என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    • முதலில் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன் குவித்தது.
    • கேப்டன் பாபர் ஆசம் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் 58 பந்தில் 101 ரன் எடுத்தார்.

    லாகூர்:

    பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது டி20 போட்டி லாகூரில் நேற்று நடந்தது.

    முதலில் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. கேப்டன் பாபர் அசாம் அதிரடியாக விளையாடி சதமடித்தார். அவர் 58 பந்தில் 101 ரன்னும் (11 பவுண்டரி, 3 சிக்சர்), முகமது ரிஸ்வான் 34 பந்தில் 50 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்) இப்திகார் அகமது 19 பந்தில் 33 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

    தொடர்ந்து, விளையாடிய நியூசிலாந்து அணியால் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 154 ரன்களே எடுக்க முடிந்தது. இதன்மூலம் பாகிஸ்தான் 38 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மார்க் சேப்மேன் அதிகபட்சமாக 40 பந்தில் 65 ரன் (4 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார்.

    பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி நாளை நடக்கிறது.

    • அடுத்த 15 நாட்களுக்குள் பெட்ரோல் விலையை ரூ.10 முதல் ரூ.14 வரை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக நிதி மந்திரி இஷாக்தார் தெரிவித்துள்ளார்.
    • சர்வதேச சந்தையில் பெட்ரோலிய செலவுகள் அதிகரிப்பு மற்றும் நாணய விகித மாறுபாடு ஆகியவை காரணமாக பெட்ரோலிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாடு, பொருளாதார நெருக்கடியில் சிக்கி திணறி வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்து உள்ளன.

    கோதுமைக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். பாகிஸ்தானிடம் அன்னிய செலாவணி இருப்பு குறைந்து வருவதால் அந்நாட்டு அரசு பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறுகிறது.

    இதனால் பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்க ளின் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்படுகிறது. அடுத்த 15 நாட்களுக்குள் பெட்ரோல் விலையை ரூ.10 முதல் ரூ.14 வரை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக நிதி மந்திரி இஷாக்தார் தெரிவித்துள்ளார்.

    சர்வதேச சந்தையில் பெட்ரோலிய செலவுகள் அதிகரிப்பு மற்றும் நாணய விகித மாறுபாடு ஆகியவை காரணமாக பெட்ரோலிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.14.77 அதிகரித்து ரூ.286.77-க்கு விற்கப்படுகிறது. அதே போல் மண்எண்ணெய் லிட்டருக்கு ரூ.5.78 உயர்த்தப்பட்டு ரூ.186.07-க்கு விற்கிறது.

    அதே வேளையில் டீசல் விலை உயர்த்தப்படவில்லை. டீசல் லிட்டர் ரூ.293-க்கும், லைட் டீசல் ரூ.174.68-க்கும் விற்பனை ஆகிறது.

    இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. பாகிஸ்தானில் பண வீக்கம் மிகவும் மோசமாக உள்ளது. கடந்த மாதம் பணவீக்கம் 35 சதவீதமாக இருந்தது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 182 ரன்னில் ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய நியூசிலாந்து 84 ரன்னில் சுருண்டு தோற்றது.

    லாகூர்:

    நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று லாகூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 182 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிரடியாக ஆடிய சயிம் அயூப் 28 பந்தில் 47 ரன்னும், பகர் சமான் 47 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். பஹீம் அஷ்ரப் 22 ரன்கள் எடுத்தார்.

    நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 3 விக்கெட்டும், மில்னே, பென் லிஸ்டர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்ரி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி நியூசிலாந்து திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    அந்த அணியின் மார்க் சாப்மேன் அதிகபட்சமாக 34 ரன்களும், டாம் லாதம் 20 ரன்களும் எடுத்தனர்.

    இறுதியில், நியூசிலாந்து 15.3 ஓவரில் 94 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் 4 விக்கெட்டும், இமாத் வாசிம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ஹரிஸ் ராபுக்கு அளிக்கப்பட்டது.

    இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    • பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் திருமணம் இத்தாத் காலத்தில் தான் நடந்தது.
    • தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் இம்ரான்கானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான். முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர் கடந்த 2018-ம் ஆண்டு புஷ்ரா பீபி என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.

