என் மலர்
இலங்கை
- முதலில் ஆடிய இலங்கை அணி 268 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 269 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
அம்பாந்தோட்டை:
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது.
இந்நிலையில், முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 268 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அசலங்கா பொறுப்புடன் ஆடி 91 ரன்கள் எடுத்தார். டி சில்வா 51 ரன்னும் எடுத்தார். நிசாங்கா 38 ரன் சேர்த்தார்.
இதையடுத்து, 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் ஜட்ரன் பொறுப்புடன் ஆடி 98 ரன்னில் அவுட்டானார். ரஹ்மத் ஷா 55 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹஸ்மத்துல்லா ஷாகிடி 38 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 46.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது.
- கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது.
- இலங்கைக்கு இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உதவி அளித்தன.
கொழும்பு :
கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால் பெட்ரோல், டீசல், மருந்து, உணவு பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தது.
இலங்கைக்கு இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உதவி அளித்தன. இந்தியா மொத்தம் ரூ.32 ஆயிரத்து 800 கோடி கடன் அளித்தது.
அவற்றில் ஒரு பகுதியாக, ரூ.8 ஆயிரத்து 200 கோடி கடன் அளிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் மாதம், பாரத ஸ்டேட் வங்கிக்கும், இலங்கை அரசுக்கும் இடையே கையெழுத்தானது. இந்த கடனின் கால அளவு 2024-ம் ஆண்டு மார்ச் மாதம்வரை ஆகும்.
இருப்பினும், பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னும் மீளாத இலங்கை, மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க பணம் தேவைப்படுவதால், மேற்கண்ட கடன் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்குமாறு வேண்டுகோள் விடுத்தது.
இந்தியாவும் அதை ஏற்றுக்கொண்டு, ரூ.8 ஆயிரத்து 200 கோடி கடனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. இதுதொடர்பான திருத்த ஒப்பந்தம், இலங்கை மந்திரி சினேகன் சேமா முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
இதன்மூலம், இந்தியா அளித்த கடன்தொகையை அத்தியாவசிய பொருட்கள் வாங்க இலங்கை மேலும் ஓராண்டு காலத்துக்கு பயன்படுத்த முடியும் என்று இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
- 10க்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடை விதித்து கடந்த ஆண்டு மே மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
- நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் மகிந்த தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக மக்கள் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவளர்கள், போராட்டக்காரர்களை கடுமையாக தாக்கினர். வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டனர். 300 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த துறைமுக மாஜிஸ்திரேட் கோர்ட், ராஜபக்சே உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடை விதித்து கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது.
ராஜபக்சேவின் சகோதரரும் அதிபருமான கோத்தபய ராஜபக்சே பதவி விலகும்படி வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் மகிந்த தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே வெளிநாடுகளுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடையை நீதிமன்றம் நீக்கி உள்ளது. அத்துடன் 4 அரசியல் தலைவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகளை அவர்களிடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.
- மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது.
- மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் பதவி வழங்க உள்ளதாக வெளியான தகவலை ஆளும் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கொழும்பு:
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் வெடித்தது.
இதையடுத்து பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ஆகியோர் பதவி விலகினர்.
அதே போல் ராஜபக்சே குடும்பத்தினரும் ஆட்சி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தனர். ஆளும் பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கே அதிபர் ஆனார். பிரதமராக தினேஷ் குணவர்தனே உள்ளார்.
இந்த நிலையில் மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி தலைநகர் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் மகிந்த ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் பரவியது.
இந்த நிலையில் மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் பதவி வழங்க உள்ளதாக வெளியான தகவலை ஆளும் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கூறும்போது, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக்கும் நடவடிக்கை எதுவும் இல்லை. அது போன்ற கோரிக்கையை அதிபரிடம் இலங்கை பொதுஜன பெரமுனா முன் வைக்கவில்லை என்றார்.
- இலங்கையில் பெரும் வன்முறை வெடித்தது.
- 200-க்கும் அதிகமானோர் பாடுகாயம் அடைந்தனர்.
கொழும்பு :
இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்குள்ளான அந்த நாட்டு மக்கள் இந்த நெருக்கடிக்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என கூறி கடந்த ஆண்டின் தொடக்கத்தில் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த போராட்டம் பல மாதங்களாக அமைதியாக நடந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 9-ந் தேதி அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கினர். இதனால் அங்கு பெரும் வன்முறை வெடித்தது. இதில் 10 பேர் பலியாகினர். 200-க்கும் அதிகமானோர் பாடுகாயம் அடைந்தனர்.
