என் மலர்tooltip icon

    மற்றவை

    • மக்களோ ஆவுடையார் கோயிலென கோயிலின் பெயரையே ஊருக்கும் நிரந்தரமாக்கி விட்டார்கள்!
    • மற்ற கோயில்களில் சாமிக்கு படைக்கும் உணவை, பக்தர்கள் பார்த்துவிடாமல், மூடிய பாத்திரத்தில் கொண்டுசென்று ரகசியமாக காட்டுவார்கள்!

    பாரதத்தில் உள்ள பல்லாயிரம் கோயில்களும், மன்னர்களாலும் வள்ளல்களாலும் நிர்மாணிக்கப்பட்டவை! ஆனால் ஆவுடையார் கோயிலைக் கட்டியவர், அருள்ஞானக் கவிக்கதிர் மணிவாசகத் திருமகனார்!

    புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாற்றின் வடகரையில் பவித்திர மாணிக்க சதுர்வேதி மங்கலம் எனும் ஊரின் நட்டநடுவில் கட்டப்பட்டது ஆவுடையார்கோயில்.

    தமிழ் இலக்கியங்களிலும் வடமொழி இலக்கியங்களிலும் அநாதிமூர்த்தித் தலம், ஆதிகயிலாயம், உபதேசத்தலம், குருந்தவனம், சதுர்வேதபுரம், ஞானபுரம், திருமூர்த்திபுரம், பராசக்திபுரம் யோகவனம், சிவபுரம், திருப்பெருந்துறை என பலபல பெயர்கள் இந்த ஊருக்குச் சூட்டப்பட்டுள்ளன!

    மக்களோ ஆவுடையார் கோயிலென கோயிலின் பெயரையே ஊருக்கும் நிரந்தரமாக்கி விட்டார்கள்!

    மற்ற கோயில்களில் சாமிக்கு படைக்கும் உணவை, பக்தர்கள் பார்த்துவிடாமல், மூடிய பாத்திரத்தில் கொண்டுசென்று ரகசியமாக காட்டுவார்கள்!

    ஆவுடையார் கோயிலில் குடிகொண்ட ஆத்மநாதசாமிக்கு நமது வீடுகளில் அமரர்க்குப் படைப்பதைப் போலவே செய்கிறார்கள்!

    கருவறைக்கும் பக்தர்கள் எல்லைக்கும் நடுவில் வெளியரங்கமாக ஒரு படையல் மேடை, எல்லாரும் பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது!

    ஆவி பறக்கப் பறக்கப் புழுங்கல் அரிசிச் சோற்றை கொண்டுவந்து இந்தப் படையல் மேடையில் குன்றுபோலக் கொட்டுகிறார்கள்! அப்பம், அதிரசம், தேன்குழல் பலகாரங்களை சூழ வைக்கிறார்கள். ஆவி பறக்கும் படையலுக்கு தீப ஆராதனை செய்து பக்தர்களுக்கும் படையல் தரிசனம் படைக்கிறார்கள்!

    சிவாலயம் எனில் கொடிமரம் இருக்கும் நந்தி இருக்கும், பலிபீடம் இருக்கும் கருவறையில் சிவலிங்கம் இருக்கும், உற்சவமூர்த்தியும் இருக்கும்!

    மாணிக்க வாசகப் பெருமகனார், கலை இழைத்துக் கட்டிய சிலைமிளிரும் ஆவுடையார் கோயிலில் சிவனுக்கான உற்சவமூர்த்தி இல்லை கருவறையில் லிங்கம் இல்லை, பலிபீடம் இல்லை, கொடிமரமும் இல்லை!

    பிறவா யாக்கைப் பெரியோன் உருவமற்றவன் என்ற கொள்கையின் வெளிப்பாடாய் அமைக்கப்பட்ட கருவறையில் சிறிய ஆவுடைப் பீடம், அதன் மேல் அழகிய குவளையைச் சாற்றி அலங்காரம் செய்து காட்சிப்படுத்தினார் தீபம் காட்டுகிறார்கள்! காட்டிய தீபத்தை ஒற்றிக் கொள்ள நம்மிடம் கொணர்வதில்லை! பிரசாதமாக திருநீறு மட்டுமே!

    ஆமாம் அய்யன் ஆத்மநாதரையும் அம்மன் யோகாம்பிகையையும் சிந்தனை உளியில் நாம்தான் செதுக்கி வணங்க வேண்டும்!

    வருடத்திற்கு இருமுறை நடக்கும் திருவிழாக்களில், நான்கு தேவபாட்டைகளிலும் பவனிவரும் உற்சவ மூர்த்தி யார்?

