என் மலர்
கனடா
- குர்விந்தர் கடந்த 2021-ல் கனடா சென்றுள்ளார்
- உணவு வினியோகம் செய்து வந்த நிலையில், காருடன் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்
கனடாவில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். படிப்பதற்காகவும், படித்து முடித்தபின் அங்கேயே தங்கி வேலை பார்ப்பதற்காகவும் அங்கு செல்லும் பஞ்சாப் மாநில இளைஞர்கள் எண்ணிக்கை அதிகம்.
இதே நோக்கத்துடன் 2021-ம் வருடம் ஜூலை மாதம் கனடா வந்தவர், இந்தியாவை சேர்ந்த குர்விந்தர் நாத் (24). இவர் உணவு வினியோக சேவையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கனடாவின் டோரோண்டோ நகருக்கருகே ஓன்டேரியோ ஏரி கரை பகுதியில் அமைந்துள்ள நகரம் மிஸிஸாகா.
ஜூலை 9-ம் தேதி நாத், மிஸிஸாகா பகுதியின் பிரிட்டானியா மற்றும் கிரெடிட்வியூ சாலைகளுக்கருகே அடையாளம் தெரியாத நபர்களால் குர்விந்தர் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து கனடாவின் காவல்துறை தெரிவித்திருப்பதாவது:-
இச்சம்பவத்தில் பலர் சம்பந்தபட்டிருக்கலாம் என தோன்றுகிறது. தாக்கியவர்கள் உணவுக்கான ஆர்டர் கொடுத்துள்ளனர். வழக்கமான ஆர்டர் போல் நினைத்து அதனை வழங்க நாத் வாகனத்தில் சென்றுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்தவுடன் அவரின் வாகனத்தை திருட முயற்சித்திருக்கின்றனர். அப்போது நடந்த போராட்டத்தில் அவரை பலமாக தாக்கியுள்ளனர். பிறகு அவரை அங்கேயே போட்டு விட்டு வாகனத்தை எடுத்து சென்றுள்ளனர்.
சம்பவத்தை கண்ட பொதுமக்களின் உதவியால், அருகிலுள்ள அவசர கால சிகிச்சை மையத்தில் குர்விந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி, ஜூலை 14-ம்தேதி உயிரிழந்தார்.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் அருகே, ஓல்ட் கிரெடிட்வியூ மற்றும் ஓல்ட் டெர்ரி ரோடு அருகே திருடப்பட்ட அந்த வாகனம் நின்று கொண்டிருந்தது.
குர்விந்தர் படுகாயம் அடைந்ததால், அவரை தாக்கியவர்கள் பதட்டத்தில் வாகனத்தை அப்படியே விட்டுவிட்டு ஓடியிருக்கலாம். தடயவியல் நிபுணர்கள் வாகனத்தை பரிசோதித்து வருகின்றனர்.
இவ்வாறு காவல்துறை தெரிவித்திருக்கிறது.
கனடா நாட்டிற்கான இந்திய தூதரக அலுவலக அதிகாரி சித்தார்தா நாத் கூறும்போது "இது ஒரு இதயத்தை கலங்க செய்யும் சோக நிகழ்ச்சி. அவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்" என தெரிவித்தார்.
இந்திய தூதரக அலுவலகத்தின் உதவியுடன் குர்விந்தரின் உடல் வருகிற 27-ம் தேதி இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகிறது.
உலகின் அமைதியான நாடுகளில் ஒன்று என கருதப்பட்டு வந்த கனடாவில் இத்தகைய ஒரு துணிகர சம்பவம் நடைபெற்றிருப்பது உலகெங்கும் உள்ள இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
- உலக பெடரேசன் நடத்தும் தொடரில் வெல்லும் 2-வது சாம்பியன் பட்டம்
- சீன வீரரை நேர்செட் கணக்கில் வென்றார்
கனடா ஒபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென், சீனாவில் லி ஷி பெங்-ஐ எதிர்கொண்டார். இதில் 21 வயதாக லக்சயா சென் 21-18, 22-20 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
சீன வீரர் லி ஷி பெங் ஆல் இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றுள்ள லக்சயாக சென், இந்திய ஓபனை 2022-ம் ஆண்டு கைப்பற்றியிருந்தார். அதன்பின் தற்போது உலகளவில் விளையாடும் தொடரில் 2-வது சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
- காலிஸ்தான் கொடியை ஏந்தியவாறு, இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் வைத்திருந்தனர்.
- இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து சிலர் தேசிய கொடியுடன் அங்கு திரண்டனர்.
டொராண்டோ:
இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக அறிவிக்க கோரி காலிஸ் தான் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
சமீபத்தில் அமெரிக்காவில் இந்திய துணை தூதர கத்துக்கு தீவைக்கப்பட்டது. இந்த நிலையில் கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தை நோக்கி பேரணி நடத்த போவதாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் அறிவித்தனர். அதன்படி அவர்கள் டொராண்டோவில் இந்திய துணை தூதரகத்துக்கு பேரணியாக சென்று போராட்டம் நடத்தினார்கள்.
அவர்கள் காலிஸ்தான் கொடியை ஏந்தியவாறு, இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் வைத்திருந்தனர். போராட்டத்தை அடுத்து இந்திய தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அங்கு தடுப்புகள் வைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து சிலர் தேசிய கொடியுடன் அங்கு திரண்டனர்.
அப்போது அவர்களை தாக்க காலிஸ்தான் ஆதரவாளர்கள் 2 பேர் முயன்றனர். தடுப்புகளை மீறி சென்ற அவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கனடாவை தளமாக கொண்ட காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது. இதேபோல் லண்டனில் இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
- அரையிறுதியில் ஜப்பான் வீரர் கென்ட்டா நிஜிமோட்டாவை லக்சயா சென் வீழ்த்தினார்.
- மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியிடம் தோல்வியடைந்தார்.
கனடா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய இளம் வீரர் லக்சயா சென் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீரர் கென்ட்டா நிஜிமோட்டாவுடன் மோதிய லக்சயா சென், 21-17, 21-14 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று அசத்தினார்.
இதன்மூலம், ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு பிறகு சர்வதேச போட்டியின் இறுதிப் போட்டிக்கு லக்சயா சென் தகுதி பெற்றுள்ளார். கடைசியாக ஆகஸ்ட் 2022 இல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, அரையிறுதியில் உலகின் நம்பர்-1 வீராங்கனை அகானே யமகுச்சியிடம் 14-21, 15-21 தோல்வியடைந்தார்.
சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார் பி.வி.சிந்து. கடந்த ஜனவரி மாதம் காயத்திலிருந்து மீண்டபின் எந்த பட்டத்தையும் வெல்லவில்லை. கணுக்காலில் காயம் ஏற்படுவதற்கு முன்பு ஆகஸ்ட் 2022இல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றார். அவர் மேட்ரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் போட்டியில் இரண்டாம் இடத்தையும், மலேசியா மாஸ்டர்சில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.
- கனடா செய்திகளை நிறுத்தப்போவதாக மெட்டா அறிவிப்பு
- செய்திகளை நிறுத்தினால் விளம்பரங்கள் நிறுத்தப்படும் என கனடா பதிலடி
நீயா, நானா போட்டியில் மெட்டாவும், கனடாவும்: முற்றும் சச்சரவில் கூகுளும் சேருமா?உலகின் மிகப்பெரிய இணையவழி சமூக வலைதளமான முகநூலை நடத்தி வரும் மெட்டா நிறுவனத்திற்கும் கனடா நாட்டிற்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. இதன் பின்னணியில் உள்ளது, கனடா, அண்மையில் கொண்டு வந்த இணைய செய்தி சட்டம் (Online News Act) என்ற ஒரு சட்டம்.
கனடா நாட்டின் செய்தி வெளியீட்டாளர்களிடமிருந்து மெட்டா, கூகுள், இன்ஸ்டாகிராம் போன்ற இணையவழி சமூக வலைதளங்கள் பெறும் உள்ளடக்கத்தை (content) இணையத்தில் இணைக்கவோ அல்லது மறுபயன்பாடு செய்வதற்கோ அந்தந்த கனடா செய்தி வெளியீட்டாளர்களுக்கு அவர்களுக்குரிய விகிதாசார பணத்தை அவை தரவில்லை என கனடா குற்றஞ்சாட்டியது.
இதனால் அந்நாட்டின் பல அச்சு மற்றும் டிஜிட்டல் செய்தி பதிப்பகங்கள், வருவாய் குறைந்து பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டதால் உள்ளூர் வெளியீடுகள் நிதி ரீதியாக நிலை பெறுவதற்கு, இச்சட்டம் கொண்டு வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக கனடா கூறியிருந்தது.