    இந்த மறுமணத்தில் மத விதிமீறல் நடந்ததாக புகார் எழுந்தது. அதாவது முஸ்லிம் மத சட்டப்படி ஒரு பெண்ணின் கணவர் இறந்தாலோ அல்லது அவர் திருமண முறிவு ஏற்பட்டாலோ, அந்த பெண் மறுமணம் செய்து கொள்ள 3 மாத காலம் காத்திருக்க வேண்டும். இந்த காலத்தை இத்தாத் காலம் என்பார்கள்.

    ஆனால் இம்ரான்கான் புஷ்ரா பீபியை இத்தாத் காலம் முடியும் முன்பே மறுமணம் செய்து கொண்டதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது. பொது வெளியில் இந்த தகவல் பரவியதால், இவர்களுக்கு நடந்த திருமணம் மத விதி மீறல் எனவும் இது தொடர்பாக அவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது.

    இந்த மனுமீதான விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பாகிஸ்தான் மதகுரு முப்தி முகமது சயீத் கூறியதாவது:-

    பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் திருமணம் இத்தாத் காலத்தில் தான் நடந்தது. இத்திருமணத்தை நடத்தி வைக்க என்னை இம்ரான்கான் லாகூர் அழைத்து சென்றார்.அங்கிருந்த பெண் ஒருவர், திருமணத்திற்கான அனைத்து நிபந்தனைகளும் சரியாக உள்ளது எனக்கூறியதால் நான் திருமணத்தை நடத்தி வைத்தேன் என்றார்.

    தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் இம்ரான்கானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    • தொழிற்சாலையில் இருந்து விஷ வாயு வெளியேறியதால் பரபரப்பு.
    • உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இரங்கல்.

    இஸ்லாமாபாத், பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் உள்ள ஜவுளி தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இதனிடையே தகவலின்பேரில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு அவர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பல மணிநேரம் நடந்த இந்த போராட்டத்தில் தொழிற்சாலையில் இருந்து விஷ வாயு வெளியேறியது. இதனால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    மேலும் தொழிற்சாலை இடிந்து விழுந்து மீட்பு பணியில் ஈடுபட்ட 4 தீயணைப்பு வீரர்கள் பலியாகினர். 14 பேர் படுகாயம் அடைந்தனர். எனவே அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தானில் உள்ள தனது தூதரகத்தை காலவரையின்றி மூடுவதாக ஸ்வீடன் அறிவித்துள்ளது.
    • ஸ்வீடனில் நடந்த குரான் எரிப்பு சம்பவத்துடன் தொடர்புபடுத்தி இம்முடிவை அரசு எடுத்திருப்பதாக பலர் நம்புகின்றனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஸ்வீடன் தூதரகம் பாதுகாப்பு காரணமாக காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. புலம்பெயர் பிரிவில் தற்போது எந்த விதமான கோரிக்கைகளையும் கையாள முடியாது என தூதரகத்தின் இணைய தளத்தில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    சமீபத்தில் ஸ்வீடனில் நடந்த குரான் எரிப்பு சம்பவத்துடன் தொடர்புபடுத்தி இந்த முடிவை அரசு எடுத்திருப்பதாக பலர் நம்புகின்றனர்.

    ஸ்வீடனைச் சேர்ந்த வலதுசாரி தீவிரவாதி ஜனவரி 21 அன்று ஸ்டாக்ஹோமில் உள்ள துருக்கிய தூதரகத்தில் போலீசார் முன்னிலையில் குரான் நகலை எரித்தான். இது உலகெங்கும் கடும் கண்டனத்தைப் பெற்றது.

    இந்தச் சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    ஏற்கனவே, மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை காரணமாக பாகிஸ்தானில் உள்ள தனது தூதரகத்தின் ஒரு பகுதியை கடந்த பிப்ரவரியில் சீனா தற்காலிகமாக மூடியது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தான் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அல்லல்படுகின்றனர்.
    • ரமலான் மாதத்தை கொண்டாடி வரும் சூழலில், உணவுப் பொருட்களின் விலை அதிகரித்திருப்பது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    நமது அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி திவாலானது. அந்த நாட்டு மக்கள் இன்னும் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நமது மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானும், இலங்கையின் அதே நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாததால் கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தானின் பொருளாதாரம் பலவீனமாக காணப்பட்டது.

