search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fake ATM Card"

    சென்னை ஓட்டலில் தங்கி போலி ஏடிஎம் கார்டு தயாரித்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த ஜார்கண்ட் வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    சென்னையில் போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி கைவரிசை காட்டுவது தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

    வங்கி கணக்கில் அதிக அளவில் பணம் வைத்திருப்பவர்கள் யார் என்பதை கண்டு பிடித்து அவர்களின் பின் நம்பரை பயன்படுத்தி புதிய கார்டு தயாரித்து இந்தமோசடி அரங்கேற்றப்படுகிறது.

    ஏ.டி.எம். மையங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுப்பவர்களின் ரகசியங்களை திருடி போலி கார்டு தயாரித்து மோசடி செய்யப்படுகிறது.

    வணிக நிறுவனங்களில் பொருள் வாங்கி விட்டு கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் போது அவர்களின் ரகசிய பின் நம்பர் திருடப்பட்டு போலி கார்டு தயாரிக்கப்படுகிறது. அதன் மூலம் அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடி செய்யப்படுகிறது.

    இதுதொடர்பாக பல வணிக நிறுவனங்கள் மீது சென்னை போலீசார் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளனர். வங்கிகள், கூரியர் மூலம் வாடிக்கையாளர்களின் முகவரிக்கு ஏ.டி.எம். கார்டு மற்றும் பின் நம்பரை அனுப்பி வைக்கும் போது அதை பிரித்து பார்த்து பின் நம்பரை தெரிந்து கொண்டு அதற்கேற்ப போலி ஏ.டி.எம்.கார்டுகள் தயாரித்து மோசடி செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்ற மோசடியில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு கும்பல் சென்னை ஓட்டலில் தங்கி போலி ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் மோசடி செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    அந்த கும்பலில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த விஜய்குமார் மண்டல் (வயது 22), சுகேந்தர் குமார் மண்டல் (23), பாஸ்கர் குமார் (25) ஆகியோர் இருந்தனர். இவர்கள் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்து கைவரிசை காட்டி உள்ளனர்.

    கொல்கத்தாவில் இருந்து வந்த சைபர் கிரைம் போலீசார் ஓட்டலில் தங்கியிருந்த 3 பேரையும் கைதுசெய்தனர். பின்னர் அவர்களை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் ரொக்க பணம் மற்றும் 21 போலி ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி அவர்கள் இந்த பணத்தை எடுத்திருப்பது தெரிய வந்தது. அவர்கள் கொல்கத்தா உள்ளிட்ட வட மாநிலங்களிலும் கைவரிசை காட்டி உள்ளனர்.

    அதன் பேரிலேயே கொல்கத்தாவில் இருந்து வந்த சைபர் கிரைம் போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் வேறு எங்கெங்கெல்லாம் கைவரிசை காட்டி உள்ளனர் என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    சென்னையில் நூதனமான முறையில் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து, ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுத்து ரூ.5 லட்சம் வரை சுருட்டிய மோசடி ஆசாமி கைது செய்யப்பட்டார்.
    சென்னை:

    கொடைக்கானலை சேர்ந்தவர் கார்த்திக். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் கொடைக்கானலில் குழந்தைகள் கேளிக்கை திரை அரங்கை நடத்தி வருகிறேன். சென்னையை சேர்ந்த கார்த்திக் என்ற நபர் என்னை அணுகினார். திரையரங்க வாசலில் ஒரு கடை அமைத்து, பே.டி.எம். மூலம் டிக்கெட் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி சலுகை தருவதாக கூறினார்.

    கடந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் அவர் திரையரங்க வாசலில் கடை அமைத்து பே.டி.எம். முறையில் கட்டணம் வசூலித்து டிக்கெட் வழங்கினார். இந்த ஆண்டும் அதுபோல அவர் கட்டணம் வசூலித்தார்.

    இவ்வாறு அவர் கட்டணம் வசூலிக்கும்போது, வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்களை, வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் ‘ஸ்கிம்மர்’ மிஷின் வழியாக பதிவு செய்துள்ளார்.

    பின்னர் அந்த ரகசிய குறியீட்டு எண்களை அடிப்படையாக வைத்து, போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்து சென்னையில் வங்கி ஏ.டி.எம். மையங்களில் இருந்து ரூ.5 லட்சம் வரை பணத்தை சுருட்டி உள்ளார். அந்த மோசடி நபர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.

