என் மலர்
பிரான்ஸ்
- பிரான்ஸ் நாட்டில் சர்வதேச ஏ.ஐ. உச்சி மாநாடு நடைபெற்றது.
- ஏஐ மாநாட்டில் தொழில்நுட்ப துறையை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாடுகள் பயணமாக பிரான்ஸ் புறப்பட்டு சென்றுள்ளார். பிரான்ஸ்-இல் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்களை சந்தித்து பேசினார்.
அந்த வகையில், பாரிசில் நடைபெற்ற AI உச்சி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியை கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார். அப்போது, செயற்கை நுண்ணறிவு (AI) இந்தியாவிற்கு கொண்டு வரும் "நம்பமுடியாத வாய்ப்புகளை" எடுத்துரைத்தார்.
மேலும், நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தை முன்னேற்றுவதற்காக கூகுள் மற்றும் இந்தியா இடையே நெருக்கமான ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளையும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து பேசிய அவர், "AI உச்சி மாநாட்டிற்காக பாரிசில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததில் மகிழ்ச்சி. AI இந்தியாவிற்கு கொண்டு வரும் நம்பமுடியாத வாய்ப்புகள் மற்றும் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தில் நாம் நெருக்கமாக இணைந்து பணியாற்றக்கூடிய வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, பாரிஸில் நடந்த இந்தியா-பிரான்ஸ் சி.இ.ஓ. கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றினார், அப்போது, பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதிலும் புதுமைகளை வளர்ப்பதிலும் இந்த கருத்தரங்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறினார்.
- ஒவ்வொருத்தரின் வளர்ச்சியும், இந்திய வளர்ச்சியுடன் இணைந்துள்ளது.
- எதிர்கால சாத்தியக்கூறுகளை நீங்களே புரிந்து கொள்ளலாம்.
இந்தியாவின் வளர்ச்சி பாதை வழங்கும் எண்ணற்ற வாய்ப்புகளை கருத்தில் கொண்டு பிரெஞ்சு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாரிஸ்-இல் நடைபெற்ற 14-வது இந்தியா-பிரான்ஸ் சி.இ.ஓ. கருத்தரங்கில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் மோடி கலந்து கொண்டனர். இதில் பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவுக்கு வருவதற்கு இதுவே சரியான நேரம் என்று உங்களிடம் கூறிக் கொள்கிறேன். ஒவ்வொருத்தரின் வளர்ச்சியும், இந்திய வளர்ச்சியுடன் இணைந்துள்ளது," என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இதற்கு சிறந்த உதாரணம் ஏவியேஷன் துறையில் தெளிவாக காணப்படுகிறது. இந்திய நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் விமானங்களுக்கு முன்பதிவு செய்துள்ளன. மேலும், நாங்கள் தற்போது 120 புதிய விமான நிலையங்களை திறக்க இருக்கிறோம். இதை வைத்து எதிர்கால சாத்தியக்கூறுகளை நீங்களே புரிந்து கொள்ளலாம்."
"இந்தியாவின் வேகமும் பிரான்சின் துல்லியமும் இணையும் போது; பிரான்சின் தொழில்நுட்பமும் இந்தியாவின் திறமையும் இணையும் போது... வணிக நிலப்பரப்பு மட்டுமல்ல, உலகளாவிய மாற்றமும் ஏற்படும். இந்தியாவும் பிரான்சும் ஜனநாயக முறையில் மட்டுமே இணைக்கப்படவில்லை. நமது நட்பின் அடித்தளம் ஆழ்ந்த நம்பிக்கை, புதுமை மற்றும் பொது நலனை அடிப்படையாகக் கொண்டது. நமது கூட்டாண்மை இரண்டு நாடுகளுக்கு மட்டும் குறுகி இருக்கவில்லை," என்று கூறினார்.
- அமெரிக்க துணை அதிபரை அவரது குடும்பத்தாருடன் சந்தித்தார்.
- ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது மனைவி உரையாடும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது மனைவி, குழந்தைகளை நேரில் சந்தித்தார். செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கலந்து கொள்ள பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி பாரிஸ் நகரில் வைத்து அமெரிக்க துணை அதிபரை அவரது குடும்பத்தாருடன் சந்தித்தார்.
சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தாருடன் அருமையான சந்திப்பு. பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நாங்கள் சிறப்பாக உரையாடினோம். அவரது மகன் விவேத் பிறந்த நாளில் அவர்களை சந்தித்தது பெருமகிழ்ச்சியை கொடுத்தது," என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "பிரதமர் மோடி கருணை கொண்டவர். அவர் அளித்த பரிசுகளால் எங்களது குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அருமையான உரையாடலுக்காக அவருக்கு கடமைப்பட்டுள்ளேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோவில் பிரதமர் மோடி, ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது மனைவி உரையாடும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது.
- பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.
பாரிஸ்:
பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நெதர்லாந்தின் மிடில்கூப் ஜோடி, அமெரிக்காவின் பாட்ரிக்-நெதர்லாந்தின் டேவிட் பெல் உடன் மோதியது.
இதில் முதல் செட்டை 5-7 என இழந்த யூகி பாம்ப்ரி ஜோடி, அடுத்த இரு செட்களை 6-2, 10-6 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
- பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
- தலைநகர் பாரிசில் நடந்த செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் அவர் பங்கேற்று பேசினார்.
பாரிஸ்:
பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் பாரிசில் செயற்கை நுண்ணறிவு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வருங்காலத்தில் எல்லாருக்கும் நன்மை பயக்கும் என்பதை உறுதி செய்வதற்கான அனுபவத்தையும், நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது.
பொதுநலனைக் கருத்தில் கொண்ட செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.
மனித குலத்தின் வரலாற்றில், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை காட்டிலும், செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தி வரும் முன்னேற்றங்கள் மிகவும் வித்தியாசமானவை.
உலகெங்கிலும் பல்வேறு துறைகளில் அது பயன்பாட்டுக்கு வரும்போது, அதனால் ஏற்படக்கூடிய குறைபாடுகளை, பிரச்சனைகளை சரிசெய்ய நாம் ஒன்றிணைய வேண்டியது அவசியம். அதற்கு இந்த மாநாடு பயன் தரும் என நம்புகிறேன்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஜனநாயகப்படுத்த வேண்டும். இணைய பாதுகாப்பு, தவறான தகவல் பரப்புதல் மற்றும் டீப் பேக் தொடர்பான கவலைகளை தீர்க்க வேண்டும்.
நிலையான செயற்கை நுண்ணறிவுக்கான கவுன்சிலில் ஏ.ஐ. அறக்கட்டளை அமைக்கும் முடிவை நான் வரவேற்கிறேன். அடுத்த ஏ.ஐ. உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவதில் பெருமை கொள்கிறது என தெரிவித்தார்.
- பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் முதல் சுற்றில் நம்பர் 5 வீரரான அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா தோல்வி அடைந்தார்.
பாரிஸ்:
பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நம்பர் 5 வீரரான அமெரிக்காவைச் சேர்ந்த செபாஸ்டியன் கோர்டா, பின்லாந்தின் ஓட்டோ விர்டானென் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 7-6 (7-3) என செபாஸ்டியன் கோர்டா வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட ஓட்டோ விர்டானென் அடுத்த இரு செட்களை 7-6 (7-4), 6-4 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் நம்பர் 5 வீரரான செபாஸ்டியன் கோர்டா தொடரில் இருந்து முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
- செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே நமது பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் நமது சமூகத்தை மறுவடிவமைத்து வருகிறது.
- சைபர் பாதுகாப்பு, தவறான தகவல்கள் மற்றும் டீப்பேக்ஸ் குறித்து நாம் கவனிக்க வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு மாநாடு பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்வதற்காக நேற்று இந்தியாவில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
இன்று மதியம் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
* செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே நமது பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் நமது சமூகத்தை மறுவடிவமைத்து வருகிறது. இந்த நூற்றாண்டில் மனித குலத்திற்கான Code-ஐ AI எழுதுகிறது.
* ஒரு எளிய உதாரணத்துடன் ஆரம்பிக்கிறேன். உங்கள் மருத்துவ அறிக்கையை ஒரு AI செயலியில் பதிவேற்றினால், அது உங்கள் ஆரோக்கியம் தொடர்பான அனைத்து தகவலையும் எளிய மொழியில் விளக்க முடியும்.
* AI முன்னெப்போதும் இல்லாத அளவு மற்றும் வேகத்தில் வளர்ந்து வருகிறது. மேலும் மாற்றியமைக்கப்பட்டு இன்னும் வேகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
* நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் open source systems-ஐ நாம் உருவாக்க வேண்டும். ஒரு தரப்பு என்று இல்லாமல் தரமான தரவு மையங்களை உருவாக்க வேண்டும்.
