search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heavy Rain In Kerala"

    கேரளாவில் கனமழை எதிரொலியாக திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், மதுரை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. #KeralaRain #KeralaFloods
    மதுரை:

    மதுரை ரெயில்வே கோட்ட செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவனந்தபுரம் கோட்டத்தில் குழித்துறை- இரணியல் பிரிவில் நிலச்சரிவையொட்டி, அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி புதுடெல்லியில் இருந்து 14-ந் தேதி புறப்பட்ட கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12626) ஈரோடு, திண்டுக்கல், நெல்லை வழியாக திருப்பி விடப்பட்டு, திருவனந்தபுரம் செல்லும்.

    ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 15-ந்தேதி புறப்பட்ட சபரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 17230) ஈரோடு, திண்டுக்கல், நெல்லை வழியாக திருப்பி விடப்பட்டு, திருவனந்தபுரம் செல்லும்.

    கன்னியாகுமரியில் இருந்து நேற்று (16-ந்தேதி) புறப்பட்ட ஐலண்ட் எக்ஸ் பிரஸ் திண்டுக்கல், மதுரை, நெல்லை வழியாக திருப்பி விடப்பட்டு, பெங்களூரு செல்லும்.

    ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி காத்ரா பகுதியில் இருந்து புறப்பட்ட ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16318) ஈரோடு, திருச்சி, விருதுநகர், மதுரை, வாஞ்சி மணியாச்சி, நெல்லை வழியாக திருப்பி விடப்பட்டு கன்னியாகுமரி செல்லும்.

    செங்கோட்டை- கொல்லம் பிரிவில் தண்டவாளத்தில் மரங்கள் விழுந்து கிடப்பதால், அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி திருவனந்தபுரம்-மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16343) போக்குவரத்தில் சோரனூர்- மதுரை இடையேயான போக்குவரத்து இரு மார்க்கங்களிலும் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    மதுரை-புனலூர் பயணிகள் ரெயில் போக்குவரத்தில் கொல்லம்-புனலூர் இடையேயான சேவை இரு மார்க்கங்களிலும் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    கொச்சுவேலி-திருவனந்தபுரம் இடையே தண்டவாள பராமரிப்பு காரணமாக குருவாயூர்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16128) 80 நிமிடங்கள் கால தாமதமாக செல்லும்.

    எழும்பூர் இணைப்பு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16130) தூத்துக்குடியில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும்.

    திருவனந்தபுரம்-பாலக்காடு பிரிவில் மண் சரிவு காரணமாக அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி பெங்களூரு-கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16315) ஈரோடு, மதுரை, திண்டுக்கல், நெல்லை, நாகர்கோவில் வழியாக திருப்பி விடப்பட்டு, திருவனந்தபுரம் செல்லும்.

    மும்பை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16381) ஈரோடு, மதுரை, திண்டுக்கல், நெல்லை, நாகர்கோவில் வழியாக திருப்பி விடப்படும்.

    இதேபோல புதுடெல்லி-திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் (வண்டிஎண்: 12626), கொர்பா-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22647), திருவனந்தபுரம்-புதுடெல்லி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12625), கன்னியாகுமரி-மும்பை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16381) ஆகியவை ஈரோடு, மதுரை, திண்டுக்கல், நெல்லை, நாகர்கோவில் வழியாக திருப்பி விடப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. #KeralaRain #KeralaFloods

    கேரளாவில் கன மழை தொடர்வதால் தமிழக தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அவதியடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    கேரளாவில் கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் அந்த மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கன மழைக்கு 29 பேர் பலியாகினர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

    தற்போது இடுக்கி அணை உள்பட 24 பெரிய அணைகள் நிரம்பியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

    கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து தொழிலாளர்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். தமிழக அரசு பஸ் மற்றும் ஜீப்புகளில் தினந்தோறும் சென்று திரும்புகின்றனர்.

    கட்டப்பணை, குமுளி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பு அதிக அளவு இல்லா போதும் தற்போது காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் மரங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே தோட்ட வேலைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்ல வேண்டாம் என தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி தமிழக-கேரள எல்லையில் உள்ள தமிழக சோதனைச்சாவடியில் போலீசார் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    வேலைக்கு செல்லும் தோட்ட தொழிலாளர்களை பாதுகாப்பு கருதி திருப்பி அனுப்புகின்றனர். மேலும் 2 நாட்களுக்கு வேலைக்கு வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

    வேலை இழந்துள்ளதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    கேரளாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக கோட்டயம், ஆலப்புழை மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோட்டயம், ஆலப்புழை மாவட்டங்களில் பலத்த மழை நீடித்து வருகிறது. மழைக்கு இதுவரை மாநிலம் முழுவதும் 20 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக கோட்டயம், ஆலப்புழை மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

    ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேங்கிய மழைநீர் வழிந்தோட வழியில்லாததால் பல வீடுகள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. சில இடங்களில் தெருக்களில் நிறுத்தி இருந்த கார்களும் மூழ்கிவிட்டன.

    ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அரசு சார்பில் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    தொற்று நோய் பரவாமல் தடுக்க சுகாதார துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களை சேர்ந்த சிறு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தினர் வீடுகள் இன்றி தவித்து வருகிறார்கள். கோட்டயம் காலனி பகுதிகளில் வசித்து வரும் தமிழக சிறு வியாபாரிகள் குடும்பத்தினருக்கு தமிழர் நல்வாழ்வு சங்கம் சார்பில் அரிசி மற்றும் துணிமணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    பலத்த மழை மற்றும் சேதம் காரணமாக கோட்டயம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. ஆலப்புழை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. இதனால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மாவட்டத்திலும் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    மாநிலம் முழுவதும் பரவலாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக இடுக்கி அணை உள்பட முக்கிய அணைகள் அனைத்தும் நிரம்பும் தருவாயில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 132 அடியை நெருங்கி வருகிறது.
    கூடலூர்:

    கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி உள்ள பகுதியிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.

    கடந்த 2 நாட்களாக மழையின் தாக்கம் அதிகரித் துள்ளதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்று காலை 129.20 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 2 அடி வரை உயர்ந்து 131. 20 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 6770 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. வினாடிக்கு 1573 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4978 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 71 அடி உயரம் உள்ள அணையில் தற்போது நீர்மட்டம் 48.88 அடியாக உள்ளது. அணைக்கு 1771 கன அடி வீதம் வருகிறது.

    திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்காக 900 கன அடியும், மதுரை குடிநீருக்காக 60 கனஅடி என மொத்தம் 960 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1850 மி.கன அடியாக உள்ளது.

    பெரியாறு 41, தேக்கடி 28.8, கூடலூர் 16.4, சண்முகாநதி 10, உத்தமபாளையம் 12.4, வைகை அணை 4.2, மஞ்சளாறு 5, சோத்துப்பாறை 2, கொடைக்கானல் 3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    ×