    அது மாணிக்கவாசகரின் மூர்த்தி! இது சிவ மகாகவிக்குக் கிடைக்கின்ற செம்மைச் சிறப்பு! கோயிலுக்குள்ளும் மணிவாசகரை வணங்கிய பிறகு தான் ஆத்மநாதர் எனும் அரூபத்தை வணங்கவேண்டும்!

    - ஆறாவயல் பெரியய்யா

    • ஆரம்பத்தில் காபியை குடிக்கவில்லை; அப்படியே சாப்பிட்டார்கள் ஆப்பிரிக்க பழங்குடிகள்.
    • கச்சா எண்ணெயை அடுத்து உலக நாடுகளிடையே அதிகம் வர்த்தகம் செய்யப்படும் பொருள் காபிதான்.

    தேநீருக்கு அடுத்து உலகில் அதிகம் பேர் சுவைக்கும் உற்சாக பானமான காபி பற்றி சில தகவல்கள்...

    * எத்தியோப்பிய ஆடு மேய்ப்பவர்கள்தான் முதன்முதலில் காபி தரும் உற்சாகத்தை அறிந்தவர்கள். அவர்கள் மேய்த்த ஆடுகள், காபி கொட்டையை பழத்தோடு தின்றதும் உற்சாகமாக நடனம் புரிவதைப் பார்த்தனர். 'இதற்குள் ஏதோ இருக்கிறது' என காபி கொட்டையை மனிதர்கள் தின்பதற்கு வழிகாட்டியவர்கள் அவர்களே..!

    * ஆரம்பத்தில் காபியை குடிக்கவில்லை; அப்படியே சாப்பிட்டார்கள் ஆப்பிரிக்க பழங்குடிகள். காபி கொட்டை மீது கொழுப்பு நிறைந்த உணவுகளைப் பூசி, உடலுக்கு சக்தி தரும் உற்சாக உருண்டையாக மென்று சாப்பிட்டார்கள்.

    * பூமத்திய ரேகையை ஒட்டிய மற்றும் கீழே இருக்கும் நாடுகளில்தான் காபி விளைகிறது. அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் மட்டும் காபி பயிரிடப்படுகிறது.

    * 1675-ம் ஆண்டில் இங்கிலாந்தில் காபி ஷாப்களுக்கு மன்னர் தடை விதித்தார். அங்கே பலரும் கூடி தனக்கு எதிராக சதி செய்வதாக அவர் பயந்தார்.

    * உலகில் 70 சதவீதம் மக்கள் அராபிகா காபியையும், 30 சதவீதம் மக்கள் ரோபஸ்டா காபியையும் அருந்துகிறார்கள். ரோபஸ்டாவில் கசப்பு கொஞ்சம் அதிகம்.

    * காபிச்செடி 30 அடி உயரத்துக்கு வளரக்கூடியது. ஆனால் காபிக்கொட்டைகளைப் பறிப்பது சிரமம் என்பதால், 10 அடி தாண்டி வளர விடுவதில்லை.

    * தயாரிக்கும் முறையைப் பொறுத்து அமெரிக்கானோ, எஸ்பிரஸோ, மோச்சா, கப்புசினோ என பல ரகங்கள் காபியில் உண்டு.

    * கச்சா எண்ணெயை அடுத்து உலக நாடுகளிடையே அதிகம் வர்த்தகம் செய்யப்படும் பொருள், காபிதான்..!

    * காபியில் இருக்கும் 'கஃபைன்' நமது உடலுக்குள் போனதும் டோபமைன் அளவை அதிகரிக்கச் செய்கிறது. அதோடு பிட்யூட்டரி சுரப்பியும் தூண்டப்பட, அது அட்ரினல் சுரப்பிக்கு அர்ஜன்ட் மெசேஜ் அனுப்புகிறது. இதையடுத்து அது அட்ரினலினை அதிகமாக சுரந்து உடலுக்குள் பாய்ச்சுகிறது. காபி குடித்ததும் உற்சாகம் பிறக்கக் காரணம் இதுதான்!

    • ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் 1847-ம் ஆண்டில் பிறந்தார் கிரகாம் பெல்
    • 1871-ம் ஆண்டு இங்கிலாந்தின் பாஸ்டன் நகருக்கு குடியேறி ஒலி பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கினார் பெல்.

    'டிரிங்'... 'டிரிங்'... என்ற அந்தக் காலத்து டெலிபோன் மணி ஓசையை நினைவிருக்கிறதா? அந்த ஒப்பற்ற கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர் பெயரும் பெல்தான்... அலெக்சாண்டர் கிரகாம் பெல்..! அவரை பற்றியும், அவரது கண்டுபிடிப்பு பற்றியும் தெரிந்து கொள்வோமா...

    ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் 1847-ம் ஆண்டில் பிறந்தார் கிரகாம் பெல். சிறு வயதிலேயே கவிதை எழுதுவதிலும், பியானோ வாசித்தல், மிமிக்ரி போன்ற கலைகளிலும் சிறந்து விளங்கினார் பெல். அவருடைய 12 வயதில் அவர் தாயார் கேட்கும் திறனை இழக்கத் தொடங்கினார். எனவே, அவருக்காக செய்கை பேச்சுப் பயிற்சியை கற்றுக் கொண்டார் பெல். பெல்லின் தந்தை, அவர் அண்ணன் என எல்லோருமே காது கேளாதோருக்கான பயிற்சிகளிலும், சேவையிலும் ஈடுபட்டிருந்தனர். இதனால் பெல்லுக்கு குரல் ஒலிகளைப் பற்றிய ஆராய்ச்சியில் இயல்பாகவே ஆர்வம் ஏற்பட்டது.

    1871-ம் ஆண்டு இங்கிலாந்தின் பாஸ்டன் நகருக்கு குடியேறி ஒலி பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கினார் பெல். 1876-ம் ஆண்டில் ஒரு நாள்... கண்ணாடி அறையான தன் ஆராய்ச்சிக் கூடத்திற்குள் பெல் பேசிய பேச்சு வெளியே கேட்டதாக அனைவரும் சொன்னார்கள். ஒலியை மின் குறியீடுகளாக்கி வயர்கள் வழியே கடத்தும் இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியே முதல் தொலைபேசியை வடிவமைத்தார் கிரகாம் பெல்.

    இந்தப் புதிய கண்டுபிடிப்பு உல கின் கவனத்தை ஈர்த்தாலும், அன்றைய பெரும் நிறுவனங்கள் எல்லாம் இந்தத் தொழில்நுட்பத்தை காசு கொடுத்து வாங்க பயந்தன. இதனால் கிரகாம்பெல் 1877-ம் ஆண்டு 'அமெரிக்கன் டெலிபோன்' எனும் சொந்த நிறுவனத்தை அமெரிக்காவில் தொடங்கினார். அந்நிறுவனம் வருமானத்தை வாரிக் குவித்தது.

    ஒரே கண்டுபிடிப்பின் மூலம் பெரும் செல்வந்தரானாலும் தன் ஆராய்ச்சிகளைக் கைவிடாத கிரகாம் பெல், மெட்டல் டிடெக்டரின் கண்டுபிடிப்பிலும் ஏரோ நாட்டிக்ஸ், ஹைட்ரோபாயில்ஸ் போன்ற துறைகளிலும் பெரும் பங்காற்றினார்.

    • ஒவ்வொருவரும் தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, உயிருக்கோ தீங்கு நேராவண்ணம் நடந்து கொள்ள வேண்டும்.
    • பிறர்க்கு எவ்வகையிலும் தீமை ஏற்படாதபடி எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றையும் ஒழுங்குபடுத்திக்கொண்டு வாழ்வது தான் ஒழுக்க வாழ்வு.

    ஒவ்வொரு செயலுக்கும் ஓர் விளைவுண்டு. அந்த விளைவிலிருந்து யாருமே தப்ப முடியாது. ஒவ்வொருவரும் தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, உயிருக்கோ தீங்கு நேராவண்ணம் நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அமைதியும் இன்பமும் ஏற்படும். அறிவு வளர்ச்சிக்கும் வழி ஏற்படும். இன்றேல் அமைதி குன்றி வளர்ச்சி தடையுறும்.

    அவரவர் செய்யும் தவறுகள் தான் மதவாதிகளால் பாபம் என்றும், சிந்தனையாளர்களால் தவறு என்றும், அரசியல்வாதிகளால் குற்றம் என்றும் கூறப்படுகிறது. இந்த மூன்றுமே ஒரே பொருளைக் குறிப்பதுதான்.

    நாம் ஒரு முறை ஒரு செயலை செய்துவிட்டால், அது நமது உடலுறுப்புக்களில் பதிந்து மீண்டும் அதையே செய்யத் தயாராகிவிடும். இந்தப் பதிவு, எண்ண அழுத்தமாக மூளையிலும் பதிந்துவிடுகிறது. அதுவுமின்றி, சந்ததித் தொடர்புக்கு காரணமாக உயிர்வித்திலும் அது பதிந்து விடும்.

    ஆகவே தான், தீமையைத் தவிர்த்து நல்லதே செய்ய நாம் பழகிக்கொள்ள வேண்டியதிருக்கிறது. இதற்கு தான் ஒழுக்கம் என்று பெயர்.

    பிறர்க்கு எவ்வகையிலும் தீமை ஏற்படாதபடி எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றையும் ஒழுங்குபடுத்திக்கொண்டு வாழ்வது தான் ஒழுக்க வாழ்வு ஆகும். மற்ற எல்லாம் இழுக்கான வாழ்வாகிய துன்பத்தையே தான் கொடுக்கும்.

