என் மலர்
இலங்கை
- இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில் இந்த ஆண்டு மட்டும் சீனாவிடம் இருந்து 2 பில்லியன் டாலர் வரை கடன் பெற்றுள்ளது.
- இலங்கைக்கு கூடுதல் கடனுதவி அளிப்பது குறித்தோ, கடன் மறு சீரமைப்பு குறித்தோ நேரடியாக கருத்து தெரிவிக்க சீனா மறுத்துவிட்டது.
கொழும்பு:
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில் இந்த ஆண்டு மட்டும் சீனாவிடம் இருந்து 2 பில்லியன் டாலர் வரை கடன் பெற்றுள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.15 ஆயிரத்து 995 கோடி ஆகும்.
கடந்த சில ஆண்டுகளில் சீனா, இலங்கையில் மேற்கொண்ட முதலீடுகளையும், கடனையும் கணக்கிட்டால் ஒட்டுமொத்தமாக 8 பில்லியன் டாலர் ஆகிறது.
இந்த நிலையில் இலங்கையில் பொருளாதார மந்த நிலை நீடிப்பதால் கடனை மறுசீரமைப்பு செய்யுமாறு சீனாவிடம் இலங்கை கோரிக்கை வைத்தது.
இதையடுத்து இலங்கை நிதி மந்திரியை சீனா தொடர்பு கொண்டு இந்த பிரச்சினைக்கு சீன வங்கிகளுடன் ஆலோசனை நடத்தி தீர்வுகாண தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனாலும் இலங்கைக்கு கூடுதல் கடனுதவி அளிப்பது குறித்தோ, கடன் மறு சீரமைப்பு குறித்தோ நேரடியாக கருத்து தெரிவிக்க சீனா மறுத்துவிட்டது.
இதுகுறித்து சீன அரசின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், 'கடனை மறு சீரமைப்பது தொடர்பாக இலங்கை நிதி அமைச்சகத்துக்கு ஏற்கனவே தீர்மானம் அனுப்பி உள்ளோம். அவர்களிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை.
மேலும் சர்வதேச நிதியத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தங்களை முதலில் நிறைவு செய்யுமாறு இலங்கையிடம் வலியுறுத்தினோம்' என்றார்.
கடந்த 2020-ம் ஆண்டு நிலவரப்படி சீனாவின் மொத்த கடன் 6.2 பில்லியன் டாலர் என சர்வதேச நிதியம் மதிப்பீடு செய்துள்ளது. இதில் சீனாவும், ஜப்பானும், இலங்கைக்கு அதிக அளவில் கடன் கொடுத்துள்ளன.
- சீன தூதரின் கருத்துகள் குறித்து கவனம் செலுத்தி உள்ளோம்.
- இந்தியாவை பற்றிய சீனத் தூதரின் பார்வை அவரது நாடு எப்படி நடந்து கொள்கிறது என்பதை பொறுத்து இருக்கலாம்.
கொழும்பு:
சீன ராணுவத்தின் உளவு கப்பலான 'யுவான் வாங்-5' இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறை முகத்துக்கு வர இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து இந்தியா கவலை தெரிவித்ததால் கப்பல் வருகையை ஒத்தி வைக்குமாறு சீனாவிடம் இலங்கை கேட்டுக் கொண்டது.
ஆனால் அதை சீனா ஏற்க மறுத்ததால் கப்பல் வருகைக்கு இலங்கை அனுமதி அளித்தது. ஒரு வாரம் இலங்கை துறை முகத்தில் இருந்த சீன கப்பல் கடந்த 22-ந்தேதி புறப்பட்டு சென்றது.
இதற்கிடையே இலங்கைக்கான சீன தூதர் ஜென் ஹோங் எழுதிய கட்டுரையில் இந்தியாவை விமர்சனம் செய்திருந்தார்.
அதில், இலங்கையில் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றின் மீதான மீறல்களை சீனா பொறுத்து கொள்ளாது. பாதுகாப்பு கவலைகள் என்று கூறி சிலர் ஆதாரம் இல்லாமல் இலங்கை உள் விவகாரங்களில் தலையிடுவது நடை முறையில் உள்ளது.