இந்த வன்முறையை தொடர்ந்து, மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகும் போராட்டங்கள் தொடர்ந்த நிலையில் ஜூலை மாதம் நாட்டைவிட்டு தப்பியோடிய அதிபர் கோத்தபய ராஜபக்சே பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் ராஜபக்சே சகோதரர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்த மே-9 வன்முறையை நினைவுகூரும் நிகழ்ச்சிகளை நடத்த போராட்டக்குழுக்கள் முடிவு செய்திருந்தன.
ஆனால் இந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டுமென போலீசார் கொழும்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு மே-9 வன்முறையை நினைவுகூரும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தனர்.
- கொழும்புவில் உள்ள துறைமுகத்தின் 6-ம் எண் நுழைவு வாயில் பகுதிக்குள் 8 பேர் கும்பல் அத்துமீறி நுழைய முயன்றனர்.
- கும்பலில் உள்ள சிலர் போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள்’ என்று தெரிவித்தார்.
கொழும்பு:
இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள துறைமுகத்தின் 6-ம் எண் நுழைவு வாயில் பகுதிக்குள் 8 பேர் கும்பல் அத்துமீறி நுழைய முயன்றனர். துறைமுகத்துக்கு செல்லும் நெடுஞ்சாலையில் விலை உயர்ந்த பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் அவர்கள் செல்ல முயற்சி செய்தனர். இதையடுத்து பாதுகாப்பு வீரர் உடனே துப்பாக்கி சூடு நடத்தினார். அத்துமீறி நுழைய முயன்றவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
துப்பாக்கி சத்தத்தை கேட்டு மற்ற பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். அப்போது துப்பாக்கி சூட்டில் 8 பேர் காயம் அடைந்து கீழே கிடந்தனர். இதில் 3 பெண்கள் அடங்குவர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, 'துறைமுகத்தில் இரும்பு திருட வந்த 2 பேரை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்தபோது அவர்களை மீட்க கும்பல் அங்கு வந்தது. அவர்கள் ஒரு பாதுகாப்பு வீரரிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றனர். இதனால் மற்றொரு வீரர் அந்த கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். அந்த கும்பலில் உள்ள சிலர் போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள்' என்று தெரிவித்தார்.
- இப்போது உணவுத் தட்டுப்பாடு இல்லை.
- எந்த ஒரு சமூகத்தையும் நாம் சிதைக்கக்கூடாது.
கொழும்பு :
இலங்கையில் பல பத்தாண்டுகளாக நீடித்து வரும் தமிழர் பிரச்சினை தொடர் கதையாகவே நீடிக்கிறது. இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
தற்போது இந்த ஆண்டு இறுதிக்குள்ளேயே இந்த பிரச்சினைக்கு இறுதி தீர்வு காண விரும்புவதாக நேற்று அவர் தெரிவித்தார். உழைப்பாளர் தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு வழங்கிய செய்தியில் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் வகையில், நாட்டின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு விரும்புகிறேன். அப்படி தீர்வு எட்டப்பட்டால் மட்டுமே சர்வதேச நிதியத்தின் உதவியுடன் நாட்டின் தற்போதைய பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். ஏனெனில் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பது சர்வதேச நிதியம் விதித்த நிபந்தனைகளில் ஒன்றாகும். இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்துகிறோம்.
அதன்படி இந்த ஆண்டு இறுதிக்குள் ஏதாவது ஒரு உடன்பாட்டுக்கு வர முடியும் என்று நம்புகிறேன். எந்த ஒரு சமூகத்தையும் நாம் சிதைக்கக்கூடாது. பெரும்பான்மை சிங்களர், தமிழ், முஸ்லிம், பர்கர் மற்றும் ஏனைய சிறுபான்மைக் குழுக்களைப் பாதுகாத்து நாம் முன்னேற வேண்டும். அதை அடைவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்.
நாட்டில் தற்போது பொருளாதார நிலைத்தன்மையை உருவாக்கியுள்ளோம். இப்போது உணவுத் தட்டுப்பாடு இல்லை. நாட்டில் ஜனநாயகம் நடைமுறையில் உள்ளது. அச்சுறுத்தல்கள் இன்றி பாராளுமன்றம் கூடுகிறது. அனைவரும் தங்கள் பணியை தடையின்றி மேற்கொள்கின்றனர்.