    இதனால் காரண காரிய விளைவு அறிந்து இன்பம் தரும் நற்செயல்களிலேயே ஒருவன் ஈடுபடவேண்டுவது அவசியமாகிறது.

    - வேதாத்திரி மகரிஷி.

    • பெரிய அழகிய வீடு ஒன்றை கட்டி.. அதிலுள்ள குதிரை லாயத்தில் குதிரைகளை கட்டி வைப்பேன்.
    • என் மனைவியும்... என் குழந்தையும் விளையாடுவதை பார்த்து ரசிப்பேன்.

    ஏழை விவசாயி ஒருவன் தன் வீட்டில் கயிற்று கட்டிலில் படுத்துக்கொண்டு, மேலே தொங்கிக்கொண்டிருக்கும் கஞ்சி கலயத்தை பார்த்துக்கொண்டே..

    ஒரு நாள்... இந்த ஊரில் கடுமையான பஞ்சம் வரும்.

    அப்போது, இந்த கஞ்சியை நல்ல விலைக்கு விற்பேன்.

    கஞ்சி விற்ற காசில் கோழிகள் வாங்கி வளர்ப்பேன்.

    சில மாதங்களில் கோழிகள் நிறைய பெருகியவுடன்...

    கோழிகளை விற்று ஆடுகள் வாங்குவேன்.

    ஆடுகள் பெருகியவுடன்...

    ஆடுகளை விற்று மாடுகள் வாங்குவேன்.

    மாடுகளை பெருகியவுடன்...

    மாடுகளை விற்று குதிரைகள் வாங்குவேன்.

    பிறகு, பெரிய அழகிய வீடு ஒன்றை கட்டி.. அதிலுள்ள குதிரை லாயத்தில் குதிரைகளை கட்டி வைப்பேன்.

    ஊரில் உள்ள மிகப் பெரிய செல்வந்தர், தன் மகளை எனக்கு மணமுடித்து வைப்பார்.

    எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும்..

    அவனுக்கு ராஜா என்று பெயர் வைப்பேன்.

    மாடியிலிருந்து, என் மனைவியும்... என் குழந்தையும் விளையாடுவதை பார்த்து ரசிப்பேன்.

    அப்போது அவன் சேட்டை செய்வான்..

    பிறகு கீழே சென்று அவளை பார்த்து...

    "ஏய்..! ராஜாவை கூட்டிட்டு வீட்டுக்குள்ள போ... என்று கம்பால் ஓங்கி அடிப்பேன்.." என்று அடித்தான்.

    அடித்தவுடன்... கஞ்சி கலயம் உடைந்து... அவன் முகத்தில் கொட்டியது.

    - ஓஷோ

    • உடலுக்கு வேலை கொடுப்பவருக்கே தூக்கம் வரும். மனதிற்கு மட்டும் வேலை கொடுப்பவருக்கு தூக்கம் வராது.
    • முன்னோர்கள் அருளிய யோக பயிற்சிகளை செய்யுங்கள், வீட்டு வேலைகளை இயந்திர துணையின்றி செய்யுங்கள்.

    பசி..

    உங்கள் உடலுக்கு உணவு தேவையா இல்லையா என்பது சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு தெரியுமா? தெரியாதல்லவா? பின் ஏன் நேரம் பார்த்து சாப்பீடுகிறீர்கள்?

    யாரெல்லாம் நேரம் பார்த்து வேளாவேளைக்கு சரியாக சாப்பிடுகிறாரோ அவர் மிகப்பெரிய நோயாளி ஆகப்போகிறார் என்று அர்த்தம்.

    பசியின் அளவு தெரியாமல் அதிகமாக உண்டால் நோய் அளவில்லாமல் வரும்போது, பசியே இல்லாமல் சாப்பிட்டால் என்னவாகும்? எனவே பசித்த பின்னர் புசிக்க வேண்டும்

    தாகம்..

    அனைவருக்கும பொதுவாக தண்ணீரின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது, இது தவறு. ஏசியில் வேலை பார்க்கும நபருக்கு 3 லிட்டர் தண்ணீர் தேவைப்படாது, மீறி குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

    வெயிலில் கட்டிட வேலை செய்பவருக்கு 3 லிட்டர் போதாது, இவருக்கு அதிகம் தேவைப்படும், இவர் 3 லிட்டர் குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

    எனவே தாகம் எடுக்கும்போது குடியுங்கள், தாகம் தீரும் வரை குடியுங்கள், மீண்டும் தாகம் எடுத்தால் குடியுங்கள். அளவுகளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

    உடல் உழைப்பு..

    ஒரு வாகனத்தை 3 மாதம் ஓட்டாமல் வைத்திருந்தால் என்னவாகும். அதே நிலைதான் உடலுக்கும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 3 மணி நேரமாவது உடல் உழைப்பு அவசியம்.