இதற்கு எதிர்வினையாக அமெரிக்காவின் மெட்டா நிறுவனம், கனடா நாட்டு செய்திகளை இனிமேல் தங்கள் வலைதளங்களில் நிறுத்த போவதாக அறிவித்தது.
மெட்டா செய்தித்தொடர்பாளர் தெரிவித்ததாவது:-
இணைய செய்திச் சட்டம் எங்கள் தளங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கான உண்மைகளை அறியாத ஒரு குறைபாடுள்ள சட்டம். மெட்டாவின் சமூக தளங்களில் காண்பிக்கப்படும் செய்தி உள்ளடக்கத்திற்கான இணைப்புகளை மெட்டா சேகரிக்கவில்லை.
அவற்றை முகநூல் அல்லது இன்ஸ்டாகிராமில் வெளியிட, அந்தந்த வெளியீட்டாளர்கள்தான் முடிவு செய்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, இந்த சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் பல குறைகள் உள்ளன. ஆனால், செயல்முறை மாற்றங்களைச் செய்ய 'ஒழுங்குமுறை அமைப்பு' அனுமதிக்கவில்லை. எனவேதான், வரும் வாரங்களில் கனடாவில் செய்திகளை நிறுத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், கனடாவின் பாரம்பரியத்துறை அமைச்சர் பாப்லோ ரோட்ரிக்ஸ் நேற்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அரசாங்கத்தின் முடிவை அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மெட்டாவின் முடிவு பொறுப்பற்றது. கனடா இனி மெட்டாவின் வலைதளங்களில் விளம்பரம் செய்வதை நிறுத்தப்போகிறது. இருப்பினும், ஒரு சுமூக முடிவிற்காக அரசாங்கம் இந்நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சி நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
2021-2022-ம் ஆண்டில் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்காக, கனடா அரசாங்கம் சுமார் ரூ.70 கோடி (8.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) செலவிட்டுள்ளதாக அரசாங்க செலவினங்கள் பற்றிய வருடாந்திர அறிக்கை காட்டுகிறது.
மெட்டா நிறுவனத்தை தொடர்ந்து, கூகுள் நிறுவனமும், 6 மாதங்களில் கனடாவின் இந்த மசோதா நடைமுறைக்கு வரும்போது அந்நாட்டு செய்திகளை தடுக்கப்போவதாக கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஹெச்-1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களில் 10 ஆயிரம் பேர் கனடா நாட்டிற்கு வந்து பணிபுரிய அனுமதி
- கனடாவில் எங்கும் எந்த ஒரு முதலாளியிடமும் வேலை செய்ய முடியும்
அமெரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே மென்பொருள் துறையில் தொழில்நுட்ப மற்றும் உயர் தொழில்நுட்பங்களில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் இருந்து பணியாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டு வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். மந்தமான உலக பொருளாதார சூழ்நிலையில், அங்கு வேலை இழந்தோருக்கு வேறு வேலை கிடைப்பதும் அரிதாக இருக்கிறது.
தற்போது அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் கனடா நாட்டில் இருந்து ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.
அமெரிக்க ஹெச்-1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களில் 10 ஆயிரம் பேர் கனடா நாட்டிற்கு வந்து பணிபுரிய அனுமதிக்கும் வகையில் பணி அனுமதி (Open Work Permit Stream) எனும் அனுமதியை அந்நாட்டு அரசாங்கம் உருவாக்கும் என்று கனடா குடிவரவு அமைச்சர் ஷான் ஃப்ரேஸர் நேற்று அறிவித்தார்.
கனடா நாட்டின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கை தெரிவிப்பதாவது:-
இப்புதிய முடிவின் கீழ் வரப்போகும் ஜூலை 16 முதல் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 3 ஆண்டுகள் வரை கனடாவில் பணியாற்ற திறந்த பணி அனுமதி (open work permit) பெறுவார்கள். அவர்கள் கனடாவில் எங்கும் எந்த ஒரு முதலாளியிடமும் வேலை செய்ய முடியும். அவர்களின் வாழ்க்கைத் துணை மற்றும் அவர்களை சார்ந்திருப்பவர்கள் ஆகியோருக்கும் அவர்களின் தேவைக்கேற்ப வேலை அல்லது படிப்பு கிடைப்பதற்கு இந்த தற்காலிக குடியுரிமை விசா வழி செய்கிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிய கனடாவிற்கு வரக்கூடிய வேலையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உலகின் மிகவும் திறமையான நபர்களுக்கான குடியேற்றத்தை கனடாவின் மத்திய அரசு உருவாக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கை கூறுகிறது.
