என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

#DMDK துண்டு போட்டு அரசியல் நடத்தும் ஒரே தலைவி பிரேமலதா மட்டும் தான்- நடிகை விந்தியா பரபரப்பு பேச்சு
- இந்தியாவிலேயே பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளாட்சி தேர்தலில் கொடுத்தது அம்மா தான்.
- கட்சியை உடைக்க பார்த்தார்கள். கட்சியை முடக்க பார்த்தார்கள்.
சேலம்:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் ஆட்டையாம்பட்டி ரவுண்டானா பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். வீரபாண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் வருதுராஜ் வரவேற்புரை ஆற்றினார். வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ. ராஜமுத்து முன்னிலை வகித்தார்.
இதில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை விந்தியா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
இங்கு உங்களை பார்த்ததும் குழந்தை போல் நான் உற்சாகமாகிவிட்டேன். சிவனை நினைத்து வணங்கினால் முக்தி கிடைக்கும் என்பார்கள். ஆனால் அம்மாவை நினைத்து வணங்கினால் எனக்கு சக்தி கிடைக்கும்.
அம்மாவின் வார்த்தைகள் நம்மை கட்டி போடும். அந்த விரல் உங்களை சுட்டிக் காண்பித்தால் உலகமே உங்களைப் பார்க்கும். அம்மா என்றால் தமிழகத்திற்கு வரம். தி.மு.க.விற்கு ஜுரம்.
அப்படிப்பட்ட அம்மாவின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன். அம்மாவின் ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சி. தமிழகத்தில் 234 தொகுதியிலும் போட்டியிட்ட ஒரே தலைவி அம்மா மட்டுமே. அம்மாவின் வெற்றிக்கு காரணம் புரட்சித்தலைவர், இரட்டை இலை. நமது அம்மா தான். தமிழகத்தின் வெற்றிக்கு காரணம் பல காரணங்களை கூறலாம். அம்மா கொடுத்த அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருந்தார். சொல்லாதவற்றையும் செய்து கொடுத்தவர் அம்மா தான். டெல்லி அம்மா கேட்டதெல்லாம் கொடுத்தது. மாணவர்களுக்கு விலை இல்லா மடிக்கணினி கொடுத்தார். தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தார். இன்று எத்தனையோ பெண்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அம்மா தான். பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அம்மா கொண்டு வந்தார்.
இந்தியாவிலேயே பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளாட்சி தேர்தலில் கொடுத்தது அம்மா தான். மக்களுக்கு பார்த்து பார்த்து திட்டங்களை கொண்டு வந்தவர் அம்மா. தோற்கடிக்க முடியாத தலைவியாக அம்மா இருந்தார். இதற்கு காரணம் மக்கள் தான். மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள் புரட்சித்தலைவரும், புரட்சித் தலைவியும் தான். அம்மாவின் உடல் மறையலாம். ஆனால் புகழ் மறையவே மறையாது.
எடப்பாடியார் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். அப்போதுதான் அம்மாவின் ஆத்மா சாந்தி அடையும். இன்னொரு இழப்பை இந்த இயக்கம் தாங்காது. அதனால்தான் எட்டப்பர்களை, துரோகிகளை கட்சியில் சேராமல் பார்த்துக் கொண்டார் எடப்பாடியார்.
அவர்கள் செய்தது சாதாரண துரோகமா? எத்தனை துரோகம் செய்து இருக்கிறார்கள். அந்த துரோகிகள் தி.மு.க.விற்கு கைக்கூலியாக இருந்திருக்கிறார்கள். இவர்களால் தான் அ.தி.மு.க. அலுவலகம் தாக்கப்பட்டது. அம்மாவின் சேரையும் உடைத்து சேதப்படுத்தினார்கள். பைல்களை தூக்கி சென்றார்கள். கட்சியை உடைக்க பார்த்தார்கள். கட்சியை முடக்க பார்த்தார்கள். தி.மு.க.வுடன் கைகோர்த்து கொண்டு அ.தி.மு.க.வை அழிக்க பார்த்தார்கள். ஆனால் அண்ணன் எடப்பாடியார் கட்சியை காப்பாற்றி விட்டார். தமிழக மக்களுக்கு தெரியவேண்டும் என அண்ணன் எடப்பாடியார் பொறுமையாக காத்துக்கொண்டிருந்திருக்கிறார். தி.மு.க. கைக்கூலிகள் யார்? என இப்போது தெரியவந்திருக்கிறது.
