என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வேளாண் மண்டலத்தை மாசுக்காடாக மாற்ற திமுக அரசு துடிப்பதா?- அன்புமணி
- நிலத்தடி நீர்மட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.
- சாயப்பட்டறைகளை சுற்றுச்சூழலின் முதல் எதிரியாக பாமக கருதுகிறது.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த ஆலங்கோட்டை கிராமத்தில் சாயப்பட்டறையுடன் கூடிய ஜவுளி பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதற்கு அப்பகுதியில் உள்ள மக்களும், உழவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேளாண்மைக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் கேட்டை ஏற்படுத்தும் என்பதை அறிந்திருந்து காவிரி பாசன மாவட்டங்களில் சாயப்பட்டறையுடன் கூடிய ஜவுளிப் பூங்காவை அமைப்பது கண்டிக்கத்தக்கது.
சாயப்பட்டறைகளுடன் கூடிய ஜவுளிப்பூங்காக்கள் அமைக்கப்படுவதால் ஏற்படும் கேடுகள் எல்லையில்லாதவை. சாயப்பட்டறைகளால் இரு வகையாக பாதிப்புகள் ஏற்படுகின்றன. முதலாவது சாயப்பட்டறைகளின் தேவைக்காக தினமும் கோடிக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீர் ராட்சத எந்திரங்களைக் கொண்டு உறிஞ்சி எடுக்கப்படும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.
அடுத்ததாக சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் வேதிப்பொருள்களும், நச்சுப் பொருள்களும் கலந்த கழிவுநீர் நிலம், நீர், வாயு உள்ளிட்ட இயற்கை வளங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் சரி செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தி விடும். அதனால் தான் சாயப்பட்டறைகளை சுற்றுச்சூழலின் முதல் எதிரியாக பாமக கருதுகிறது.
தமிழ்நாட்டில் சாயப்பட்டறைகள் செயல்படும் எந்த பகுதியிலும் அவற்றின் கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கப்படுவதில்லை. கடலோரப்பகுதிகளிலும், ஆற்றங்கரைகளிலும் அமைந்திருக்கும் சாயப்பட்டறைகளின் கழிவு நீர் அரைகுறையாக சுத்திகரிக்கப்பட்டு ஆறுகளிலும், கடல்களிலும் கலக்கவிடப்படுகின்றன. காவிரி, தென்பெண்ணை, பவானி, அமராவதி, நொய்யல் உள்ளிட்ட பல ஆறுகள் சாயப்பட்டறை கழிவுகளால் தான் கொஞ்சம், கொஞ்சமாக கொலை செய்யப்பட்டு வருகின்றன.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் அமைக்கப்படும் ஜவுளி பூங்காவாலும் இதே போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதனால் திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மைக்கும், சுற்றுச்சூழலுக்கு சரி செய்ய முடியாத அளவுக்கு மிக மோசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். இத்தகைய பாதிப்புகள் எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காகத் தான் காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாகப் போராடியது. அதன் பயனாகத் தான் முந்தைய ஆட்சியில் காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அரும்பாடு பட்டு காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தை திமுக அரசு சிதைத்து விடக் கூடாது.
காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண்மை சார்ந்த தொழில்களை அமைப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், அதற்கான எந்த முயற்சியையும் கடந்த ஐந்தாண்டுகளில் திமுக அரசு செய்யவில்லை. அதை விடுத்து வேலைவாய்ப்பை ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் வேளாண்மைக்கு வேட்டு வைக்கும் சாயப்பட்டறைகளை அமைப்பதை அனுமதிக்க முடியாது.
மக்களுக்கு எந்த வகையிலும் பயனற்ற, பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தக்கூடிய சாயப்பட்டறையுடன் கூடிய ஜவுளி பூங்காவை ஆலங்கோட்டை கிராமத்தில் அமைக்கும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.






