என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    Petrol Bomb| கார்த்தி சிதம்பரம் எம்.பி., அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு- ஈரான் அதிபர் காரணம்?
    X

    Petrol Bomb| கார்த்தி சிதம்பரம் எம்.பி., அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு- ஈரான் அதிபர் காரணம்?

    • பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து உடனடியாக கார்த்தி சிதம்பரத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • சிவகங்கை போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் தெற்கு முதல் வீதியில் முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி மற்றும் சிவகங்கை தொகுதி எம்.பி.யும்., ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் அலுவலகம் உள்ளது.

    இங்கு ஆண்டியப்பன் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவர் நேற்று இரவு 12 மணி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். பின்னர் அவர் ஓய்வெடுத்தார்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் சிலர் வந்தனர். அவர்கள் கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் திடீரென 2 பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து வீசினார்கள்.

    இதில் ஒரு பெட்ரோல் குண்டு தரையில் பட்டு வெடித்து சிதறியது. இன்னொரு பெட்ரோல் குண்டு புல்வெளியில் விழுந்து உள்ளது. இதனால் அது வெடிக்கவில்லை. இன்று காலையில் காவலாளி வந்து பார்த்த போது, அலுவலக வளாகத்தில் பாட்டில்கள் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து உடனடியாக கார்த்தி சிதம்பரத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது ஆலோசனையின் பேரில் எம்.பி. அலுவலக உதவியாளர் செந்தில் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். ப. சிதம்பரத்தின் அலுவலகம் அமைந்திருக்கும் தெரு பகுதியில் ப.சிதம்பரத்தின் அலுவலகத்தை நோக்கி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அந்த கேமராவையும் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் உடைத்து உள்ளனர்.

    இருப்பினும் அப்பகுதியில் உள்ள மற்ற சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    சிவகங்கை போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் திரண்டனர். பெட்ரோல் குண்டு வீசியவர்கள் எதற்காக இது போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள் என்பது உடனடியாக தெரியவில்லை.

    இருப்பினும் ஈரான் அதிபர் பற்றி கார்த்தி சிதம்பரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    கார்த்தி சிதம்பரம் ஈரான் பற்றி பேட்டி அளித்த போது ஈரானில் நடைபெற்றது கொடுங்கோல் அரசு என்று தெரிவித்து இருந்தார்.

    இதற்கு சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான கருத்து வெளியிடப்பட்டதுடன், காரைக்குடியில் கண்டன போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களே கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இது தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    அதே நேரத்தில் அரசியல் முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தி.மு.க., காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ப.சிதம்பரம் தலையிட்டு சுமூகமாக சமீபத்தில் தீர்த்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

    காரைக்குடி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் போலீசார் ரோந்து சுற்றி கண்காணித்து வருகிறார்கள்.

    Next Story
    ×