search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hill villages"

    • கல்வி சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வருவாய் மற்றும் வனத்துறை சார்பில் செய்து தரப்படுகிறது.
    • சோலார் விளக்குகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக முன்னாள் எம்.எல்.ஏ தொகுதி நிதியில் இருந்து அமைத்து தரப்பட்டது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், பொருப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, தளஞ்சி, தளிஞ்சிவயல், மாவடப்பு, குலிப்பட்டி, குருமலை, காட்டுப்பட்டி, பூச்ச கொட்டாம்பாறை, கருமுட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான கல்வி சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வருவாய் மற்றும் வனத்துறை சார்பில் செய்து தரப்படுகிறது. ஆனால் முழுமையாக பூர்த்தி அடையாததால் மலைவாழ் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    அந்த வகையில் மலைவாழ் குடியிருப்புகளுக்கு ஒளி ஏற்றும் விதமாக சூரிய ஒளியில் இயங்கக்கூடிய சோலார் விளக்குகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக முன்னாள் எம்.எல்.ஏ ஜெயராமகிருஷ்ணன் தொகுதி நிதியில் இருந்து அமைத்து தரப்பட்டது. அதன் பின்பு அதை முறையாக பராமரித்து நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த விளக்குகள் படிப்படியாக பழுதடைந்து தற்போது கிராமங்கள் முழுவதும் இருளில் மூழ்கி உள்ளது.

    இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:- எங்கள் கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை அரசுத்துறைகள் சார்பில் செய்து கொடுப்பது மகிழ்ச்சியான விஷயமாகும்.ஆனால் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்ட பின்பு அதனை பராமரித்து முழுமைப்படுத்தி நடைமுறைப் படுத்துவதற்கு அதிகாரிகள் முன் வருவதில்லை. இதனால் திட்டங்கள் தொடங்கப்பட்ட வேகத்திலேயே செயலிழந்து பழுதடைந்து காட்சி பொருளாக மாறி வருவது வேதனைக்குரிய விஷயமாகும்.

    அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு எங்கள் குடியிருப்புகளில் சூரிய ஒளியில் இயங்கக்கூடிய சோலார் விளக்குகள் அமைத்து தரப்பட்டது. அவற்றை அவ்வப்போது பராமரித்து நடைமுறையில் இருக்க வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த விளக்குகள் ஒவ்வொன்றாக பழுது அடைந்து தற்போது முற்றிலுமாக அனைத்து விளக்குகளும் காட்சி பொருளாக மாறிவிட்டது. இதன் காரணமாக கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளது.

    இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் வனவிலங்குகள் தடம் மாறி குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுவது வாடிக்கையாக உள்ளது. அதை விரட்டி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக ரோந்து பணியில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அப்போது மனிதன் வன விலங்குகள் மோதல் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் மலைவாழ் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே அதிகாரிகள் மலைவாழ் கிராமங்களில் ஆய்வு செய்து பழுதடைந்த சோலார் விளக்குகளை புதுப்பித்து கிராமங்களுக்கு இரவில் ஒளியேற்றி வைக்க வேண்டும்.

    • உழவுக்கு பயன்படும் கால்நடைகள் மற்றும் நாட்டுக்கோழிகள் அதிக அளவு வளர்க்கப்படுகின்றன.
    • இப்பகுதியில் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக கால்நடைகள் இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    உடுமலை:

    உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் பொன்னாலம்மன் சோலை, ஆண்டியூர், பாண்டியன் கரடு, வல்லக்குண்டாபுரம், பாலாறுபதி, மயிலாடும்பாறை உள்ளிட்ட பல சிறிய கிராமங்கள் அமைந்துள்ளன. மேலும் அப்பகுதியில் விளைநிலங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்டத்து சாளைகள் உள்ளன.இங்கு விவசாயத்துக்கு இணையாக கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. பண்ணை முறையிலும் குறைந்தளவிலும் வெள்ளாடு, செம்மறியாடு, பால் உற்பத்திக்கான மாடுகள், உழவுக்கு பயன்படும் கால்நடைகள் மற்றும் நாட்டுக்கோழிகள் அதிக அளவு வளர்க்கப்படுகின்றன.

    இப்பகுதியில் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக கால்நடைகள் இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் அப்பகுதியில் கால்நடைத்துறையின் மருந்தகம், கிளை நிலையம் உட்பட வசதிகள் எதுவும் இல்லை.எனவே கால்நடைகளுக்கு நோய்த்தாக்குதல் ஏற்படும் போது வெகுதொலைவு அழைத்துச்செல்ல வேண்டியுள்ளது. குறித்த நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் கால்நடைகள் இறப்பதும் நடக்கிறது.