இருப்பினும், யார் யார் தகுதி பெறுவார்கள் என்பதை குடிவரவு அமைச்சர் சரியாக விளக்கவில்லை. உயர் தொழில்நுட்ப துறைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும் செயல்பாடுகளைக் கொண்டு இயங்கும் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.
அமெரிக்காவின் ஹெச்-1பி விசா எனப்படும் அனுமதியானது, அங்கே வெளிநாட்டுப் பிரஜைகள், தொழில்நுட்ப துறை உட்பட சில சிறப்புத் தொழில்களில் தற்காலிகமாக அங்கேயே தங்கி வேலை செய்ய அனுமதிக்கிறது. ஆனால், ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் பணியை இழந்தால் மீண்டும் 60 நாட்களுக்குள் வேறு வேலை தேடிக்கொள்ள வேண்டும் அல்லது அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனும் கட்டுப்பாடு உண்டு.
இந்த சூழ்நிலையில் வேலையை இழந்து வேறு வேலையும் கிடைக்காமல் தவிக்கும் இந்தியர்களுக்கு, இந்த அறிவிப்பு ஒரு இனிப்பான செய்தியாக பார்க்கப்படுகிறது.
- கூகுள் நிறுவனமும் இதேபோன்ற முடிவை எடுப்பது பற்றி பரிசீலனை செய்துவருவதாக தகவல் வெளியானது.
- செய்தி உள்ளடக்கத்தைத் தடுப்பதற்காக மெட்டா மேற்கொண்ட சோதனை முயற்சியின்போது பிரதமர் கண்டனம் தெரிவித்தார்.
உலகெங்கிலும் பிரபலமான முகநூல் (Facebook) எனப்படும் சமூகப்பதிவுகளுக்கான வலைதளம் நடத்தி வரும் மெட்டா நிறுவனம், "கனடாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்தி கிடைப்பது இனி நிறுத்தப்படும்" என்று கூறியிருக்கிறது.
டிஜிட்டல் செய்திகள் பிரபலமானதிலிருந்து, கனடா நாட்டில் கடந்த பத்து வருடங்களில் நூற்றுக்கணக்கான செய்தி வெளியீட்டு நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன; பலர் வேலையிழந்தனர். இதனால் போராடி வரும் கனடா நாட்டின் செய்தித்துறையை ஆதரிக்க முடிவு செய்த கனடா அரசு, ஒரு மசோதாவை கொண்டு நிறைவேற்றியிருக்கிறது.
இதன்படி, கனடா டிஜிட்டல் துறையின் ஜாம்பவான்கள் தங்களது உள்ளடக்கத்திற்காக கனடா நாட்டிற்கு பணம் செலுத்த வேண்டும். இந்த ஜாம்பவான்கள் தங்கள் தளங்களில் பகிரப்படும் செய்திகள் மற்றும் தகவல்களுக்காக கனடா நாட்டு "அவுட்லெட்"களுடன் நியாயமான வணிக ஒப்பந்தங்களைச் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மெட்டா, செய்திகளை தடை செய்வதற்கான முடிவை எடுத்துள்ளது. கூகுள் நிறுவனமும் இதேபோன்ற முடிவை எடுப்பது பற்றி பரிசீலனை செய்துவருவதாக தகவல் வெளியானது.
மெட்டா நிறுவனத்தின் நடவடிக்கைக்கு பதிலளித்த கனடாவின் பாரம்பரிய அமைச்சர் பாப்லோ ரோட்ரிக்ஸ், மெட்டாவின் முடிவு வருந்தத்தக்கது என்றாலும் தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு எதிராக கனடா நாட்டினர்களின் பக்கம் தான் நிற்பதாக உறுதியளித்தார்.
