என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • அமெரிக்காவின் புகழ்பெற்ற பாப் பாடகியான டெய்லர் ஸ்விப்ட் கிராமி விருது பெற்றவர்.
    • உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு ஸ்விப்ட் காரணம் என குறிப்பிடப்படுவது இது முதல் முறை அல்ல.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் பிரபல பாப் பாடலாசிரியை மற்றும் பாடகி டெய்லர் ஸ்விப்ட் (33). இவர் கிராமி விருது பெற்றவர். அமெரிக்க பெடரல் ரிசர்வ் அமைப்பின் அறிக்கை ஒன்றில் அவரது பெயர் இடம்பிடிக்கும் வகையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

    ஈராஸ் டூர் என்ற தனது சுற்றுப்பயணத்தின் மூலம் 17 மாநிலங்கள், 5 கண்டங்களில் 131 கச்சேரிகள் செய்ய உள்ளார். அவரது பயணத்தால் ஏற்படும் குறிப்பிடத்தக்க பொருளாதார தாக்கத்தால் பெடரல் ரிசர்வ் வங்கியின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

    இந்நிலையில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் அமைப்பின் பீஜ் புத்தகம் எனப்படும் தற்போதைய பொருளாதார நிலைமைகள் பற்றிய அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    கொரோனா தொடங்கிய காலத்திலிருந்து தற்போதுதான் பிலடெல்பியாவில் ஓட்டல் முன்பதிவுகள் உயர்ந்துள்ளது. சுற்றுலாத் துறையில் மெதுவான மீட்சியே இருந்தபோதிலும், நகரத்தில் டெய்லர் ஸ்விப்டின் இசை நிகழ்ச்சிகளுக்கு வந்த பார்வையாளர்களின் வருகை காரணமாக இந்த உயர்வு ஏற்பட்டிருக்கிறது என தெரிவிக்கிறது.

    ஸ்விப்ட் இந்த ஆண்டு மே 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பிலடெல்பியாவில் உள்ள 67,000 இருக்கைகள் கொண்ட அமெரிக்க கால்பந்து மைதானமான லிங்கன் பைனான்சியல் பீல்டில் 3 நிகழ்ச்சிகளை நடத்தினார். இதற்கு உலகெங்கிலும் இருந்து ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உள்ளூர் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு ஸ்விப்ட் காரணம் என குறிப்பிடப்படுவது இது முதல் முறை அல்ல.

    கடந்த மாதம், சிகாகோவின் சுற்றுலா அமைப்பான சூஸ் சிகாகோ, ஜூன் மாத முதல் வார இறுதியில் ஓட்டல் பதிவுகள், ஸ்விப்ட் நிகழ்ச்சிகளின் காரணமாக அதற்கு முன்பிருந்த பதிவுகளை விட அதிகமாக இருந்ததாக அறிவித்தது.

    தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்துவரும் ஸ்விப்ட், தற்போது சாதனை எண்ணிக்கையாக கருதப்படும் பில்லியன் டாலர் வசூலை எட்டக்கூடிய தூரத்தில் இருக்கிறார்.

    கடந்த 2018-ம் ஆண்டில் பேர்வெல் யெல்லோ ப்ரிக் ரோட் என்ற சுற்றுப்பயணத்தால் 910 மில்லியன் டாலர் வசூலித்த புகழ்பெற்ற பாடகர் எல்டன் ஜானின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    • சராசரியை விட 1.07 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாக நாசா கூறுகிறது.

    லாஸ் ஏஞ்சல்ஸ் :

    எல் நினோ தாக்கத்தால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் தான் வரலாற்றிலேயே உலகில் அதிக வெப்பம் பதிவான மாதம் என நாசா தெரிவித்துள்ளது.

    ஜூன் 2023-க்கான உலகளாவிய சராசரி வெப்பநிலை 1951 முதல் 1980 ஜூன் வரையிலான சராசரியை விட 1.07 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாக நாசா கூறுகிறது.

