என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • சீனாவின் நேட்டோ மீதான எதிர்ப்பு மற்றும் ரஷியாவுடனான நெருக்கம் ஆகியவை பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
    • நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் முயற்சி செய்ததால் அந்நாடு மீது ரஷியா போரை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

    30 நாடுகளை கொண்ட நேட்டோ அமைப்பின் மாநாடு ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடந்து வருகிறது. இம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.

    இம்மாநாட்டில் நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு ரஷியா நேரடி அச்சுறுத்தலாக திகழ்கிறது என்று பிரகடனப் படுத்தப்பட்டது. மேலும் உக்ரைன் மீது ரஷியா போரிட்டு வரும் சூழலில் உக்ரைனுக்கு அரசியல் ரீதியாகவும், செயல் ரீதியாகவும், அளித்து வரும் உதவிகள் அதிகரிக்க நேட்டோ நாடுகளின் தலைவர்கள் உறுதி அளித்தனர்.

    இந்த நிலையில் ரஷியாவின் அச்சுறுத்தலையடுத்து ஐரோப்பியாவில் அமெரிக்க படை அதிகரிக்கப்படும் என்று அதிபர் ஜோபைடன் தெரிவித்தார். நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன் பெர்க்கை ஜோபைடன் சந்தித்து பேசினார்.

    நேட்டோ அமைப்பு வலுவானது மற்றும் ஒன்றுபட்டது. உச்சி மாநாட்டில் எடுக்கும் நடவடிக்கைகள் மூலம் எங்களின் கூட்டு பலத்தை மேலும் அதிகரிக்க போகிறோம். போலந்தில் நிரந்தர ராணுவ தலைமையகத்தை அமெரிக்கா அமைக்க உள்ளது. புதிய அமெரிக்க போர்கப்பல்கள் ஸ்பெயினுக்கும், போர் விமானங்கள் இங்கிலாந்துக்கும், தரைப் படைகள் ருமேனியாவுக்கும் அனுப்பப்படும். கிழக்கு பகுதி முழுவதும் அமெரிக்கா நேட்டோ அமைப்பினை வலுப்படுத்த உள்ளோம். பால்டிக் பிராந்தியத்திற்கு சுழற்சி முறையில் வீரர்களை அமெரிக்கா அனுப்பி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சீனாவுக்கு நேட்டோ மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சீனாவின் நேட்டோ மீதான எதிர்ப்பு மற்றும் ரஷியாவுடனான நெருக்கம் ஆகியவை பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

    சீனாவின் செயல்பாடுகள் நேட்டோ கூட்டமைப்புக்கு எதிராக இருக்கிறது. நேட்டோ நாடுகள் பாதுகாப்புக்கும், மதிப்பீடுகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

    நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் முயற்சி செய்ததால் அந்நாடு மீது ரஷியா போரை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே நேட்டோவில் உறுப்பினர்களாக சுவீடன், பின்லாந்து நாடுகள் இைணந்ததற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    • 'கோ-பண்ட்-மீ' என்ற அமைப்பின் மூலம் மகள் இந்த தொகையை திரட்டினார்.
    • பிரபல நகைச்சுவை நடிகர் டேவிட் ஸ்பேட் என்பவர் 5000 டாலர் பணம் கொடுத்ததாக தெரிகிறது.

    லாஸ் வேகாஸ் :

    அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மெக்கரன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பர்கர் கிங்கில் சமையல்காரராகவும் காசாளராகவும் 27 ஆண்டுகளாக ஒரு நாள் தவறாமல் பணியாற்றியுள்ளார் போர்டு என்ற மனிதர். 'பர்கர் கிங்' என்ற நிறுவனத்தின் ஊழியரான கெவின் போர்டு என்பவர், தான் பணிபுரிந்த 27 வருடங்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் சென்றது குறிப்பிடத்தக்கது.

