என் மலர்tooltip icon

    இலங்கை

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கொழும்பு:

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் தவித்த மக்களின் தொடர் போராட்டங்களால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு மற்றும் சிங்கப்பூருக்கு தப்பி சென்றார்.

    சிங்கப்பூரில் இருந்தபடி கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அவர் தாய்லாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். தலைநகர் பாங்காக்கில் உள்ள ஓட்டலில் தங்கி இருக்கும் அவர் அறையில் இருந்து வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

    அறைக்குள்ளேயே முடங்கி கிடப்பது சிறைவாசம் இருப்பதாக உள்ளது என்று கோத்தபய ராஜபக்சே விரக்தியில் உள்ளார். இதற்கிடையே அவர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே திரும்பிய பிறகு அவரை பிரதமராக்க திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை ஆளுங்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கோத்தபய ராஜபக்சேவை மீண்டும் அரசியலுக்குள் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளில் அவருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் செயல்பட்டு வருகிறார்கள் என்று ராஜபக்சேவின் உறவினர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறும்போது, கோத்தபய ராஜபக்சேவை தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்றத்துக்குள் அழைத்து வருவதற்கும், பிரதமர் பதவி அல்லது வேறு ஒரு பதவியை வழங்கவும் முயற்சிக்கிறார்கள். ஆனால் இதற்கு அரசாங்கத்தில் உள்ளவர்கள் இணங்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றார்.

    ஆளுங்கட்சி ஆதரவுடன் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கேயிடம் கோத்தபயவை பிரதமராக்க பொதுஜன பெரமுனா கட்சியினர் வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நிபந்தனைகளுடன் மீனவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவு.
    • விடுதலை செய்யப்பட்ட 9 மீனவர்களும் விரைவில் தாயகம் வருகை.

    பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு மத்திய அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கடலுக்கு செல்லும் தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    கடந்த 22ந் தேதி நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த நிலையில், உடனடியாக அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    மேலும் இலங்கை வசம் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 94 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தி இருந்தார்.  இதனிடையே, நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த 11ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற ஒரு படகையும், அதிலிருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து திரிகோணமலை சிறையில் அடைத்திருந்தனர்.

    இந்த வழக்கு இன்று திரிகோணமலை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட 9 மீனவர்களும் ஓரிரு நாட்களில் தாயகம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

    • சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்காக இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது
    • மக்களுக்கு இடைக்கால பட்ஜெட் மூலம் நிவாரணம் வழங்க ஆர்வமாக உள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.

    கொழும்பு:

    நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், வரும் 30ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சராக இருக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அதன்பின்னர், செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்.

    பொருளாதாரத்தை சீரமைக்கும் முயற்சியாக சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்காக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    2021ஆம் ஆண்டிற்கான அதிகரிக்கப்பட்ட செலவீனமான 2,796.4 பில்லியன் ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக 929.4 பில்லியன் ரூபாய் தொகை பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு அனுமதி கோரப்படுகிறது. இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட கடன் வரம்பு 3,200 பில்லியன் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பட்ஜெட்டில் இந்த கடன் வரம்பில் 892 பில்லியன் ரூபாய் அதிகரிக்கப்படுகிறது.

    தினசரி மின்வெட்டு மற்றும் எரிபொருள், உணவு மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இடைக்கால பட்ஜெட் மூலம் நிவாரணம் வழங்க ஆர்வமாக உள்ளதாக ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

    இடைக்கால பட்ஜெட்டானது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தும் அதே வேளையில் முடிந்தவரை பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் என ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கூறி உள்ளார். 2023 ஆம் ஆண்டிற்கான முழுமையான பட்ஜெட் நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

    • மக்களின் போராட்டம் புரட்சியாக உருவெடுத்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.
    • ஆகஸ்ட் 23ம் தேதிக்கு முன் அனுப்பப்பட்ட பொருட்கள் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொழும்பு:

    இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணியின் கடுமையான பற்றாக்குறையால், அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. உணவு, எரிப்பொருள் என அத்தியாவசியப் பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதால், மக்கள் கடும் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

    இதன் எதிரொலியாக பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் புரட்சியாக உருவெடுத்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பிச் சென்றார். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.

