என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    • பாகிஸ்தானில் உள்ள சவுதி மக்கள், அதிகாரிகள் வெளியே செல்வதை தவிர்க்க வலியுறுத்தல்.
    • ஆஸ்திரேலிய அதிகாரிகள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தல்.

    பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இஸ்லாமாபாத்தின் மேரியட் ஹோட்டலில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் அங்கு அமெரிக்கர்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவை தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பாகிஸ்தானில் உள்ள சவுதி அரேபிய குடிமக்கள், அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் தேவையை தவிர வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அதில் கூறப்பட்டுள்ளது.


    இதேபோல் ஆஸ்திரேலியாவும், பாகிஸ்தானில் உள்ள தனது குடிமக்களுக்கு பயண ஆலோசனையை வெளியிட்டது. இஸ்லாமாபாத்தில் உள்ள ஆஸ்திரேலிய அதிகாரிகள் விழிப்புணர்வுடன் இருக்கவும், தேவையற்ற பயணத்தை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக விழிப்புடன் செயல்படவும், ஊடகங்களை தொடர்ந்து கண்காணிக்குமாறும் அந்த அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • அமெரிக்கர்களை தாக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல்.
    • வழிபாட்டுத் தலங்களில் அமெரிக்க ஊழியர்கள் விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தல்

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரம் உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது ஊழியர்கள் உள்பட அமெரிக்க மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இஸ்லாமாபாத்தின் மேரியட் ஹோட்டலில் அமெரிக்கர்களை தாக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளதாகவும், தீவிரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளதால் அங்கு அமெரிக்கர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் வழிபாட்டுத் தலங்களில் அமெரிக்க தூதரக ஊழியர்கள் விழிப்புடன் செயல்படவும், அதிக மக்கள் கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் நகரம் சிவப்பு எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளதால், விடுமுறை காலம் முழுவதும் அங்கு அத்தியாவசியமற்ற மற்றும் அதிகாரப்பூர்வமற்ற பயணங்களை அமெரிக்கர்கள் தவிர்க்குமாறும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இஸ்லாமாபாத்தின் அமைதியை சீர்குலைக்கும் அச்சுறுத்தல்களைத் தவிர்க்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நகர துணை கமிஷனர் இர்பான் நவாஸ் மேமன் தெரிவித்துள்ளார்.

    • பலூசிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் குண்டுகள் வெடித்தன.
    • இதில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது.

    லாகூர்:

    பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தலிபான்களின் கிளை பயங்கரவாத அமைப்பு தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் ஷப்சல் என்ற பரபரப்பான சாலை உள்ளது. இந்தப் பகுதியில் இன்று மாலை வாகனங்கள் சென்றுகொண்டிருந்தபோது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கையெறி குண்டு ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. இந்த சம்பவத்தில் அங்கு நின்றுகொண்டிருந்த 4 பேர் படுகாயமடைந்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.

    ஆனால், பலுசிஸ்தான் நகரின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் பலியாகினர் எனவும், மேலும் 10 பேர் காயம் அடைந்துள்ளனர் என அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

    • அரசியல் கட்சியினர் பலர் இம்ரான்கானை விமர்சனம் செய்து வருகின்றனர்.
    • பழிவாங்குவதற்காக தற்போதைய அரசு ஒத்துழைப்புடன் பரப்பி விடப்படுவதாக இம்ரான் கட்சி தெரிவித்தது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியை இழந்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான், தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

    இதற்கிடையே, பெண் ஒருவருடன் தொலைபேசியில் ஆபாசமாக உரையாடுவதும், தமது வீட்டுக்கு வரும்படி அந்தப் பெண்ணை இம்ரான்கான் வற்புறுத்துவது போன்ற ஆடியோ பதிவை பத்திரிகையாளர் ஒருவர் யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    இதுதொடர்பாக அரசியல் கட்சியினர் பலரும் இம்ரான்கானை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த ஆடியோ விவகாரம் குறித்து, பாகிஸ்தான் தெஹ்ரிக் - இ - இன்சாப் கட்சியின் மூத்த தலைவர் அர்ஸ்லன் காலித் கூறுகையில், எங்கள் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் ஒரு பெண்ணுடன் போனில் ஆபாசமாக பேசுவது போல வெளியிடப்பட்டுள்ள ஆடியோ போலியானது. அவரைப் போலவே குரலை பயன்படுத்தி விஷமத்தனம் செய்துள்ளனர். இது அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்காக தற்போதைய அரசு ஒத்துழைப்புடன் பரப்பி விடப்படுகிறது என தெரிவித்தார்.

    • சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததால் அந்நாட்டு ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
    • பாபர் ஆசமை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் வலியுறுத்தினர்.

    இஸ்லாமாபாத்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டியில் விளையாடி அந்த தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்தது.

    சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததால் அந்நாட்டு ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த தோல்வி காரணமாக பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.

    அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் கேப்டன்ஷிப் தனது பேட்டிங்கை பாதிக்கவில்லை என்று பாபர் ஆசம் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் அணி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆசமை நீக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த உடனேயே பாபர் ஆசம் மற்றும் பயிற்சியாளர் சக்லைன் லாகூருக்கு சென்றனர்.

