search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sabarimala violence"

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து கேரளா முழுவதும் போராட்டம் நடத்திய 1,407 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிராக பா.ஜனதா இன்று கண்டன பேரணி நடத்துகிறது. #SabarimalaTemple #BJP
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகு, மாதாந்திர பூஜைக்காக கடந்த வாரம் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.

    10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து பக்தர்கள் கோவில் வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அவர்களின் கடும் எதிர்ப்பால், 10-க்கும் மேற்பட்ட பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    இந்த போராட்டம், வன்முறை தொடர்பாக ஏற்கனவே 440 வழக்குகளை போலீசார் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 210 பேருக்கு எதிராக ‘லுக்அவுட்’ நோட்டீஸ் வெளியிட்டனர். 210 பேரின் புகைப்படங்களையும் நேற்று முன்தினம் வெளியிட்டனர்.

    அந்த படங்களை எல்லா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் அனுப்பி வைத்தனர். சம்பந்தப்பட்ட பக்தர்களை அடையாளம் கண்டறிந்து கைது செய்யுமாறு உத்தரவிட்டனர்.

    அதன்படி, 210 பக்தர்களும் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களில் எர்ணாகுளம் மாவட்டத்தில் 71 பேர், கோழிக்கோடு மாவட்டத்தில் 40 பேர், பாலக்காடு, பத்தனம்திட்டா மாவட்டங்களில் தலா 30 பேர் ஆகியோர் அடங்குவர்.

    இதுபோல், மாதாந்திர பூஜைக்காக கோவில் நடை திறந்து இருந்தபோது, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி, வன்முறையில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த 2 நாட்களில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

    இதன்மூலம், கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,407 ஆக உயர்ந்தது. எர்ணாகுளம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, திருச்சூர் ஆகிய மாவட்டங்களில்தான் அதிகமானோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இத்தகவல்களை போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெஹரா தெரிவித்தார். வாகனங்களை சேதப்படுத்திய மேலும் 2 ஆயிரம் பேரையும் கைது செய்ய போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.



    போலீசாரின் இந்த செயலுக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கேரள மாநில பா.ஜனதா தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கூறியதாவது:-

    கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களால் நடத்தப்படும் இந்த அரசு, ஐயப்பன் கோவிலின் புனிதத்தை கெடுக்க பார்க்கிறது. இவ்வளவு பேரை மொத்தமாக கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. உலகின் 2-வது மிகப்பெரிய ஆன்மிக தலத்தை அழிக்க முயற்சி நடக்கிறது. கோவிலை காக்க மாபெரும் இயக்கத்தை தொடங்குவோம்.

    மாநிலம் முழுவதும் 26-ந் தேதி (இன்று) கண்டன பேரணி நடத்தப்படும். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா என அண்டை மாநிலங்களுக்கும் போராட்டத்தை விரிவுபடுத்துவோம். கோர்ட்டையும் அணுகுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெண்களை தடுத்த பக்தர்கள் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டபோது, பக்தர்களுக்கு இடையே இப்ராகிம் குட்டி என்ற போலீஸ் டிரைவர் சாதாரண சீருடையில் நிற்கும் புகைப்படமும் இருந்தது.

    இதன்மூலம், பக்தர்கள் போர்வையில் போலீசாரே வன்முறையை தூண்டி விட்டதாக பா.ஜனதா பொதுச்செயலாளர் ரமேஷும், பக்தர்களும் குற்றம் சாட்டினர். இதையடுத்து, அந்த புகைப்படத்தை மட்டும் போலீசார் வாபஸ் பெற்றனர்.

    இதற்கிடையே, மண்டல-மகரவிளக்கு சீசனுக்காக நவம்பர் 17-ந் தேதி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. 3 மாத காலம் நடை திறந்து இருக்கும். அப்போது, போராட்டத்தை ஒடுக்க 5 ஆயிரம் போலீசார் கூடுதலாக குவிக்கப்பட உள்ளனர். அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட உள்ளன. #SabarimalaTemple #BJP
    சபரிமலை பகுதியில் நடைபெற்று வரும் வன்முறைப் போராட்டத்தில் 5 பக்தர்கள், 15 போலீஸ்காரர்கள் காயமடைந்ததாக தெரியவந்துள்ளது. #SabarimalaProtests #SabarimalaVerdict #SabarimalaViolence
    பத்தனம்திட்டா:

    உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் பரபரப்பான சூழ்நிலையில் சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததால், அனைத்து வயது பெண்களும் கோவிலுக்கு புறப்பட்டு வந்தனர். ஆனால், அவர்களை போராட்டக்குழுவினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே வன்முறையும் வெடித்துள்ளது.

    சபரிமலை செல்லும் பாதைகளில் பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பெண் பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

    இந்த வன்முறை மற்றும் தடியடியில் 5 பக்தர்கள், 15 போலீசார் காயமடைந்ததாகவும், 10 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் கேரள அமைச்சர் ஜெயராஜன் கூறினார். 

    இந்த வன்முறைக்கு ஆர்எஸ்எஸ் தான் காரணம் என்றும், போராட்டத்தின் பின்னணியில் அவர்கள் இருப்பதாகவும் அமைச்சர் ஜெயராஜன் குற்றம் சாட்டினார். பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். #SabarimalaProtests #SabarimalaVerdict #SabarimalaViolence
    ×