என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சரின் கார் டயர் பஞ்சர் ஆனதற்கு முருகனின் சக்தியே காரணம்- செல்லூர் ராஜூ
- ஜனநாயகன் விவகாரத்தில் அரசியல் சாயம் பூசப்படுகிறது.
- அ.தி.மு.க. பலமிழக்கவில்லை. தி.மு.க. தான் பலமிழந்து இருக்கிறது.
மதுரை:
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை கூடல் நகர் பகுதியில் கால்வாய் பாலம் மற்றும் கரிசல் குளம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் இரண்டாம் தளத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதன்பின் அவர் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று, கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆமை வேகத்தில் மதுரையில் முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டப்பணி நடைபெற்று திறந்து வைக்கப்பட்டதால், இணைப்புகள் சரியாக கொடுக்கப்படாமல் ஆங்காங்கே குடிநீர்க் குழாய்கள் அழுத்தம் தாங்காமல் வெடித்து சிதறுகிறது.
முதலமைச்சர் பயத்தில் ஏதேதோ பேசுகிறார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், பா.ஜ.க. தனது கட்டுப்பாட்டில் ஆட்சியை நடத்தும் என கூறுகிறார். போதைக் கலாச்சாரம் தமிழகத்தில் தலை விரித்தாடுகிறது. சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருட்கள் விற்கப்படுகிறது. இப்படி அவர்கள் கூட்டணியில் உள்ள வைகோவே சொல்லி இருக்கிறார்.
அ.தி.மு.க. கூட்டணிக்கு வரக்கூடிய கட்சிகள் குறித்து, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்கிறார். மக்கள் இந்த ஆட்சியை அகற்ற ஆர்வமோடு இருக்கிறார்கள்.
125 நாட்களாக வேலை உறுதி திட்டத்தை உயர்த்திக் கொடுத்த அமித்ஷாவிற்கு நன்றி சொல்லத்தான் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார். விஜய் கட்சி நடத்துவதற்கு எத்தனையோ விதத்தில் நெருக்கடி கொடுக்கலாம். அதை விட்டு விட்டு ஜனநாயகன் படம் வெளியிடுவதற்கு நெருக்கடி என்பது தவறு. ஜனநாயகன் விவகாரத்தில் அரசியல் சாயம் பூசப்படுகிறது.
கூட்டணிப் பலத்தில் தான் தி.மு.க. இருக்கிறது. எங்கள் அம்மா போன்று யாருடைய கூட்டணியையும் எதிர்பாராமல் தனித்துப் போட்டி போட மு.க.ஸ்டாலின் தயாரா?
ரூ. 3 ஆயிரம் கொடுத்தாலும் சரி. கொள்ளை அடித்த 4 லட்சம் கோடி ரூபாயை தேர்தலுக்காக இறக்கினாலும் தி.மு.க. வெற்றிப் பெற முடியாது.
அ.தி.மு.க. பலமிழக்கவில்லை. தி.மு.க. தான் பலமிழந்து இருக்கிறது. முருகப் பெருமானுக்கு சக்தி அதிகம். அதனால் தான் திருப்பரங்குன்றம் அருகே முதலமைச்சர் கார் டயர் பஞ்சராகிப் போனதோ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை அரசு மதிக்க வேண்டும்.
அமித்ஷா மாபெரும் தலைவர். விஜய் கட்சி மற்றும் அவரது படத்திற்கு நெருக்கடி கொடுப்பது போன்ற வேலை எல்லாம் அவர் செய்ய மாட்டார் என்றார்.