இலங்கையை சில நாடுகள் கொடுமைப்படுத்துவதற்கும், இறையாண்மை, சுதந்திரத்தை காலில் போட்டு மிதிக்கவும் ஆதார மற்ற தகவல்களை கூறுகின்றன என்று தெரிவித்து இருந்தார்.
சீன தூதரின் இந்த கருத்துக்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் கூறியிருப்பதாவது:-
சீன தூதரின் கருத்துகள் குறித்து கவனம் செலுத்தி உள்ளோம். அடிப்படை ராஜதந்திர நெறிமுறைகளை அவர் மீறுவது, ஒரு தனிப்பட்ட பண்பாடுகளோ அல்லது ஒரு தேசிய அணுகு முறையின் பிரதிபலிப்பாகவோ இருக்கலாம்.
இந்தியாவை பற்றிய சீனத் தூதரின் பார்வை அவரது நாடு எப்படி நடந்து கொள்கிறது என்பதை பொறுத்து இருக்கலாம். ஆனால் இந்தியா அவ்வாறு இல்லை என்பதை அவருக்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்.
ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி கப்பலின் வருகையுடன் சீன தூதர் பூகோள அரசியல் சூழலை பொருத்தும் அவரது நடவடிக்கை ஒரு பாசாங்கான செயலாகும்.
இலங்கைக்கு தற்போது ஆதரவு, உதவி தேவையாக உள்ளதே தவிர தேவையற்ற அழுத்தங்களோ அல்லது தேவையற்ற சர்ச்சைகளோ அல்ல. கடன்களை அடிப்படையாக கொண்ட நடவடிக்கைகள் குறிப்பாக சிறிய நாடுகளுக்கு மிகவும் பெரிய சவாலாக உள்ளன. இதற்கு சமீபத்திய சம்பவங்கள் ஒரு எச்சரிக்கை ஆகும் என்று தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு சீனா அதி களவில் கடன் கொடுத்து அதன் வலையில் சிக்க வைக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் தவித்த மக்களின் தொடர் போராட்டங்களால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு மற்றும் சிங்கப்பூருக்கு தப்பி சென்றார்.
சிங்கப்பூரில் இருந்தபடி கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அவர் தாய்லாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். தலைநகர் பாங்காக்கில் உள்ள ஓட்டலில் தங்கி இருக்கும் அவர் அறையில் இருந்து வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
அறைக்குள்ளேயே முடங்கி கிடப்பது சிறைவாசம் இருப்பதாக உள்ளது என்று கோத்தபய ராஜபக்சே விரக்தியில் உள்ளார். இதற்கிடையே அவர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே திரும்பிய பிறகு அவரை பிரதமராக்க திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை ஆளுங்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கோத்தபய ராஜபக்சேவை மீண்டும் அரசியலுக்குள் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளில் அவருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் செயல்பட்டு வருகிறார்கள் என்று ராஜபக்சேவின் உறவினர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, கோத்தபய ராஜபக்சேவை தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்றத்துக்குள் அழைத்து வருவதற்கும், பிரதமர் பதவி அல்லது வேறு ஒரு பதவியை வழங்கவும் முயற்சிக்கிறார்கள். ஆனால் இதற்கு அரசாங்கத்தில் உள்ளவர்கள் இணங்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றார்.
ஆளுங்கட்சி ஆதரவுடன் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கேயிடம் கோத்தபயவை பிரதமராக்க பொதுஜன பெரமுனா கட்சியினர் வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நிபந்தனைகளுடன் மீனவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவு.
- விடுதலை செய்யப்பட்ட 9 மீனவர்களும் விரைவில் தாயகம் வருகை.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு மத்திய அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கடலுக்கு செல்லும் தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
கடந்த 22ந் தேதி நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த நிலையில், உடனடியாக அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
மேலும் இலங்கை வசம் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 94 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தி இருந்தார். இதனிடையே, நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த 11ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற ஒரு படகையும், அதிலிருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து திரிகோணமலை சிறையில் அடைத்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று திரிகோணமலை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட 9 மீனவர்களும் ஓரிரு நாட்களில் தாயகம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
- சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்காக இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது
- மக்களுக்கு இடைக்கால பட்ஜெட் மூலம் நிவாரணம் வழங்க ஆர்வமாக உள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.