    கெவின் போர்டின் மகள் செரினா, தனது தந்தைக்காக ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணி, தன் தந்தை 27 வருடங்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் சென்றார் என்ற விஷயத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். தன்னுடைய தந்தைக்கு தக்க பரிசு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இத்தகைய செயலில் அவர் ஈடுபட்டார். 27 வருடங்களாக தன்னையும், தனது மூத்த சகோதரியையும் நன்றாக பார்த்து கொண்ட தனது தந்தைக்கு நன்றிக்கு தெரிவிக்கும் வகையில் இந்த நிதி திரட்டும் செயலில் ஈடுபட்டதாக மகள் செரீனா 'கோ-பண்ட்-மீ' பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    வரது மகள் வெளியிட்ட பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலர் போட்டி போட்டுக் கொண்டு கெவின் போர்டுக்கு பணத்தை அள்ளி வழங்கினர். 'கோ-பண்ட்-மீ' என்ற அமைப்பின் மூலம் செரினா இந்த தொகையை திரட்டினார். இவர்களை தொடர்ந்து, பிரபல நகைச்சுவை நடிகர் டேவிட் ஸ்பேட் என்பவர் 5000 டாலர் பணம் கொடுத்ததாக தெரிகிறது.

    கெவின் போர்டின் சேவையைப் பாராட்டி நெட்டிசன்கள் தாராளமாக நன்கொடை அளித்ததில் ரூ.1 கோடி வரை சேர்ந்து விட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த மகள் செரினா மிகுந்த உணர்ச்சிவசப்பட்டார். அவருடைய 27 வருடங்களில் ஒரு நாள் கூட லீவு போடாமல் சென்றதற்கு அவரது நிறுவனம் ஒரு சிறிய பரிசு கொடுத்த நிலையில், நெட்டிசன்கள் அவரது உழைப்பை பாராட்டி ரூ.1 கோடிக்கும் மேல் நிதி திரட்டப்பட்டுள்ள சம்பவம் காண்போரை ஆசிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • கண்டெயினரில் 50-க்கும் அதிகமானோர் மயக்கமடைந்த நிலையில் கிடைந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
    • உயிருக்கு ஆபத்தான நிலையில் 16 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    வாஷிங்டன் :

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சண்டியாகோ புறநகர் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் கண்டெய்னர் லாரி நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அந்த லாரியின் கண்டெய்னரை திறந்து பார்த்தனர்.

    அப்போது, அந்த கண்டெயினரில் 50-க்கும் அதிகமானோர் மயக்கமடைந்த நிலையில் கிடைந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்களை பரிசோதனை செய்ததில் கண்டெய்னர் 40 பேர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

    மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் 16 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடியேற அகதிகள் கண்டெய்னர் லாரியில் வந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மேலும், டெக்சாஸ் நகருக்கு வந்த பின்னர் வேறு எங்கு செல்வது என தெரியாமல் லாரியை ஒதுக்குப்புறமான இடத்தில் நிறுத்திவிட்டு டிரைவர் தப்பிசென்றதால் கண்டெய்னரில் இருந்த அகதிகள் அதீத வெப்பம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கி வன்முறை கலாசாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
    • அதிபர் ஜோ பைடன் துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்த கடும் சட்டம் இயற்றவேண்டும் என பாராளுமன்றத்தை கேட்டுக் கொண்டார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதையடுத்து, துப்பாக்கி வினியோகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.

    அதிபர் ஜோ பைடனும் துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்த கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என பாராளுமன்றத்தை கேட்டுக் கொண்டார்.

    இந்நிலையில், துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சட்ட மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    செனட் சபையில் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா மீது நடந்த ஓட்டெடுப்பில் 65 ஓட்டுகளுடன் மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.

    தொடர்ந்து இந்த மசோதா பாராளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பிவைக்கப்படும். அங்கும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் பின்னர் அது அதிபர் ஜோ பைடனின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும். அவர் அந்த மசோதாவில் கையெழுத்திட்டதும் அது சட்டமாக அமலுக்கு வரும்.

    21 வயதுக்கு உட்பட்டோர் துப்பாக்கி வாங்குவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பது, மனநல ஆலோசனைக்காகவும், பள்ளிகளின் பாதுகாப்பை அதிகரிக்கவும் 15 பில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கீடு செய்வது போன்றவைக்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது.

    • உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஏழை பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
    • நீதிமன்றம், அமெரிக்காவை 150 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் 50 ஆண்டுகாலம் அமலில் உள்ள கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டப்பூர்வ உத்தரவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது. கருகலைப்பு நடைமுறையை அமெரிக்க மாகாணங்களே கட்டுப்படுத்தலாம் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தீர்ப்பு குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இது தம்மை திகைக்க வைப்பதாகவும், அமெரிக்காவுக்கு ஒரு சோகமாக நாள் என்றும் தெரிவித்தார்.