    இது, மனித நடவடிக்கைகளின் விளைவாக, முக்கியமாக கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுகளின் விளைவாக, அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலையின் ஒரு பகுதி என நாசா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    • சீன வீராங்கனையிடம் பிவி சிந்து நேர்செட் கணக்கில் தோல்வி
    • 4 முறை நேருக்குநேர் மோதியதில் ஒருமுறை மட்டுமே சிந்து வெற்றி பெற்றுள்ளார்

    அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் காலிறுதி போட்டி ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பிவி சிந்து, அவரது எதிரியான சீனாவின் காவ் பாங் ஜீ-யை எதிர்கொண்டார்.

    இதில் முதல் செட்டை கடும் போராட்டத்திற்குப்பின் 20-22 என இழந்தார். ஆனால் 2-வது செட்டில் விரைவாக தோல்வியை ஒப்புக்கொண்டார். காவ் பாங் 2-வது செட்டை 21-13 என எளிதாக கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    பிவி சிந்து உலகத் தரவரிசையில் 36-வது இடத்தில் இருக்கும் காவ் பாங்கை எதிரியாகவே நினைக்கிறார். ஏனென்றால், அவருடன் நான்கு போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். கடந்த வரும் கனடாவில நடைபெற்ற கனடா ஓபனில் தோற்கடித்திருந்தார்.

    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் லக்சயா சென், சங்கர் முத்துசாமியை எதிர்கொண்டார். இதில் 21-10, 21-17 லக்சயா சென் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    முத்துசாமி முதல் இரண்டு போட்டிகளில் முன்னணி வீரர்களை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். 8-ம் தரநிலை பெற்றிருந்த வீரரையும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிவேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் செயலி என்று ஆய்வாளர்கள் சாட்ஜிபிடி செயலியை குறிப்பிடுகின்றனர்.
    • அமெரிக்க நிர்வாகமும், அமெரிக்க பாராளுமன்றமும் புதிய விதிமுறைகளை கோடிட்டுக் காட்ட போராடி வருகிறது.

    செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கொண்டு உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடி (ChatGPT) எனப்படும் செயலியை, சென்ற வருட இறுதியில் சந்தையில் அறிமுகப்படுத்தி பெரும் வெற்றியடைந்து பிரபலமாகியுள்ளது ஓபன்ஏஐ (OpenAI) மென்பொருள் நிறுவனம். இதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன்.

    இந்த நிறுவனத்தின் மீது அமெரிக்காவின் மத்திய வர்த்தக ஆணையம் (Federal Trade Commission) ஒரு விரிவான விசாரணையை துவங்கியுள்ளது.

    மக்களின் தனிப்பட்ட பெயர் மற்றும் தரவுகளை அவர்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் விதத்தில் ஓபன்ஏஐ பயன்படுத்துவதாக கூறப்படுவதால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை அந்நிறுவனம் மீறுகிறதா என்பதை எஃப்.டி.சி. ஆய்வு செய்கிறது.

    மிக அதிக எண்ணிக்கையிலான மக்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து, அவற்றை செயற்கை நுண்ணறிவின் மூலம் தேவைப்படும் விதத்தில் பாகுபடுத்தி சாட்ஜிபிடி உருவாக்கப்பட்டது. மாதிரிகள் (samples) சேகரிப்பினால் எழக்கூடிய அபாயங்களை எப்படி அந்நிறுவனம் சரி செய்கிறது என்பது பற்றிய பதிவுகளை தெரிவிக்கும்படி 20-பக்க கோரிக்கையை எஃப்.டி.சி. அனுப்பியிருக்கிறது.

    அதிவேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் செயலி என்று ஆய்வாளர்கள் சாட்ஜிபிடி செயலியை குறிப்பிடுகின்றனர்.

    எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு பெருமளவு அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட இருப்பதால் அது குறித்த கொள்கையை வரையறுக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த ஒழுங்குமுறை வரையறைகள் ஓபன்ஏஐ நிறுவனத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.

    ஓபன்ஏஐ நிறுவனத்தின் ஆரம்ப வெற்றியானது சிலிக்கான் பள்ளத்தாக்கு நிறுவனங்களிடையே இதை விட சிறப்பான ஒரு செயலியை உருவாக்க ஒரு போட்டியை ஏற்படுத்தி இருக்கிறது.

