என் மலர்tooltip icon

    தைவான்

    • தைவானில் அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது.
    • இதில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார்.

    தைபே:

    கிழக்கு ஆசியாவில் பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடு தைவான். சீனாவுக்கு அருகே அமைந்துள்ள இந்நாட்டை தனி நாடாக சீனா அங்கீகரிக்கவில்லை. மேலும், தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி எனவும் சீனா கூறி வருகிறது.

    இதற்கிடையே, தைவானில் 4 ஆண்டுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது. அங்கு ஆட்சியில் உள்ள ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் லை சிங் டி அதிபர் வேட்பாளராக களமிறங்கினார். அவரை எதிர்த்து சீனா ஆதரவுபெற்ற தேசியவாத கட்சியின் ஹவ் யொ-ஹி அதிபர் வேட்பாளராக களமிறங்கினார். தைவான் மக்கள் கட்சியின் கோ வென் ஜி வேட்பாளராக களமிறங்கினார்.

    அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைச் செலுத்தினர். தேர்தலில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி வேட்பாளர் லை சிங் டி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், தைவான் அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரான லை சிங் டி வெற்றி பெற்றுள்ளார் என தகவல் வெளியானது. அவர் 40 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். விரைவில் அவர் அதிபராக பதவியேற்க உள்ளார்.

    தைவான் அதிபர் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் சீன ராணுவம் பகிரங்க மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

    • தைவான் விஷயத்தில் சமரசமே இல்லை என சீனா திட்டவட்டமாக கூறி விட்டது
    • சீனாவில் இருந்து தினமும் 5 மில்லியன் சைபர் தாக்குதல்கள் நடப்பதாக தைவான் கூறியது

    செமிகண்டக்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நாடு, தைவான் (Taiwan).

    வடகிழக்கு பசிபிக் கடலில் உள்ள தீவு நாடான தைவான், தன்னை சுயாட்சி பெற்ற தனி நாடாக அறிவித்து கொண்டாலும், அதை ஏற்க மறுக்கும் சீனா, அந்நாட்டை தனது முழு ஆளுகைக்கு உட்பட்ட நாடாக பிரகடனம் செய்து அதன் நிலப்பரப்பு மற்றும் வான்வெளி பகுதிகளில் ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

    ஆனால், தைவானின் சுயாட்சி உரிமைக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது.

    சீனாவுடன் இது குறித்து அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன் நடந்த ராணுவ உயர் அதிகாரிகளின் பேச்சு வார்த்தையின் போது, "தைவான் விஷயத்தில் சமரசமே இல்லை" என திட்டவட்டமாக சீனா தெரிவித்தது.

    இதையடுத்து எப்போது வேண்டுமானாலும், சீனா தைவானை ஆக்ரமிக்கலாம் எனும் அச்சம் தைவான் நாட்டில் தோன்றியுள்ளது.

    இதை தொடர்ந்து பல மக்கள் தங்கள் வெளியுலக தொடர்புகளை குறைத்து கொண்டுள்ளனர். அலுவலகம் செல்ல தயக்கம் காட்டி பலர், வீட்டிலிருந்தே பணிபுரிய தொடங்கி உள்ளனர். இணயவழி செயல்பாடுகள் குறைந்துள்ளதால், வங்கி சேவைகள் முடங்கி விட்டது.

    ராணுவ தாக்குதல் மட்டுமின்றி இணைய வழியாகவும் சீனாவால் தாக்கப்படும் சாத்தியம் அதிகம் இருப்பதாக தைவான் அஞ்சுகிறது. இதனால் தைவானின் ராணுவ கட்டமைப்புகளில் மென்பொருள் பாதுகாப்பை அந்நாடு வலுப்படுத்தி கண்காணித்து வருகிறது.

    தினந்தோறும் 5 மில்லியன் சைபர் தாக்குதல்கள் சீனாவினால் தைவான் நாட்டின் தொலைத்தொடர்பு, எரிசக்தி மற்றும் நிதித்துறை கட்டமைப்புகள் மீது நடத்தப்படுவதாக தைவான் அரசு தெரிவித்தது.

