என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dikshitars"

    • சிதம்பரம் கோவில் ஆரூத்ரா தரிசனத்திற்கு முன்பை போல பக்தர்கள் கூட்டம் வருவதில்லை.
    • கோவிலில் காசு போட்டால்தான் பூ கிடைக்கும்.

    சென்னை:

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் செவிலியரைத் தாக்கியதாகவும், முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், கனக சபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய உதவியதாக கூறி, நடராஜ தீட்சிதர் என்பவரை சஸ்பெண்ட் செய்து பொது தீட்சிதர்கள் குழு உத்தரவிட்டது.

    இதனை எதிர்த்து நடராஜ தீட்சிதர் இந்து அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்திருந்தார். அதனை விசாரித்த கடலூர் இணை ஆணையர், நடராஜ தீட்சிதரின் சஸ்பெண்டை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து பொது தீட்சிதர்கள் குழுவின் செயலாளர் வெங்கடேச தீட்சிதர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

    அதில், பொது தீட்சிதர் குழுவின் முடிவில், தலையிட இந்து அறநிலைத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் இணை ஆணையரின் உத்தரவு ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணை வந்தது. அப்போது நடராஜ தீட்சிதர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பின்னர் கோவில் தங்களுக்கு சொந்தமானது என பொது தீட்சிதர்கள் நினைப்பதாகவும் நீதிமன்றம் தான் இதனை கட்டுப்படுத்த வேண்டு மெனவும் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து நீதிபதி கூறியதாவது:-

    தீட்சிதர்களால் எனக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மன கஷ்டங்களுக்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்கும் அவமானப்படுத்தப்படுகின்றனர்.

    தீட்சிதர்கள் ஆணவத்துடன் செயல்படுகின்றனர். இது ஒரு நல்ல அறிகுறி கிடையாது. சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருபவர்கள் எல்லாம் சண்டைக்கு வருவது போலவே தீட்சிதர்கள் நினைக்கின்றனர்.

    சிதம்பரம் நடராஜர் கோவில் நமக்கு சொந்தமானது என பொது தீட்சிதர்கள் நினைக்கின்றனர். அவர்கள் தங்களை கடவுளுக்கு மேலானவர்கள் என கருதுகின்றனர்.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த ஆரூத்ரா தரிசனம் தற்போது பல கோவில்களில் நடத்தப்படுகிறது.

    சிதம்பரம் கோவில் ஆரூத்ரா தரிசனத்திற்கு முன்பை போல பக்தர்கள் கூட்டம் வருவதில்லை. இப்படியே இருந்தால் பக்தர்களுடைய வருகை குறைந்து கோவில் பாழாகி விடும். கோவிலில் காசு போட்டால்தான் பூ கிடைக்கும். இல்லையென்றால் விபூதி கூட கிடைக்காது.

    இவ்வாறு நீதிபதி கூறினார்.

    இதனையடுத்து, இந்த வழக்கில் பதிலளிக்குமாறு இந்து அறநிலைத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தார்.

    • பல ஆண்டுகளாக வெயில், மழையால் சேதமடைந்து இருப்பதால், அதற்கு பதிலாக புதிய கொடிமரம் வைக்க முடிவு.
    • இதற்காக நேற்று கொடி மரத்திற்கு படையல் செய்து வழிபட்டனர்.

    சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. இங்கு பிரமோற்சவம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த சூழலில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் உள்ள கொடிமரம் பல ஆண்டுகளாக வெயில், மழையால் சேதமடைந்து இருப்பதால், அதற்கு பதிலாக புதிய கொடிமரம் வைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாக அறங்காவலர் சுதர்சன் மற்றும் பட்டாச்சாரியார்கள் முடிவு செய்தனர். இதற்காக நேற்று கொடி மரத்திற்கு படையல் செய்து வழிபட்டனர்.

    இதுபற்றி அறிந்ததும் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் ஒன்று திரண்டு, தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் நிர்வாகிகளிடம் இக்கோவிலில் பிரமோற்சவம் நடத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் இங்குள்ள கொடி மரத்தை புதுப்பிக்கவோ, மாற்றவோ கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இதுபற்றி அறிந்ததும் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில், சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பட்டாச்சாரியர்கள் மற்றும் தீட்சிதர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

    இச்சம்பவத்தால் நடராஜர் கோவில் வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கோவிந்தராஜ பெருமாள் கோயில் கொடி மரத்தை, தற்போது உள்ளதைப் போலவே மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை எனவும், கொடி மரத்தில் புதிதாக வளையம் போன்றவற்றை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தீட்சிதர்கள் தெரிவித்தனர்.

    • பொது தீட்சிதர்கள் செயலாளர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு.
    • கோவில் தீட்சிதர்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பூஜை செய்வதற்காக குழந்தைகளுக்கு தீட்சிதர்கள் திருமணம் செய்து வருவதாகவும், இது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்தன.

    அந்த புகார்களின் அடிப்படையில் 2020 மற்றும் 2021-ம் ஆண்டு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக 20-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தை திருமணம் செய்த தாய், தந்தை என பல்வேறு நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த வழக்கில் சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் அமைப்பின் செயலாளர் ஹேம சபேசனை போலீசார் இன்று கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். 

    இதை கண்டித்து நடராஜர் கோவில் கிழக்கு கோபுரம் முன்பு திரண்ட 100-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் ஹேம சபேசனை விடுதலை செய்ய கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்த சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், ஏ டி எஸ் பி அசோகன் மற்றும் போலீசார், சாலை மறியல் ஈடுபட்ட தீட்சிதர்களிடம் மறியலை கைவிடும்படி பேச்சுவார்த்தை நடத்தினர். 


    பலமுறை வேண்டுகோள் விடுத்தும் போராட்டம் தொடர்ந்ததால், தீட்சிதர்களை குண்டு கட்டாக தூக்கி சாலையில் இருந்து அப்புறப்படுத்திய போலீசார், பின்னர் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது, தீட்சிதர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்பட்டது.

    ×