என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காங்கிரசுடன் கூட்டணி அமைக்க காய் நகர்த்துகிறதா த.வெ.க.?- மூத்த தலைவருடன், விஜய் தந்தை சந்திப்பால் எதிர்பார்ப்பு
    X

    காங்கிரசுடன் கூட்டணி அமைக்க காய் நகர்த்துகிறதா த.வெ.க.?- மூத்த தலைவருடன், விஜய் தந்தை சந்திப்பால் எதிர்பார்ப்பு

    • சுமார் 4 மணி நேரம் இரண்டு பேரும் அரசியல் குறித்து விரிவாக விவாதித்து உள்ளனர்.
    • எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் காங்கிரஸ் மீதான ஈர்ப்பு இருந்துள்ளது.

    திருச்சி:

    தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டமன்ற தேர்தல் வரும் போதெல்லாம், ஒருமுறை அந்த கட்சி, மறுமுறை இந்த கட்சி என்ற நிலையே கடந்த கால வரலாறாக இருந்து வந்துள்ளது. ஆனால் வரப்போகும் 2026 சட்டமன்ற தேர்தல் புதிய அத்தியாயத்தை எழுதும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    எப்போதுமே தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு வரிந்து கட்டி களப்பணிகளை தொடங்கும் அரசியல் கட்சிகள் எப்போதும் இல்லாத அளவில் இந்த தேர்தலுக்காக ஓராண்டுக்கு முன்னரே தயாராகி விட்டனர். அரசியல் கட்சி தலைவர்கள் 'மக்கள் சந்திப்பு' என்ற கருப்பொருளுடன் பயணங்களை தொடங்கி விட்டனர்.

    அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க., த.வெ.க. ஆகிய கட்சி தலைவர்கள் வாகனங்களுடன் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். தி.மு.க.வும் கட்சியை பலப்படுத்தி அதற்கேற்றவாறு அரசின் சாதனைகளை கூறி மக்கள் இந்த அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

    தற்போது வரை 4 முனை போட்டி என்று கணிக்கப்பட்ட நிலையில் வரும் காலங்களில் அது மாறக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் த.வெ.க. தலைவர் விஜய், தங்கள் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் யாரும் தங்களுடன் சேரலாம் என்று தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் தமிழக வெற்றி கழகத்தை சேர்க்க பகீரத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    ஆனால் அந்த கனவு பொய்த்து விட்டது. ஏற்கனவே விஜய் தமது அரசியல் எதிரி தி.மு.க., கொள்கை எதிரி பா.ஜ.க. என கொள்கை முழக்கமிட்டு வந்தார். ஆகவே பா.ஜ.க. இடம்பெற்றுள்ள கூட்டணியில் இடம்பெற வாய்ப்பில்லை என்பது தெள்ளத்தெளிவானது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து விஜயுடன், ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்புகொண்டு அரை மணி நேரம் பேசி ஆறுதல் தெரிவித்தார். இது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் கரூர் எம்.பி. ஜோதிமணி, 10 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் காங்கிரசில் சேர ராகுல் காந்தியை சந்தித்ததாக புது குண்டை தூக்கி போட்டார். அதன்பின்னர் கரூரில் மீண்டும் அக்கட்சியின் மாநில நிர்வாகி அருள் ராஜை அவர் சந்தித்தார்.

    இந்த நிலையில் தற்போது விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், மூத்த தலைவருமான திருச்சி வேலுச்சாமியை சந்தித்து பேசியது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூரில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக எஸ்.ஏ.சந்திரசேகர் விமானம் மூலம் திருச்சி வந்தார்.

    இந்த திருமணத்துக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமிக்கும் அழைப்பு வந்துள்ளது. அதன் பின்னர் இருவரும் ஒரே காரில் திருவாரூர் புறப்பட்டு சென்றனர். அதன் பின்னர் அதே காரில் அவர்கள் திருச்சி விமான நிலையம் வந்தனர். சுமார் 4 மணி நேரம் இரண்டு பேரும் அரசியல் குறித்து விரிவாக விவாதித்து உள்ளனர்.

    எஸ்.ஏ.சந்திரசேகர் நீண்ட காலமாக வேலுச்சாமி உடன் தொடர்பில் இருந்து வந்தார். தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு காமராஜர் குறித்து திருச்சி வேலுச்சாமி வைக்கும் வாதங்களை பார்த்து அவ்வப்போது பாராட்டி வந்ததாக கூறப்படுகிறது. ஆகவே எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் காங்கிரஸ் மீதான ஈர்ப்பு இருந்துள்ளது.

    தமிழக அரசியல் நிலவரம் மற்றும் கூட்டணி தொடர்பாக அவர்கள் இருவரும் விவாதித்ததாக தெரிகிறது. இது தொடர்பாக திருச்சி வேலுச்சாமியிடம் கேட்ட போது, எஸ்.ஏ.சந்திரசேகர் எனது நீண்ட கால நண்பர். திருவாரூர் திருமண நிகழ்வில் எனக்கும் அழைப்பு வந்ததை அறிந்த அவர் என்னை தொடர்புகொண்டு பேசி என்னை திருச்சியில் சந்தித்தார். இது வழக்கமான சந்திப்பு தான். கூட்டணியை தலைமை தான் முடிவு செய்யும். நான் சொல்வது முறையல்ல.

    திருவாரூர் திருமண நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியில் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த பழனிசாமியின் மகன், இரண்டு முறை எம்.பி.யாக இருந்த எம்.ஜி.முருகையா மகன், காங்கிரஸ் கட்சியில் மாவட்ட தலைவராக இருந்த பூம்புகார் சங்கர் மகன் ஆகிய மூன்று பேரும் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்து பணியாற்றுவதை நான் பார்க்க நேர்ந்தது. அவர்களின் தந்தைகளுடன் நான் தொடர்பில் இருந்ததால் அவர்கள் வந்து என்னிடம் நலம் விசாரித்தனர்.

    இதன் மூலம் விஜய் இளைஞர்கள் மத்தியில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார் என்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது என்றார். அதேபோல் தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் தொடர்பாகவும், அதில் அமைய உள்ள அரசியல் கூட்டணி குறித்தும் விரிவாக பேசியுள்ளனர். அ.தி.மு.க.வை பொறுத்தவரை தேசிய கட்சியான பா.ஜ.க. வுடன் கூட்டணி வைத்தது போல், முதன்முறையாக கட்சி தொடங்கி முதல் தேர்தலை சந்திக்கும் த.வெ.க.வும் தேசிய கட்சியான காங்கிரசுடன் கூட்டணி வைப்பதில் ஆர்வம் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்தநிலையில்தான் த.வெ.க. தலைவர் விஜய்யின் தந்தை, காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமியை சந்தித்து பேசியது தற்போதைய அரசியலில் பேசும் பொருளாக மாறியுள்ளது. காங்கிரசுடன் கூட்டணி அமைக்க த.வெ.க. காய் நகர்த்துகிறதா? என்பது அடுத்துவரும் அரசியல் களம்தான் முடிவு செய்யும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

    Next Story
    ×