    சீனாவிற்கு வெளியிலிருந்து இயங்கும் சீன சைபர் தாக்குதல் குழுவான "ஃப்ளாக்ஸ் டைஃபூன்" (Flax Typhoon) தைவான் நிறுவனங்களின் மென்பொருள் கட்டமைப்பை இணையவழியாக ஆக்ரமிக்க முயல்வதாக கடந்த வருடமே, மைக்ரோசாப்ட், எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நிலநடுக்கத்தில் இதுவரை 118 பேர் உயிரிழந்துள்ளனர்; பல வீடுகள் இடிந்து விழுந்தன
    • ட்சாய், ஆங்கிலத்திலும், எளிமையான சீன மொழியிலும் பதிவிட்டுள்ளார்

    நேற்று மதியம், சீனாவின் வடமேற்கு எல்லையில் கிங்காய்-திபெத் பீடபூமி (Qinghai-Tibet plateau) பிராந்தியத்தில் கான்சு-கிங்காய் (Gansu-Qinghai) எல்லைக்கருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ரிக்டர் அளவுகோலில் 6.2 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தில் தற்போது வரை 118க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். பல வீடுகள் இடிந்து விழுந்தன.

    பலர் உயிரை காத்து கொள்ள பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

    சீன அரசு, மீட்பு பணிகளை விரைவாக துவங்கியுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கவும், பாதிக்கப்பட்டோருக்கு புகலிடம் மற்றும் உடனடி நிவாரணம் கிடைக்க ஒருங்கிணைந்த முயற்சிக்கு உத்தரவிட்டார்.

    இந்நிலையில், வடகிழக்கு பசிபிக் கடலில் உள்ள தீவு நாடான தைவான் நாட்டின் முதல் பெண் அதிபர், ட்சாய் இங்-வென் (Tsai Ing-Wen), சீனாவில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். அத்துடன் சீனாவிற்கு தேவையான உதவிகளை வழங்க தைவான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

    தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் ட்சாய் ஆங்கிலத்திலும், எளிமையான சீன மொழியிலும் இரங்கலை பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தனது பதிவில், "நிலநடுக்கத்தில் தங்களின் உயிருக்கு உயிரானவர்களை இழந்து வாடும் சீனர்களுக்கு எனது இதயபூர்வமான இரங்கலை தெரிவிக்கிறேன். உதவிகள் தேவைப்படும் நிலையில் உள்ள அனைவருக்கும் அனைத்து உதவிகளும் கிடைக்க பிரார்த்திக்கிறேன். விரைவில் நிலைமை சீரடையும் என நாங்கள் நம்புகிறோம். கடினமான இயற்கை பேரிடர் மீட்பு பணியில் சீனாவிற்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்க தைவான் தயாராக உள்ளது" என தெரிவித்தார்.

    சுயாட்சி பெற்ற நாடாக தன்னை தைவான் அறிவித்தாலும், சீனா அந்நாட்டின் மீது முழு உரிமை கொண்டாடி வருகிறது.

    சீனாவிற்கும் தைவானுக்கும் இடையே இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் விஷயமாக இருந்து வரும் நிலையில், சீனா தனது உரிமையை நிலைநாட்ட தைவானின் வான்வெளியிலும், நீர்பரப்பிலும், தனது ராணுவ ஆதிக்கத்தை அதிகரித்து வந்தது.

    ஆனால், கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி விட்டு, தைவான் அதிபர் உதவிக்கரம் நீட்டுவதை அரசியல் விமர்சகர்கள் வரவேற்றுள்ளனர்.

    2008ல் சீனாவின் சிச்சுவான் பிராந்தியத்தில் (Sichuan province) ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது சுமார் 70 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அப்போதும் தைவான், சீனாவிற்கு நேசக்கரம் நீட்டி தன் நாட்டிலிருந்து நிபுணர் குழுவை அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

    • தாய்லாந்தின் பொருளாதாரத்தில் சுற்றுலா துறை 20 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது.
    • இலங்கை, இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    பாங்காக்:

    தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. ஆண்டு தோறும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் தாய்லாந்துக்கு வருகிறார்கள்.

    இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து அதிக சுற்றுலா பயணிகளை கவரும் நடவடிக்கையாக இந்தியா மற்றும் தைவான் குடிமக்கள் தாய்லாந்து வர விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தாய்லாந்து சுற்றுலா துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "2023-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி முதல் 2024-ம் ஆண்டு மே 10-ம் தேதி வரை தாய்லாந்தில் பயணம் மேற்கொள்ள இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. தாய்லாந்து வரும் இந்தியர்கள் 30 நாட்கள் விசா இல்லாமல் தங்கியிருக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தாய்லாந்தின் பொருளாதாரத்தில் சுற்றுலா துறை 20 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. அந்த நாட்டின் 7 கோடி மக்கள் தொகையில், சுமார் ஒரு கோடி பேர் சுற்றுலாவினால் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.