    இதற்கு நீங்கள் முன்னோர்கள் அருளிய யோக பயிற்சிகளை செய்யுங்கள், வீட்டு வேலைகளை இயந்திரத்துணையின்றி செய்யுங்கள்.

    யாருக்கு தூக்கம் வரும்.?

    உடலுக்கு வேலை கொடுப்பவருக்கே தூக்கம் வரும். மனதிற்கு மட்டும் வேலை கொடுப்பவருக்கு தூக்கம் வராது. மனதிற்கு மட்டும் வேலை கொடுத்துவிட்டு நீங்கள் தூக்கத்தை எதிர்பார்க்கக்கூடாது.

    ஒரு மனிதன் உயிர் வாழ உணவு, காற்று, நீர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு தூக்கமும் முக்கியம். இரவு கண் விழித்து வேலை பார்ப்பது உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

    பகலில் உறங்கி சமன் செய்து விடலாம் என நினைக்காதீர்கள். இரவு உறக்கத்தை உங்களால் ஈடு செய்யவே முடியாது. இரவு தூங்க வேண்டிய சரியான நேரம் 9 மணி. இரவு உறக்கம் சரி இல்லை என்றால் கல்லீரல், பித்தப்பை தொடர்பான நோய்கள் வரும்.

    ஓய்வு..

    உடல் கேட்கும்போது ஓய்வு கொடுத்ததால் நீங்கள் ஆரோக்கியத்தின் ஐந்தாம் படி அடைந்தீர்கள்.

    மன நிம்மதி..

    ஐந்து கட்டத்தை வெற்றிகரமாக தாண்டி வந்த உங்களுக்கு மன நிம்மதி என்று ஒன்று இல்லை என்றால் பின் கீழ் சறுக்கி பழைய நிலைக்கு சென்றுவிடுவீர்கள்.

    மனம் நிம்மதியாக இருக்க விருப்பத்துடன் வேலை செய்யுங்கள், மாதம் ஒரு நாளாவது உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலங்களுக்கு சென்று வாருங்கள்.

    எண்ணம், சொல், செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும் என்று நினையுங்கள்.

    இவ்வாறு மனதையும் நிம்மதியாக வைக்கும் கலைகளை கற்று தேர்ந்தால் ஆறாவது படியில் வீற்றிருக்கும் ஆரோக்கியத்தை அடைந்துவிடலாம்.

    -ஆதவன்

    • பனை ஓலை ெவட்டியபோது சம்பவம்
    • மின்சாரம் தாக்கி முதியவர் பலியானார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வெள்ளைச்செட்டிவயல் கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 70). விவசாயக் கூலித் தொழிலாளியான இவர், பனை ஓலை மூலம் கூடை, பாய் உள்ளிட்டவைகளை பின்னி விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டருகே வயல்காட்டில் உள்ள பனைமரத்தில் ஏறி ஓலை வெட்டியுள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக பனைமரத்தின் அருகே சென்று கொண்டிருந்த உயர் மின்னழுத்த மின்கம்பியிலிருந்து இவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த ஆவுடையார்கோவில் போலீசார் ராமனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • ஆற்றில் பிணங்களை வீசினால், ஆறு கெடும். அதன் நீர் நாறும்.
    • ஆயிரக்கணக்கான பிணங்களையும் உள்வாங்கிக் கொண்டு கெட்டு நாறாமல் இருக்கிறது கங்கை!

    கங்கை நதி பாயும் அதே மலையிலிருந்து பிறந்து பாயும் வேறு ஆற்று நீருக்கு கங்கையின் தனிச் சிறப்பு இல்லை! அதே மலை. அதே மேகங்கள். அதே மழை. அதே பனி உருகல். என்றாலும் கங்கையின் நீர் வேறாக இருக்கிறது. ஏன் என்பதைக் கண்டுபிடித்து நிரூபிக்க முடியவில்லை - சில விஷயங்கள் நிரூபிக்க முடியாதவைதாம். கங்கையில் ஓர் ரசவாதம் ஏற்படுகிறது. நான் சொல்லி வருவதில் பல விஷயங்களை நிரூபிப்பது கடினம்.

    கங்கை சாதாரண நதி அன்று. அந்த நதி முழுவதுமே ஓர் ரசாயனச் சாலை. அதனால்தான் கங்கைக் கரையில் அத்தனை புண்ணியத் தலங்கள். கங்கை நதி நீர் முற்றிலும் வேறுபட்டது என்பதை ரசவாதிகளும் விஞ்ஞானிகளும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

    மற்ற நதி நீரைச் சேமித்து வைத்தால் கெட்டுவிடும்; கங்கை நீர் கெடாது! பல ஆண்டுகள் வைத்திருந்தாலும் கெடாது. ஆனால், மற்ற ஆற்று நீர் சில வாரங்களிலேயே நாறிவிடும்.

