சிதம்பரம் கோவிலில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் கொடிமரத்தை மாற்ற தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு

பல ஆண்டுகளாக வெயில், மழையால் சேதமடைந்து இருப்பதால், அதற்கு பதிலாக புதிய கொடிமரம் வைக்க முடிவு.இதற்காக நேற்று கொடி மரத்திற்கு படையல் செய்து வழிபட்டனர்.
சிதம்பரம் கோவிலில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் கொடிமரத்தை மாற்ற தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
Published on

சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. இங்கு பிரமோற்சவம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த சூழலில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் உள்ள கொடிமரம் பல ஆண்டுகளாக வெயில், மழையால் சேதமடைந்து இருப்பதால், அதற்கு பதிலாக புதிய கொடிமரம் வைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாக அறங்காவலர் சுதர்சன் மற்றும் பட்டாச்சாரியார்கள் முடிவு செய்தனர். இதற்காக நேற்று கொடி மரத்திற்கு படையல் செய்து வழிபட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் ஒன்று திரண்டு, தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் நிர்வாகிகளிடம் இக்கோவிலில் பிரமோற்சவம் நடத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் இங்குள்ள கொடி மரத்தை புதுப்பிக்கவோ, மாற்றவோ கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இதுபற்றி அறிந்ததும் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில், சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பட்டாச்சாரியர்கள் மற்றும் தீட்சிதர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

இச்சம்பவத்தால் நடராஜர் கோவில் வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவிந்தராஜ பெருமாள் கோயில் கொடி மரத்தை, தற்போது உள்ளதைப் போலவே மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை எனவும், கொடி மரத்தில் புதிதாக வளையம் போன்றவற்றை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தீட்சிதர்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com