என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மோடி அவர்களே, விஜயை எதிர்கொண்டு உங்கள் '56 inch' மார்பு கூற்றை நிரூபியுங்கள் - காங்கிரஸ் சவால்
- அதிகாரிகளுக்கு நீங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக விஜய்-ன் திரைப்படம் தாமதங்களைச் சந்தித்து வருகிறது
- கலையிலிருந்து அரசியலை விலக்கி வைப்போம், படைப்புச் சுதந்திரத்தை மதிப்போம்.
விஜய் நடிப்பில் நாளை வெளியாக இருந்த படம் 'ஜன நாயகன்'. படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் சான்றிதழ் வழங்குவதற்கு சென்சாருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த கோர்ட் வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.நிறுவனம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக அறிவித்தது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களுக்கும் ஏமாற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக தமிழக காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், "அன்புள்ள பிரதமர் மோடி அவர்களே, நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தின் துஷ்பயோகம் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது. அரசியல் கருத்து வேறுபாடுகள் புரிந்துகொள்ளக்கூடியவை என்றாலும், ஒரு கலைஞனின் படைப்பை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
அரசியல் ஆதாயங்களுக்காகத் திரைப்படங்களுக்குத் தணிக்கை செய்வதைத் தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கலையும், பொழுதுபோக்கும் அரசியல் போர்களில் காய்களாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அதிகாரிகளுக்கு நீங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக விஜய்-ன் திரைப்படம் தாமதங்களைச் சந்தித்து வருகிறது, இது தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் அநீதியானது. கலையிலிருந்து அரசியலை விலக்கி வைப்போம், படைப்புச் சுதந்திரத்தை மதிப்போம்.
மோடி அவர்களே, நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு உங்கள் 56 அங்குல மார்பு என்ற கூற்றை நிரூபியுங்கள். உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