    ஆற்றில் பிணங்களை வீசினால், ஆறு கெடும். அதன் நீர் நாறும். ஆனால் ஆயிரக்கணக்கான பிணங்களையும் உள்வாங்கிக் கொண்டு கெட்டு நாறாமல் இருக்கிறது கங்கை! இன்னொரு வியப்பான அம்சம். சாதாரணமாக எலும்பு, தண்ணீரில் கரையாது. ஆனால் கங்கை நீரில் கரைந்து விடுகிறது. மிச்சம் மீதியே இருப்பதில்லை! தனக்குள் போடப்படும் எல்லாவற்றையும் கரைத்து, அதன் ஆதிமூல, மூலக நிலைக்குக் கொண்டுவந்து விடுகிறது. சவங்கள் எந்த முறையிலும் பூரணமாக அழிய பல ஆண்டுகள் பிடிக்கும். ஆனால், கங்கையில் விரைவில் கரைந்து விடுகின்றன. அப்படியொரு ரசவாதம். கங்கை இதற்காகவே படைக்கப்பட்டது போலத் தோன்றுகிறது.

    மற்ற ஆறுகள் பாய்வது போல், கங்கை மலையிலிருந்து பாய்வதில்லை. அது பாயும்படியாகச் செய்யப்பட்டுள்ளது. இதைப் புரிந்து கொள்வது எளிதல்ல.

    கங்கையின் பிறப்பிடம் 'கங்கோத்ரி' என்ற மிகச் சிறிய சுனை. ஆனால், உண்மையான பிறப்பிடம் அதுவன்று! அது மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது! இப்போதுள்ள இடம் வெறும் வெளிமுகப்பு மட்டுமே. மக்கள் இதைத்தான் சென்று கண்டு வழிபட்டுத் திரும்புகிறார்கள். உண்மையான கங்கைப் பிறப்பிடம் பல்லாயிரம் ஆண்டுகளாக மறைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது!

    சாதாரண முறையில் அந்த இடத்தை அடைவது சாத்தியமில்லை. சூட்சும சரீரம் கொண்டே அங்கே செல்ல முடியும். நமது பருவுடல் கொண்டு பயணம் செய்ய முடியாது.

    கங்கையில் நீராடியவுடனே உடலில் உள்ள நீர் மாற்றம் அடைகிறது. ஆனால், அந்த மாற்றம் சற்று நேரம்தான் நீடிக்கும். சரியான முறைப்படி சோதனை செய்தால் ஆன்ம பயணம் ஆரம்பமாகிவிடும். கங்கையில் நீராடிய பின், கோவிலுக்குச் சென்று, வந்தனை வழிபாடுகள் செய்வதெல்லாம், அகத்தின் ஆன்மப் பயணத்திற்குப் புறத்தில் உள்ளவற்றைப் பயன்படுத்திக் கொள்வதுதான்.

    -ஓஷோ

    • ஆடி மாதம் சிறுதானியக் கூழும் வெங்காயமும் வேப்பிலையுடன் கொண்டாடுவோம்.
    • தீபாவளிக்கு எண்ணெய் பலகாரங்கள் வைத்து வழிபடுவோம்.

    * சித்திரை தொடக்கத்தில் கனிகள் வைத்து வழிபடுவோம். காரணம், வேனிற்காலத்திற்கு உடலுக்கு நீர்ச்சத்தும் வைட்டமீன்களும் தேவை.

    * ஆடி மாதம் சிறுதானியக் கூழும் வெங்காயமும் வேப்பிலையுடன் கொண்டாடுவோம். காரணம், காற்றின் வழி பரவும் நோய்களிலிருந்து காத்துக்கொள்ள இரும்புச்சத்தும், கிருமிநாசினியும் தேவை.

    * தீபாவளிக்கு எண்ணெய் பலகாரங்கள் வைத்து வழிபடுவோம். காரணம், அடுத்து வரும் குளிர்காலங்களைத் தாங்க உடலுக்கு கொழுப்புச்சத்து தேவைப்படுவதால்.

    * தை மாதம் பொங்கலும் கரும்பும் படைத்து வணங்குவோம். காரணம், குளிர்காலம் முடிந்து வேனிலை எதிர்நோக்கியிருப்பதால் உடலுக்குச் சர்க்கரைத் தேவைப்படும்.

    இந்த வாழ்க்கை முறை தான் தமிழம். இந்த வழிபாட்டினைச் சிறப்பாகச் செய்யும் தமிழ்க் கலாச்சார மதமே தமிழம்.

    -இளவல் இளம்பரிதி

    • பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்.
    • எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்.