கொழும்பு:
நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், வரும் 30ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சராக இருக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அதன்பின்னர், செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்.
பொருளாதாரத்தை சீரமைக்கும் முயற்சியாக சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்காக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
2021ஆம் ஆண்டிற்கான அதிகரிக்கப்பட்ட செலவீனமான 2,796.4 பில்லியன் ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக 929.4 பில்லியன் ரூபாய் தொகை பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு அனுமதி கோரப்படுகிறது. இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட கடன் வரம்பு 3,200 பில்லியன் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பட்ஜெட்டில் இந்த கடன் வரம்பில் 892 பில்லியன் ரூபாய் அதிகரிக்கப்படுகிறது.
தினசரி மின்வெட்டு மற்றும் எரிபொருள், உணவு மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இடைக்கால பட்ஜெட் மூலம் நிவாரணம் வழங்க ஆர்வமாக உள்ளதாக ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இடைக்கால பட்ஜெட்டானது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தும் அதே வேளையில் முடிந்தவரை பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் என ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கூறி உள்ளார். 2023 ஆம் ஆண்டிற்கான முழுமையான பட்ஜெட் நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
- மக்களின் போராட்டம் புரட்சியாக உருவெடுத்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.
- ஆகஸ்ட் 23ம் தேதிக்கு முன் அனுப்பப்பட்ட பொருட்கள் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு:
இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணியின் கடுமையான பற்றாக்குறையால், அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. உணவு, எரிப்பொருள் என அத்தியாவசியப் பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதால், மக்கள் கடும் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
இதன் எதிரொலியாக பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் புரட்சியாக உருவெடுத்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பிச் சென்றார். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சாக்லேட்டுகள், வாசனை திரவியங்கள், தொலைபேசிகள், பிரஷர் குக்கர்கள் மற்றும் ஷாம்புகள் உள்ளிட்ட 300 பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது என இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. எனினும், இந்த பொருட்கள் ஆகஸ்ட் 23ம் தேதிக்கு முன் அனுப்பப்பட்டு செப்டம்பர் 14-ம் தேதிக்குள் நாட்டிற்கு வந்தாலும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 3 மாணவர்கள் மீது இந்த சட்டம் பாய்ந்துள்ளது.
- இலங்கையின் கொடூரமான பயங்கரவாத தடுப்பு சட்டம் முடிவுக்கு வருகிறது.
கொழும்பு :
இலங்கையில் கடந்த 1979-ம் ஆண்டு முதல் பயங்கரவாத தடுப்பு சட்டம் (பி.டி.ஏ.) அமலில் உள்ளது. நாட்டின் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தில் கடுமையான பிரிவுகள் உள்ளன.
இந்த சட்டத்துக்கு உலக நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்த நிலையில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 3 மாணவர்கள் மீது இந்த சட்டம் பாய்ந்துள்ளது. கடந்த 18-ந் தேதி கைது செய்யப்பட்ட அவர்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது பி.டி.ஏ. சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதற்கு இலங்கை பார் கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இந்த கைதுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ள அமெரிக்கா, பி.டி.ஏ. போன்ற சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கு எதிரான சட்டங்கள் இலங்கையில் ஜனநாயகத்தை சிதைக்கிறது என குற்றம் சாட்டியுள்ளது.
மக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையை நிலைநிறுத்துமாறு இலங்கை அரசை கேட்டுக்கொள்வதாக அந்த நாட்டுக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் தெரிவித்தார்.
இதைப்போல பயங்கரவாத தடுப்பு சட்டத்தை திரும்பப்பெறுமாறு கடந்த ஆண்டே ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் இலங்கைக்கு அறிவுறுத்தி இருந்தது. அத்துடன் இலங்கைக்கு எதிரான ஏற்றுமதி தடைகளை விதிப்பது குறித்து பரிசீலிக்கவும் முடிவு செய்திருந்தது.