    அமெரிக்க நிர்வாகமும், அமெரிக்க பாராளுமன்றமும் புதிய விதிமுறைகளை கோடிட்டுக் காட்ட போராடி வருகிறது. செயற்கை நுண்ணறிவுக்கான ஒழுங்குமுறை பற்றிய விவாதங்களில் சாம் ஆல்ட்மேன், ஒரு செல்வாக்கு மிக்க நபராக உருவெடுத்திருக்கிறார். அமெரிக்காவில் எம்.பி.க்கள் மட்டுமின்றி ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருடனும் நெருக்கமானவராக இருக்கிறார்.

    இந்நிலையில் அவர் நிறுவனம் எஃப்.டி.சியின் மூலம் ஒரு புதிய சோதனையை எதிர்கொள்கிறது.

    ஏற்கனவே இருக்கும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று எஃப்.டி.சி. பலமுறை எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

    ஒரு நிறுவனம் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறுவதாக எஃப்.டி.சி. கண்டறிந்தால், அது அந்நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கலாம் அல்லது அந்நிறுவனம் அதன் தரவை எவ்வாறு கையாள வேண்டும் என்று ஆணையிடலாம்.

    எஃப்.டி.சி.யின் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓபன்ஏஐ, "முழு ஒத்துழைப்பு கொடுப்போம்" என மட்டும் கூறியுள்ளது.

    நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறியதாக கூறி மெட்டா, அமேசான் மற்றும் ட்விட்டருக்கு எதிராக எஃப்.டி.சி. பெரும் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஆக்கப்பூர்வமான மற்றும் நகல் எழுதப்பட்ட படைப்புகளை கூகுள் எடுத்து கொண்டதாக குற்றச்சாட்டு.
    • பொதுவில் கிடைக்கும் தரவுகளை பயன்படுத்தி கொள்வதாக கூகுள் தனது தனியுரிமை கொள்கையில் தெரிவித்தது.

    ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாக்கப்பட்ட தனது பார்ட் (Bard) எனும் சாட்பாட் செயலியை பயிற்றுவிப்பதற்காக இணையத்தில் உருவாக்கிய அனைத்தையும் திருடுவதாக, தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் மீது 8 நபர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். சான் பிரான்சிஸ்கோ பெடரல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இணையத்தில் இதுவரை உருவாக்கிய மற்றும் பகிரப்பட்ட அனைத்தையும் கூகுள் ரகசியமாகத் திருடுகிறது என்றும், இணையதளங்களில் இருந்து அங்கீகரிக்கப்படாத தரவுகளை அகற்றும் செயலானது அவர்களின் தனியுரிமை மற்றும் சொத்துரிமைகளை மீறுவதாகும் எனவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு கூகுள், அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் (Alphabet) மற்றும் கூகுளின் AI துணை நிறுவனமான டீப்மைண்ட் (DeepMind) ஆகியவற்றை உள்ளடக்கியது.

    "செயலியை உருவாக்கும் செயற்கை நுண்ணறிவின் ஆய்விற்கு மனிதர்களுக்கு இடையேயான உரையாடல் குறித்த தரவுகள் அவசியமானது. ஆக்கப்பூர்வமான மற்றும் நகல் எழுதப்பட்ட படைப்புகளை கூகுள் எடுத்து கொண்டது. இணையம் கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமானது அல்ல. எங்கள் சிந்தனை படைப்புகளுக்கு கூகுள் உரிமையாளருமில்லை. எங்கள் ஆளுமையின் வெளிப்பாடுகள், எங்கள் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளின் படங்கள் அல்லது வேறு எதையும் நாங்கள் இணையத்தில் பகிர்வதால் அது கூகுளுக்கு சொந்தமாகி விடாது" என்று மனுதாரர்களின் வழக்கறிஞர் ரையான் கிளார்க்சன் தெரிவித்தார்.