    இந்த தீர்ப்பு இறுதியானதாக இருக்க கூடாது என்றும், கருக்கலைப்புக்கான உரிமைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஏழை பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள், நீதிமன்றம் உண்மையில் அமெரிக்காவை 150 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    • இந்தியா உடனான நல்லுறவுக்கு என்றும் மதிப்பளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
    • ரஷிய அதிபர் புதின் தன் செயலுக்கு தக்க விளைவுகளை சந்திக்க வேண்டும் எனவும் கூறியது.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷியா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. அதை மீறி, இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் வாங்குகிறது. இதனால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சவுதி அரேபியாவை பின்னுக்குத் தள்ளி ரஷியா 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை பாதுகாப்பு கவுன்சில் அமைப்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது:

    இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிக முக்கிய கூட்டாளியாக இந்தியா விளங்குகிறது. இந்தியா உடனான பரஸ்பர நல்லுறவுக்கு அமெரிக்கா எப்போதும் மதிப்பளித்து வருகிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் இறையாண்மையை காப்பதிலும், சொந்த முடிவுகளை எடுப்பதிலும் சுதந்திரம் உள்ளது.

    ரஷியா மீது சர்வதேச அளவில் அதிக நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம். ரஷிய அதிபர் புதின் தன் செயலுக்கு தக்க விளைவுகளை சந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டிமிட்ரி முரடோவுக்கு வழங்கப்பட்டது.
    • உக்ரைன் குழந்தைகளுக்கு உதவ தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை விற்க டிமிட்ரி முரடோவ் முடிவு செய்தார்.

    நியூயார்க்:

    உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரினால் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர்.

    இதற்கிடையே, போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் குழந்தைகளுக்கு உதவும் வகையில் தனக்கு வழங்கப்பட்ட நோபல் தங்கப்பதக்கத்தை விற்க ரஷியாவை சேர்ந்த பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ் முடிவு செய்தார்.

    கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுடன் இவருக்கு தங்கப்பதக்கமும், 5 லட்சம் டாலரும் பரிசாக வழங்கப்பட்டது. பரிசுத்தொகையாக கிடைத்த 5 லட்சம் டாலரை யுனிசெப் அமைப்புக்கு வழங்குவாக டிமிட்ரி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

    இந்நிலையில், ஹெரிடேஜ் எனும் நிறுவனத்தால் நியூயார்க்கில் நடந்து முடிந்த ஏலத்தில் இவரின் நோபல் பரிசு தற்போது 103 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 808 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த தொகை முழுவதையும் உக்ரைனில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான நிறுவனமான ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்திற்கு பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ் வழங்கியுள்ளார்.

    இவரது முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

    • ஜனவரி மாதமும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக 3 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவியது
    • ராக்கெட்டின் முதல் நிலை ஸ்பேஸ்எக்ஸ் ட்ரோன்ஷிப்பில் செங்குத்தாக தரையிறங்கியது.

    உலக கோடீஸ்வரர்களின் ஒருவரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி தொடர்பான பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அந்த நிறுவனம் 36 மணி நேரத்தில் 3 ராக்கெட்களை விண்ணில் ஏவி புதிய சாதனை படைத்துள்ளது.

    இதற்கு முன்பு ஜனவரி மாதமும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக 3 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி சாதனை படைத்து இருந்தது. தொலைத்தொடர்பை மேம்படுத்துவதற்காக புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனவெரல் விண்வெளிப் நிலையத்தில் இருந்து நேற்று தொலைத்தொடர்பு செயற்கைக் கோளுடன் 'பால்கன் 9' விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

    புறப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு, ராக்கெட்டின் முதல் நிலை ஸ்பேஸ்எக்ஸ் ட்ரோன்ஷிப்பில் செங்குத்தாக தரையிறங்கியது. ராக்கெட்டில் இருந்து பிரிந்து பயணித்த செயற்கைக் கோள், திட்டமிட்டபடி ஒரு மணி 50 நிமிடங்களில் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக ஸ்பேஸ்எக்ஸ் தெரிவித்துள்ளது.

    • வாஷிங்டனில் உள்ள ஒரு மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது.
    • துப்பாக்கி சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை வாஷிங்டனில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வாஷிங்டனில் உள்ள ஒரு மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. இதனை பலர் பார்த்து ரசித்து கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு வந்த மர்ம மனிதன் திடீரென தான் வைத்து இருந்த துப்பாக்கியால் இசை ரசிகர்கள் மீ து சரமாரியாக சுட்டான். இதனால் பொது மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.

    இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

    இதில் உயிர் சேதம் ஏற்பட்டதா என்பது தொடர்பாக இது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம மனிதன் தப்பி ஓடிவிட்டான். அவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • நட்பு நாடுகளும் உக்ரைன் நாட்டுக்கு கொடுத்து வரும் ஆதரவை குறைத்து விடக்கூடாது.
    • உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி போர் நடைபெறும் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி ரஷியா தாக்குதலை தொடங்கியது. இந்த போர் தொடங்கி 5 மாதங்களை நெருங்கி விட்டது. ஆனாலும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

    உக்ரைன் முக்கிய நகரங்களை ரஷியா கைப்பற்றிய போதும் மற்ற இடங்களை பிடிக்க கடுமையான சண்டை நடந்து வருகிறது. உக்ரைன் நாட்டுக்கு பல்வேறு நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகிறது.

    இந்தநிலையில் உக்ரைன் போர் மேலும் பல ஆண்டுகள் நீடிக்கும் என நேட்டோ பொதுசெயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    உக்ரைன் போர் இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என கணிக்க முடியாது. இது பல ஆண்டுகள் கூட நீடிக்கலாம். எனவே அதற்கு ஏற்றாற் போல நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

    உக்ரைன் போர் நீண்ட காலத்துக்கு நடைபெற்று வருவதால் நேட்டோ உறுப்பு நாடுகளும். நட்பு நாடுகளும் உக்ரைன் நாட்டுக்கு கொடுத்து வரும் ஆதரவை குறைத்து விடக்கூடாது.

    இந்த போரால் ஜரோப்பிய நாடுகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும் என்பது உண்மைதான்.உக்ரைனுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி வருவதாலும் உணவு பொருட்கள், எரி பொருள் விலை ஏற்றத்தால் ஜரோப்பிய நாடுகள் பொருளாதார பின்னடைவை சந்தித்து வருகிறது. இதற்காக ஜரோப்பிய நாடுகள் பின் வாங்ககூடாது.

    எவ்வளவு பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும் நட்பு நாடுகள் உக்ரைனை கை விட்டு விடக்கூடாது. உக்ரைன் வீரர்கள் சந்தித்து வரும் இழப்புகளை ஒப்பிடு கையில் உணவு, எரிபொருள் விலை ஏற்றத்தால் ஏற்படும் இழப்பு மிகவும் சிறிது தான்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி போர் நடைபெறும் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள கைக்கோனலஸ் மற்றும் ஓடேசாலி நகருக்கு சென்று அவர் போரால் சேதடைந்து கட்டிடங்களை பார்வையிட்டார்.

    • டெலாவர் மாகாணத்தில் சைக்கிளிங் சென்றபோது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
    • அதிபர் ஜோ பைடன் கீழே விழுந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெலாவர் மாகாணத்தில் உள்ள தனது கடற்கரை இல்லம் அருகே சைக்கிளிங் சென்றார்.

    தனது மனைவி உள்ளிட்டோருடன் ஜோ பைடன் சென்றுகொண்டிருந்த போது அங்கு நின்று கொண்டிருந்த மக்களைப் பார்த்ததும் பேசுவதற்காக சைக்கிளை நிறுத்தினார். அப்போது, நிலைதடுமாறி ஜோ பைடன் கீழே விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ஆனாலும் உடனே எழுந்த ஜோ பைடன், தான் நலமாக இருப்பதாக தெரிவித்தார்.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் ஜோ பைடனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. எந்தவித மருத்துவ சிகிச்சையும் தேவையில்லை என தெரிவித்துள்ளது.

    • துப்பாக்கி கலாசாரத்துக்கு முடிவு கட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசு ஆயத்தமாகி வருகிறது.
    • ஆனாலும் அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்தபடியே இருக்கிறது.

    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. சமீபத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்க பள்ளியில் வாலிபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உள்பட 22 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து துப்பாக்கி கலாசாரத்துக்கு முடிவு கட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசு ஆயத்தமாகி வருகிறது. ஆனாலும் அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்தபடியே இருக்கிறது.

    இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள். லாஸ் ஏஞ்சல்சின் பாய்ல் ஹைட்ஸ் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. அங்கு திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. படுகாயம் அடைந்த 5 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்தும், துப்பாக்கியால் சுட்டவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

    ×