search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக- அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தலைவர்கள் தீவிரம்
    X

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக- அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தலைவர்கள் தீவிரம்

    • தி.மு.க. வும், அ.தி.மு.க.வும் வேட்பாளர்களை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
    • அண்ணா அறிவாலயத்திலும், அ.தி.மு.க. தலைமை கழகத்திலும் நேர்காணலுக்காக கட்சி நிர்வாகிகள் குவிந்துள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி வருகிறது.

    இதில் தி.மு.க. கூட்டணியில் பேச்சுவார்த்தைகள் முடிந்து ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதிகள் என்று முடிவாகிவிட்டது.

    அதன்படி தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ்-10, இந்திய கம்யூனிஸ்டு-2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-2, ம.தி.மு.க.-1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-1, கொ.ம.தே.க.-1 ஆகிய இடங்களில் போட்டியிட ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 1-ந்தேதி முதல் பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அண்ணா அறிவாலயத்தில் கொடுத்தனர்.

    இதில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி, ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர்.பாலு, நீலகிரியில் ஆ.ராசா, வேலூரில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

    இதே போல் அமைச்சர் கே.என்.நேரு மகன் அருண் பெரம்பலூர் தொகுதிக்கும், சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ், பாரத் ஸ்கேன்ஸ் அதிபர் இம்மானுவேல், முக்கூடல் பேரூராட்சித் தலைவர் லெட்சுமணன் ஆகியோர் நெல்லை தொகுதிக்கும் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

    இதில் கனிமொழி, தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பெயரில் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் பணம் கட்டி மனு செய்திருந்தனர்.


    அந்த வகையில் 40 தொகுதிகளுக்கும் மொத்தம் 2 ஆயிரத்து 984 பேர் விருப்ப மனுக்கள் அளித்திருந்தனர்.

    விருப்ப மனு அளித்தவர்கள் அனைவரையும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. நேர்காணலுக்கு வருபவர்கள் தங்களது ஆதரவாளர்கள், பரிந்துரைத்தவர்களை அழைத்து வரக்கூடாது என்றும் கட்டளையிடப்பட்டிருந்தது.

    நேர்காணலுக்காக வெளிமாவட்டங்களை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் நேற்றிரவு சென்னை வந்துவிட்டனர். இன்று காலையில் அண்ணா அறிவாலயத்தில் 8 மணியில் இருந்து தி.மு.க. நிர்வாகிகள் நேர்காணலுக்காக வந்து காத்திருந்தனர்.

    இவர்கள் அமருவதற்காக அண்ணா அறிவாலயத்தில் சாமியானா பந்தல் போடப்பட்டு நாற்காலிகளும் நிறைய போடப்பட்டிருந்தது.

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 9.45 மணிக்கு அறிவாலயம் வந்ததும் அவரது அறையில் நேர்காணல் தொடங்கியது.

    முதலில் கன்னியாகுமரி தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்தவர்களை முதலில் அழைக்கப்பட்டனர்.

    ஒவ்வொருவரிடமும் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, கட்சியில் எத்தனை ஆண்டுகாலம் பணியாற்றுகிறீர்கள், எவ்வளவு செலவு செய்ய முடியும்? என்பது போன்ற கேள்விகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். நேர்காணலின் போது பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர் ஆகியோரும் உடன் இருந்தனர்.

    கன்னியாகுமரியை தொடர்ந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட ஒவ்வொரு தொகுதிக்கான நேர்காணல் நடந்தது.

    தூத்துக்குடி தொகுதி நேர்காணலின் போது கனிமொழி எம்.பி. வந்திருந்து வெற்றி வாய்ப்பு நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விளக்கி சொன்னார். இதே போல் ஒவ்வொரு தொகுதிக்கும் நேர்காணல் வேகமாக நடைபெற்றது.

    இதே போல் அ.தி.மு.க. கட்சியிலும் இன்று நேர்காணல் நடத்தப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரிய 2 ஆயிரத்து 475 பேருக்கும் நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.

    அதில் இன்று காலை சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 10 தொகுதிகளுக்கும், பிற்பகலில் திருவண்ணாமலை, ஆரணி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெறுகிறது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழகத்தில் நேர்காணலை நடத்தினார். அவருடன் தலைமைக் கழக மூத்த நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர்களும் நேர்காணலில் அமர்ந்திருந்தனர்.

    விருப்ப மனுவின் போது பணம் கட்டிய அசல் ரசீதுடன் வந்தவர்களை சரி பார்த்து ஒவ்வொருவரையும் நேர்காணலுக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நேர்காணலின் போது ஒவ்வொரு தொகுதியிலும் 'சீட்' கேட்டு வந்தவர்கள் கட்சியில் எத்தனை ஆண்டுகாலம் இருக்கிறீர்கள்? என்ன தொழில் செய்கிறீர்கள்? இதற்கு முன் தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறீர்களா? எவ்வளவு பணம் செலவிழக்க முடியும்? உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எந்த அளவு உள்ளது? என்பது போன்ற விவரங்களை எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.

    இன்றைக்கு 20 தொகுதிக்கு நேர்காணல் நடப்பது போல் நாளைக்கும் பொள்ளாச்சி, திண்டுக்கல், கருர், புதுச்சேரி உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கு நேர்காணல் நடத்தப்படுகிறது.

    பாராளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் தி.மு.க. வும், அ.தி.மு.க.வும் வேட்பாளர்களை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    அண்ணா அறிவாலயத்திலும், அ.தி.மு.க. தலைமை கழகத்திலும் நேர்காணலுக்காக கட்சி நிர்வாகிகள் குவிந்துள்ளனர். இவர்களது ஆதரவாளர்களும் கட்சி அலுவலகத்துக்கு வந்துள்ளதால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டது போல் காட்சி அளிக்கிறது.

    ஒவ்வொரு நிர்வாகிகளும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தபடி புன்னகை ததும்ப நேர்காணலுக்கு வந்து சென்ற வண்ணம் இருந்தனர்.

    Next Story
    ×