search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகொரியாவை எச்சரிக்கும் வகையில் நடுவானில் ஏவுகணையை தாக்கி அழித்து அமெரிக்கா சோதனை
    X

    வடகொரியாவை எச்சரிக்கும் வகையில் நடுவானில் ஏவுகணையை தாக்கி அழித்து அமெரிக்கா சோதனை

    வடகொரியாவை எச்சரிக்கும் வகையில் அமெரிக்கா எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனையை நேற்று நடத்தியது.
    வாஷிங்டன்:

    தனது எதிரி நாடான தென் கொரியாவுக்கு அமெரிக்கா துணையாக இருப்பதால் வட கொரியா அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவை மிரட்டும் வகையில் ஏவுகணை மற்றும் அணுகுண்டு சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.

    எனவே, வடகொரியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது.

    இதனால் கோபம் அடைந்த வடகொரியா ஜப்பான் அருகே உள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவை தாக்க போவதாக அறிவித்தது. இதனால் பெரும் பதட்டநிலை ஏற்பட்டது. பின்னர் இந்த திட்டத்தில் இருந்து வடகொரியா பின் வாங்கியது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வடகொரியா பசிபிக் கடலை நோக்கி புதிய ஏவுகணை ஒன்றை வீசியது. ஜப்பான் நிலப்பரப்பு வழியாக இந்த ஏவுகணை சென்றது.

    குவாம் தீவை தாக்கும் முன்னோட்டத்துக்காக இந்த சோதனை நடத்தப்பட்டதாக வட கொரியா அறிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற பல சோதனைகளை நடத்த போவதாகவும் வட கொரியா அறிவித்துள்ளது.

    இதனால் வடகொரியாவை எச்சரிக்கும் வகையில் அமெரிக்கா எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனையை நேற்று நடத்தியது.

    ஹவாய் தீவில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. ஹவாய் தீவு அருகே நிறுத்தப்பட்டு இருந்த யூ.எஸ்.எஸ். ஜான்பால் ஜோஸ் கப்பலில் இருந்து ஏவுகணையை அனுப்பினார்கள்.

    அதே நேரத்தில் மற்றொரு ஏவுகணை தரை பகுதியில் இருந்து அனுப்பப்பட்டது.


    தரை பகுதியில் இருந்து வந்த ஏவுகணையை கப்பலில் இருந்து சென்ற எஸ்.எம்.-6 ஏவுகணை நடுவானில் தாக்கி அழித்தது. வட கொரியா ஏவுகணைகளை அனுப்பினால் அதை நடுவானில் இடை மறித்து தாக்கி அழிக்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
    Next Story
    ×