என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராகுல் மீது குற்றச்சாட்டு சொல்லும் மோடி பேச்சு அரசியல் மோசடி: செல்வப்பெருந்தகை
- பின்தங்கிய சாதியினரிடையே மோதலை உருவாக்க ராகுல்காந்தி முயற்சிக்கிறார் என்ற குற்றச்சாட்டை மோடி கூறுகிறார்.
- மக்களை பிளவுபடுத்துகிறார் என்று குற்றச்சாட்டு கூறுவதை விட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அரசமைப்புச் சட்டம் உறுதி செய்திருக்கிற சமூக நீதியை அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அனைத்து மக்களையும் உள்ளடக்கி, உரிய பிரதி நிதித்துவத்தை நோக்கமாக கொண்டது தான் சாதிவாரி கணக்கெடுப்பு.
கடந்த 2021-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிற மோடி அரசு உடனடியாக அதனை நடத்துவதோடு, அதனுடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டுமென்பது தான் தலைவர் ராகுல்காந்தியின் முக்கியமான கோரிக்கையாகும்.
அதனை எதிர்கொள்ள முடியாத பிரதமர் மோடி, பின்தங்கிய சாதியினரிடையே மோதலை உருவாக்க ராகுல்காந்தி முயற்சிக்கிறார் என்ற குற்றச்சாட்டை கூறுகிறார். மதரீதியாக மக்களை பிளவுபடுத்துகிற பா.ஜ.க.வின் அரசியலை எதிர்த்து தான் தேசிய ஒற்றுமை பயணத்தின் மூலம் மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்காக 10,000 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொண்டு தம்மை வருத்திக் கொண்ட தலைவர் ராகுல்காந்தியை பார்த்து, மக்களை பிளவுபடுத்துகிறார் என்று குற்றச்சாட்டு கூறுவதை விட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