    இந்நிலையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சாக்லேட்டுகள், வாசனை திரவியங்கள், தொலைபேசிகள், பிரஷர் குக்கர்கள் மற்றும் ஷாம்புகள் உள்ளிட்ட 300 பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது என இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. எனினும், இந்த பொருட்கள் ஆகஸ்ட் 23ம் தேதிக்கு முன் அனுப்பப்பட்டு செப்டம்பர் 14-ம் தேதிக்குள் நாட்டிற்கு வந்தாலும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 3 மாணவர்கள் மீது இந்த சட்டம் பாய்ந்துள்ளது.
    • இலங்கையின் கொடூரமான பயங்கரவாத தடுப்பு சட்டம் முடிவுக்கு வருகிறது.

    கொழும்பு :

    இலங்கையில் கடந்த 1979-ம் ஆண்டு முதல் பயங்கரவாத தடுப்பு சட்டம் (பி.டி.ஏ.) அமலில் உள்ளது. நாட்டின் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தில் கடுமையான பிரிவுகள் உள்ளன.

    இந்த சட்டத்துக்கு உலக நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

    இந்த நிலையில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 3 மாணவர்கள் மீது இந்த சட்டம் பாய்ந்துள்ளது. கடந்த 18-ந் தேதி கைது செய்யப்பட்ட அவர்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

    இதற்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது பி.டி.ஏ. சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதற்கு இலங்கை பார் கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

    இந்த கைதுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ள அமெரிக்கா, பி.டி.ஏ. போன்ற சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கு எதிரான சட்டங்கள் இலங்கையில் ஜனநாயகத்தை சிதைக்கிறது என குற்றம் சாட்டியுள்ளது.

    மக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையை நிலைநிறுத்துமாறு இலங்கை அரசை கேட்டுக்கொள்வதாக அந்த நாட்டுக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் தெரிவித்தார்.

    இதைப்போல பயங்கரவாத தடுப்பு சட்டத்தை திரும்பப்பெறுமாறு கடந்த ஆண்டே ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் இலங்கைக்கு அறிவுறுத்தி இருந்தது. அத்துடன் இலங்கைக்கு எதிரான ஏற்றுமதி தடைகளை விதிப்பது குறித்து பரிசீலிக்கவும் முடிவு செய்திருந்தது.

    இவ்வாறு இலங்கையின் பி.டி.ஏ. சட்டத்துக்கு சர்வேதச அளவில் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து மேற்படி சட்டத்தை திரும்பப்பெற அரசு முடிவு செய்து உள்ளது.

    இது தொடர்பாக இலங்கை மந்திரியும், கேபினட் செய்தி தொடர்பாளருமான பந்துல குணவர்தனே கூறுகையில், '1979-ம் ஆண்டு முதல் பி.டி.ஏ. அமலில் இருக்கிறது. இந்த சட்டத்தில் உள்ள விரும்பத்தகாத பகுதிகளை நீக்கி விட்டு ஒரு புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்படும் என சட்டத்துறை மந்திரி மந்திரிசபை கூட்டத்தில் தெரிவித்து உள்ளார்' என்று கூறினார்.

    இதன் மூலம் 40 ஆண்டுகள் பழைமையான இலங்கையின் கொடூரமான பயங்கரவாத தடுப்பு சட்டம் முடிவுக்கு வருகிறது.

    • புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற பிறகு போராட்டங்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • மாணவர் இயக்க தலைவர்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம்

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. இதில் பல்வேறு மாணவர் இயக்கத்தினர் பங்கேற்றனர்.

    புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற பிறகு போராட்டங்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிபர் மாளிகை முன்பு காலிமுகத்திடலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக வேறு வடிவில் போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்.

