search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தோல்வி பயத்தால் கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளார்- எல்.முருகன்
    X

    தோல்வி பயத்தால் கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளார்- எல்.முருகன்

    • ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சியை தொடங்கலாம்.
    • புதிய பாராளுமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவும் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மேல்-சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட மத்திய இணை மந்திரி எல்.முருகன், பதவியேற்ற பின் முதல் முறையாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார். அவருக்கு பா.ஜனதாவினர் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி இந்தியாவை மிகவும் வளர்ந்த நாடாக மாற்றியுள்ளார். என் மண், என் மக்கள் தமிழக யாத்திரையில் பிரதமர் கலந்து கொண்டு நிறைவு செய்து வைத்தார். பா.ஜ.க.வின் இந்த யாத்திரை தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது தமிழகத்தில் பா.ஜனதா முக்கிய கட்சியாகவும் வளர்ந்து கொண்டு உள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க. தோல்வியுற்ற ஆட்சியை கொடுத்துக்கொண்டு உள்ளது. குரங்கு கையில் பூமாலை கொடுத்ததுபோல தி.மு.க.வினர் ஆட்சி செய்து வருகின்றனர்.

    தி.மு.க.வின் முக்கிய நிர்வாகி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தமிழகத்திற்கு பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா, 2ஜி ஊழல் வழக்கில் தமிழகத்திற்கு தலை குனிவை ஏற்படுத்தி இருக்கிறார். நீலகிரி மாவட்டத்தைச் சார்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், பொதுமக்களுக்கு சாலை அமைப்பதற்கு பதிலாக தனக்கு சொந்தமான தங்கும் விடுதிக்கு சாலை அமைத்துள்ளார். தி.மு.க.வைச் சேர்ந்த 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு நடைபெற்றது வருகிறது.

    தமிழகத்தில் நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சி மக்களை ஏமாற்றுகின்ற, லஞ்சம் வாங்குகின்ற மக்கள் பணத்தை சுரண்டுகின்ற ஒரு தோல்வியுற்ற ஆட்சியாக இருக்கிறது.

    ஊட்டி நகராட்சியில் தி.மு.க. கவுன்சிலர் லஞ்சம் வாங்குவதாக மற்றொரு கவுன்சிலர் குற்றம் சாட்டினார். ஆனால் அதுகுறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வியாபாரிகளுக்கு விருப்பமில்லாமல் ஊட்டி மார்க்கெட் கடைகள் இடிக்கப்படுகிறது. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்களாக தி.மு.க. வினர் உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் கட்சி தனியாக போட்டியிட்டால் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் தி.மு.க. கூட்டணிக்கு சென்றுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரிடம் மண்ணை கவ்வினார். எனவே கமல்ஹாசன் பா.ஜ.க.விற்கு ஒரு பொருட்டே இல்லை.

    நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கி இருப்பதை வரவேற்கிறேன். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சியை தொடங்கலாம். மகளிர் தினத்தன்று மகளிருக்கு பரிசு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கியாஸ் விலையை பிரதமர் நரேந்திர மோடி குறைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் மகளிர் மேம்பாட்டிற்கு மட்டும் 3½ கோடி வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கழிப்பிடங்கள் இலவசமாக கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. 11 கோடி பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 400 ரூபாய் வீதம் கியாஸ் மானியமும் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய பாராளுமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்தியாவை மிகச்சிறந்த சுற்றுலா நாடாக மாற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதில் ஊட்டி நகரும் இணையும். ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு குடிதண்ணீர் வசதி இல்லை. வாகன நிறுத்துமிடம் இல்லை. இதையெல்லாம் சரி செய்யும் விதத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர் பணியாற்றுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் மோகன்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ராமன், மாவட்ட பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பரமேஸ்வரன், நளினி சந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன், மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், ஊட்டி நகர தலைவர் பிரவீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×