* சைபர் பாதுகாப்பு, தவறான தகவல்கள் மற்றும் டீப்பேக்ஸ் குறித்து நாம் கவனிக்க வேண்டும்.
* வேலை இழப்பு ஏ.ஐ-யின் மிகப்பெரிய அச்சுறுத்தல் என பார்க்கப்படுகிறது. ஆனால் தொழில்நுட்பத்தால் வேலை மறைந்து போவதில்லை. அதன் தன்மை மாறுகிறது என்பதை நமது வரலாறு காட்டியுள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தறிக்கு ஏற்றவாறு நமது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

* சுகாதாரம், கல்வி, விவசாயம் மற்றும் பலவற்றை மேம்படுத்துவதன் மூலம் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்ற AI உதவும்.
* நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான பயணத்தை எளிதாகவும் வேகமாகவும் மாறும் ஒரு உலகத்தை உருவாக்க இது உதவும். இதைச் செய்ய, நாம் வளங்களையும் திறமைகளையும் ஒன்றிணைக்க வேண்டும்.
- சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள்.
- 7 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லண்டன்:
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் 104 இந்தியர்கள் ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில் அமெரிக்காவை போல இங்கிலாந்தில் சட்டவிரோதமாக தங்கி உள்ள அகதிகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுகிறார்கள்.
இந்த நிலையில் இங்கி லாந்தில் உள்ள இந்திய ஓட்டல்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்தியர்கள் நடத்தும் உணவகங்கள், பார்கள் மற்றும் வணிக வளாகங்க ளில் சோதனை நடத்தப்பட்டது. அங்குள்ள இந்தி யர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.
ஹம்பர்சைட் பகுதியில் உள்ள இந்திய உணவகத்தில் நடந்த சோதனையில் 7 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக உள் துறை செயலாளர் யுவெட்டே கூப்பர் கூறும் போது, கடந்த ஜனவரி மாதம் 828 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு 609 பேர் கைது செய்யப்பட்டனர். உணவகங்கள், கபேக்கள், புகையிலை தொழிற்சாலை உள்ள இடங்களில்தான் சட்ட விரோதமாக தங்கி உள்ளவர்களின் செயல்பாடுகள் அதிகமாக உள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை முதல், இந்தாண்டு ஜனவரி இறுதி வரை சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிரான சோதனைகள் அதிகரித்துள்ளது என்றார்.
இந்த நிலையில் சுமார் 19 ஆயிரம் வெளிநாட்டு குற்றவாளிகள் மற்றும் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்படும் வீடியோவை இங்கிலாந்து அரசு முதன் முறையாக வெளியிட்டுள்ளது.
- அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்-ஐ பிரதமர் மோடி சந்தித்தார்.
- அதிபர் மேக்ரானை பாரிசில் சந்தித்ததில் மகிழ்ச்சி.
பாரிஸ்-இல் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்க சென்றிருக்கும் பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் கட்டியணைத்து வரவேற்றார். இதன்பிறகு நடந்த இரவு விருந்தில் பிரான்ஸ்-இல் உள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்-ஐ பிரதமர் மோடி சந்தித்தார்.
பிரான்ஸ்-இல் அதிபர் மேக்ரானை சந்தித்தது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ""எனது நண்பர் அதிபர் மேக்ரானை பாரிசில் சந்தித்ததில் மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், "பிரதமர் நரேந்திர மோடி பாரிசில் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உடன் உரையாடுகிறார்" என்று தெரிவித்துள்ளது.
இரு நாடுகள் சுற்றுப் பயணமாக முதலில் பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, அமெரிக்கா செல்கிறார். அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்துபேச பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
பாரிசில் AI உச்சி மாநாட்டிற்கு இணை தலைமை தாங்கும் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார். பிறகு வணிகத் தலைவர்களுடன் உரையாற்ற உள்ளார்.
- பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.
- சர்வதேச வெப்ப அணுசக்தி பரிசோதனை உலையையும் பார்வையிடுகிறார்.
புதுடெல்லி:
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் 20-ந்தேதி பதவி ஏற்றார். இதையடுத்து பிரதமர் நரேந்திரமோடி, டிரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது இருவரும் சிறிது நேரம் பேசினார்கள்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் நிருபர்களி டம் கூறுகையில், 'அமெரிக்கா, இந்தியா இடையே நல்லுறவு நீடிக்கிறது. பிப்ரவரி மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் மாளிகைக்கு வருவார்' என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று முதல் வருகிற 12-ந்தேதி வரை செயற்கை நுண்ணறிவு மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக பிரதமர் மோடி இன்று பிற்பகலில் டெல்லியில் இருந்து புறப்பட்டு பிரான்ஸ் செல்கிறார்.