இந்த வாரம் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களை, கனடாவின் அதிகாரிகள் சந்தித்ததாகவும், புதிய சட்டம் குறித்த கூடுதல் விவாதங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதமே சில பயனர்களுக்கான கனடா நாட்டின் செய்தி உள்ளடக்கத்தைத் தடுப்பதற்காக மெட்டா மேற்கொண்ட சோதனை ஓட்டத்தை பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்திருந்தார். அந்நிறுவனம் பத்திரிகையாளர்களுக்கு அவர்களின் பணிக்காக பணம் கொடுக்க மறுப்பது, 'பொறுப்பற்றதாகவும் தொடர்பில்லாததாகவும்' இருப்பதாகவும் கூறிய அவர், "இந்த மசோதாவை எதிர்ப்பது, நமது ஜனநாயகத்திற்கும், பொருளாதாரத்திற்கும் ஆபத்தானது" என்றும் தெரிவித்திருந்தார்.
கூகுள் நிறுவனமும் கடந்த பிப்ரவரியில், தனது பிரபலமான தேடுபொறியில் கனடா நாட்டு பயனர்களுக்கு செய்திகளுக்கான அணுகலை தற்காலிகமாக கட்டுப்படுத்தியது. அதன் செய்தித் தொடர்பாளர் ஜென் க்ரைடர் கூறும்போது, "யாரும் விரும்பாத ஒரு முடிவைத் தவிர்க்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவே முயல்கிறோம்" என கூறினார்."
ஆன்லைன் விளம்பரங்களில் ஆதிக்கம் செலுத்தும் இந்த இரு நிறுவனங்களும், செய்தி நிறுவனங்களின் உள்ளடக்கத்தை இலவசமாகப் பயன்படுத்தும் போது பாரம்பரிய செய்தி நிறுவனங்களுக்கு கிடைக்கவேண்டிய வருவாய் வெளியே செல்வதாக ஆஸ்திரேலியாவும் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு நாடுகளைத் தொடர்ந்து உலகின் பிற நாடுகளும் இதே போல் சட்டங்கள் கொண்டு வருமா என டிஜிட்டல் ஆர்வலர்கள் விவாதிக்கின்றனர்.
- நீர் மூழ்கியின் பகுதி உள் வெடிப்புக்கு உள்ளானதில் அதில் இருந்த அனைவரும் உயிர் இழந்தது உறுதியாகி உள்ளது.
- நீர் மூழ்கி எப்படி வெடித்து சிதறியது என்பதை அறிந்து கொள்வதற்காக அந்த பகுதியில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
பாஸ்டன்:
இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு கடந்த 1912-ம் ஆண்டு புகழ் பெற்ற டைட்டானிக் கப்பல் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலில் 2,500-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் ஊழியர்கள் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வழியில் எதிர்பாராத விதமாக அந்த கப்பல் பனிப்பாறையில் மோதி கடலுக்குள் மூழ்கியது. இந்த மோசமான விபத்தில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். கடலுக்குள் மூழ்கிய அந்த கப்பல் அமெரிக்காவின் நியூபவுண்ட்லாண்ட் தீவுக்கு 740 கிலோ மீட்டர் தூரத்தில் கடலுக்கடியில் உடைந்து கிடந்தது 1985-ம் ஆண்டு கண்டறியப்பட்டது.
அதன் பிறகு இந்த கப்பலை கடல் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், திரைப்பட துறையினர் போன்றவர்கள் ஆழ்கடலுக்குள் சென்று பார்வையிட்டு வந்தனர்.
இந்த நிலையில் டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக சுற்றுலா பயணிகளை அழைத்த செல்வதற்காக ஓஷன்கேட் எக்ஸ் பெடிஷன்ஸ் என்ற அமெரிக்க தனியார் நிறுவனம் நீர் மூழ்கி கப்பலை வடிவமைத்தது.
இந்த நீர் மூழ்கி கப்பலுக்கு டைட்டன் நீர் மூழ்கி என பெயரிடப்பட்டது. இதில் அதிகபட்சமாக 5 பேர் வரை பயணம் செய்ய முடியும். டை்டானிக் கப்பலில் மிச்சம் கிடக்கும் உடைந்த பாகங்களை பார்க்க சுற்றுலா பயணிகள் கப்பலில் அழைத்து செல்லப்படுவார்கள். அங்கிருந்த டைட்டன் நீர்மூழ்கியில் டைட்டானிக் கப்பலை நோக்கி ஆழ்கடல் பயணத்தை மேற்கொள்வார்கள். டைட்டானிக்கை நெருங்கி நீர்மூழ்கியின் காட்சி வழி மூலம் அதனை பார்ப்பார்கள். இந்த நிலையில் டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக இங்கிலாந்து தொழில் அதிபர் ஹமிஷ் ஹார்டிங், ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டாக்டன்ரஷ், நீர் மூழ்கி மாலுமியும் பிரான்ஸ் கடற்படை முன்னாள் கமாண்டருமான பால் ஹன்றி நார்கியோலே, பாகிஸ்தான் தொழில் அதிபர் ஷேஸாதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலைமான் தாவூத் ஆகிய 5 பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை டைட்டன் நீர் மூழ்கி கப்பலில் சென்றனர். காலை 6 மணிக்கு அவர்கள் கடலுக்குள் இறக்கி விடப்பட்டனர். மாலைக்குள் இவர்கள் மீண்டும் கப்பலுக்கு திரும்பி இருக்க வேண்டும்.
