரகங்களில் ராகு, செவ்வாய் இருவரும் இத்தலத்தில் இடம் மாறியுள்ளனர். இந்த கிரகங்களை வழிபடுவதால் பெண்களுக்கு நல்ல வரனும், ஆண்களுக்கு உயர்ந்த உத்தியோகமும் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

    Next Story
    ×