என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்கிறார்- பி.டி. செல்வகுமார்
    X

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்கிறார்- பி.டி. செல்வகுமார்

    • 2003ம் ஆண்டு முதல் விஜயக்கு மக்கள் தொடர்பு அலுவலராக பி.டி.செல்வகுமார் இருந்தார்.
    • கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் உள்ள பி.டி.செல்வகுமார் திமுகவில் இணைந்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி.செல்வகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.

    அப்போது தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் ரெ.மகேஷ், ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

    தி.மு.க.வில் இணைந்த பி.டி.செல்வகுமார் த.வெ.க. தலைவர் விஜய்யின் முன்னாள் மேலாளர் ஆவார்.

    பின்னர் பி.டி. செல்வகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை சிறப்பாக ஆண்டு கொண்டிருக்கிறார். தி.மு.க.வின் கட்டமைப்பு என்னை ஈர்த்ததால் நானும் கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகளும் தி.மு.க.வில் இணைந்து உள்ளோம்.

    விஜய் மக்கள் இயக்கத்துக்கு நான் ஒரு தூணாக இருந்து பணியாற்றினேன். அதில் புதிது புதிதாக உள்ளே வந்தவர்களால் அங்கு என்னை போன்றவர்களை பயணம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.

    விஜய் மக்களையும், ரசிகர்களையும் சரியான படி வழி நடத்தி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வாரா என்பது எனக்கு தெரியவில்லை.

    விஜய்யிடம் நல்ல கூட்டமும் இருக்கிறது. தீய கூட்டமும் இருக்கிறது. தீய கூட்டம் நல்லவர்களை வெளியே தள்ளிவிடும். சுற்றி இருப்பவர்கள் சரியாக அமையாவிட்டால் புகழ் பெற்றவர்களை கூட வேறு திசைக்கு கொண்டு சென்று விடுவார்கள்.

    சினிமா வேறு, அரசியல் வேறு. நிலவு கொஞ்ச நாள் தான் இருக்க முடியும். ஆனால் சூரியன் என்றும் இருக்கும். அதன் பிரகாசம் மக்களுக்கு நல்லது. அதனால் தான் நான் சூரியன் பக்கம் வந்திருக்கிறேன்.

    விஜய் சிறப்பாக செய்தால் எனக்கு சந்தோசம் தான். 27 ஆண்டுகள் உழைத்து உள்ளேன். இப்போது வந்தவர்களால் வேதனையை அனுபவித்தேன். த.வெ.க.-வில் தலைமை சரியாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் தொண்டர்களை வழி நடத்தமுடியும். விஜய் நல்லபடியாக வர வேண்டும் என்பது எனது ஆசைதான். ஆனால் எனது பயணத்துக்கு அது சரியான இடம் இல்லை. விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறாது. நடிகர், நடிகைகள் எங்கு வந்தாலும் கூட்டம் கூடும். விஜய் ஒரு நிலவு அவரை மக்கள் ரசிக்க மட்டும்தான் முடியும்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் 224 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×