ஆனால் டைட்டானிக் கப்பல் உடைந்து கிடந்த இடத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் சென்று கொண்டிருந்த போது நீர் மூழ்கிக்கும், போலார் பிரின்ஸ் கப்பலுக்கும் இடையே இருந்த தகவல் தொடர்பு சுமார் 1 மணி நேரம் 45 நிமிடங்களுக்கு பிறகு துண்டிக்கப்பட்டது.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அமெரிக்கா, கனடாவின் கடலோர காவல் படை கப்பல்கள், விமானங்களுடன், வணிக கப்பல்களும் குறிப்பிட்ட பகுதியில் முற்றுகையிட்டு தேடுதல் பணியில் ஈடுப்பட்டது. ஆனால் நீர் மூழ்கி கப்பலில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இருந்த போதிலும் அவர்களை பத்திரமாக மீட்க கடந்த 4 நாட்களாக முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் டைட்டன் நீர் மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் வெடித்து சிதறி அதில் பயணம் செய்த பாகிஸ்தான் தொழில் அதிபர், அவரது மகன் உள்ளிட்ட 5 கோடீசுவரர்களும் உயிர் இழந்தது தற்போது உறுதியாகி உள்ளது. இது குறித்து அமெரிக்க கடலோர காவல் படைப்பிரிவு தளபதி ஜான் மாகர் கூறியதாவது:-
நீர்மூழ்கி மாயமான பகுதியில் தேடுதல் பணியின் போது அதன் சிதறிய பாகங்கள் ரிமோட் நீர் மூழ்கி சாதனம் (ஆர்.ஓ.வி.) மூலம் கண்டறியப்பட்டு உள்ளது.
டைட்டானிக் கப்பல் உடைந்து கிடக்கும் பகுதிக்கு சுமார் 1,600 அடி தூரத்தில் அந்த நீர் மூழ்கியின் பாகங்கள் கடல் படுகையில் சிதறி கிடக்கிறது. கடலுக்குள் அழுத்தத்தை தாங்குவதற்கான நீர் மூழ்கியின் பகுதி உள் வெடிப்புக்கு உள்ளானதில் அதில் இருந்த அனைவரும் உயிர் இழந்தது உறுதியாகி உள்ளது. அவர்களது உடல்கள் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறது. நீர் மூழ்கி எப்படி வெடித்து சிதறியது என்பதை அறிந்து கொள்வதற்காக அந்த பகுதியில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கப்பல் காணாமல் போன இடத்தில் "நீருக்கடியிலிருந்து சத்தம்" கேட்பதாக தகவல்.
- நீர்மூழ்கி கப்பலில் உள்ள 5 பேரும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
"வைட் ஸ்டார்லைன்" எனும் ஆங்கிலேய கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான டைட்டானிக் எனும் சொகுசு கப்பல், 1912-ம் வருடம் தனது முதல் பயணத்தை ஏப்ரல் 12-ம் தேதி இங்கிலாந்து சவுத்தாம்ப்டன் துறைமுகத்திலிருந்து நியூயார்க் துறைமுகத்திற்கு தொடங்கியது.
முதல் பயணத்திலேயே 15-ம் தேதியன்று இரவு, வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறை ஒன்றின் மேல் மோதியதால் அக்கப்பல் மூழ்கியது. இதில் 1500 பேருக்கு மேல் பலியானார்கள். அந்த துயர சம்பவம் நடந்து பல வருடங்களாகியிருந்தாலும், ஆழ்கடலுக்கடியில் தரை தட்டி நிற்கும் அந்த கப்பலை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள அவ்வப்போது பலர் ஆபத்தான முயற்சிகளை செய்வதுண்டு.