    இதற்கிடையே கடந்த 18-ந்தேதி தலைநகர் கொழும்பில், பல்கலைக்கழகங்களின் மாணவர் கூட்டமைப்பு சார்பில் பேரணி நடந்தது. இதில் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் மாணவர்கள் இயக்க தலைவர்கள் 3 பேர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இதனை போலீசாரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறும்போது, 'போராட்டக்காரர்கள் திடீரென்று இப்போது எப்படி தீவிரவாதிகள் ஆனார்கள்?

    மாணவர்களின் எதிர்ப்பை பயங்கரவாதம் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே குறிப்பிடுகிறார் என்றால் அவரும் பயங்கரவாத வழிமுறைகளை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தார் என்று அர்த்தமல்லவா?' என்றார்.

    • பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவி வருகிறது.
    • இந்தியா சார்பில் இன்று 21 ஆயிரம் டன் உரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    கொழும்பு:

    இலங்கையில் நெருக்கடி முற்றியபோது 57 லட்சம் மக்கள் மனிதநேய அடிப்படையிலான உதவி உடனடியாக வழங்கப்பட வேண்டிய நிலையில் உள்ளனர் என்று ஐ.நா. அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில், பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா சார்பில் இன்று 21 ஆயிரம் டன் உரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, கொழும்பு நகரில் உள்ள இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியதாவது:

    நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்கு நறுமணம் சேர்க்கும் வகையில் 21 ஆயிரம் டன் உரம், இலங்கை மக்களுக்கான இந்தியாவின் சிறப்பு ஆதரவு திட்டத்தின் கீழ் இந்திய தூதர் முறைப்படி வழங்கியுள்ளார் என தெரிவித்துள்ளது.

    கடந்த மாதம் 44 ஆயிரம் டன் உரம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையும் சேர்த்து 2022-ம் ஆண்டில் மொத்தம் அமெரிக்க டாலர் மதிப்பில் 400 கோடி அளவுக்கு உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த உரம் ஆனது உணவு பாதுகாப்பு மற்றும் இலங்கையின் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதில் பங்கு வகிக்கும் என கூறப்பட்டுள்ளது.

    • இந்திய பெருங்கடலில் ராணுவ தளத்தை உருவாக்க சீனா தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
    • சீனா இந்தியாவை சுற்றியுள்ள அனைத்து நாடுகளிலும் ராணுவ தளங்களை நிறுவி இருக்கிறது.

    கொழும்பு:

    சீன உளவு கப்பல் யுவான் வாங்-5 கடந்த 16-ம் தேதி இலங்கை துறைமுகத்துக்கு வந்தது. அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த கப்பல் தென் இந்தியா முழுவதையும் உளவு பார்க்கும் ஆற்றல் கொண்டிருப்பதால் மத்திய அரசு இந்திய கடற்படை கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.

    இந்த உளவு கப்பல் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் 22-ம் தேதி வரை நிற்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் உளவு கப்பலுக்கு எரிபொருள் நிரப்பும் பணிகள் நடந்து வந்தன. எரிபொருள் தவிர உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை சேகரிக்கும் பணியிலும் உளவு கப்பலைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், எரிபொருள், உணவு பொருட்கள் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ததைத் தொடர்ந்து சீன உளவு கப்பலான யுவான் வாங் 5 கப்பல் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து இன்று புறப்பட்டது.

    சீன உளவு கப்பல் இந்தியாவின் செயற்கை கோள்களையும், தென் இந்தியாவில் உள்ள கடற்படை தளங்களையும் உளவு பார்க்கும் என்று கருதப்பட்டது. ஆனால் அத்தகைய பணிகள் எதையும் செய்யக் கூடாது என்று இலங்கை நிபந்தனை விதித்து இருந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இலங்கை வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்துவிட்டு வெளிநாடு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • சட்ட விரோதமான முறையில் சுற்றுலா விசா மூலம் தொழில் செய்ய செல்ல வேண்டாம்