    அசுத்தமான குடிநீர், உணவு, சுற்றுச்சூழல் மட்டுமல்ல கெட்ட குணங்களால் கூட நமக்கு நோய்கள் வரும்.

    ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்...

    பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்.

    கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்.

    துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்.

    பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்.

    எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்.

    அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.

    மருந்தைக் குறிக்கும் மெடிசன் என்ற வார்த்தையும் தியானத்தைக் குறிக்கும் மெடிடேஷன் என்கிற வார்த்தையும் ஒரே மூலத்தில் இருந்து உருவானவை.

    மருந்து உடல் நோயை போக்கும். தியானம் உளநோயை போக்குவதுடன் உடல் நோயையும் கட்டுப்படுத்தும்.

    ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும்.

    எனவே கவலைகளை விட்டொழியுங்கள்...

    மகிழ்ச்சியாய் இருங்கள்...

    அமைதியாய் இருங்கள்..

    ஆனந்தம் என்றும் நிலைத்திருக்கும்.

    -கோ. வசந்தராஜ்

    • நெய்யில், சற்று கூடுதலாக விட்டமின் ஏ இருப்பதால், தோலுக்கும், கண்ணுக்கும் நல்லது.
    • பிற மாமிச கொழுப்புகளை விட, நெய் செல்களினூடே எளிதில் ஊடுருவும் என்பதால் மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

    நெய் என்பது கொழுப்பு மற்றும் எண்ணெய் வகையில் வருவதால், உடலுக்கு ஆற்றல் தந்து, கூடுதலாக இருப்பின் திசுக்களில் சேமித்து வைக்கப்படுகிறது.

    20 கிராம் கொழுப்பு ஒரு நாளைக்கு உண்ணவேண்டும் என்ற நிலையில் அது, நெய், வெண்ணெய், இறைச்சி, மீன், எண்ணெய் வித்துக்கள் என்று எதிலிருந்து வேண்டுமானாலும் பெறப்படலாம்.

    நிர்ணயித்த அளவில் எடுத்துக் கொள்ளப்படும்போது, உடல் எடை சரியாகவே இருக்கும். அதிக அளவில் எடுத்துக் கொண்டு, உடல் உழைப்பும் இல்லாத நிலையில் சேமிக்கப்பட்டு, எடை கூடும். இதில் உடலில் உள்ள நோய்களின் தன்மையும் கவனிக்கத் தகுந்தது.

    கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் ஏ, ஈ, டி, கே போன்றவை கரைவதற்கு, கொழுப்புத் தேவை என்பதால், இதய நோய் உள்ளவர்களுக்கு கூட குறைந்த பட்சம் 15 கிராமாவது பரிந்துரைக்கப்படுகிறது. அது தாவர கொழுப்பாக/எண்ணெயாக இருப்பதும் நல்லது.

    நெய்யில், சற்று கூடுதலாக விட்டமின் ஏ இருப்பதால், தோலுக்கும், கண்ணுக்கும் நல்லது. பிற மாமிச கொழுப்புகளை விட, செல்களினூடே எளிதில் ஊடுருவும் என்பதால் மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இது சுத்தமான பசு நெய்க்கு மட்டுமே பொருந்தும்.

    பசும் பாலில் இருந்து எடுக்கும் வெண்ணெயில் தயாரித்த நெய்யை தினமும் ஒரு தேககரண்டியளவு பருப்புடனோ, தோசையுடனோ, குழம்புட னோ எடுத்துக் கொள்வதில் தவறில்லை. அதனுடன் கூடுதலான அசைவம் அல்லது தாவர எண்ணெய்/ வித்துக்கள் உடலுக்குப் போகிறதா, உடலுழைப்பே இல்லாமல் இருக்கிறீர்களா என்பதிலேயே, உடலில் கொழுப்பு சேர்வதை கணக்கிட முடியும்.

    ஆக, நெய் சாப்பிடுவதால் உடல் எடை கூடும் குறையும் என்பதை குறிப்பிட்டுக் கூற முடியாது. சரியான அளவில் எடுத்துக் கொள்ளும்போது, அதன் ஆற்றலுடன் சத்துக்களை மட்டுமே உடலுக்கு கொடுக்கிறது. சுத்தமான பசுநெய் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதே.

    -முனைவர். ப. வண்டார் குழலி

    • “நரகத்தின் பாதைகள் நல்லெண்ணத்தால் நிரம்பியவை” என ஒரு பழமொழி உண்டு.
    • தன் நல்ல எண்ணம் பெரிய தீமைகளுக்கு வழிவகுக்கும் என பால் கஃபி நினைத்துகூட பார்த்திருக்கமாட்டார்.

    1747...