சர்வதேச நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதே நமது அடுத்த பணி. 2024-ம் ஆண்டுக்குள் தேவையான சட்டத்தை உருவாக்கி பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவோம்.
இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கூறினார்.
இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண, தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்க வகை செய்யும் 13-வது சட்ட திருத்தத்தை முழுவதுமாக அமல்படுத்த வேண்டும் என ரணில் விக்ரமசிங்கே ஏற்கனவே கூறி இருந்தார்.
ஆனால் இதற்கு சிங்களர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடத்தப்பட்ட பல்வேறு அனைத்துக்கட்சி கூட்டங்களில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த சூழலில் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் விடுத்திருக்கும் அழைப்புக்கு சிங்கள கட்சிகள் செவிசாய்க்குமா என்பது போகப்போக தெரியும்.
- இலங்கை தொழிலாளர்களின் பெருமையை உலகத்துக்கு எடுத்துக் காட்டுகிறோம்.
- நாட்டின் தொழிலாளர்கள் அனைவரும் கரம் கோர்க்க வேண்டும்.
கொழும்பு :
மே தினத்தையொட்டி இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று வாழ்த்துச் செய்தியை வெளியிட்டார்.
அதில், 'நம் நாடு கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார சீர்குலைவுக்கு உள்ளானது. பொருளாதாரத்தை சீர்படுத்துவதற்கான கடினமான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளுக்காக நாம் காத்திருந்தபோது, தொழிலாளர்கள் அதற்கு துணிவோடும், பொறுமையோடும் ஆதரவு அளித்தனர். தற்போது மே தினத்தை கொண்டாடும் வேளையில், இலங்கை தொழிலாளர்களின் பெருமையை உலகத்துக்கு எடுத்துக் காட்டுகிறோம்.
வருகிற 2048-ம் ஆண்டு, சுதந்திர நூற்றாண்டை கொண்டாடும்போது இலங்கை ஒரு வளர்ந்த நாடாகும். அதற்கான பணியில் நாட்டின் தொழிலாளர்கள் அனைவரும் கரம் கோர்க்க வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட்ட இந்த அர்த்தமுள்ள சர்வதேச தொழிலாளர் தினத்தில் நாம் அவர்களை வாழ்த்துகிறோம்.'
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இலங்கை அணி முதல் இன்னிங்சில் 704 ரன்கள் எடுத்தது.
- குசால் மெண்டிஸ், நிசான் மதுஷ்கா இரட்டை சதமடித்தனர்.
காலே:
இலங்கை-அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி காலேயில் நடந்தது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் ஆடிய அயர்லாந்து 492 ரன்னில் ஆல் அவுட்டானது. பார் ஸ்டிர்லிங் 103 ரன்னில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கர்டிஸ் கேம்பெர் 111 ரன்னில் வெளியேறினார். கேப்டன் பால்பிரின் 95 ரன்னில் அவுட்டானார். டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து 400 ரன்களுக்கு மேல் எடுப்பது இது முதல்முறையாகும்.
இலங்கை சார்பில் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ, அசிதா பெர்னாண்டோ தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 704 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. நிசான் மதுஷ்கா, குசால் மெண்டிஸ் இரட்டை சதமடித்தனர். மதுஷ்கா 205 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 245 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கருணரத்னே 115 ரன்னில் அவுட்டானார். மேத்யூஸ் சதமடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 212 ரன்கள் பின்தங்கிய நிலையில், அயர்லாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. 5ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இலங்கை அணியின் பந்துவீச்சு துல்லியமாக இருந்ததால் விக்கெட்டுகள் மளமளவென விழுந்தன.
ஹாரி டெக்ட்ர் அரை சதமடித்து 85 ரன்னில் ஆட்டமிழந்தார். பால்பிரின் 46 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், அயர்லாந்து 2வது இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அத்துடன் டெஸ்ட் தொடரையும் 2-0 என கைப்பற்றியது.
ஆட்டநாயகன் விருது பிரபாத் ஜெயசூர்யாவுக்கும், தொடர் நாயகன் விருது குசால் மெண்டிசுக்கும் வழங்கப்பட்டது.
- அயர்லாந்து முதல் இன்னிங்சில் 492 ரன்னில் ஆல் அவுட்டானது.
- இலங்கை அணி 3 விக்கெட்டுக்கு 704 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.
