என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க., த.வெ.க.வுடன் ராகுல் பேச்சால் விஜயின் குற்றச்சாட்டுகள் நீர்த்து போகக்கூடாது- பா.ஜ.க.
- தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக சிபிஐ விசாரணையை அறிவிக்க வேண்டும்.
- ராகுல் காந்தி மறைமுக முயற்சி எடுத்து வருவதை தமிழக பாஜக விரைவில் அம்பலப்படுத்தும்.
தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கரூர் த.வெ.க. பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான அதி முக்கியத்துவம் வாய்ந்த கோரமான சம்பவத்தில் கண்துடைப்புக்காக தி.மு.க. அரசு நியமித்துள்ள முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான குறுகிய கால அவகாச விசாரணை அறிக்கையால் எந்தவித பலனும் ஏற்படாது என்பதால் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக சிபிஐ விசாரணையை அறிவிக்க வேண்டும்.
மிக முக்கியமாக இறந்த வர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தமிழக அரசு முழு கவனத்துடன் செயல்பட்டு உண்மைகளை வெளிக் கொணரும் வரையில் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும்.
இறந்தவர்கள் குடும்பத்திடம் உடல்களை வேகமாக ஒப்படைக்க வேண்டும் என்ற கருத்து சரியானதாக இருந்தாலும், சட்டத்தின் வழிகாட்டுதல்படி இந்த துயர சம்பவத்திற்கு ஆதாரமான உண்மை தகவல்களை அளிக்கக்கூடிய போஸ்ட்மார்ட்டம் பரிசோதனை மற்றும் ரிப்போர்ட்களில் சமரசம் இல்லாமல் தமிழக அரசு முழு கவனத்துடன் வெளிப்படை தன்மை உடன் செயல்பட வேண்டும்.
தமிழக வெற்றி கழகத்தின் நீதிமன்ற மனுவில் கூறப்பட்டுள்ள சந்தேகப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து , இந்த கோர குற்றச் செயலில் அரசியல் பின்னணி இருக்கிறதா? உள்ளூர் அரசியல்வாதிகளின் சதி இருக்கிறதா? என்பதையும் தயவு தாட்சண்யம் இல்லாமல் பாரபட்சமில்லா மல், சந்தேகம் எழுப்பப்பட்ட நபர்களுக்கு காவல்துறை சார்பாக சம்மன் அளித்து விசாரணை முழுவதுமாக நடத்தப்பட வேண்டும்.
நேற்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு ஆறுதல் கூறியதாக கூறப்பட்டாலும்,
தமிழக வெற்றி கழகத்தின் குற்றச்சாட்டுகளை நீர்த்துப் போக செய்யும் வகையில், உண்மைகளை தடுப்பதற்கு , நடிகர் விஜய்க்கு அழுத்தம் கொடுக்க ராகுல் காந்தி மறைமுக முயற்சி எடுத்து வருவதை தமிழக பாஜக விரைவில் அம்பலப்படுத்தும்.
தமிழக பா.ஜ.க. இந்த கோர சம்பவத்தின் விசாரணை விவகாரத்தில் தமிழக அரசுக்கும் நடிகர் விஜய்க்கும், தமிழக மக்களின் எண்ணத்தின் படி உண்மைக்கும் நியாயமான விசாரணைக்கும் முழுமையாக துணை நிற்கும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.






