என் மலர்
உலகம்

அமெரிக்காவின் வரி விதிப்புகளால் பிரதமர் மோடி என் மீது வருத்தத்தில் உள்ளார் - டிரம்ப்
- எனக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே மிகச் சிறந்த உறவு உள்ளது என்று டிரம்ப் தெரிவித்தார்
- அமெரிக்காவின் வரிக் கொள்கைகள் காரணமாக நாம் பணக்காரர்களாகி வருகிறோம்.
ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்குவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்விவகாரத்தில் இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தினார். இதை இந்தியா கடுமையாக எதிர்த்த நிலையில் இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதற்கிடையே நேற்று முன்தினம் ரஷிய கச்சா எண்ணை விவகாரத்தில் இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்த என்னால் முடியும் என்று டிரம்ப் தெரிவித்தார். மேலும் நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் மோடிக்கு தெரியும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்புகளால் பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இல்லை என்று டிரம்ப் தெரிவித்து உள்ளார். குடியரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் டிரம்ப் பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-
எனக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே மிகச் சிறந்த உறவு உள்ளது. ஆனால் இந்தியா அதிக வரி செலுத்துவதால் அவர் என் மீது மகிழ்ச்சியாக இல்லை. அமெரிக்காவின் வரி விதிப்புகளால் என் மீது வருத்தத்தில் இருக்கிறார். ஆனால் இப்போது இந்தியா ரஷியாவிடமிருந்து எண்ணை வாங்குவதை கணிசமாகக் குறைத்துள்ளது.
அமெரிக்காவின் வரிக் கொள்கைகள் காரணமாக நாம் பணக்காரர்களாகி வருகிறோம். இதை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். இந்த வரி விதிப்புகளால் அமெரிக்கா முன்பை விட பொருளாதார ரீதியாகவும், தேசிய பாதுகாப்பு ரீதியாகவும், வலிமையானதாகவும், மரியாதைக்குரிய நாடாகவும் மாறியுள்ளது.
இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.