    இப்படியான சூழலில் கொரோனா பெருந்தொற்றும், ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய பெரு வெள்ளமும் நிலைமையை மேலும் மோசமாக்கியது. இதனால் அந்த நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு சென்றது.

    அன்னிய செலாவணி கையிருப்பு தீர்ந்துபோகும் நிலையில் உள்ளதால் நாடு திவால் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பின் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. தற்போது ஒரு டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு ரூ.288 ஆக உள்ளது.

    இதனால் அங்கு பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை மட்டுமல்லாது அனைத்துப் பொருட்களின் விலை மற்றும் சேவைகளின் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.

    குறிப்பாக உணவுபொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் மக்கள் ரமலான் மாதத்தை கொண்டாடி வரும் சூழலில், உணவுப் பொருட்களின் விலை அதிகரித்திருப்பது அவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    பொதுவாக ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் இப்தாரின் போது பழங்களை சாப்பிடுவார்கள். ஆனால் பழங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு டஜன் வாழைப்பழம் ரூ.450-க்கும், ஒரு கிலோ ஆப்பிள் ரூ.400க்கும் விற்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விலைவாசி உயர்வால் நடுத்தர மற்றும் கீழ்தட்டில் இருக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அல்லல்படுகின்றனர்.

    அங்கு கோதுமைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு மையங்கள் மூலம் இலவசமாக கோதுமை மாவு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    இதை வாங்க மக்கள் முண்டியடித்து கொண்டு செல்லும்போது கூட்டநெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழும் சோகம் தொடர்கதையாக உள்ளது.

    • பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் வீட்டுக்குள் வாலிபர் ஒருவர் பலத்த பாதுகாப்பையும் மீறி நுழைந்தார்.
    • பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் வீட்டுக்குள் வாலிபர் ஒருவர் பலத்த பாதுகாப்பையும் மீறி நுழைந்தார். அவரை பாதுகாப்பு படை வீரர்கள் மடக்கி பிடித்து கைது செய்தனர். உடனே அந்த வாலிபர் இஸ்லாமாபாத் போலீசாரின் பயங்கரவாத எதிர்ப்பு துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். பிரதமர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் என்றும் அவர் மூன்று வெவ்வேறு பாதைகள் வழியாக பிரதமர் வீட்டுக்குள் நுழைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். அவரிடம் புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்த நபர், அதிக பாதுகாப்புள்ள பிரதமர் இல்லத்துக்குள் எப்படி நுழைந்தார் என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதை தலிபான்-பாகிஸ்தான் அமைப்பினர் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இனி வரும் காலங்களில் 24 மணி நேரமும் கேஸ் வழங்க முடியாது.
    • பெட்ரோலிய துறை அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு கராச்சி வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு கண்டனம்.

    பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் அங்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்தது. இந்தநிலையில் தற்போது சில தனியார் நிறுவனங்கள் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான கேஸ் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்தன. இதனால் அங்கு கேஸ் கையிருப்பு குறைந்து வருகிறது.

    இது குறித்து அந்த நாட்டின் பெட்ரோலிய துறை அமைச்சர் முஸ்டாக் மாலிக் கூறுகையில், "இனி வரும் காலங்களில் 24 மணி நேரமும் கேஸ் வழங்க முடியாது. மேலும் பணக்காரர்களுக்கு கூடுதல் விலையிலும், ஏழைகளுக்கு மானிய விலையிலும் கேஸ் வழங்கப்படும். தற்போது புனித ரமலான் மாதம் என்பதால் அதிகாலை ஷெகர் மற்றும் மாலை நோன்பு துறக்கும் இப்தார் நேரங்களில் மட்டும் தடையின்றி கேஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது" என தெரிவித்தார்.

