search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லைப் பிரச்சனையில் இந்தியா செய்வது ஒப்பந்தத்தின் மீதான துரோகம்: சீனா சாடல்
    X

    எல்லைப் பிரச்சனையில் இந்தியா செய்வது ஒப்பந்தத்தின் மீதான துரோகம்: சீனா சாடல்

    எல்லைப் பிரச்சனையில் இரு நாடுகளுக்கு இடையே உள்ள ஒப்பந்தத்தின் மீது இந்தியா துரோகம் புரிவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
    பெய்ஜிங்:

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலம் சீன நாட்டின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளன. இருநாட்டு ராணுவ வீரர்களும் எல்லைப் பகுதியில் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்திய - சீன எல்லைக்கோடு அருகே சீன ராணுவம் அத்துமீறி நுழைந்ததோடு, இரண்டு பதுங்கு குழிகளையும் அழித்ததாக இந்திய ராணுவம் சில தினங்களுக்கு முன்பு குற்றம்சாட்டியது.

    ஆனால், எல்லை தாண்டி ஊடுருவியதாக கூறிய இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு சீன ராணுவம் மறுப்பு தெரிவித்தோடு, இந்திய வீரர்கள்
    தான் எல்லை தாண்டி வந்ததாக கூறியது. டாங்லாங் பகுதியில் சீன ராணுவம் சாலைப்பணிகளை மேற்கொள்வதாகவும் இந்தியா குற்றம் சாட்டியது.



    இந்த விவகாரம் இரு நாடுகளின் உயர் மட்டம் வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து, இங்கு இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டனர். மேலும், 1962-ம் ஆண்டு நடைபெற்ற போரின் வரலாற்று பாடங்களை இந்திய ராணுவம் கற்க வேண்டும் என சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் காரசாரமான கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு,”1962-ம் ஆண்டில் இந்தியாவின் பலம் வேறு, இப்போது வேறு” என பாதுகாப்பு துறை மந்திரி அருண் ஜெட்லி பதிலடி கொடுத்தார்.

    இதற்கிடையே, இந்த பகுதியில் உள்ள நாதுலா கனவாய் வழியாகத்தான் திபெத்தில் உள்ள கைலாய மலைக்கு இந்திய பக்தர்கள் செல்வது வழக்கம். இந்த ஆண்டு முதல் யாத்திரை கடந்த வாரம் தொடங்கியது. ஆனால், அவர்களை நாதுலா கனவாய் வழியாக செல்வதற்கு சீனா அனுமதி மறுத்து விட்டது.

    மேலும், சீனா புதிதாக ஒரு வரை படத்தை வெளியிட்டுள்ளது. அதில், டோகாலா பகுதி சீனாவின் உள்ளடங்கிய பகுதி போல குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரை படம் மத்திய அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசித்து வருகிறது.

    இந்நிலையில், இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையே உள்ள ஒப்பந்தத்தில் இந்தியா துரோகம் புரிவதாக சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் செங் சுவாங் குற்றம் சாட்டியுள்ளார். இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழல் திறந்தே இருப்பதாகவும், சுமூகமாக பேசுவதற்கு தங்கள் தரப்பில் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    அடுத்த வாரம், ஜெர்மனியில் ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு நடைபெற உள்ளது. இதில், இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜிங்பிங்-கும் பங்கேற்கின்றனர். அப்போது, இரு நாடுகள் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து இது வரை முடிவுகள் எட்டப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×