    இந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் கணேசமூர்த்தி, துணை கமிஷனர் செந்தில், உதவி கமிஷனர் வெங்கடேசன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செல்வராணி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

    போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட சென்னை சித்தாலப்பாக்கம் வினோபாநகரை சேர்ந்த இம்ரான்கான் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான போலி ஏ.டி.எம் மற்றும் கிரெடிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை தயாரிக்க உதவிய ‘ஸ்கிம்மர்’ கருவி உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட இம்ரான்கான், கார்த்திக் எனும் போலியான பெயரில் இதுபோன்ற நூதனமான மோசடியில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் தெரியவந்துள்ளது. 
    புதுச்சேரி மற்றும் கோவையில் போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கில் சென்னையை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து சொகுசு கார்கள் உள்பட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. #FakeATMCard
    புதுச்சேரி:

    ஏ.டி.எம். எந்திரங்களில் ஸ்கிம்மரை பொருத்தி வங்கி வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டில் உள்ள தகவல்களை திருடி போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்து அவர்களது வங்கிகணக் கில் இருந்து பணத்தை ஒரு கும்பல் மோசடி செய்தது. இது குறித்து ஏராளமான புகார்கள் வந்ததால் புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் என்ஜினீயர் பாலாஜி, டாக்டர் விவேக் ஆனந்தன், என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சத்யா உள்ளிட்ட 11 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முத்தியால்பேட்டையை சேர்ந்த சந்துருஜியை வலைவீசி தேடிவருகின்றனர். சமீபத்தில் சமூக வலைதளத்தில், தனக்கும் இந்த மோசடிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

    போலீசாரின் தீவிர விசாரணையில் சந்துருஜிக்கும் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியை சேர்ந்த பீட்டர் (வயது 38) என்பவருக்கும் தொடர்பு இருப்பதும், இவர்தான் சந்துருஜியின் மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது. மரைன் என்ஜினீயரிங் படித்துள்ள இவர் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்திவருகிறார்.

    கோவையை சேர்ந்த பட்டதாரியான தினேஷ் (33) என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. கோவையில் அழகுநிலையம் நடத்திவரும் இவரும், பீட்டரும் சந்துருஜியிடம் இருந்து ஸ்வைப்பிங் மெஷின்களை வாங்கி சட்டவிரோதமாக ரூ.1 கோடியே 5 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

    மேலும் சென்னை கொளத்தூரை சேர்ந்த இர்பான் ரகுமான் (34) என்பவருக்கும் இந்த மோசடி வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் சென்னை வடபழனியில் விமான டிக்கெட் வாங்கித்தரும் ஏஜென்சி நடத்திவருகிறார். இந்த வழக்கில் இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    பீட்டரிடம் இருந்து ரூ.2 லட்சம், லேப்டாப் மற்றும் 5 ஏ.டி.எம். கார்டுகள், தினேஷிடமிருந்து சொகுசு கார் ஒன்றும், இர்பான் ரகுமானிடமிருந்து அதிநவீன சொகுசு கார் ஒன்றும், 4 லேப்டாப், 3 வங்கி காசோலை புத்தகங்கள், 2 வங்கி கணக்கு புத்தகம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 கோடி.

    கோவையிலும் இதேபோல போலி ஏ.டி.எம். கார்டு மோசடியில் ஈடுபட்ட ஒரு கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில், கிருஷ்ணகிரியில் ஒரு ஓட்டல் அருகில் ஏ.டி.எம். மோசடி கும்பலை சேர்ந்த 6 பேரை மடக்கிப்பிடித்தனர். கைதானவர்கள் விவரம் வருமாறு:-

    நவசாந்தன் (29), உத்தண்டி, சென்னை. இலங்கை திரிகோணமலையை சேர்ந்த இவர் இலங்கை அகதியாக வந்து தங்கியிருந்தார். நிரஞ்சன் (38), கானத்தூர், சென்னை. தமிழரசன் (26), வசீம் (30), இவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். கிஷோர் (25), திருச்சி, மனோகரன் (19), திருப்பூர் அனுப்பர்பாளையம்.

    அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, கோவையில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. ஏ.டி.எம். மையங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி, வாடிக்கையாளர்களின் ரூ.19 லட்சத்தை சுருட்டியது தெரியவந்தது. இந்த கும்பல் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் இதுபோன்று லட்சக்கணக்கில் சுருட்டியுள்ளனர்.