    பெட்ரோலிய துறை அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு கராச்சி வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு கண்டனத்தை தெரிவித்து உள்ளது. கேஸ் வினியோகம் நிறுத்தப்பட்டால் தொழிற்சாலைகள் இயங்கவே முடியாது" என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • பஞ்சாப் தேர்தலை நடத்த உத்தரவிட வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
    • தேர்தல் நடத்தும்படி தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி மற்றும் பாதுகாப்பு சிக்கல் காரணமாக பஞ்சாப் மாகாண சட்டசபை தேர்தல் நடத்துவதை அரசு தாமதம் செய்தது. ஏப்ரல் 10ஆம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பின்னர் அக்டோபர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

    இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாஃப் கட்சி வலியுறுத்தியது. பஞ்சாப் தேர்தலை தாமதப்படுத்துவதற்கு பதிலாக, பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு பொதுத் தேர்தலை நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியது.

    பஞ்சாப் தேர்தலை நடத்த உத்தரவிட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் ஒத்திவைப்பு அறிவிப்பை ரத்து செய்தது. பஞ்சாப் மாகாணத்திற்கு மே 14 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது. தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. அதன்படி தேர்தல் ஆணையம் மே 14ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என புதிய அறிவிப்பை வெளியிட்டது.

    உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் கடும் அதிருப்தி அடைந்த அரசு, தீர்ப்பை நிராகரித்தது. மேலும், தீர்ப்பை நிராகரிப்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் (தேசிய சபை) இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து நீதித்துறைக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.

    • பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.
    • பொருளாதார நெருக்கடியால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பொருளாதார நெருக்கடியால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்களுக்குத் தேவையான அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், அந்நாட்டின் கராச்சி மாகாணம் சிந்து தொழிற்பேட்டை பகுதியில் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. அந்தப் பொருட்களை வாங்க ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

    அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக குழந்தைகள் உள்பட பலர் மயக்கமடைந்து சுருண்டு விழுந்தனர். மயங்கி விழுந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி குழந்தைகள், பெண்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்த தொண்டு நிறுவன நிர்வாகிகளை கைது செய்தனர்.

    • பெண் டாக்டர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
    • பாகிஸ்தானில் இந்த மாதத்தில் 2 இந்து டாக்டர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கராச்சி:

    பாகிஸ்தான் கராச்சி மாநகராட்சி முன்னாள் இயக்குனராக இருந்தவர் டாக்டர் பீர்பால் ஜெனனி. சிறந்த கண் டாக்டரான இவர் கராச்சியில் கிளினிக் வைத்து நடத்தி வந்தார்.

    நேற்று இரவு இவர் காரில் கிளினிக்கில் இருந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அவருடன் கிளினிக்கில் பணியாற்றி வரும் பெண் டாக்டர் ஒருவரும் சென்றார்.

    கராச்சி லாயர் எக்ஸ்பிரஸ் சாலையில் கார் சென்று கொண்டு இருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரது காரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

    இதில் நிலை தடுமாறிய கார் அருகில் இருந்த சுவர் மீது மோதி நின்றது. இந்த துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்த டாக்டர் பீர்பால் ஜெனனி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் காரில் பயணம் செய்த பெண் டாக்டர் உடலிலும் குண்டு பாய்ந்தது. இதில் அவர் ரத்தவெள்ளத்தில் காரில் உயிருக்கு போராடினார்.

    இது பற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். காயம் அடைந்த பெண் டாக்டரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசாரிடம் அவர் கூறும் போது, எங்களை நோக்கி யாரோ துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. என்ன என்பதை அறிவதற்குள் என் மீது குண்டு பாய்ந்து விட்டதால் என்னால் எதையும் அறிய முடியவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

    பெண் டாக்டர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் மர்ம கும்பலை தேடி வருகின்றனர். என்ன காரணத்துக்காக இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது என்று தெரியவில்லை. முன் விரோதத்தால் இச்சம்பவம் நடந்து இருக்கலாமா?என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தப்பிஓடிய மர்ம மனிதர்களை பிடிக்கும் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

    பாகிஸ்தானில் இந்த மாதத்தில் 2 இந்து டாக்டர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×