குழந்தை திருமண விவகார வழக்கு- சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கைது

பொது தீட்சிதர்கள் செயலாளர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு.கோவில் தீட்சிதர்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு
தீட்சிதர்கள், நடராஜர் கோவில்
தீட்சிதர்கள், நடராஜர் கோவில்
Published on

சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பூஜை செய்வதற்காக குழந்தைகளுக்கு தீட்சிதர்கள் திருமணம் செய்து வருவதாகவும், இது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்தன.

அந்த புகார்களின் அடிப்படையில் 2020 மற்றும் 2021-ம் ஆண்டு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக 20-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தை திருமணம் செய்த தாய், தந்தை என பல்வேறு நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த வழக்கில் சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் அமைப்பின் செயலாளர் ஹேம சபேசனை போலீசார் இன்று கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். 

இதை கண்டித்து நடராஜர் கோவில் கிழக்கு கோபுரம் முன்பு திரண்ட 100-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் ஹேம சபேசனை விடுதலை செய்ய கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்த சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், ஏ டி எஸ் பி அசோகன் மற்றும் போலீசார், சாலை மறியல் ஈடுபட்ட தீட்சிதர்களிடம் மறியலை கைவிடும்படி பேச்சுவார்த்தை நடத்தினர். 

பலமுறை வேண்டுகோள் விடுத்தும் போராட்டம் தொடர்ந்ததால், தீட்சிதர்களை குண்டு கட்டாக தூக்கி சாலையில் இருந்து அப்புறப்படுத்திய போலீசார், பின்னர் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது, தீட்சிதர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com