    சுற்றுலா விசாக்கள் மூலம் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளுக்கு அனுப்பும் மோசடியாளர்கள், ஆள் கடத்தல் காரர்களிடம் யாரும் சிக்கி கொள்ள வேண்டாம் என இலங்கை நாட்டு மக்களுக்கு அங்குள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும்போது வேலை மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு முக்கியமானது. எனவே அவர்கள் இலங்கை வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்துவிட்டு வெளிநாடு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சட்ட விரோதமான முறையில் சுற்றுலா விசா மூலம் தொழில் செய்ய செல்ல வேண்டாம் என அந்நாட்டு அமைச்சர் மனுஷ நாணயக்காரா தெரிவித்து உள்ளார்.

    • ராஜபச்சே குடும்பத்தினர் மீது கோபமாக இருப்பதால் மகிந்த ராஜபக்சே அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவார் என்ற பேச்சு அடிபட்டது.
    • ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவை வழி நடத்துவதற்கு நான் தேவையா என்பதை கட்சி தான் தீர்மானிக்க வேண்டும்.

    இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி அந்நாட்டையே ஒரு புரட்டு புரட்டி போட்டு உள்ளது. வரலாறு காணாத வகையில் அத்யாவசிய பொருட்களின் விலை அனைத்தும் உயர்ந்து விட்டதால் பொதுமக்கள் இன்னும் தவியாய் தவித்து வருகின்றனர்.

    அங்கு வாழ வழி தெரியாமல் பல குடும்பங்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் வெகுண்டு எழுந்ததால் அங்கு அரசியல் மாற்றமும் ஏற்பட்டது. அதிபராக இருந்த கோத்தபய ராஜபச்சே சொந்த நாட்டைவிட்டு ஓடி விட்டார். அவர் தற்போது தாய்லாந்து நாட்டில் அடைக்கலம் புகுந்துள்ளார்.

    பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அவர் வெளிநாட்டுக்கு செல்ல அங்குள்ள கோர்ட்டு தடை விதித்து உள்ளது. இதனால் அவர் எங்கும் தப்பி செல்ல முடியாமல் இலங்கையிலேயே முடங்கி கிடக்கிறார்

    பொதுமக்கள் தொடர்ந்து ராஜபச்சே குடும்பத்தினர் மீது கோபமாக இருப்பதால் மகிந்த ராஜபக்சே அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவார் என்ற பேச்சு அடிபட்டது. இதனை அவர் மறுத்து உள்ளார்.

    இதுதொடர்பாக மகிந்த ராஜபக்சே அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போது இல்லை. நான் தொடர்ந்து அரசியலில் இருப்பேன். நேரம் வரும் போது மட்டுமே ஓய்வு பெறுவேன். அதுவரை நான் அரசியலில் இருப்பேன். ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவை வழி நடத்துவதற்கு நான் தேவையா என்பதை கட்சி தான் தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் நான் ஒரு வக்கீல் என்னால் கோர்ட்டில் வாதாட முடியும். தேவைப்பட்டால் நான் கோர்ட்டுக்கு செல்லவும் தயார்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    • தாய்லாந்தில் உள்ள கோத்தபய ராஜபக்சே, ஓட்டல் அறையிலேயே இருக்கும்படியும் வெளியில் வர வேண்டாம்.
    • கோத்தபய ராஜபக்சேவின் சகோதரரும், முன்னாள் நிதி மந்திரியுமான பசில் ராஜபக்சே அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசினார்.

    இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்க உயர் பதவிகளில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினர்தான் காரணம் என பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதனால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு மற்றும் சிங்கப்பூருக்கு தப்பி சென்றார். தற்போது அவர் தாய்லாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். மேலும் அமெரிக்காவில் குடியேற கோத்தபய விண்ணப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    கோத்தபய ராஜபக்சே, விரைவில் இலங்கை திரும்புவார் என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போதைய சூழலில் நாடு திரும்பினால் மீண்டும் பிரச்சினை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளதால் அவர் இலங்கைக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கோத்தபய ராஜபக்சேவின் சகோதரரும், முன்னாள் நிதி மந்திரியுமான பசில் ராஜபக்சே அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசினார். அப்போது கோத்தபய ராஜபக்சே நாடு திரும்புவதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பசில் ராஜபக்சே வேண்டுகோள் விடுத்தார்.