    அங்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இதில் இங்கிலாந்துக்கு எதிரான படுதோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தேர்வு குழு தலைவர் முகமது வாசிமும் பங்கேற்றார். 3 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் கேப்டன் பதவி, பயிற்சியாளர் பங்கு, அணியின் ஒவ்வொரு அம்சமும் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட இருந்தது. ஆனால் அணி தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

    பாபர் ஆசம் ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பதே சிறந்தது என்றும், டெஸ்ட் கேப்டன் பதவியை ஷான் மசூத் அல்லது முகமது ரிஸ்வானுக்கு அளிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் கருதுவதாகவும், டெஸ்ட் கேப்டனாக பாபர் ஆசமின் எதிர்காலம் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டது என்றும் கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    அதே வேளையில் பாபர் ஆசம் வருகிற ஜூலை மாதம் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து மாற்றப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து, ரமீஸ் ராஜா நீக்கப்பட்டு, அடுத்த 4 மாதங்களுக்கு விளையாட்டை வழிநடத்த நஜாம் சேத்தி தலைமையிலான 14 பேர் கொண்ட குழுவை அரசாங்கம் நியமித்துள்ளது.

    • அரசியல் கட்சியினர் பலரும் இம்ரான்கானை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
    • இம்ரான்கான் இதுகுறித்து உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியை இழந்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான், தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் இம்ரான்கான் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் பெண் ஒருவருடன் தொலைபேசியில் ஆபாசமாக உரையாடுவதும், தமது வீட்டுக்கு வரும்படி அந்த பெண்ணை அவர் வற்புறுத்துவது போன்ற ஆடியோ பதிவை பத்திரிகையாளர் ஒருவர் யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    இதுதொடர்பாக அரசியல் கட்சியினர் பலரும் இம்ரான்கானை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இம்ரான்கான் இதுகுறித்து உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

    அதே சமயம் இம்ரான்கானின் நற்பெயரை கெடுப்பதற்காக போலியான ஆடியோ ஒன்றை அவரது அரசியல் எதிரிகள் வெளியிட்டுள்ளதாக அவரின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

    • பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டுள்ளார்.
    • புதிய தலைவராக நஜாம் சேத்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கராச்சி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக கடந்த ஆண்டு செப்டம்பரில் ரமீஸ் ராஜா நியமிக்கப்பட்டார்.

    பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து, பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை 3-0 என கைப்பற்றியது. இதனால் பாகிஸ்தான் நிர்வாகம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

    இந்நிலையில், இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக நஜாம் சேத்தி நியமினம் செய்யப்பட்டுள்ளார்.

    • கடையில் தீப்பற்றிய நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த மேலும் பல சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்தன.
    • பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள லாஸ்பேலா நகரில் சந்தை ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான கடைகள் அமைந்துள்ளன.

    இந்தநிலையில் நேற்று இந்த சந்தை வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள ஒரு கடையில் வைக்கப்பட்டிருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது.

    இதில் கடையில் தீப்பற்றிய நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த மேலும் பல சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீ அருகில் உள்ள மற்ற கடைகளுக்கு பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

    அதோடு சந்தையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டஜனுக்கும் அதிகமான வாகனங்களும் தீக்கிரையாகின. இந்த கோர விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.

    மேலும் 25 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    • 20 சதவீத அரசு பணியாளர்கள் வீட்டிலிருந்து சுழற்சி முறையில் வேலை செய்ய நடவடிக்கை.
    • அரசியல்வாதிகள் இந்த மாற்றங்களை முதலில் ஏற்று கொள்ள அமைச்சர் வலியுறுத்தல்.

    இஸ்லாமாபாத்:

    கடும் பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாகிஸ்தான் தவித்து வருகிறது. தற்போது புதிதாக மின்சார உற்பத்தி பாதிப்பு பிரச்சினையும் தலைதூக்கி உள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மற்றும் நீடித்து வரும் ரஷியா-உக்ரைன் போர் காரணமாக பாகிஸ்தான் எரிசக்திதுறை அதிக நெருக்கடியை சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. இதனால் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளும் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேசிய எரிசக்தி பாதுகாப்பு திட்டத்தை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அண்மையில் அறிவித்தார். இது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளதாவது:  


    புதிய திட்டத்தின் அடிப்படையில் பாகிஸ்தானில் உள்ள சந்தைகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் இரவு 8 மணிக்குள் அடைக்கப்பட வேண்டும், திருமண மண்டபங்கள் இரவு 10 மணி வரை செயல்படலாம். 20 சதவீத அரசு பணியாளர்கள் வீட்டிலிருந்து சுழற்சி முறையில் வேலை செய்தால், ரூ.62 பில்லியன் வரை சேமிக்க முடியும், ஆற்றல் திறன் கொண்ட மின்விசிறிகள் மற்றும் பல்புகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

    பெட்ரோல் நுகர்வைக் குறைக்க பாரம்பரிய மோட்டார் சைக்கிள்களுக்குப் பதிலாக மின்சார பைக்குகள் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக மின்சார பைக்குகள் இறக்குமதி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதுள்ள மோட்டார் சைக்கிள்களை மாற்றியமைக்க உற்பத்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

    நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதால், அன்றாட நடைமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும். விரயம் செய்யும் கலாச்சாரத்தை இனி எங்களால் தாங்க முடியாது, அரசியல்வாதிகள் இந்த மாற்றங்களை முதலில் ஏற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். நாடு தழுவிய அளவில் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு மாகாணங்களை அணுகும், வியாழக்கிழமைக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பாகிஸ்தான், இங்கிலாந்துக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது.
    • இங்கிலாந்தின் இளம் பந்துவீச்சாளர் ரெஹான் அஹமது 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    கராச்சி:

    பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது.