    "AI மாதிரிகளைப் பயிற்றுவிக்க, திறந்த வலை (open web) மற்றும் பொது தரவு தொகுப்புகளில் வெளியிடப்பட்ட தகவல்கள் போன்றவற்றை நாங்கள் பல ஆண்டுகளாக கூகுள் டிரான்ஸ்லேட் போன்ற சேவைகளுக்கு எங்கள் AI கொள்கைகளுக்கு ஏற்ப பொறுப்புடன் பயன்படுத்துகிறோம். அமெரிக்க சட்டம் புதிய பயனுள்ள பயன்பாடுகளை உருவாக்க பொதுத்தகவலைப் பயன்படுத்துவதை ஆதரிக்கிறது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மறுக்க நாங்கள் தயாராக உள்ளோம்" என்று கூகுளின் பொது ஆலோசகர் ஹலிமா டெலைன் பிராடோ தெரிவித்தார்.

    இந்த மாத தொடக்கத்தில் ஆன்லைன் தனியுரிமை கொள்கையை புதுப்பித்த கூகுள், அதன் AI கருவிகளை பயிற்றுவிக்க பொதுவில் கிடைக்கும் தரவுகளை அது பயன்படுத்தி கொள்ளும் என்று கூறியது.

    ஆனால் "பார்ட் போன்ற AI தயாரிப்புகளை உருவாக்கவும், அத்தரவுகளால் வணிகரீதியான ஆதாயம் அடையவும் இந்த கொள்கைகள் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

    தனிப்பட்ட தரவுகளையும், பதிப்புரிமை பெற்ற புத்தகங்கள், காட்சிக் கலைகள் மற்றும் மூல குறியீடுகளை தவறாக பயன்படுத்துவதாக மெட்டா, மைக்ரோசாப்ட் மற்றும் ஓபன்ஏஐ உள்ளிட்ட வளர்ந்து வரும் AI நிறுவனங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு முதல் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் இதுவும் ஒன்றாகும்.

    • ஹாலிவுட் திரைப்பட எழுத்தாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்
    • அவர்களுக்கு ஆதரவாக ஹாலிவுட் நடிகர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க முடிவு

    தடையின்றி மக்களை மகிழ்வித்து வரும் ஹாலிவுட் திரையுலகம் ஒரு நீண்ட வேலை நிறுத்தத்தை எதிர்நோக்கியுள்ளது.

    குறைந்து வரும் ஊதியம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தாக்கத்தினால் வரும் ஆபத்து ஆகிய காரணங்களுக்காக ஹாலிவுட் திரைப்பட எழுத்தாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் இவர்களுடன் கைகோர்க்கும் விதமாக திரைப்பட மற்றும் சின்னத்திரை கலைஞர்களும் இணையப்போகின்றனர்.

    டாம் க்ரூஸ், ஏஞ்சலினா ஜோலி மற்றும் ஜானி டெப் உள்ளிட்ட முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள் உட்பட 1,60,000 கலைஞர்களை கொண்ட ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் மற்றும் அமெரிக்க தொலைக்காட்சி மற்றும் வானொலி கலைஞர்கள் கூட்டமைப்பு இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

    வால்ட் டிஸ்னி மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் போன்ற மிகப்பிரபலமான நிறுவனங்களை உள்ளடக்கிய அலையன்ஸ் ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் அமைப்புடன் ஒரு புதிய தொழிலாளர் ஒப்பந்தத்தை எட்டும் முயற்சி தோல்வியடைந்ததால் இந்த அழைப்பு விடப்பட்டிருக்கிறது.

    இந்த வேலைநிறுத்தம் தொழிற்சங்கங்களுடனான தொழிலாளர் ஒப்பந்தங்களின் கீழ் வராத தனியார் திரைப்பட தயாரிப்புகளை தவிர, அமெரிக்காவில் எழுதி உருவாக்கப்படும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் அனைத்து தயாரிப்புகளையும் கட்டுப்படுத்தும்.