    கைதானவர்களில் சென்னையை சேர்ந்த நிரஞ்சன், நவசாந்தன் ஆகியோர் தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணர்கள். போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரிப்பதில் இவர்கள் முக்கியமாக செயல்பட்டுள்ளனர். இந்த கும்பலுக்கு நவசாந்தன் மூளையாக செயல்பட்டுள்ளார். பி.எம்.டபிள்யூ. உள்பட சொகுசு கார்கள், 2 லேப்டாப், 17 செல்போன்கள், 20 போலி ஏ.டி.எம். கார்டுகள், 40 கிராம் தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 6 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். 
    தமிழகம், புதுவையில் போலி ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.100 கோடி பணம் திருடப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:- #FakeATMcard #Puducherry
    புதுச்சேரி:

    கேரளாவில் டிஸ்கோ நடன கிளப்பில் ஏற்பட்ட தகராறில் புதுவை வாலிபர் ஒருவரை கேரள போலீசார் கைது செய்தனர். அவரிடம் ஏராளமான போலி ஏ.டி.எம். கார்டுகள் இருந்தன. இது பற்றி விசாரித்த போது, புதுவையில் போலி ஏ.டி.எம். கார்டு தயாரிக்கும் கும்பல் செயல்படுகிறது. அவர்கள் இந்த கார்டுகளை எனக்கு வழங்கினார்கள் என்று கூறினார்.

    அப்போது புதுவை பல்கலைக்கழக ஊழியர் பாலாஜி, கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் ஜெயச்சந்திரன், புதுவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் விவேக் ஆனந்த், சென்னையை சேர்ந்த ஷியாம், கடலூரை சேர்ந்த கமல் ஆகியோர் போலி ஏ.டி.எம். கார்டு தயாரிப்பில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் ரொக்கப் பணம், ரூ. 46 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள், 19 ஸ்வைப்பிங் எந்திரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

    இவர்கள் வெளிநாடுகளில் இருந்து இணையதள வர்த்தகம் மூலம் ஸ்கிம்மர் என்ற கருவியை வரவழைத்தனர். இந்த கருவி சிறிய அளவிலான கம்ப்யூட்டர் சாதனம் ஆகும். இதை ஏ.டி.எம். எந்திரங்களில் யாருக்கும் தெரியாமல் ஒட்டி வைத்து விடுவார்கள்.

    பணம் எடுக்க ஏ.டி.எம். கார்டை எந்திரத்தில் செலுத்தும் போது, அதில் உள்ள தகவல்கள் அனைத்தையும் ஸ்கிம்மர் கருவி பதிவு செய்து கொள்ளும். அதில் ஒரு சிறிய ரகசிய கேமராவும் இருக்கும். அது, குறியிடும் பாஸ்வேர்டு விவரத்தை படம் பிடித்து கொள்ளும்.

    இதன் பிறகு இந்த தகவல்களை வைத்து போலியாக ஏடி.எம். கார்டுகளை இவர்கள் தயாரித்தனர். அந்த கார்டுகளை ஏ.டி.எம். மையங்களில் பயன்படுத்தி பணத்தை எடுத்தனர்.


    இவ்வாறு பணம் எடுத்தால் குறைந்த அளவு மட்டுமே பணம் எடுக்க முடியும். அதனால் ஏ.டி.எம். கார்டு மூலம் பொருட்கள் வாங்கியது போல் ஸ்வைப்பிங் எந்திரத்தில் கார்டுகளை தேய்த்து அதன் மூலம் லட்சக்கணக்கில் பணத்தை தங்கள் வங்கி கணக்குக்கு மாற்றி உள்ளனர். இதற்காக வங்கிகளில் தவறான தகவல்களை வழங்கி ஏராளமான ஸ்வைப்பிங் எந்திரங்களை வாங்கி வைத்திருந்தனர்.

    பல கடை உரிமையாளர்களை தங்களின் கூட்டாளிகள் ஆக்கி அவர்களின் ஸ்வைப்பிங் எந்திரம் மூலமும் ஏராளமான பணத்தை தங்கள் வங்கி கணக்குக்கு மாற்றி இருக்கிறார்கள். இதற்காக அந்த கடைக்காரர்களுக்கு 10 சதவீதம் வரை கமி‌ஷன் கொடுத்துள்ளனர். இவ்வாறு உதவிய வியாபாரிகள் டேனியல் சுந்தர்சிங், சிவக்குமார், கணேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த மோசடி கும்பலுக்கு புதுவை அ.தி.மு.க. பிரமுகர் சந்துருஜி, என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் சத்யா ஆகியோர் தலைவர்களாக இருந்து செயல்பட்டு உள்ளனர். இவர்களில் சத்யா மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். சந்துருஜியை போலீசார் தேடிவருகிறார்கள்.

    இதற்கிடையே சந்துருஜியின் தம்பி மணி சந்தர் (வயது 28). தனது அண்ணனுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர்.