தற்போது 21-அடி நீளமுள்ள ஒரு மினி நீர்மூழ்கி கப்பலில் 5 பேர் கொண்ட சுற்றுலா குழு ஒன்று டைட்டானிக் கப்பலின் மீதமுள்ள பாகங்களை காணச்சென்று, துரதிர்ஷ்டவசமாக காணாமல் போனது. இதனை தேடும் முயற்சி முடுக்கி விடப்பட்டிருக்கிறது. இன்னும் 24 மணி நேரமே போதுமான ஆக்சிஜன்தான் இருப்பு உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே நேற்று சோனார் எனப்படும் கருவிகளை பயன்படுத்தி வடக்கு அட்லாண்டிக் பகுதியில் கப்பல் காணாமல் போன இடத்தில் "நீருக்கடியிலிருந்து சத்தம்" கேட்பதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்தது.
இந்நிலையில், கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் அருகே காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்களை நீர்மூழ்கி ரோந்து வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், அது காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்கள் தானா என்பது குறித்த தகவலை வல்லுநர்கள் ஆராய்ந்து வருவதாகவும் அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
மேலும், பிரித்தானிய நேரப்படி வியாழக்கிழமை 12.08 மணியளவில் ஆக்ஸிஜன் தீர்ந்துவிடும் என கூறப்பட்டுள்ளது. இதனால், நீர்மூழ்கி கப்பலில் உள்ள 5 பேரும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், கண்டுபிடிக்கப்பட்ட உடைந்த பாகங்கள் தொடர்பாக கூடுதல் விவரம் குறித்து பாஸ்டனில் பிற்பகல் 3 மணிக்கு செய்தியளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்படுவதாக அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
- நீர்மூழ்கி கப்பல் மாயமான இடத்தில் இருந்து சத்தம் வந்ததாக கனடா விமானப்படை தகவல்
- ஆக்சிஜன் இன்னும் 24 மணி நேரமே போதுமானதாக இருப்பதால் தேடுதல் பணி தீவிரம்
"வைட் ஸ்டார்லைன்" எனும் ஆங்கிலேய கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான டைட்டானிக் எனும் சொகுசு கப்பல், 1912-ம் வருடம் தனது முதல் பயணத்தை ஏப்ரல் 12-ம் தேதி இங்கிலாந்து சவுத்தாம்ப்டன் துறைமுகத்திலிருந்து நியூயார்க் துறைமுகத்திற்கு தொடங்கியது. முதல் பயணத்திலேயே 15-ம் தேதியன்று இரவு, வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறை ஒன்றின் மேல் மோதியதால் அக்கப்பல் மூழ்கியது. இதில் 1500 பேருக்கு மேல் பலியானார்கள்.
அந்த துயர சம்பவம் நடந்து பல வருடங்களாகியிருந்தாலும், ஆழ்கடலுக்கடியில் தரை தட்டி நிற்கும் அந்த கப்பலை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள அவ்வப்போது பலர் ஆபத்தான முயற்சிகளை செய்வதுண்டு.
தற்போது 21-அடி நீளமுள்ள ஒரு மினி நீர்மூழ்கி கப்பலில் 5 பேர் கொண்ட சுற்றுலா குழு ஒன்று டைட்டானிக் கப்பலின் மீதமுள்ள பாகங்களை காணச்சென்று, துரதிர்ஷ்டவசமாக காணாமல் போயிருக்கிறது. இதனை தேடும் முயற்சி முடுக்கி விடப்பட்டிருக்கிறது. இன்னும் 24 மணி நேரமே போதுமான ஆக்சிஜன்தான் இருப்பு உள்ளது. இதனால் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஒரு சிறு நற்செய்தி வெளியாகியுள்ளது.
சோனார் எனப்படும் கருவிகளை பயன்படுத்தி அந்த நீர்மூழ்கி கப்பலை தேடும் அமெரிக்க கடலோர காவல்படை வடக்கு அட்லாண்டிக் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் அக்கப்பல் காணாமல் போன இடத்தில் "நீருக்கடியிலிருந்து சத்தம்" கேட்பதாக தெரிவித்துள்ளது.