    முதலில் ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 304 ரன்களையும், இங்கிலாந்து அணி 354 ரன்களையும் எடுத்தது. இதையடுத்து நடந்த 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் 216 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து சார்பில் இளம் பந்துவீச்சாளர் ரெஹான் அஹமது 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் வீரர் என்ற சாதனையையும், ரெஹான் அகமது ஏற்படுத்தியுள்ளார்.

    ஏற்கனவே, ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அப்போது அவருக்கு 18 வயது 193 நாட்கள்.

    தற்போது 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரெஹான் அகமதுவுக்கு 18 வயது மற்றும் 126 நாட்கள் மட்டுமே முடிந்துள்ளது. இதன்மூலம் கடந்த 11 ஆண்டுகளாக நீடித்து வந்த சாதனையை முறியடித்துள்ளார்.

    • ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த நடவடிக்கையானது பேச்சுவார்த்தைக்கு தடையாக அமைந்துவிட்டது.
    • வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவரால் (மோடி) பிரச்சனையை தீர்க்க முடியும் என்று நான் இன்னும் நம்புகிறேன்.

    லாகூர்:

    பாகிஸ்தானில் பதவி நீக்கம் செய்யப்பட்ட இம்ரான் கான், தனது இல்லத்தில் வெளிநாட்டு செய்தியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    எனது மூன்றரை வருட பதவிக் காலத்தில் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்பினேன். ஆனால் ஆர்எஸ்எஸ் சித்தாந்தமும், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த நடவடிக்கையும் அதற்கு தடையாக அமைந்துவிட்டது.

    2019 இல் காஷ்மீரின் அந்தஸ்தை இந்தியா ரத்து செய்த பிறகு, எனது அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. இந்தியா முதலில் தனது முடிவை மாற்றிக் கொண்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரது பதவிக் காலத்தில் இந்தியாவுக்கான வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்தியது யார்? என்ற கேள்விக்கு பதிலளித்த இம்ரான் கான், 'நான்தான் பாஸ். நான் வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்திக்கொண்டிருந்தேன். என்னை விடுங்கள். ஜெனரல் பஜ்வா இந்தியாவுடன் சிறந்த உறவை வைத்துக் கொள்வதில் இன்னும் அதிக விருப்பம் கொண்டிருந்தார், என குறிப்பிட்டார்.

    'வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவரால் (மோடி) பிரச்சனையை தீர்க்க முடியும் என்று நான் இன்னும் நம்புகிறேன். மோடி வலதுசாரி கட்சியில் இருந்து வந்தவர், அதனால் அவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும், காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் இதுபோன்ற எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண்பதை அந்த கட்சி எதிர்க்கிறது. எனினும், 2019 ஆகஸ்ட் 5 அன்று, அரசியலமைப்பின் 370வது பிரிவை இந்தியா ரத்து செய்த பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் முறிந்தன' என்றும் இம்ரான் கான் தெரிவித்தார்.

    • இரண்டாம் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 216 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
    • இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 55 ரன்கள் தேவை, கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ளன

    கராச்சி:

    பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது. இதில் 'டாஸ்' வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக் சதம் அடித்து அசத்தி அணியை சரிவில் இருந்து மீட்டார். இதனால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 81.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 354 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதையடுத்து 50 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது 2வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை ஜேக் லீச் வீழ்த்தினார். இதில் ஷாபிக் 26 ரன்னிலும், ஷான் மசூத் 24 ரன்னிலும், அடுத்து வந்த அசார் அலி ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் புகுந்த கேப்டன் பாபர் ஆசமும், ஷாகிலும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் அடித்தனர். அரைசதம் அடித்த நிலையில் பாபர் ஆசம் 54 ரன்னிலும், ஷாகில் 53 ரன்னிலும், அடுத்து வந்த ரிஸ்வான் 7 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் பாகிஸ்தான் அணி 74.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் ரேஹன் அகமது 5 விக்கெட்டும், ஜேக் லீச் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 167 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த எளிய இலக்கை நோக்கி இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, மூன்றாம் நாளான இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. நாளை நான்காவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ள நிலையில், வெற்றிக்கு இன்னும் 55 ரன்கள் தேவை. இந்த இலக்கை இங்கிலாந்து எளிதில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இலக்கை வெற்றிகரமாக அடைந்தால் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி முழுமையாக கைப்பற்றும்.

    ×