இன்று இரவு பிரான்ஸ் சென்றடையும் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்கிறார். பின்னர், நாளை (11-ந்தேதி) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த உச்சி மாநாட்டுக்கு அதிபர் மேக்ரானுடன் இணைந்து தலைமை தாங்குகிறார்.
இந்த உச்சி மாநாட்டில் அரசுத்துறை அதிகாரிகள், சிறு மற்றும் பெரு நிறுவ னங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், அரசு சாரா நிறுவனங்களின் அதி காரிகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், கல்வியாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.
நாளை பிற்பகலில் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தலைமையில், பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான வட்டமேசை கூட்டம் நடைபெறுகிறது. அதில் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகிய இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள்.
பின்னர் பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் அங்குள்ள போர் நினைவிடத்துக்கு செல்கிறார்கள். அங்கு முதலாம் உலகப்போரில் உயிர்த்தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.
பின்னர் சர்வதேச வெப்ப அணுசக்தி பரிசோதனை உலை அமைந்துள்ள கடாரச்சி பகுதியையும் பிரதமர் மோடி பார்வையிட உள்ளார். இந்தியாவும் அதில் பங்குதாரராக உள்ளது.
அதன்பிறகு பிரான்ஸ் நாட்டின் மார்சேய் நகருக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு இந்தியாவின் துணை தூதரகத்தை திறந்து வைக்கிறார். அதன் பின்னர், இருதரப்பு உறவுகள் குறித்து பிரான்ஸ் அதிபருடன், பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
பின்னர் பிரான்சில் இருந்து புறப்பட்டு பிரதமர் மோடி வருகிற 12-ந்தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் செல்கிறார். வருகிற 13-ந்தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை, பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.
இந்த சந்திப்பு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்று இரவு டிரம்ப் சார்பில் பிரதமர் மோடிக்கு சிறப்பு இரவு விருந்து அளிக்கப்பட உள்ளது. வருகிற 14-ந்தேதி அமெரிக்க தொழில் அதிபர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச உள்ளார். அதன் பிறகு அவர் நாடு திரும்புகிறார்.
- ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் என்று நினைத்தனர்.
- இவை என்னை சிரிக்க செய்தன.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்களை உருவாக்கி வருகிறார். மேலும் அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அவ்வாறு அவர் உருவாக்கிய போலி வீடியோ ஒன்றில் 1980-க்களில் பிரபலமாக "வோயேஜ் வோயேஜ்" பாடலுக்கு அவரே நடனமாடும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோவை உருவாக்கியவர்களை பாராட்டிய மேக்ரான் "வீடியோக்கள் அருமையாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இவை மிக அழகாக உள்ளன. இவை என்னை சிரிக்க செய்தன," என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ஏ.ஐ. உச்சிமாநாட்டை ஊக்குவிக்கும் வகையில், மேக்ரான் இந்த வீடியோக்களை உருவாக்கி இருக்கிறார். இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட பல்வேறு உலக தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டிற்கு இந்தியாவும் இணைந்து தலைமை தாங்குகிறது.
இது தொடர்பாக அதிபர் மேக்ரானின் இன்ஸ்டாகிராம் பதிவு அதிக பார்வையாளர்களை பெற்றதோடு, அதிகளவு பகிரப்பட்டும் வருகிறது. எனினும், சிலர் அதிபர் மேக்ரானின் சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் என்று நினைத்தனர்.
- உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
- ஈபிள் டவர் பகுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
பாரிஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரசித்தி பெற்ற ஈபிள் டவர் உள்ளது. கஸ்டவ் ஈபிள் என்பவர் கட்டமைத்ததால் அவரது பெயரிலேயே இந்தக் கோபுரம் அழைக்கப்பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஈபிள் டவர் பகுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
இந்நிலையில், ஈபிள் டவரில் உள்ள லிப்டில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதல் தளத்திற்கும், இரண்டாவது தளத்திற்கும் இடையே லிப்ட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.
தீவிபத்து காரணமாக ஈபிள் டவர் பகுதியில் குவிந்திருந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும், அப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
ஈபிள் டவரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அங்கு குவிந்த சுற்றுலாப் பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.