    இதனால் "ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்" (Stranger Things) மற்றும் "தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்" (The Handmaid's Tale) போன்ற பிரபலமான தொடர்களின் தயாரிப்பு இப்போது நீண்ட தாமதத்தை எதிர்கொள்கிறது. வேலைநிறுத்தம் தொடர்ந்தால், சில முக்கிய திரைப்படங்களின் படப்பிடிப்பு தள்ளிப்போகலாம்.

    அமெரிக்காவில் திரைப்படங்கள் தயாரிப்பதற்கு 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும் என்பதால் திரையரங்குகளில் தற்போது வெளியிடப்பட உள்ள திரைப்படங்கள் உடனடியாக பாதிக்கப்பட போவதில்லை.

    ஆனால் மார்வெல் நிறுவன தயாரிப்பான பிளேட் (Blade) மற்றும் தண்டர்போல்ட்ஸ் (Thunderbolts) போன்ற எதிர்கால வெளியீடுகள் தாமதமாகும். தொழிலாளர் மோதல்கள் தீர்க்கப்படும் வரை அவை நிறுத்தி வைக்கப்படலாம். வெளிவரவிருக்கும் திரைப்படங்களின் விளம்பர நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.

    அமேசான் நிறுவனத்தின் பிரைம் வீடியோ மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் (Netflix) போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகள் எனப்படும் இணையவழி பொழுதுபோக்குகளில் கொரியாவிலும் இந்தியாவிலும் தயாரிக்கப்படும் உள்ளூர் மொழி நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்க முடியும். ஆனால் ஹாலிவுட் தயாரிப்புகள் இடைநிறுத்தப்படும்.

    இது போன்றதொரு வேலைநிறுத்தம் கடைசியாக 1960-ல் ரொனால்டு ரீகன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் ரொனால்டு ரீகன் அமெரிக்க ஜனாதிபதியானார்.

    • மேட்ரிக்ஸ் படத்தில் வருவதுபோல் பணிப்பென் ஒருவர் அந்தரத்தில் பறந்து பின் கீழே விழுந்துள்ளார்
    • ஒரு பயணிக்கு மூக்கில் கடுமையான காயம் ஏற்பட்டதாக அருகில் இருந்தவர் தகவல்

    அமெரிக்காவில், அலெஜியன்ட் ஏர்லைன்ஸ் எனப்படும் தனியார் நிறுவன விமானம் (எண்: 227) ஒன்று, இரு நாட்களுக்கு முன்பாக வட கரோலினா மாநிலத்திலிருந்து புறப்பட்டு, புளோரிடா மாநிலத்தின் செயின்ட் பீட்-கிளியர்வாட்டர் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் டர்புலன்ஸ் (turbulence) எனப்படும் காற்றின் வலிமையான, திடீர் ஏற்ற இறக்கத்திற்கு உள்ளானது.

    இந்த சம்பவத்தில், பயணிகள் மற்றும் பணியாளர்கள் பலத்த காயங்களுக்கு ஆளாகினர். விமானத்தில் 179 பயணிகளும் 6 பணியாளர்களும் இருந்தனர். அவர்களில் 4 பேர் காயமடைந்தனர்.

    ஆனால் அந்த விமான நிறுவனம், விமானம் எந்த தடையுமின்றி ஓடுதளத்தில் தரையிறங்கியது எனத் தெரிவித்திருக்கிறது.

    காயம்பட்டவர்களுக்கு விமான நிலையத்தில் காத்திருந்த மருத்துவ பணியாளர்கள் சிகிச்சையளித்தனர். இரண்டு பயணிகள் மற்றும் இரண்டு விமான பணிப்பெண்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் காயங்கள் குறித்து விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