தமிழக மக்களுக்கு புரிந்திருக்கிறது. இவர்களை கட்சியில் வைத்திருந்தால் அ.தி.மு.க. வேட்டியை கட்டிக்கொண்டு தி.மு.க.விற்கு வேலை பார்த்து இருப்பார்கள்.
நம்மளை விட்டு இருக்கிற சனி விலகி இருக்கிறது. பதவி ஆசை. பதவி வெறி. இவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இத்தனை துரோகிகளை உங்களது ஆதரவுடன் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும். ஓ.பி.எஸ். தாய்கழகத்தில் இணைந்து விட்டேன் என கூறியிருக்கிறார்.
இந்த கட்சியில் 25 வருடத்திற்கு மேலாக இருக்கிறேன். நான் எந்த பதவியும் அனுபவிக்கவில்லை. ஆனால் ஓ.பி.எஸ். எத்தனையோ பதவிகளை அனுபவித்தார். அவரால் பதவிகள் ஏதும் இல்லாமல் தூங்க முடியாது. எத்தனையோ சலுகைகளை அனுபவித்த ஓ.பி.எஸ். தி.மு.க. முன்பு குனிந்து நிற்கிறார். உடம்பு கூசவில்லையா? அம்மாவின் போட்டோவை கழட்டி விட்டு ஸ்டாலின் போட்டோவை வைக்கிறார். இரட்டை இலை சின்னத்தை உடைத்து விட்டு உதயசூரியன் சின்னத்தை வைக்கிறார். அவர் இருக்கிற வீடு. அவர் வைத்திருக்கும் கார் எல்லாம் அம்மா போட்டது. உங்களுக்கு எங்கள் அம்மா போட்ட பிச்சை. உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார் புரட்சித்தலைவி அம்மா தான்.
இந்த முறை எங்களை நம்பி ஓட்டு போடுங்கள். இரட்டை இலை நம்பி ஓட்டு போடுங்கள். அம்மாவை நம்பி ஓட்டு போடுங்கள். எடப்பாடியாரை நம்பி ஓட்டு போடுங்கள். ஓட்டு போட்டீர்கள் என்றால் நீங்கள் நிம்மதியாக வாழலாம். எத்தனை பொய்யான வாக்குறுதிகள், எத்தனையோ பொய்யான விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கிறது.
தேர்தல் வந்துவிட்டால் தே.மு.தி.க. தலைவர் பிரேமலதா கட்சி கட்சியாக சென்று பேசுவார். துண்டு போட்டு அரசியல் நடத்தும் ஒரே தலைவி பிரேமலதா மட்டும் தான். அரை பர்சன்ட் இல்லாத கட்சியை அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். அவங்களுக்கு பெரிய கொள்கை எல்லாம் கிடையாது. இவற்றையெல்லாம் பார்க்காமல் கேப்டன் சீக்கிரமாக சென்றுவிட்டார். நல்லவர்கள் எல்லாம் சீக்கிரமாக சென்று விடுவார்கள்.
தமிழ்நாடு மீண்டும் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்றால் எடப்பாடி முதலமைச்சராக வரவேண்டும். அப்போதுதான் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கும். 4 வருடம் நல்லாட்சி தந்த அனுபவத்துடன் மீண்டும் ஆட்சிக்கு வந்து எடப்பாடியார் நல்லாட்சி தருவார்.
அரசு பள்ளி மாணவர்களை டாக்டராக்கி அழகு பார்த்த எடப்பாடியாரை எண்ணிப் பாருங்கள். பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கிய எடப்பாடியாரை எண்ணி பாருங்கள். துரோகிகளை கூடவே வைத்துக் கொண்டு சிறப்பான ஆட்சி நடத்திய எடப்பாடியாரை எண்ணி பாருங்கள். பச்சை தமிழன் உங்களுடனே இருக்கிறார். உங்களுக்காக இருக்கிறார். தயவுசெய்து பொதுமக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இரட்டை இலைக்கு போடும் உங்களது ஓட்டு உங்களது உரிமைக்கு போடும் ஓட்டு. நீங்கள் இரட்டை இலைக்கு போடும் ஓட்டு சமூக நீதிக்கு போடும் ஓட்டு. நீங்கள் போடும் ஓட்டு பெண்களுக்கு பாதுகாப்புக்கு போடும் ஓட்டு. அம்மா அவர்களுக்கு போடும் ஓட்டு உங்களது ஓட்டு. எடப்பாடியாரை முதலமைச்சராக்க போடும் ஓட்டு.
இவ்வாறு நடிகை விந்தியா பேசினார்.






