என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.-வை போன்று பா.ஜ.க.-வை விமர்சிப்பதில்லையே ஏன்? - பழனிசாமி விளக்கம்
- பாராளுமன்ற தொகுதிகள் 6 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கி இருக்கும். அதற்கேற்ற வகையில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளரை தேர்வு செய்துள்ளோம்.
- தி.மு.க. தங்களது தேர்தல் அறிக்கையில் எப்போதுமே நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளையே கொடுப்பார்கள்.
சென்னை:
சென்னை ராயப்பேட்டை யில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களின் 2-வது பட்டியலை வெளியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கே: தேர்தல் நேரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுள்ளதே? அ.தி.மு.க.வுக்கு இது நெருக்கடியை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?
ப: அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி என்ற பேச்சுக்கே இடமில்லை. எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய போதும், ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்து கட்சியை வழி நடத்தியபோதும் பல்வேறு நெருக்கடிகளையும், பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வெற்றி அடைந்துள்ளனர். அவர்கள் வழியில் நாங்களும் வெற்றி பெறுவோம்.
தமிழக அரசு லஞ்ச ஒழிப்பு போலீஸ் மூலம் வழக்கு போட்டுள்ளது. ஏற்கனவே வருமான வரித்துறை சோதனையும் நடந்துள்ளது. இது போன்ற சோதனைகளை எல்லாம் நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம்.
கே: அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் ஒரே ஒரு பெண் மட்டும் இடம்பெற்றுள்ளார். சிறுபான்மையினர் யாரும் இடம்பெறவில்லையே?
ப: அ.தி.மு.க. ஆட்சி மன்ற குழுவை கூட்டி வெற்றி வாய்ப்புகளை கண்டறிந்து வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளோம். நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பெண் வேட்பாளர் தானே அறிவிக்கப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் பெண்களின் முன்னேற்றத்தை முன்னெடுக்கும் ஆட்சியாகும். அவர்களிடம் எந்த பாகுபாட்டையும் நாங்கள் காட்டுவதில்லை. படித்த இளைஞர்களையும் வேட்பாளர்களாக தேர்வு செய்து அறிவித்துள்ளோம். அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் இஸ்லாமிய வேட்பாளர் தான் இதுபோன்ற கேள்விகளே தவறானதாகும்.
சாதி, மத அடிப்படையால் இப்படி பிரித்து பார்க்கக் கூடாது. பாராளுமன்ற தொகுதிகள் 6 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கி இருக்கும். அதற்கேற்ற வகையில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளரை தேர்வு செய்துள்ளோம்.
கே: புது முகங்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள் வருத்தப்படமாட்டார்களா?
ப: அ.தி.மு.க.வில் ஜூனியர், சீனியர் என்று பிரித்து பார்ப்பதில்லை. அப்படி பார்த்திருந்தால் இணை செயலாளராக இருந்த நான் எப்படி பொதுச்செயலாளராக இருக்க முடியும். அ.தி.மு.க.வில் எப்போதுமே நேர்மையாக உழைப்பவர்களுக்கும், விசுவாசமாக இருப்பவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில்தான் தற்போதைய வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்றுள்ளது.
கே: தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று கூறி இருக்கிறார்களே. அது சாத்தியமா?
ப: தி.மு.க. தங்களது தேர்தல் அறிக்கையில் எப்போதுமே நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளையே கொடுப்பார்கள். ஏற்கனவே தேர்தல் நேரத்தில் டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பதாக கூறி இருந்தார்கள். அது காற்றோடு போய்விட்டது. இப்போதும் அது போன்று அறிவித்திருக்கிறார்கள். இது தி.மு.க. அறிவித்துள்ள வெற்று வாக்குறுதியாகவே பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க.வும் வெற்றி பெற போவதில்லை. இந்தியா கூட்டணியும் வெல்லப் போவதில்லை.
கே: அப்படி என்றால் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளதா?
ப: இந்த கேள்வியே தவறானது. நாங்கள் பலம் வாய்ந்த அணியை உருவாக்கி தேர்தலில் போட்டியிடுகிறோம். நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் சொன்னது எதையும் இதுவரை செய்யவில்லை. நாங்கள் ஒரே நாளில் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டு தொகுதி பங்கீட்டையும் முடித்து விட்டோம். காங்கிரசில் இன்னும் வேட்பாளர்களே அறிவிக்கப்படவில்லை.
கே: தி.மு.க.வை விமர்சிக்கும் அளவுக்கு நீங்கள் பா.ஜனதாவை விமர்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?
ப: ஒரு கூட்டணியில் இருக்கும் போது அவர்களை ஓஹோ என்று புகழ்ந்து பேசுவதும், வெளியில் வந்த பிறகு விமர்சனம் செய்து பேசுவதும் நாங்கள் அல்ல. அதே நேரத்தில் மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுக்க தயங்க மாட்டோம். இப்போது தானே ஆரம்பித்திருக்கிறோம். பொறுத்திருந்து பாருங்கள். நீங்கள் நினைப்பது நிச்சயம் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.