    சமீபத்தில் இலங்கை, இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் 2.1 கோடி இந்தியர்கள் வெளிநாட்டில் சுற்றுப் பயணம் செய்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, அமெரிக்கா, சிங்கப்பூர், தாய்லாந்து, பிரிட்டன், கத்தார், குவைத், கனடா, ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் அதிக அளவில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    • சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக தைவானும் கூறி உள்ளது.
    • நீர்மூழ்கி போர்க்கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.

    தைபே நகரம்:

    சீனாவின் ஒரு பகுதியாக இருந்த தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. ஆனால் சமீப காலமாக அதனை தன்னுடன் மீண்டும் இணைத்துக்கொள்ள சீனா துடிக்கிறது. இதனால் தைவான் எல்லையில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி சீனா போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதேசமயம் சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக தைவானும் கூறி உள்ளது.

    இந்தநிலையில் தைவானில் முதன் முறையாக நர்வால் என்ற நீர்மூழ்கி போர்க்கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இதனை அறிமுகம் செய்து வைக்கும் விழா அங்குள்ள காஹ்சியுங் நகரில் நடைபெற்றது. இதில் அதிபர் சாய்-இங்-வென் கலந்து கொண்டு பேசுகையில், தைவான் வரலாற்றில் இது முக்கியமான நாள் ஆகும் என கூறினார்.

    இந்த நீர்மூழ்கி கப்பலானது 229.6 அடி நீளம், 26.2 அடி அகலம் மற்றும் 59 அடி உயரம் கொண்டது. இதில் 3 ஆயிரம் டன் எடை வரையிலான பொருட்களை சுமந்து செல்லலாம். ஒருசில சோதனைகளுக்கு பின்னர் இந்த கப்பல் அடுத்த ஆண்டு நாட்டின் கடற்படையில் சேர்க்கப்படும் என தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • சீனாவின் எச்சரிக்கையை மீறி ஆஸ்திரேலியாவில் இருந்து 6 எம்.பி.க்கள் கொண்ட ஒரு குழுவினர் தைவான் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
    • கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த சர்ச்சையால் சீனா-ஆஸ்திரேலியா உறவில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டது.

    தைபே நகரம்:

    சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் கடந்த 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. எனினும் சமீபகாலமாக தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என சீனா கருதுகின்றது. மேலும் தைவானுடன் மற்ற நாடுகள் தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்தநிலையில் சீனாவின் எச்சரிக்கையை மீறி ஆஸ்திரேலியாவில் இருந்து 6 எம்.பி.க்கள் கொண்ட ஒரு குழுவினர் தைவான் பயணம் மேற்கொண்டுள்ளனர். தைவானுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, எரிசக்தி மற்றும் செமி-கண்டக்டர் துறை போன்றவை குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, ஆஸ்திரேலியாவின் பார்லி போன்ற ஏற்றுமதி பொருட்களுக்கு கூடுதலாக வரி விதித்துள்ளது.

    கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த சர்ச்சையால் சீனா-ஆஸ்திரேலியா உறவில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டது. அதனை மறுசீரமைக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது எம்.பி.க்களின் இந்த பயணத்தால் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    • 55 போர் விமானங்களுடன் 7 போர் கப்பல்களும் பயிற்சி மேற்கொண்டன
    • எல்லைக்கோடு எதுவும் இல்லையென சீனா மறுக்கிறது

    கிழக்கு ஆசியாவில் உள்ள நாடு, தைவான். தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா, நீண்டகாலமாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனை ஏற்க மறுத்து தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இவ்விவகாரத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளதால் சீனா கடுங்கோபத்தில் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தைவானை சுற்றியுள்ள கடற்பகுதியில் சீனா அத்துமீறி போர் பயிற்சிகளை மேற்கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது.

    இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையிலிருந்து திங்கட்கிழமை வரையில் 103 போர் விமானங்களை கொண்டு போர் பயிற்சியை தைவானின் வான் பகுதியில் சீனா மேற்கொண்டது. நேற்றிலிருந்து இன்று வரை சீனா மேலும் 55 போர் விமானங்களின் பயிற்சியை மேற்கொண்டதுடன் தைவானை சுற்றியுள்ள கடற்பகுதியில் 7 போர்கப்பல்களை கொண்டு பயிற்சி ஓட்டத்தில் ஈடுபட்டது.

    அந்த 55 போர் விமானங்களில், பாதி விமானங்களுக்கு மேற்பட்டவை, சீனாவையும் தைவானையும் பிரிக்கும் தைவான் ஜலசந்தி பகுதியின் மத்திய எல்லை கோட்டை தாண்டி, தைவானின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வான் பாதுகாப்பு அடையாள எல்லை வரை நுழைந்ததாக தைவான் அறிவித்திருக்கிறது.

    இதனையடுத்து, போர் பதட்டத்தை தூண்டி வருவதாக சீனா மீது தைவான் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.

    போர் விமானங்களின் பயிற்சி குறித்து கருத்து தெரிவிக்காத சீன வெளியுறவுத்துறை, "தைவான், சீனாவிற்கு சொந்தமானது" என மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மேலும், தைவான் குறிப்பிடும் மத்திய எல்லைக்கோட்டு பகுதி என எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

    சமீபத்தில் தைவான் ஜலசந்தி பகுதியில் கனடா மற்றும் அமெரிக்காவிற்கு சொந்தமான 2 கப்பல்கள் பயணம் மேற்கொண்டதையடுத்து தனது துருப்புகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

    • ரிங் ஆப் ஃபயர் என்ற பகுதியில் தைவான் அமைந்துள்ளதால் அங்கே அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.
    • நிலநடுக்கத்தால் பொருட் சேதமோ, உயிர் சேதமோ ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

    கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள தீவு பகுதியான தைவானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.

    ரிங் ஆப் ஃபயர் என்ற பகுதியில் தைவான் அமைந்துள்ளதால் அங்கே அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.

    இந்நிலையில், தைவானின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 171 கீழ் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் பொருட் சேதமோ, உயிர் சேதமோ ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை.

    • தைவானின் டைடுங்க் பகுதியில் ஹைகுவி புயல் கரையைக் கடந்தது.
    • முன்னெச்சரிக்கையாக தைவானில் 45 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    தைபே சிட்டி:

    தைவானின் கிழக்கு கடற்கரையில் உள்ள டைடுங்க் பகுதியில் ஹைகுவி புயல் கரையைக் கடந்தது. இதனால் அங்கு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைவானில் 45 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    கனமழை மற்றும் காற்று காரணமாக ஏற்பட்ட இடிபாடுகளால் 40 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    சுமார் 7,000 பேர் தங்கள் வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அந்நாட்டு அதிபர் சாய் இங் வென் கூறுகையில், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

    • இந்நிறுவனத்தை தொடங்கிய கவ், 2019ல் தலைமை பதவியை துறந்தார்
    • இதுவரை அரசியலில் அவரால் பெரும் வெற்றி பெற முடியவில்லை

    அமெரிக்காவின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள், அதன் பிரபலமான ஐபோனை தயாரிக்க உலகெங்கும் பல நிறுவனங்களை ஒப்பந்ததாரர்களாக நியமித்துள்ளது. இவற்றில் முன்னணியில் இருப்பது சீனாவிலும், தைவான் நாட்டிலும் உள்ள தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட ஹோன் ஹாய் பிரஸிஷன் நிறுவனம்.

    உலகெங்கிலும் இந்நிறுவனம், ஃபாக்ஸ்கான் எனும் பெயரில் தனது வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

    மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமான ஃபாக்ஸ்கான், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மட்டுமல்லாது, அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தின் கிண்டில் எனப்படும் மின்னணு புத்தகம், ஜப்பான் நாட்டின் நிண்டென்டோ வீடியோ கேம் உட்பட உலகின் பல நிறுவனங்களுக்கு மின்னணு பொருட்களை தயாரித்து வழங்கி வருகிறது.

    இந்நிறுவனத்தை டெர்ரி கவ் எனும் தைவான் நாட்டின் கோடீசுவரர் 1974ல் தொடங்கினார். தனது உழைப்பால், முன்னணி நிறுவனமாக இதனை முன்னேற்றிய கவ், 2019ல் தனது தலைமை பதவியை துறந்தார். இவருக்கு தற்போதைய வயது 72. அதற்கு பிறகு அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த போதிலும் அவரால் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை.