    இதுக்குறித்து ராஜபக்சே கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வெளியிட்ட அறிக்கையில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, நாடு திரும்ப ஏற்பாடுகளை செய்து தருமாறு பசில் ராஜபக்சே கோரிக்கை விடுத்தார் என்று தெரிவித்துள்ளது.

    ராஜபக்சே கட்சியின் ஆதரவுடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே, கோத்தபய ராஜபக்சே நாடு திரும்புவதற்கு பாதுகாப்பு அளிக்க விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இதுவரை பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.

    தாய்லாந்தில் உள்ள கோத்தபய ராஜபக்சே, ஓட்டல் அறையிலேயே இருக்கும்படியும் வெளியில் வர வேண்டாம் என்றும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராடத்தொடங்கினார்கள்.
    • இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கோத்தபய ராஜபக்சே அமெரிக்க குடியுரிமையை விட்டுக்கொடுத்தார்.

    கோத்தபய ராஜபக்சேயை சிங்கள மக்கள் கொண்டாடிய காலம் என்று ஒன்று உண்டு.

    இலங்கையில் கால் நூற்றாண்டாக சிங்களப்படைகளுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்து வந்த உள்நாட்டுப்போரில் வெற்றி தேடித்தந்தவர்கள் என்று மகிந்த ராஜபக்சேயையும், கோத்தபய ராஜபக்சேயையும் "இவர்களன்றோ நமது ஹீரோக்கள்" என்று கொண்டாடினார்கள் சிங்கள மக்கள்.

    இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தபோது, ஆயிரமாயிரம் தமிழர்கள் கொத்துக்கொத்தாய் சித்ரவதை செய்து கொல்லப்பட்டார்கள். பலர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

    இதற்கெல்லாம் ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என்பது இன்றுவரை நிலைத்து விட்ட குற்றச்சாட்டு.

    காலச்சக்கரம் சுழன்றது. காட்சிகள் மாறின.

    ஆனால் 2009-ம் ஆண்டு உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, 2010 தேர்தலில் மகிந்த ராஜபக்சேவுக்கு அமோக வெற்றியை தேடித்தந்து அதிபராக்கி மகிழ்ந்தார்கள், இலங்கை மக்கள்.

    2019-ல் அவரது தம்பி கோத்தபய ராஜபக்சேயை அதிபராக்கி அழகு பார்த்தார்கள்.

    அந்த கோத்தபய, அண்ணன் மகிந்த ராஜபக்சேயை பிரதமர் நாற்காலியில் அமர வைத்தார்.

    2019 இறுதியில் சீனாவில் தோன்றி உலக நாடுகளை வதைக்கத்தொடங்கிய கொரோனா தொற்று, இலங்கையிலும் காலடி எடுத்து வைத்தது. சுற்றுலா ஒன்றையே முக்கிய வருமானமாகக் கொண்ட இலங்கையில் அந்த சுற்றுலாத்துறை அடியோடு முடங்கியது. அந்த நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் காணத்தொடங்கியது. அன்னியச்செலாவணி கரைந்து போனது. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு விண்ணோடும், முகிலோடும் போட்டி போட்டது. சாமானிய மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாக, நாடே இருளில் தவித்தது.

    அப்போதுதான் சிங்கள மக்கள் விழித்தார்கள். இந்த நிலைக்கு நாட்டைக் கொண்டு வந்து விட்டிருப்பது ராஜபக்சே குடும்பம்தான் என்று கண்டு கொண்டு அவர்களுக்கு எதிராக மக்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள்.

