என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லணை திறப்பு"

    • தஞ்சை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
    • மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைக்கிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் சென்று அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறார்.

    அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவது பற்றி அரசு உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துவதோடு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.

    அதன்படி 2 நாள் பயணமாக இன்றும் நாளையும் (15, 16-ந்தேதிகள்) தஞ்சை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.

    மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் கல்லணைக்கு இன்று வந்து சேருகிறது. இந்த நிலையில் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கல்லணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் புறப்பட்டு திருச்சிக்கு பகல் 12.15 மணிக்கு சென்றார். அங்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ்பொய்யாமொழி உள்ளிட்டோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.

    வரவேற்பை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலை மார்க்கமாக காரில் கல்லணைக்கு சென்றடைந்தார். அங்குள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி இருக்கும் அவர் இன்று மாலை 5 மணியளவில் கல்லணையை திறந்து வைத்தார். இதற்காக கல்லணையின் மதகுகள் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டு உள்ளது.

    கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆறுகள் மூலம் காவிரி நீரை பகிர்ந்து அளிக்கும் வகையில் தண்ணீரை திறந்துவிட்டு மலர்களையும், நெல்மணிகளையும் தூவினார்.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் செல்கிறார். அங்கு சுற்றுலா மாளிகையில் அவர் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.

    பின்னர் அவர் சுற்றுலா மாளிகையில் இருந்து 2 கி.மீ. தூரம் ரோடுஷோவாக பழைய பஸ்நிலையம் வரை பொதுமக்களை சந்தித்தவாறு, மனுக்களை பெற்று கொண்டு நடந்து செல்கிறார்.

    அதைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் அங்கிருந்து மீண்டும் சுற்றுலா மாளிகை வந்து இரவு தங்குகிறார்.

    காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து இன்று 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.#Kallanai
    பூதலூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து கபினி அணை, கிருஷ்ணராஜசாகர் அணைகள் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதைதொடர்ந்து அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியதால் காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த 19-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீரை திறந்து வைத்தார்.

    பின்னர் மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று மாலை திருச்சி மாவட்டம் முக்கொம்பு கதவணையை வந்தடைந்தது. அங்கிருந்து தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    முக்கொம்பில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று அதிகாலை கல்லணையை வந்தடைந்தது.

    இதைதொடர்ந்து கல்லணையில் இன்று திறக்கப்படுவதை முன்னிட்டு முதலில் கொள்ளிடத்தின் கீழ்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் மேள தாளத்துடன் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் கல்லணை கரிகாலன் சோழன் சிலை அருகில் உள்ள ஆதி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கல்லணையில் உள்ள கரிகாலன் சோழன், அகத்தியர், காவிரியம்மன், ராஜராஜசோழன் ஆகியோரது சிலைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டு இருந்தன.

    இதையடுத்து டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, இரா.காமராஜ், ஓ.எஸ்.மணியன், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர்.

    அப்போது மதகுகளில் இருந்து சீறி பாய்ந்த தண்ணீரின் மீது விதைநெல், மலர்களை தூவி காவிரியை வழிபட்டனர். இதையடுத்து கல்லணையில் இருந்து காவிரிக்கு 7 ஆயிரம் கன அடியும், வெண்ணாறில் 7 ஆயிரம் கன அடியும், கல்லணை கால்வாய்க்கு ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் 2 ஆயிரம் கன அடியும் என மொத்தம் 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் வைத்திலிங்கம், தஞ்சை பரசுராமன், மயிலாடுதுறை பாரதிமோகன், நாகை கோபால், திருச்சி குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பட்டுக்கோட்டை சேகர், பேராவூரணி கோவிந்தராசு, மயிலாடுதுறை ராதா கிருஷ்ணன், பூம்புகார் பவுன்ராஜ், சீர்காழி பாரதி, கலெக்டர்கள் தஞ்சை அண்ணாதுரை, திருச்சி ராஜாமணி, நாகை சுரேஷ்குமார், திருவாரூர் நிர்மல்ராஜ் மற்றும் பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார், கண்காணிப்பு பொறியாளர் ரவிச்சந்திரன், வேளாண் இணை இயக்குனர் மதியழகன் மற்றும் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    மேலும் புதுச்சேரி விவசாயத்துறை அமைச்சர் கமலக்கண்ணன், புதுச்சேரி கலெக்டர் கேசவன், புதுச்சேரி தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம், ஆகியோரும் கலந்துகொண்டனர்.

    கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 12 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி விவசாயிகள் சாகுபடி செய்ய தேவையான விதை, உரம் ஆகியவை தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சம்பா சாகுபடி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  #Kallanai #KallanaiDam
    காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து 22-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வருகிற 22-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கல்லணைக்கு வந்து சேருகிறது.

    பின்னர் காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து 22-ந் தேதி காலை 11 மணியளவில் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ், ஓ.எஸ்.மணியன், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, விஜயபாஸ்கர், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், பரசுராமன், பாரதிமோகன், குமார், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார், கண்காணிப்பு பொறியாளர் ரவிச்சந்திரன், தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, அரியலூர் மாவட்ட கலெக்டர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    கல்லணையில் தண்ணீர் திறப்பு நிகழ்வின் போது முதலில் கொள்ளிடத்தின் கீழ்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    பின்னர் கல்லணை கரிகாலன் சோழன் சிலை அருகில் உள்ள ஆதிவிநாயகர் கோவிலில் வழிபாடு நடைபெறும். அதன் பின்னர் முக்கிய பிரமுகர்கள் காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து காவிரியில் தண்ணீரை திறந்து விடுவார்கள்.

    இதைதொடர்ந்து வெண்ணாறு, கல்லணை கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படும். நிறைவாக கருப்பண்ணசாமி கோவிலில் வழிபாடு நடைபெற்ற பின்னர் கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்படும்.

    கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


    ×