    தன்னிடம் இருந்த கருப்பின அடிமை ஒருவரை விடுவிக்கிறார் ஒரு அமெரிக்கர். அவர் பூர்வகுடி பெண் ஒருவரை மணக்கிறார். இருவருக்கும் பால் கஃபி எனும் ஒரு மகன் பிறக்கிறான். அடிமை முறையும், இனவெறியும் தலைவிரித்து ஆடிய காலகட்டத்தில் அவரது தந்தை தன் மனைவியின் பூர்வகுடி நிலத்தில் விவசாயம் செய்ய ஆரம்பிக்கிறார். பெரும் பணக்காரர் ஆகிறார்.

    பால் கஃபி அடிமையாக இருக்கும் கருப்பின மக்களை காப்பற்ற ஏதாவது செய்யவேண்டும் என நினைக்கிறார். காசு கொடுத்து அடிமைகளை விலைக்கு வாங்குகிறார். அவர்களை ஒரு கப்பலில் ஏற்றி ஆப்பிரிக்காவுக்கு அனுப்புகிறார். அங்கே சென்ற கப்பலின் கேப்டன் மேற்கு ஆப்பிரிக்காவில் மலிவாக இடம் வாங்கி, வீடுகளை கட்டி அவர்களை அங்கே குடியேற்றுகிறார். லைபிரியா என அதற்கு பெயர் இடப்படுகிறது.

    அதன்பின் அடிமை முறையை ஒழிக்க நினைத்த பல பெரும்பணக்காரர்கள் ஒன்று சேர்ந்து இந்த புராஜக்டில் ஈடுபடுகிறார்கள். அடுத்த சில பத்தாண்டுகளில் 1848 வரை பல அடிமைகள் விலைக்கு வாங்கபட்டு லைபிரியாவுக்கு கொண்டு செல்லபடுகிறார்கள்.

    1848ல் லைபிரியாவுக்கு தனிநாடு அந்தஸ்து கிடைக்கிறது. விடுதலை பெற்ற முன்னாள் அடிமை ஒருவர் அதிபர் ஆகிறார்.

    அமெரிக்க அரசியல் சட்டத்தை அப்படியே காப்பி அடித்து லைபிரிய சட்டம் எழுதபடுகிறது. அங்கேயும் ஒரு வெள்ளை மாளிகை, அமெரிக்க பாராளுமன்றம், ஜனாதிபதி மாதிரி அமைப்புமுறை. அதன்பின் வசந்தம் பூத்துகுலுங்கியதா? அடிமைகள் வாழ்வு சிறந்ததா?

    அங்கே நிலம் வாங்கபட்டாலும் அங்கே பூர்வகுடி ஆப்பிரிக்கர்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்தார்கள். விடுதலை பெற்ற கருப்பர்கள் தம்மை லைபிரியர்கள் என அழைத்துக்கொண்டார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் மட்டும் தான் தெரியும், அமெரிக்க நாகரீகத்தில் ஊறி இருந்தார்கள்.

    அவர்கள் செய்த முதல்வேலை பூர்வகுடிகளுக்கு ஓட்டுரிமை இல்லை என்றதும், பூர்வகுடிகள் லைபிரியர்களை மணக்க தடை விதித்து சட்டம் இயற்றியதும்தான்.

    தென்னாப்பிரிக்காவில் இருந்தது போல அபார்தீட் முறையை அறிமுகப்படுத்தினார்கள். லைபிரியர்களுக்கு தனி குடியிருப்பு, பூர்வகுடிகள் உள்ளே நுழையகூடாது. வேலைவாய்ப்புகள் மறுப்பு. தனி, தனி பள்ளிக்கூடங்கள், சர்ச்சுகள். அடுத்த 120 ஆண்டுகளுக்கு அமெரிக்க-லைபிரியர்கள் தான் தொடர்ந்து அதிபர்களாக இருந்தார்கள்.

    1980 வாக்கில் மிகப்பெரிய பூர்வகுடி புரட்சி நடந்தது. அன்றைய ஜனாதிபதியும், மந்திரிகளும், எம்பிக்களும் ஒட்டுமொத்தமாக பூர்வகுடிகளால் கொல்லப்பட்டார்கள். அடுத்த 23 ஆண்டுகள் தொடர்ச்சியான உள்நட்டுபோர். பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். 2003ம் ஆண்டுதான் ஒருவழியாக பிரச்சனைகள் ஓய்ந்து அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

    "நரகத்தின் பாதைகள் நல்லெண்ணத்தால் நிரம்பியவை" என ஒரு பழமொழி உண்டு. தன் நல்ல எண்ணம் இத்தனை பெரிய தீமைகளுக்கு வழிவகுக்கும் என பால் கஃபி நினைத்துகூட பார்த்திருக்கமாட்டார்.

    - நியாண்டர் செல்வன்

    ×