    மகிந்த ராஜபக்சே முதல் களப்பலியானார். அவர் பிரதமர் பதவியை விட்டு விலகினார். மக்கள் கிளர்ச்சி நீண்டது. அதிபர் மாளிகையையே மக்கள் சூறையாடப்போகிறார்கள் என்று உளவுத்துறை செய்தி சொன்னபோது ஆடித்தான்போனார், கோத்தபய ராஜபக்சே. இரவோடு இரவாக அதிபர் மாளிகையை விட்டு அந்தோ பரிதாபம் என ஓடினார்.

    முதலில் அவர் ஓடிய நாடு, மாலத்தீவு.

    அந்த நாட்டின் முன்னாள் அதிபரும், இந்நாள் நாடாளுமன்ற சபாநாயகருமான முகமது நஷீத் தயவால் அவர் அங்கே சிலகாலம் தஞ்சம் அடைய விரும்பினாலும், அங்குள்ள மக்களும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடத்தொடங்கினார்கள்.

    ஜூலை 13-ல் ஒரே நாளில் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலை.

    14-ந் தேதி சிங்கப்பூர் போனார். அங்கே அவர் அரசியல் தஞ்சம் புகுந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

    ஆனால் அவசரஅவசரமாக சிங்கப்பூர் அரசு மறுத்தது.

    "இல்லை... இல்லை... சிங்கப்பூர் யாருக்கும் தஞ்சம் தருவதில்லை. அவருக்கு 15 நாள் தற்காலிக அனுமதி தரப்பட்டுள்ளது" என்றது. தொடர்ந்து இலங்கையின் ரணில் விக்ரம சிங்கே அரசு கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து மேலும் 15 நாள் நீட்டிக்கப்பட்டது. ஆகஸ்டு 11-ந் தேதியுடன் அது முடிவுக்கு வந்தது.

    அதைத் தொடர்ந்து கோத்தபயராஜபக்சேயின் அடுத்த ஓட்டம் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகருக்கு. அங்கேயும் அவர் கிட்டத்தட்ட வீட்டுச்சிறை போன்று ஓட்டலுக்குள் அடைந்து கிடந்தாக வேண்டும் என்பது போலீஸ் உத்தரவு.

    அதுமட்டுமல்ல, தங்கள் நாட்டில் இருந்து கொண்டு எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என தடை போட்டிருக்கிறது, அங்குள்ள பிரயுத் சான் ஓச்சா அரசு.

    அடுத்த ஓட்டம் எங்கே? உறக்கம் வராமல் தவிக்கிறார், கோத்தபய ராஜபக்சே. அங்கே 90 நாட்கள் தங்க அனுமதி தரப்பட்டிருப்பதாக தகவல்.

    இப்போது கசிந்துள்ள தகவல், கோத்தபய ராஜபக்சே, அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேற விரும்புகிறார்.

    குடியுரிமை பெற அவரது வக்கீல்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்பதுதான்.

    கோத்தபய தரப்பில் முறைப்படி அமெரிக்க அரசிடம் கிரீன்கார்டு கேட்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டாகி விட்டது. அது தொடர்பான தொடர் நடவடிக்கைகளை அவரது வக்கீல்கள் மேற்கொண்டு வருகிறார்கள் என்பதுதான் கடைசியாக கிடைத்திருக்கிற தகவல்.

    கோத்தபய ராஜபக்சேயின் மனைவி லோமா ராஜபக்சே, அமெரிக்க குடியுரிமை பெற்றவர். எனவே அதன் அடிப்படையில் கோத்தபய ராஜபக்சேவுக்கும் கிரீன் கார்டு கிடைத்து விடும் என்று சொல்லப்படுகிறது.

    கோத்தபய ராஜபக்சேயும் அமெரிக்க குடியுரிமை வைத்திருந்தவர்தான். ஆனால் 2019-ல் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் அமெரிக்க குடியுரிமையை விட்டுக்கொடுத்தார்.

    விட்டதை மீண்டும் பெற அவர் எடுக்கிற முயற்சி வெற்றி பெறுமா? நாடாண்டவர் நாடு நாடாக ஓடும் அவலம் முடிவுக்கு வருமா? கேள்விகள் நீளுகின்றன.

    ×