என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேருவதில் பிரச்சனை இல்லை- திருமாவளவன் பரபரப்பு பேச்சு
- அரசியலில் தெளிவு, பொறுமை, நிதானம், சகிப்புதன்மை தேவை.
- நமக்கு ஆதரவான சக்திகள் யார்? எதிரான சக்திகள் யார்? என்பதை தெளிவாக முடிவு செய்ய வேண்டும்.
மதுரை:
மதுரை முடக்கத்தான் பகுதியில் நேற்று இரவு நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-
ஆளுங்கட்சியோடு நாம் கூட்டணியில் இருக்கிறோம். ஆனாலும் அவர்கள் மற்ற கொடிகளை காட்டிலும் நமது கட்சி கொடிகளை அகற்றுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுபோன்ற பல பிரச்சனைகளை எதிர்கொண்டு, சமாளித்துக்கொண்டு, போராடிக்கொண்டு இன்னும் ஆளுங்கட்சி கூட்டணியில்தான் நீடிக்கிறோம்.
ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு கூட்டணியில் இருக்க வேண்டும் என கேட்பது சராசரி மனிதனின் சிந்தனை. அரசியல் களத்தில் அது சரிவராது.
அரசியலில் நாம் இருக்கும்போது எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். ஒரு பிரச்சனையை கவனத்தில் கொண்டு மட்டும் நாம் செயல்பட முடியாது.
அரசியலில் தெளிவு, பொறுமை, நிதானம், சகிப்புதன்மை தேவை. நமக்கு ஆதரவான சக்திகள் யார்? எதிரான சக்திகள் யார்? என்பதை தெளிவாக முடிவு செய்ய வேண்டும். அதனால் தான் பா.ஜ.க., பா.ம.க. கட்சிகள் இடம்பெறும் அணிகளில் நாம் சேர மாட்டோம் என தெளிவாக முடிவெடுத்துள்ளோம்.
அ.தி.மு.க.வோடு சேருவீர்களா? சேரலாம். பிரச்சனை இல்லை. ஆனால் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் இருப்பதால் அது முடியாது. இப்படி கதவுகளை எல்லாம் மூடி வைத்துக்கொண்டால் யார் கூட்டணிக்கு அழைப்பார்கள் என்று சிலர் கேட்கிறார்கள். எதையும் எதிர்பார்த்து, யாரையும் மிரட்டி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
நாங்கள் அதற்காக கட்சி தொடங்கவில்லை. அம்பேத்கரின் அரசியலை மக்களிடம் கொண்டு செல்வதற்காகவே கட்சியை தொடங்கியுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.






