என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    TVK Vijay| விஜய்யை நோக்கி விமர்சனமா? அரசியல் தலைவருக்கு குடும்ப மாண்பு முக்கியம்- வைகோ
    X

    TVK Vijay| விஜய்யை நோக்கி விமர்சனமா? அரசியல் தலைவருக்கு குடும்ப மாண்பு முக்கியம்- வைகோ

    • உலகளாவிய அரசியல் மற்றும் போர் சூழ்நிலைகளும் தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ளது.
    • உலகின் பல பகுதிகளில் நடைபெறும் போர் நடவடிக்கைகள் மனித உயிர்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது.

    மதுரை:

    மதுரை முனிச்சாலை தியேட்டர் அருகில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்தும், தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைத்து பேசியதாவது:-

    சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக பொது மக்கள் கடுமையான பொருளாதார சுமையை எதிர்கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக இல்லத்தரசிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பதால் இனி அடுப்பே எரியுமா என்ற கவலையில் பல குடும்பங்கள் வாழும் நிலை உருவாகியுள்ளது.

    விலையேற்றத்தின் தாக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில், ஹோட்டல் ஒன்றில் இட்லி ஒன்றின் விலை 33 ரூபாய் 33 காசுகள், மெதுவடை 33 ரூபாய் 33 காசுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியை தவிர்த்து கூடுதலாக கேஸ் கட்டணமாக 9 ரூபாய் 52 பைசா வசூலிக்கப்படுகிறது.

    அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு கூட இவ்வாறு கூடுதல் செலவுகள் சேர்க்கப்படுவது நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கையை மேலும் சிரமப்படுத்தும்.

    உலகளாவிய அரசியல் மற்றும் போர் சூழ்நிலைகளும் தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ளது. வளைகுடா மற்றும் அரபு நாடுகளுக்கு வேலைக்கு சென்றுள்ள லட்சக்கணக்கான இந்தியர்கள் பாதுகாப்பாக திரும்புவோமா என்ற அச்சத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

    உலகின் பல பகுதிகளில் நடைபெறும் போர் நடவடிக்கைகள் மனித உயிர்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. ரஷியாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி கொடுப்பதா? இந்தியா என்ன அமெரிக்காவின் கொத்தடிமை நாடா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

    சமீப காலமாக சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தொடர்பாக வெளியான பல்வேறு விவாதங்களையும் அவர் மறைமுகமாக குறிப்பிட்டார். குறிப்பாக ஒரு பொது தலைவர் சமூகத்தில் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய நிலையில், குடும்ப மாண்பும் ஒழுக்கமும் மிக முக்கியம்.

    கண்ணகி, காரைக்கால் அம்மையார், வேலுநாச்சியார் போன்ற வரலாற்று சிறப்புமிக்க பெண்கள் வாழ்ந்த தமிழகத்தில் குடும்ப ஒழுக்கமும் பண்பாட்டு மதிப்புகளும் பாதுகாக்கப்பட வேண்டும். இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போதைப்பொருள் உள்ளிட்ட சமூக தீமைகளுக்கு இரையாகாமல் கல்வி மற்றும் நல்லொழுக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை முன்னேற்றம் அடைய கடுமையாக உழைக்கின்றனர் என்பதால் அந்த நம்பிக்கையை காக்கும் பொறுப்பு இளைஞர்களுக்கு இருக்கிறது என்று பேசினார்.

    Next Story
    ×