இவ்வாறு இலங்கையின் பி.டி.ஏ. சட்டத்துக்கு சர்வேதச அளவில் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து மேற்படி சட்டத்தை திரும்பப்பெற அரசு முடிவு செய்து உள்ளது.
இது தொடர்பாக இலங்கை மந்திரியும், கேபினட் செய்தி தொடர்பாளருமான பந்துல குணவர்தனே கூறுகையில், '1979-ம் ஆண்டு முதல் பி.டி.ஏ. அமலில் இருக்கிறது. இந்த சட்டத்தில் உள்ள விரும்பத்தகாத பகுதிகளை நீக்கி விட்டு ஒரு புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்படும் என சட்டத்துறை மந்திரி மந்திரிசபை கூட்டத்தில் தெரிவித்து உள்ளார்' என்று கூறினார்.
இதன் மூலம் 40 ஆண்டுகள் பழைமையான இலங்கையின் கொடூரமான பயங்கரவாத தடுப்பு சட்டம் முடிவுக்கு வருகிறது.
- புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற பிறகு போராட்டங்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- மாணவர் இயக்க தலைவர்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம்
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. இதில் பல்வேறு மாணவர் இயக்கத்தினர் பங்கேற்றனர்.
புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற பிறகு போராட்டங்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிபர் மாளிகை முன்பு காலிமுகத்திடலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக வேறு வடிவில் போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்.
இதற்கிடையே கடந்த 18-ந்தேதி தலைநகர் கொழும்பில், பல்கலைக்கழகங்களின் மாணவர் கூட்டமைப்பு சார்பில் பேரணி நடந்தது. இதில் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் மாணவர்கள் இயக்க தலைவர்கள் 3 பேர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதனை போலீசாரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறும்போது, 'போராட்டக்காரர்கள் திடீரென்று இப்போது எப்படி தீவிரவாதிகள் ஆனார்கள்?
மாணவர்களின் எதிர்ப்பை பயங்கரவாதம் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே குறிப்பிடுகிறார் என்றால் அவரும் பயங்கரவாத வழிமுறைகளை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தார் என்று அர்த்தமல்லவா?' என்றார்.
- பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவி வருகிறது.
- இந்தியா சார்பில் இன்று 21 ஆயிரம் டன் உரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு:
இலங்கையில் நெருக்கடி முற்றியபோது 57 லட்சம் மக்கள் மனிதநேய அடிப்படையிலான உதவி உடனடியாக வழங்கப்பட வேண்டிய நிலையில் உள்ளனர் என்று ஐ.நா. அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா சார்பில் இன்று 21 ஆயிரம் டன் உரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கொழும்பு நகரில் உள்ள இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியதாவது:
நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்கு நறுமணம் சேர்க்கும் வகையில் 21 ஆயிரம் டன் உரம், இலங்கை மக்களுக்கான இந்தியாவின் சிறப்பு ஆதரவு திட்டத்தின் கீழ் இந்திய தூதர் முறைப்படி வழங்கியுள்ளார் என தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 44 ஆயிரம் டன் உரம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையும் சேர்த்து 2022-ம் ஆண்டில் மொத்தம் அமெரிக்க டாலர் மதிப்பில் 400 கோடி அளவுக்கு உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த உரம் ஆனது உணவு பாதுகாப்பு மற்றும் இலங்கையின் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதில் பங்கு வகிக்கும் என கூறப்பட்டுள்ளது.
- இந்திய பெருங்கடலில் ராணுவ தளத்தை உருவாக்க சீனா தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
- சீனா இந்தியாவை சுற்றியுள்ள அனைத்து நாடுகளிலும் ராணுவ தளங்களை நிறுவி இருக்கிறது.
கொழும்பு:
சீன உளவு கப்பல் யுவான் வாங்-5 கடந்த 16-ம் தேதி இலங்கை துறைமுகத்துக்கு வந்தது. அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த கப்பல் தென் இந்தியா முழுவதையும் உளவு பார்க்கும் ஆற்றல் கொண்டிருப்பதால் மத்திய அரசு இந்திய கடற்படை கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.