    குறிப்பிட்ட இடைவெளிகளில் கோமாரி நோய் உட்பட நோய்த்தாக்குதல்களை கட்டுப்படுத்த தடுப்பூசி போடுவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வாக நடமாடும் கால்நடை மருந்தக திட்டத்தை அப்பகுதியில் செயல்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது குறித்து கால்நடை வளர்ப்போர் கூறியதாவது:-

    கால்நடைகளின் பிரச்சினைகளுக்கு வாளவாடி, கரட்டுமடத்திலுள்ள கால்நடை மருந்தகத்துக்கே அழைத்துச்செல்ல வேண்டியுள்ளது. குறைந்தபட்சம் 10 கி.மீ., தூரத்துக்கு மேலுள்ளதால் கால்நடைகளை அழைத்துச்செல்ல முடிவதில்லை. எனவே தனியாரிடம் அதிக செலவழித்து நோய்வாய்ப்படுதல், சினை ஊசி போடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.எனவே கால்நடைத்துறை சார்பில் குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.கால்நடைகளுக்கு அம்மை நோய் பரவி வரும் நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்த திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.  

    • மலைவாழ் மக்களின் குடியிருப்புகளைப் பாா்வையிட்டதுடன், அவா்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்தாா்.
    • உதவித் தொகை வழங்கவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் எஸ்.வினீத் உத்தரவிட்டாா்.

    உடுமலை :

    உடுமலை அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள ஆட்டுமலை, பொறுப்பாறு, கோடந்தூா் ஆகிய செட்டில்மென்ட் கிராமங்களில் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் ஆய்வு மேற்கொண்டாா்.அப்போது அங்கு வசித்து வரும் மலைவாழ் மக்களின் குடியிருப்புகளைப் பாா்வையிட்டதுடன், அவா்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்தாா்.

    இதில் ஜாதிச் சான்று, குடும்ப அட்டை, தகுதியுள்ள நபா்களுக்கு முதியோா் உதவித் தொகை வழங்கவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் எஸ்.வினீத் உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, கோடந்தூரில் நடைபெற்ற மருத்துவ முகாமையும் கலெக்டர் பாா்வையிட்டாா்.ஆய்வின்போது, உடுமலை கோட்டாட்சியா் ஜஸ்வந்த்கண்ணன், மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் கே.கணேஷ்ராம் மற்றும் வனத் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

    • அமராவதி வனப்பகுதியில் மூன்று ஆறுகள் ஒன்றினையும் கூட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
    • ஆற்றை கடந்து செல்லும் போது பெருத்த இன்னல்கள் ஏற்பட்டு வருவதாக மலைவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.இங்கு யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அதுதவிர கோடந்தூர், தளிஞ்சி, தளிஞ்சி வயல், கீழானவயல், பொறுப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, குழிப்பட்டி, குருமலை, மேல் குருமலை, மாவடப்பு, காட்டுப்பட்டி, முள்ளுப்பட்டி, கரட்டுபதி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலை வாழ்மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

    கூட்டாறு

    அமராவதி வனச்சரகத்தில் தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல், மஞ்சம்பட்டி போன்ற மலைவாழ் குடியிருப்புகளுக்கு சென்று வருவதற்கு உடுமலை-மூணாறு சாலையில் இருந்து கூட்டாறு வழியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது.அதன் வழியாக மலைவாழ் மக்கள் மருத்துவம், கல்வி மற்றும் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக உடுமலை மற்றும் கேரள மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர்.

    ஆனால் மழைக்கால ங்களில் கூட்டாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்படுவதால் அதை கடந்து செல்வதற்கு முடியாமல் மலைவாழ் மக்கள் பெருத்த இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே கூட்டாற்றில் உயர்மட்ட பாலம் அமைத்து தருமாறு மலைவாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இன்று வரையிலும் அங்கு பாலம் கட்டி தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவில்லை.

    :வெள்ளம்

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அமராவதி வனப்பகுதியில் மூன்று ஆறுகள் ஒன்றினையும் கூட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதன் காரணமாக தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல் உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகள் எந்தவித தொடர்பும் இல்லாமல் தனித்தீவாக மாறியுள்ளது.

    மலைவாழ் மக்கள் பாதிப்பு

    அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசரகால சிகிச்சைக்கு கூட மலைவாழ் மக்கள் சமதளபரப்புக்கு சென்று வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் கூட்டாற்றின் குறுக்காக மலைவாழ் மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். தண்ணீரின் சீற்றம் அதிகமாக உள்ளதால் ஆற்றை கடந்து செல்லும் போது பெருத்த இன்னல்கள் ஏற்பட்டு வருவதாக மலைவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் ஆற்றைக் கடக்கும் போது திடீரென வெள்ளத்தின் போக்கும் அதிகரித்தால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் மலைவாழ் மக்கள் அச்ச மடைந்துள்ளனர்.

    எனவே கூட்டாற்றின் குறுக்காக உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×