"கனடா நாட்டின் P-3 விமானம், தேடுதல் பகுதியில் நீருக்கடியில் சத்தம் கண்டது. இதன் விளைவாக, சத்தங்களின் தோற்றத்தை ஆராயும் முயற்சியில் "ரிமோட் ஆபரேட்டட் வெஹிகிள்" எனப்படும் ROV வாகனத்தின் செயல்பாடுகள் இடமாற்றம் செய்யப்பட்டன" என்று அமெரிக்க கடலோர காவல்படையின் முதல் மாவட்டம் அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் தெரிவித்துள்ளது. ROV தேடல்கள் "எதிர்மறையான முடிவுகளை அளித்தன, ஆனால் தொடர்கின்றன" என்று இராணுவக்கிளை கூறியது. இதன் தொடர்ச்சியாக எதிர்கால தேடல் திட்டங்களை தெரிவிக்க, கனடா நாட்டின் விமானத்தின் தரவு அமெரிக்க கடற்படை நிபுணர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
சுற்றுலாப் பயணிகள் இன்னும் உயிருடன் இருக்கக்கூடும் என்பதற்கு இந்த அறிவிப்பு மிகவும் ஊக்கமளிக்கும் அறிகுறியாகும்.
கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் கடற்கரையில் இருந்து சுமார் 400 மைல் தொலைவில் மாயமான சிறிய நீர்மூழ்கிக் கப்பலுக்காக, அமெரிக்க மற்றும் கனடா நாட்டின் கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள், சுமார் 7,600 சதுர மைல்கள் (20,000 சதுர கிலோமீட்டர்) பரப்பளவிற்கு கடலில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றன.
"டைட்டன்" என்று பெயரிடப்பட்ட இந்த மினி நீர்மூழ்கிக் கப்பலில், கட்டணம் செலுத்தி பயணிக்கும் 3 பயணிகள் இருந்தனர். அவர்கள், பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ஹமிஷ் ஹார்டிங்க், பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாஹ்ஜாதா தாவூத், மற்றும் அவரது மகன் சுலேமான் ஆகியோர் ஆவார்கள்.
ஓசேன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ் (OceanGate Expeditions) நிறுவன தலைமை நிர்வாகி ஸ்டாக்டன் ரஷ் மற்றும் பிரான்ஸ் நீர்மூழ்கிக் கப்பல் இயக்குனர், பால்-ஹென்றி நார்ஜியோலெட் (Paul-Henri Nargeolet) ஆகியோரும் அக்கப்பலில் இருந்தனர்.
- கனடாவின் சுரோவ் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஹர்தீப்சிங் நிசார் சுட்டுக்கொல்லப்பட்டான்.
- இந்திய அரசால் வெளியிடப்பட்ட தேடுப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் ஹர்தீப்சிங் பெயரும் உள்ளது.
ஒட்டாவா:
கனடாவை சேர்ந்தவன் ஹர்தீப்சிங் நிசார். காலிஸ்தான் பயங்கரவாதியான இவன் இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தான். இது தொடர்பாக இவன் மீது பல வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் கனடாவின் சுரோவ் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஹர்தீப்சிங் நிசார் சுட்டுக்கொல்லப்பட்டான்.
இவன் மீது பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் நடந்த இந்து மத தலைவர் கொல்லப்பட்ட வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் இருந்ததால் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவனை தேடி வந்தனர்.
சமீபத்தில் இந்திய அரசால் வெளியிடப்பட்ட தேடுப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் ஹர்தீப்சிங் பெயரும் உள்ளது. அவன் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் இவனை பற்றி துப்பு கொடுத்தால் ரூ. 10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என அறிவித்தனர். அவனை பயங்கரமாக தேடி வந்த நிலையில் கனடாவில் கொல்லப்பட்டு உள்ளான். அவனை சுட்டுக்கொன்றது யார்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- கனடாவின் மனிடோபா பகுதியில் பஸ் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்தில் 15 முதியவர்கள் பலியாகினர்.
ஒட்டாவா:
கனடாவில் உள்ள மனிடோபா மாகாணத்தில் முதியவர்களை அழைத்துக் கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கார்பெரி பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டிரெய்லர் டிரக் வேகமாக மோதியது. இந்த விபத்தில் 15 பேர் பலியாகினர். 10 பேர் காயமடைந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, போலீசார் கூறுகையில், பஸ்ஸில் 25 பேர் பயணித்தனர். 10 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றனர்.
விபத்து குறித்து தகவலறிந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தார். மனிடோபாவில் இருந்து வரும் செய்தி நம்பமுடியாத துயரமானது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும், அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் வலியை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.