இந்த உளவு கப்பல் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் 22-ம் தேதி வரை நிற்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் உளவு கப்பலுக்கு எரிபொருள் நிரப்பும் பணிகள் நடந்து வந்தன. எரிபொருள் தவிர உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை சேகரிக்கும் பணியிலும் உளவு கப்பலைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், எரிபொருள், உணவு பொருட்கள் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ததைத் தொடர்ந்து சீன உளவு கப்பலான யுவான் வாங் 5 கப்பல் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து இன்று புறப்பட்டது.
சீன உளவு கப்பல் இந்தியாவின் செயற்கை கோள்களையும், தென் இந்தியாவில் உள்ள கடற்படை தளங்களையும் உளவு பார்க்கும் என்று கருதப்பட்டது. ஆனால் அத்தகைய பணிகள் எதையும் செய்யக் கூடாது என்று இலங்கை நிபந்தனை விதித்து இருந்தது.
- இலங்கை வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்துவிட்டு வெளிநாடு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- சட்ட விரோதமான முறையில் சுற்றுலா விசா மூலம் தொழில் செய்ய செல்ல வேண்டாம்
சுற்றுலா விசாக்கள் மூலம் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளுக்கு அனுப்பும் மோசடியாளர்கள், ஆள் கடத்தல் காரர்களிடம் யாரும் சிக்கி கொள்ள வேண்டாம் என இலங்கை நாட்டு மக்களுக்கு அங்குள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும்போது வேலை மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு முக்கியமானது. எனவே அவர்கள் இலங்கை வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்துவிட்டு வெளிநாடு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்ட விரோதமான முறையில் சுற்றுலா விசா மூலம் தொழில் செய்ய செல்ல வேண்டாம் என அந்நாட்டு அமைச்சர் மனுஷ நாணயக்காரா தெரிவித்து உள்ளார்.
- ராஜபச்சே குடும்பத்தினர் மீது கோபமாக இருப்பதால் மகிந்த ராஜபக்சே அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவார் என்ற பேச்சு அடிபட்டது.
- ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவை வழி நடத்துவதற்கு நான் தேவையா என்பதை கட்சி தான் தீர்மானிக்க வேண்டும்.
இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி அந்நாட்டையே ஒரு புரட்டு புரட்டி போட்டு உள்ளது. வரலாறு காணாத வகையில் அத்யாவசிய பொருட்களின் விலை அனைத்தும் உயர்ந்து விட்டதால் பொதுமக்கள் இன்னும் தவியாய் தவித்து வருகின்றனர்.
அங்கு வாழ வழி தெரியாமல் பல குடும்பங்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் வெகுண்டு எழுந்ததால் அங்கு அரசியல் மாற்றமும் ஏற்பட்டது. அதிபராக இருந்த கோத்தபய ராஜபச்சே சொந்த நாட்டைவிட்டு ஓடி விட்டார். அவர் தற்போது தாய்லாந்து நாட்டில் அடைக்கலம் புகுந்துள்ளார்.
பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அவர் வெளிநாட்டுக்கு செல்ல அங்குள்ள கோர்ட்டு தடை விதித்து உள்ளது. இதனால் அவர் எங்கும் தப்பி செல்ல முடியாமல் இலங்கையிலேயே முடங்கி கிடக்கிறார்
பொதுமக்கள் தொடர்ந்து ராஜபச்சே குடும்பத்தினர் மீது கோபமாக இருப்பதால் மகிந்த ராஜபக்சே அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவார் என்ற பேச்சு அடிபட்டது. இதனை அவர் மறுத்து உள்ளார்.
இதுதொடர்பாக மகிந்த ராஜபக்சே அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போது இல்லை. நான் தொடர்ந்து அரசியலில் இருப்பேன். நேரம் வரும் போது மட்டுமே ஓய்வு பெறுவேன். அதுவரை நான் அரசியலில் இருப்பேன். ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவை வழி நடத்துவதற்கு நான் தேவையா என்பதை கட்சி தான் தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் நான் ஒரு வக்கீல் என்னால் கோர்ட்டில் வாதாட முடியும். தேவைப்பட்டால் நான் கோர்ட்டுக்கு செல்லவும் தயார்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.






