search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Property List"

    • அவருக்கு கடன்கள் ஏதும் இல்லை.
    • ரூ.6,434 மதிப்பிலான 1980 மாடல் கார் வைத்துள்ளார்.

    புவனேசுவரம் :

    ஒடிசா மாநிலத்தில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது.

    இந்த மாநிலத்தில் முதல்-மந்திரியும், மந்திரிகளும் தங்களது சொத்துப்பட்டியலை அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குக்கு ரூ.65 கோடியே 40 லட்சம் சொத்துக்கள் உள்ளன. இது கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரம் ஆகும். அவருக்கு கடன்கள் ஏதும் இல்லை.

    2020-21 நிதி ஆண்டில் அவரது சொத்துகள் மதிப்பு ரூ.64 கோடியே 97 லட்சம் ஆகும். சொத்துகள் விவரம் வருமாறு:-

    * முதல்-மந்திரி அலுவலக இணையதளத்தின்படி, முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் அசையும் சொத்துகள் மதிப்பு 2021-22 ஆண்டில் அதிகரித்துள்ளது. அசையாச்சொத்துகள் மதிப்பில் மாற்றம் இல்லை.

    * அசையும் சொத்துகள் மதிப்பு ரூ.12 கோடியே 52 லட்சம் ஆகும். இதில் டெல்லி, புவனேசுவரம், ஹிஞ்சிலிகட். பர்கார் ஆகிய இடங்களில் உள்ள வங்கிக்கணக்கு இருப்புகள், நகைகள், கார் அடங்கும்.

    * அசையாச்சொத்துகளில் புவனேசுவரம் விமான நிலையம் அருகே உள்ள அவரது நவீன் நிவாஸ் பங்களாவின் மதிப்பு ரூ.9 கோடியே 52 லட்சத்து 46 ஆயிரத்து 190 ஆகும். டெல்லியில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சாலையில் அமைந்துள்ள ரூ.43 கோடியே 36 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலான சொத்தில் பாதி, நவீன் பட்நாயக்கிற்கு இருக்கிறது.

    * ரூ.1 கோடி அளவுக்கு வங்கியில் டெபாசிட்டுகள் உள்ளன. ரூ.9 கோடி மதிப்பில் ரிசர்வ் வங்கி பத்திரங்கள் வைத்துள்ளார். அஞ்சலக சேமிப்பு ரூ.1½ கோடி உள்ளது. டெல்லி ஜன்பத்தில் உள்ள வங்கியில் ரூ.70 லட்சம், புவனேசுவரத்தில் உள்ள பாரத ஸ் டேட் வங்கியில் ரூ.21 லட்சம் சேமிப்பு உள்ளது.

    * ரூ.3½ லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளும், ரூ.6,434 மதிப்பிலான 1980 மாடல் காரும் வைத்துள்ளார்.

    * ஒடிசாவில் 5 முறை முதல்-மந்திரி பதவி வகித்துள்ள நவீன் பட்நாயக்கின் அசையா சொத்துகள் மதிப்பு ரூ.52 கோடியே 88 லட்சம் ஆகும். இவை அவரது பெற்றோர் பிஜூ பட்நாயக், கியான் பட்நாயக் வழி வந்தவை ஆகும்.

    நவீன் பட்நாயக் மந்திரிசபையில் மந்திரிகள் அசோக் சந்திர பாண்டா, பிரித்தி ரஞ்சன் கடாய், ரானேந்திர பிரதாப் ஸ்வைன், பிரமிளா மாலிக், நிரஞ்சன் பூஜாரி, உஷா தேவி, அடானு சப்யசாகி நாயக், ராஜேந்திர தோயில்கியா, டுகானி சாகு, பிரதீப் குமார் அமத், பி.கே. தேப், பசந்தி ஹேம்ப்ராம், ரோகித் பூஜாரி, அஷ்விணி பத்ரா ஆகிய 14 பேர் கோடீசுவரர்கள் ஆவார்கள்.

    ஒடிசாவின் உருக்கு, சுரங்கத்துறை மந்திரி பிரபுல்லா மாலிக்கிற்கு ரூ.42 லட்சம் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இவர்தான் வசதி குறைந்த மந்திரி ஆவார். இவர்கள் அத்தனை பேரின் சொத்து விவரங்களும் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

    இது அபூர்வமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

    • வீடியோ வெளியிட்ட அண்ணாமலை எனது கட்சிக்காரருக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்கவேண்டும்.
    • 48 மணி நேரத்தில் எனது கட்சிக்காரரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும்.

    சென்னை :

    தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை கடந்த 14-ந் தேதி, தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதில் தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டு தெரிவித்ததாக கூறி அண்ணாமலைக்கு கனிமொழி சட்டரீதியான நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    கனிமொழி சார்பாக வக்கீல் மனுராஜ் அண்ணாமலைக்கு அனுப்பிய நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழக பா.ஜ.க. தலைவரான நீங்கள் ஏப்ரல் 14-ந் தேதி உங்கள் கட்சி தலைமையகத்தில் 'டி.எம்.கே. பைல்ஸ்' என்ற பெயரிலான ஓர் அவதூறு காணொலியை பத்திரிகையாளர்கள் முன்பு திரையிட்டிருக்கிறீர்கள். அதில் எனது கட்சிக்காரர் கனிமொழி எம்.பி. பெயரை குறிப்பிட்டு, 'அபிடவிட்'படியான சொத்து மதிப்பு ரூ.30.33 கோடி மற்றும் கலைஞர் டி.வி. ரூ.800 கோடி, மொத்த மதிப்பு ரூ.830.33 கோடி' என புகைப்படத்துடன் காட்டப்பட்டுள்ளது.

    இது அவரை களங்கப்படுத்தும் வகையிலான அவதூறு மட்டுமல்ல, அடிப்படை ஆதாரமற்றது, கற்பனையானது. கடந்த 10.2.2023 முதல் எனது கட்சிக்காரர் கலைஞர் டி.வி.யில் எந்த பங்கும் பெற்றிருக்காத நிலையில், எந்தவித அடிப்படை தகவல்களையும் சரிபார்க்காமல் எனது கட்சிக்காரரின் நற்பெயரை குலைப்பதை உள்நோக்கமாக கொண்டு இந்த அவதூறு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    2024 பாராளுமன்ற தேர்தல் நெருங்கும்நிலையில் நாடு முழுவதும் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளில் இருந்து மக்களை திசைதிருப்பிடும் வகையிலும், தி.மு.க.வின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் நோக்கத்தோடும் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக உங்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர முகாந்திரம் உள்ளது.

    இந்த வீடியோவால் எனது கட்சிக்காரரின் மதிப்புக்கு தனிப்பட்ட முறையிலும், பொதுவாழ்விலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோவை வெளியிட்டதன் மூலம் இந்திய தண்டனை சட்டம் 499, 500 பிரிவுகளின்படி தண்டனைக்குரிய குற்றத்தை செய்தவர் ஆகிறீர்கள். இதனால் எனது கட்சிக்காரர் அளவிட முடியாத மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். வீடியோ வெளியிட்ட அண்ணாமலை எனது கட்சிக்காரருக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்கவேண்டும்.

    இந்த நோட்டீஸ் பெற்ற 48 மணி நேரத்தில் அவதூறு வீடியோவை திரும்ப பெற்றுக்கொண்டு, அனைத்து சமூக தளங்களிலும் அதை அகற்றி, எனது கட்சிக்காரரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கான எல்லா விளைவுகளுக்கும் தாங்களே பொறுப்பு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×