    இந்நிலையில், வரும் 2024 ஜனவரி மாதம் தைவான் நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் எந்க கட்சியையும் சாராத சுயேட்சை வேட்பாளராக போட்டியிட போவதாக கவ் அறிவித்துள்ளர்.

    தைவானின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் 2022 ஆம் ஆண்டு 6வது இடத்தை பிடித்த டெர்ரி கவ், பல தசாப்தங்களாக பொது வெளியில் தனது கருத்துக்களை அஞ்சாமல் கூறும் வழக்கம் கொண்டவராக கருதப்படுகிறார்.

    வெற்றி பெறுவதற்காக தனது தேர்தல் அறிக்கையில் அவர் கூறப்போகும் திட்டங்களை குறித்து யூகங்கள் இப்போதே சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

    • தைவானின் வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் இன்று தெரிவித்தது.
    • டிரோன்களும் அடங்கும் என்றும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. இதற்கிடையே சமீபத்தில் தைவானை சுற்றி சீனா போர் பயிற்சியை நடத்தியது.

    இந்நிலையில் தைவானின் வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் இன்று தெரிவித்தது. கடந்த 24 மணி நேரத்தில் 20 சீன விமானப்படை விமானங்கள் தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்தது என்றும் இதில் டிரோன்களும் அடங்கும் என்றும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • ஜாயின்ட் ஸ்வார்ட் எனும் தைவானுக்கெதிரான ஒரு ராணுவ பயிற்சியை சீனா மேற்கொண்டது
    • தேவைப்பட்டால் தற்கொலை தாக்குதல் நடத்த தயார்

    தீவு நாடான தைவானை தனக்கு சொந்தமானது எனக் கூறி வரும் சீனா தேவைப்பட்டால் ராணுவ ஆக்ரமிப்பு மூலம் அந்நாட்டை கைப்பற்ற போவதாக பலமுறை கூறியிருக்கிறது.

    கடந்த ஏப்ரல் மாதம் "ஜாயின்ட் ஸ்வார்ட்" (Joint Sword) எனும் தைவானுக்கெதிரான ஒரு ராணுவ பயிற்சியை சீனா மேற்கொண்டது.

    கடந்த மாதம், தைவானுக்கு அமெரிக்கா ரூ.2800 கோடி ($345 மில்லியன்) மதிப்பிலான ராணுவ உதவியை வழங்கியது. ஆனால், இதற்கு சீனா தனது எதிர்ப்பை தெரிவித்தது.

    இந்நிலையில் சீன ராணுவத்தின் 96-வது ஆண்டு விழாவை குறிக்கும் விதமாக சீனா ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில் போருக்கு தயாரான நிலையில் ராணுவம் இருப்பதுபோல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதில் சீன வீரர்கள் நாட்டிற்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக உறுதி எடுத்து கொள்கின்றனர்.

    தைவான் நாட்டை எதிர்க்க சீனா ராணுவத்தில் உள்ள கிழக்கு பகுதி அமைப்பை சேர்ந்த ஒரு சீன ராணுவ விமானப்படை பைலட் உறுதிபட கூறியிருப்பது தெரிகிறது. அவர் தேவைப்பட்டால் தற்கொலை தாக்குதல் நடத்த தயார் என கூறுகிறார். தங்களின் உடலையும் உயிரையும் தியாகம் செய்ய தயார் என நீருக்கடியில் மூழ்கி ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடும் "ஃப்ராக் மேன்" படை வீரர் ஒருவர் கூறுகிறார்.

    ஜாயின்ட் ஸ்வார்ட் பயிற்சி சம்பந்தமான காட்சிகளும், ராணுத்தின் பல அமைப்பின் வீரர்களின் கதைகளும், ராணுவ பயிற்சிகளும் இதில் இடம்பெற்றிருக்கிறது. இது தைவான் நாட்டிற்கு சீனா விடும் எச்சரிக்கைபோல் இருப்பதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    சேஸிங் ட்ரீம்ஸ் என இந்த ஆவணப்படத்திற்கு சீனா பெயரிட்டுள்ளது.

    தைவானை அச்சுறுத்தும் விதமாக தைவான் ஜலசந்தி பகுதியில் சீன ராணுவம் வான்வழி ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    ×