காலே:
இலங்கை-அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் ஆடிய அயர்லாந்து 492 ரன்னில் ஆல் அவுட்டானது. பார் ஸ்டிர்லிங் 103 ரன்னில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கர்டிஸ் கேம்பெர் 111 ரன்னில் வெளியேறினார். கேப்டன் பால்பிரின் 95 ரன்னில் அவுட்டானார். லார்கன் டக்கெர் 80 ரன்னுடனும் எடுத்தனர்.
டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து 400 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல்முறையாகும்.
இலங்கை சார்பில் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ, அசிதா பெர்னாண்டோ தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் கருணரத்னே, நிஷான் மதுஷ்கா ஆகியோர் நிதானமாக ஆடி சதமடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 228 ரன்கள் சேர்த்த நிலையில் கருணரத்னே 115 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.
மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட்டுக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. மதுஷ்கா 149 ரன்னும், குசால் மெண்டிஸ் 83 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மதுஷ்கா, குசால் மெண்டிஸ் 268 ரன்கள் சேர்த்தது. மதுஷ்கா இரட்டை சதமடித்து 205 ரன்னில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து குசால் மெண்டிஸ் இரட்டை சதமடித்து அசத்தினார். அவர் 245 ரன்னில் ஆட்டமிழந்தார். மேத்யூஸ் சதமடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், இலங்கை அணி 3 விக்கெட்டுக்கு 704 ரன்கள் எடுத்து, டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, 212 ரன்கள் பின் தங்கிய நிலையில், அயர்லாந்து அணி இரண்டாவது இன்ன்னிங்சை தொடர்ந்தது.
நான்காம் நாள் முடிவில் அயர்லாந்து 2 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்துள்ளது.
இன்று இறுதி நாள் என்பதால் அயர்லாந்து அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை வெற்றிபெற போராடுவது உறுதி.
- அயர்லாந்து முதல் இன்னிங்சில் 492 ரன்னில் ஆல் அவுட்டானது.
- மூன்றாவது நாள் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட்டுக்கு 357 ரன் எடுத்துள்ளது.
காலே:
இலங்கை-அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் ஆடிய அயர்லாந்து 492 ரன்னில் ஆல் அவுட்டானது. பார் ஸ்டிர்லிங் 103 ரன்னில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கர்டிஸ் கேம்பெர் 111 ரன்னில் வெளியேறினார். கேப்டன் பால்பிரின் 95 ரன்னில் அவுட்டானார். லார்கன் டக்கெர் 80 ரன்னுடனும் எடுத்தனர்.
டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து 400 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல்முறையாகும். அத்துடன் இன்னிங்சில் இரு அயர்லாந்து வீரர்கள் சதம் காண்பதும் இதுவே முதல் நிகழ்வாகும்.
இலங்கை சார்பில் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ, அசிதா பெர்னாண்டோ தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் கருணரத்னே, நிஷான் மதுஷ்கா ஆகியோர் நிதானமாக ஆடினர். இருவரும் சதமடித்து அசத்தினர்.
முதல் விக்கெட்டுக்கு 228 ரன்கள் சேர்த்த நிலையில் கருணரத்னே 115 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.
மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. மதுஷ்கா 149 ரன்னும், குசால் மெண்டிஸ் 83 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- உள்நாட்டுப்போர் நடந்து வரும் சூடானில் இலங்கை மக்கள் 30 பேரும் தத்தளித்து வருகின்றனர்
- இந்தியா ஆதரவுக்கரம் நீட்ட முன் வந்துள்ளது.
கொழும்பு:
உள்நாட்டுப்போர் நடந்து வரும் சூடானில் இலங்கை மக்கள் 30 பேரும் தத்தளித்து வருகின்றனர். அவர்களை அங்கிருந்து பத்திரமாக மீட்டுக்கொண்டு வருவதற்கு இந்தியா உதவிக்கரம் நீட்டுகிறது. இதற்காக இந்தியாவை இலங்கை மனதார பாராட்டி உள்ளது.
இதையொட்டி இலங்கை வெளியுறவு மந்திரி அலி சப்ரி டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
சூடானில் தவித்து வருகிற இலங்கை மக்களின் நிலை குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அவர்களைப் பத்திரமாக மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில் இந்தியா ஆதரவுக்கரம் நீட்ட முன் வந்துள்ளது. அதை நாங்கள் பாராட்டுகிறோம். அடுத்த சில நாட்களில் இது நடந்தேறும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