    சென்னையில் பதுங்கி இருந்த மணிசந்தரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அவர் பயன்படுத்திய ரூ. 10 லட்சம் மதிப்புள்ள கார் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த கும்பல் புதுவை மட்டுமின்றி தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தங்களது ஆட்களை போலி ஏ.டி.எம். கார்டுகளுடன் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அனுப்பி அங்குள்ள ஏ.டி.எம்.களில் இருந்தும் பணத்தை எடுத்துள்ளனர்.

    இவர்களுடன் நாடு முழுவதும் பல மோசடி கும்பல் தொடர்பில் இருந்துள்ளனர். இதற்காக வாட்ஸ்-அப் குரூப் ஒன்றை உருவாக்கி உள்ளனர். அதில், ஸ்கிம்மர் கருவி மூலம் ஏ.டி.எம்.கார்டின் தகவல்களை எப்படி திருடுவது? கார்டு எப்படி தயாரிப்பது? அதை எந்தெந்த முறைகளில் பயன்படுத்துவது போன்ற விவரங்களை வாட்ஸ்-அப் மூலம் பரிமாறி இருக்கிறார்கள்.


    இந்த வாட்ஸ்-அப் குரூப்பில் மட்டுமே 25-க்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு நெட்வொர்க்காக செயல்பட்டு நாடு முழுவதும் ஏடி.எம்.கார்டு மூலம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். சுமார் ரூ. 100 கோடி வரை கொள்ளை நடந்திருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    மோசடி கும்பல் குறிப்பாக வெளிநாட்டினரை குறிவைத்தே இந்த மோசடியை செய்துள்ளனர். வெளி நாட்டினர் எந்த பகுதிகளில் எல்லாம் ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்துவார்களோ அங்கு ஸ்கிம்மர் கருவியை பொருத்தி ரகசியங்களை திருடி கார்டு தயாரித்துள்ளனர்.

    வெளிநாட்டினரிடம் திருடினால் அவர்கள் போலீசில் புகார் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் விரைவில் நாடு திரும்பி விடுவார்கள் என்பதால் தொடர் நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டார்கள்.

    மேலும் அவர்களுடைய கணக்கில் ஏராளமான பணம் இருக்கும். எனவே, அவர்கள் ஏ.டி.எம். கார்டுகளை போலியாக தயாரித்தால்தான் பிரச்சினை வராது என்று கருதியே வெளிநாட்டினரை குறிவைத்துள்ளனர்.

    புதுவையில் ஆரோவில் பகுதியில் பல வெளிநாட்டினர் வசிக்கிறார்கள். தினமும் ஆயிரக்கணக்கானோர் புதுவைக்கு சுற்றுலா வருகிறார்கள். அவர்களை குறிவைத்து இந்த மோசடி நடந்திருக்கிறது.

    இதேபோல் சென்னையிலும் வெளிநாட்டினர் அதிகம் புழங்கும் ஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் கருவி மூலம் தகவல்களை திருடி இருக்கிறார்கள்.

    இதன் முக்கிய குற்றவாளியான சந்துருஜி இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர் கைதானால் முழு விவரமும் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    இந்த வழக்கை விசாரித்து வரும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் கூறியதாவது:-

    ஏடி.எம். மோசடியில் ஈடுபட்டுள்ள கும்பலுக்கு சர்வதேச அளவில் தொடர்புள்ளது. டென்மார்க், பெல்ஜியம், அயர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து மர்ம நபர்கள் இவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். அவர்கள் தான் போலி ஏ.டி.எம். கார்டு தயாரிப்பது தொடர்பான அனைத்து விவரங்களையும் இவர்களுக்கு கொடுத்து இருப்பார்கள் என கருதுகிறோம்.

    சந்துருஜி கைதானால் தான் மற்ற விவரங்களை கண்டுபிடிக்க முடியும். எனவே, தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்று கூறினார்.

    இது சம்பந்தமாக முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறும் போது, ஏ.டி.எம். மோசடி தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி., சைபர் கிரைம், எஸ்.டி.எப். ஆகிய போலீசார் இணைந்து விசாரித்து வருகிறார்கள்.

    இந்த மோசடியில் சர்வதேச கும்பல் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதால் அதற்கேற்றபடி போலீஸ் விசாரணை மாற்றப்படும் என்று கூறினார்.

    இதற்கிடையே இந்த மோச யில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, அ.தி.மு.க.வை சேர்ந்த மேலும் பல பிரமுகர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. எனவே, இது சம்பந்தப்பட்ட அனைத்து அரசியல்வாதிகளையும் கைது செய்ய வேண்டும் என கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. #FakeATMcard #Puducherry #TamilNadu
    ×