    அந்த விமானத்தில் பயணித்த லிசா ஸ்பிரிக்ஸ் எனும் பெண்மணி கூறியதாவது:-

    இந்த அனுபவம் பயங்கரமானதாக இருந்தது. திரைப்படங்களின் காட்சிபோல் இருந்தது. விமானம் பாதி தூரத்திற்கு மேல் கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு வலிமையான ஏற்ற இறக்கமும், 'குலுக்கலும்' ஏற்பட்டது, எங்கள் பக்கத்திலிருந்த பணிப்பெண் 'மேட்ரிக்ஸ்' படத்தில் வருவதுபோல் காற்றில் பறந்து, ஒரு அரை வினாடிக்கு பின் தரையில் விழுந்தார். அவரது கணுக்கால் உடைந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மற்றொரு பயணி, "இந்த சம்பவத்தின்போது ஒரு பெண் ரெஸ்ட் ரூம் சென்றிருந்தார். அவர் வெளியே வந்து எனக்கு பின்னால் அமர்ந்தார். அவருடைய வலது புருவத்தில் ஒரு பெரிய காயம் காணப்பட்டு அதிலிருந்து ரத்தம் வெளியேறியது" என கூறினார்.

    தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் ஆகிய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து இந்த நிகழ்வு குறித்து விசாரித்து வருவதாக அலெஜியன்ட் ஏர்லைன்ஸ் தெரிவித்து உள்ளது. ஆனால், தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். இன்னும் விசாரணையை தொடங்கவில்லை என்று தெரிவித்தது.

    • அருணாச்சல பிரதேசம் எல்லை குறித்து இந்தியா- சீனா இடையே மோதல் இருந்து வருகிறது
    • அருணாச்சல பிரதேச எல்லைப் பகுதியை ஆக்கிரமித்து சீனா தங்கள் பகுதி என கூறி வருகிறது
    • பிரேத பரிசோதனையில் அவரது உடலில் காயங்கள் இல்லை என தெரிய வந்துள்ளது.
    • அந்த பிரீசரை வெளியே இருந்து திறக்க முடியுமே தவிர உள்ளே இருந்து திறக்க முடியாது என்று தெரிகிறது.

    அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் கடந்த மாதம் 26ம் தேதி ஆளில்லாத ஒரு வீட்டின் ப்ரீசரில் இருந்து ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். விசாரணையில் அந்த நபர் அவர் பெயர் பிராண்டன் லீ புஷ்மேன் (வயது 34) என்பதும் காவல்துறையினால் தேடப்பட்டவர் என்றும் தெரியவந்தது. போலீசாரிடம் இருந்து தப்பித்துக் கொள்ளும் முயற்சியாக பிரீசரில் ஒளிந்திருக்கலாம் என தெரிகிறது.

    அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினரால் தீவிரமாக தேடப்பட்டதால், தப்பிக்க முயன்று அந்த வீட்டின் பிரீசரில் ஒளிந்து கொண்டிருக்கிறார். ஆனால், அதிலிருந்து வெளியே வர முடியாமல் சிக்கி இறந்திருக்கலாம் போலீசார் தெரிவிக்கின்றனர்.

    பிரேத பரிசோதனையில் அவரது உடலில் காயங்கள் இல்லை என தெரிய வந்துள்ளது.

    கடந்த ஏப்ரலில் இருந்து அந்த வீட்டில் எந்த மின்சார வீட்டு உபயோக பொருட்களும் மின்சாரத்துடன் இணைக்கப்படாததால், அவரது உடல் மீட்கப்படும் போது சாதனம் இயங்காமல் இருந்தது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

    இந்த ஆண்டு பிப்ரவரி முதல் அந்த வீடு ஆளில்லாமல் கிடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புஷ்மேன் ஒளிந்து கொண்ட ஃப்ரீசர் ஒரு பழைய மாடல் என்றும், அதனை வெளியே இருந்து திறக்க முடியுமே தவிர உள்ளே இருந்து திறக்க முடியாது என்றும் தெரிகிறது.

    அதனுள் செருகப்பட்ட ஒரு உலோக கம்பி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அது தாழ்ப்பாளைத் திறக்கும் முயற்சியாக புஷ்மேனால் உபயோகப்படுத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    • நேற்று இரவு 8:28 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

    வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நேற்று இரவு 8:28 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

    • எலான் மஸ்க்கின் குழந்தை பருவ புகைப்படத்தை டுவிட்டரில் கே10 என்ற பெயரில் ஒரு பயனர் பகிர்ந்துள்ளார்.
    • மஸ்க், நான் பைத்தியக்காரத்தனமாக தெரிகிறேன் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

    டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டுவிட்டரின் உரிமையாளர் எலான் மஸ்க் சமூக வலைத்தளத்திலும் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பவர்.

    இந்நிலையில் எலான் மஸ்க்கின் குழந்தை பருவ புகைப்படத்தை டுவிட்டரில் கே10 என்ற பெயரில் ஒரு பயனர் பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் மஸ்க் சிரித்துக் கொண்டிருக்கிறார். கார் பாகங்களில் கண்டுபிடிப்பாளராகி, செவ்வாய் கிரகத்தை இலக்காகக் கொண்டு, எலக்ட்ரிக் கார்களை உலகெங்கிலும் உள்ள சாலைகளில் தினமும் காணக்கூடியதாக மாற்றும் குழந்தை எலான் பேபி என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த புகைப்படம் டுவிட்டரில் வைரலாக பரவியது.

    இதைப்பார்த்த மஸ்க், நான் பைத்தியக்காரத்தனமாக தெரிகிறேன் என கிண்டலாக பதிவிட்டுள்ளார். படத்தை பார்த்த பயனர்கள் அர்ப்பணிப்பானவர், புத்திசாலி என தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • ஷெரிப் அலுவலக மருத்துவப் பணியாளர்கள் குழந்தையின் உயிரை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டனர்.
    • குழந்தையை காரை விட்டு சற்று தள்ளி வைத்ததாக நினைத்து காரின் அருகிலேயே வைத்திருக்கிறார்.

    அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் ஃபீனிக்ஸ் பகுதிக்கு வடக்கே சுமார் 150 கி.மீ. தொலைவில் உள்ள காட்டன் உட் பகுதியில், ஒரு பெண் தனது காரை நகர்த்தும்போது எதிர்பாராத விதமாக காரில் சிக்கி அவரது 13 மாத பெண் குழந்தை உயிரிழந்தது.

    இது குறித்து யாவபாய் கவுண்டி ஷெரிப் அலுவலக அறிக்கை தெரிவித்திருப்பதாவது:

    ஜூலை 6ம் தேதி, யாவாபாய் கவுண்டி ஷெரிப் அலுவலகத்திற்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண், தனது 13 மாத குழந்தையின் மீது காரை ஏற்றிவிட்டதாக தெரிவித்தார். ஜஃப்ரியா தார்ன்பர்க் எனும் அப்பெண்மணி தனது காரை தனது வீட்டிற்கு வெளியே காரை பார்க்கிங் செய்துள்ளார். அவரது குழந்தை, குழந்தைகளுக்கான இருக்கையில் (கேனோபி) இருந்திருக்கிறது. குழந்தையை அதன் இருக்கையோடு (கேனோபி) எடுத்து காரை விட்டு சற்று தள்ளி பாதுகாப்பான தூரத்தில் வைத்ததாக ஜஃப்ரியா நினைத்து கொண்டிருக்கிறார். ஆனால் காரின் அருகிலேயே வைத்திருக்கிறார்.

    பின்னர் காரை சரியான இடத்தில் பார்க்கிங் செய்வதற்காக நகர்த்தி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை அமர்ந்திருந்த "கேனோபி" காரின் முன்புற டயரில் சிக்கிக்கொண்டிருக்கிறது. உடனே காரை நிறுத்தி இறங்கி வந்து பார்த்தபோது குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அவசர உதவிக்கான 911 எண்ணை அழைத்திருக்கிறார். ஷெரிப் அலுவலக மருத்துவப் பணியாளர்கள் குழந்தையின் உயிரை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டனர். குழந்தையை உடனடியாக வெர்டே பள்ளத்தாக்கு மருத்துவ மையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் குழந்து இறந்துவிட்டது.

    இவ்வாறு ஷெரிப் அலுவலகம் கூறியிருக்கிறது.

    ஷெரிப் அலுவலக குற்றப்புலனாய்வுப் பணியகம் இப்போது சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. மகளின் மரணம் தொடர்பாக தாய் மீது குற்றம் சாட்டப்படுமா? என்பது தெரியவில்லை.

    ×